நடுவுநிலை என்னும் நற்பண்பு
நடு என்னும் சொல்லுக்கு மையம் என்பது நேரடிப் பொருளாக இருந்தாலும் ஆழ்ந்த பொருளாக விளங்குவது நிலைபெறுதல் என்பதேயாகும்.


நடு என்னும் சொல்லுக்கு மையம் என்பது நேரடிப் பொருளாக இருந்தாலும் ஆழ்ந்த பொருளாக விளங்குவது நிலைபெறுதல் என்பதேயாகும். மரத்தை நடு என்றால் காலத்துக்கும் நிலைபெறச் செய்க என்பதே அதன் உட்கருத்து.
நிலைபெறுதல் என்பது வீழ்ந்து விடாமல் இருத்தல் ஆகும். நடு என்றாலே நிலைபெறுதல்தான். ஆயினும் நடுவாக நிற்கும் நிலை என்றும் ஒன்று உண்டு. அதுதான் திருக்குறளின் அடிப்படையாகவே திருவள்ளுவரால் அறிமுகப்படுத்தப் படுகிறது.
மேல் என்றும் கீழ் என்றும் உனது என்றும் எனது என்றும் பிரித்தறிகின்ற பேதைமைகளை விலக்கி விட்டு எல்லாவற்றிலும் நடுவோடு நடந்து கொள்ளுகிற பண்புக்கு நடுவுநிலைமை என்று பெயர். பல அணிகள் விளையாடுகின்ற போட்டி விளையாட்டுகளிலும், அறிஞர்கள் பங்கேற்றுத் தங்கள் வாதங்களை முன்வைக்கின்ற பட்டிமண்டபங்களிலும், அறங்கூறு அவையாகிய நீதிமன்றத்திலும் கூட நடுவர்கள் இருக்கிறார்கள். எப்புறமும் சாராதவர்களாக இருந்தால்தான் அவர்கள் நடுவர்கள்.
ஆனால் அவர்கள் நடுவுநிலைமைப் பண்பைப் பெறவில்லை என்றால் அவர்கள் தகுதியிழந்தவர்களாகவே கருதப்படுவார்கள் என்கிறார் திருவள்ளுவர். நடுவுநிலையை மனிதனின் அடிப்படைத் தகுதி என்றே அவர் வலியுறுத்துகிறார்.
நடுவுநிலை என்பதற்கான சரியான சாட்சி எது என்று கேட்டால், திருவள்ளுவர் சமன்செய்து சீர்தூக்கும் கோல்' என்று குறிப்புக் காட்டுகிறார். அந்தக் கோல் பல கோல்களை அடையாளம் காட்டுகிறது. அவற்றில் முதற்கோல் துலாக்கோல். ஒருபுறம் பொருள்களையும், மறுபுறம் அதற்கு நிகரான எடையுடைய இரும்புத் துண்டினையும் (படிக்கல்) ஏற்றிருக்கும். அந்தத் துலாக்கோல், இரண்டினையும் சமப்படுத்துவதற்கு அல்லது வேறுபடுத்துவதற்கு, தன் உச்சியில் இருக்கிற முள்ளின் நுனியினையே (நடுவுநிலையையே) உறுதியாகக் கொண்டிருக்கும்.
வணிகர்களுக்கு அதுதான் புனிதக் கருவி. அதுவே அளவினை உறுதி செய்து நடுவுநிலையை வழங்குகிறது. இந்தக் கருத்தினைக் கொண்டே நீதிமன்றங்களிலும் நீதிதேவதையின் கரங்களில் அதே துலாக்கோல் தரப்பெற்றிருக்கிறது. அந்த தேவதை கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாள்.
வாதி, பிரதிவாதி ஆகிய இருதிறத்தாரின் புற உருவங்களை அவள் கண்டு ஒருசார்பு நிலை கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவள் கண்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. யார் யார் வாய்க் கேட்பினும் அவற்றையெல்லாம் முறையாகக் கேட்டுத் தன் மெய்ப்பொருளால் அளவிட்டு அதற்கேற்ப வழங்குகிற நீதித்தன்மையை அவள் பெற்றிருக்கிறாள் என்பதாலேயே நடுவுநிலைமைப் பண்பை உணர்த்தக் கூடிய அந்தத் துலாக்கோல் அவள் கரங்களில் குறியீடாக விளங்குகிறது.
அடுத்த கோல் மன்னர்கள் கரத்திருந்த அக்காலத்தைய செங்கோல். செங்கோல் என்பது அரசன் கொண்டிருக்கக் கூடிய நடுவுநிலைப் பண்பின் அடையாளமேயாகும். தம்மை வெறுப்பவரிடத்தும் தம்மை விரும்புவாரிடத்தும் சமமான உரிமைகளைத் தந்து அவர்களுடைய கருத்துகளை ஏற்று அதன்படி ஆட்சியைச் செம்மையாக நடத்துவது.
நடுவுநிலை தவறாத ஆட்சியையே வளையாத செங்கோல்' என்று அறிஞர்களும் மக்களும் போற்றுவர். இந்த அரசின் கோல் நோக்கித்தான் குடிகள் வாழுகின்றன. வேதங்களை விடவும் நடுவுநிலைப் பண்பில் உயர்ந்து நிற்கவேண்டியது செங்கோல் என்று திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார். இந்தக் கோலும் நடுவுநிலைப் பண்பு தடுமாறினால் வீழ்ந்து படும் எனவும் எச்சரிக்கிறார்.
மூன்றாவது கோல் அறத்தைத் தன் உள்ளத்தில் நிறுத்தி உண்மையைத் தன் நாவில் ஏற்றி நடுவுநிலைப் பண்போடு காய்தலும் உவத்தலும் இன்றி உள்ளதை உள்ளபடி உரைக்கும் வண்ணம் எழுதிக்காட்டுகிற எழுதுகோல். இந்தக் கோலும் நடுவுநிலைப் பண்பிலிருந்து மாறிவிடக் கூடாது. ஏனைய இருகோல்களையும் நடுவுநிலையோடு சரிவரச் செலுத்தும் பண்பு இந்தக் கோலுக்குத்தான் அதிகம் உண்டு என்பது வள்ளுவரின் கருத்தாகும்.
இன்றைக்கு இந்த நடுநிலைப் பண்பு குறைந்து வருவதனால்தான் நாட்டில் இத்தனை பிரச்னைகளும் பெருகிக் கிடக்கின்றன. தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்கின்ற பெருவாழ்வை சங்க இலக்கியத்திலிருந்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிற தமிழ் மரபு நடுவுநிலைப் பண்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த மூவேந்தருள் ஒருவனை போற்றிப் பாடுகிறது.
புறநானூற்றின் முதற்பாடலாகத் திகழும் முரஞ்சியூர் முடிநாகராயரின் பாட்டுடைத் தலைவனாக விளங்கும் சேர மன்னனுக்குப் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்று பெயர். பெருஞ்சோறு என்பதற்கான காரணமே, தமிழர்களின் நடுவுநிலைப் பண்புக்கான அடையாளமாகும்.
இந்த மன்னன் மகாபாரதப் போர் நடந்த காலத்தில் வாழ்ந்தவன் என்பதையும் அப்பாடல் உணர்த்துகிறது. தருமனின் தலைமையிலான பாண்டவர்களின் அணியும், துரியோதனனின் தலைமையிலான கெளரவர்களின் அணியும் தங்களுடைய உரிமைப் பிரச்னையின் காரணமாக பாரத தேசத்து அரசர்கள் அனைவருடைய உதவியோடும் போர்க்களம் புக முடிவு செய்தனர்.
ஒவ்வொரு அரசரும் தனக்கு விருப்பமான ஏதேனும் ஓர் அணியில் சேர்ந்து கொள்ள, தமிழகத்திலிருந்து சென்ற சேர மன்னன் காத்த நடுவுநிலைப் பண்பு இன்றைய வன்முறை உலகுக்கு நல்ல பாடமாகவே விளங்குகிறது.
அந்த அரசர்களைப் பார்த்து, நீங்களெல்லாம் ஏதேனும் ஓர் அணியில் சேர்ந்து அடித்துக் கொண்டு மடிவதற்கு இங்கே கூடியிருக்கிறீர்கள். ஆனால் நான் நடுவுநிலை காக்கிறேன். இருதிறத்து வீரர்களுக்கும் வாழ்வதற்கு அடிப்படையான உணவினை நான் அளவில்லாது சமைத்துத் தருகிறேன். நிறைய உண்ணுங்கள் என்பதைப் போல அவன் நடுவுநிலைமையோடு திகழ்ந்தான்.
அவனுடைய ஏனைய புகழ்ச்செயல்கள் யாவற்றையும் விட மிக உயர்ந்து நிற்பது இந்த நடுநிலைப் பண்பே. தன் மனத்தின் கோலாகிய மரபு முன்னிற்கச் செங்கோலையும் நடுநிலைப்படுத்தி அதன் காரணமாக எழுதுகோலாலும் தன் வரலாற்றை உலகுக்கு அறிவித்துக் கொண்டது அந்த நடுவுநிலையாளனின் வாழ்வு. உலகுக்கே வழிகாட்டியாக விளங்கிய தமிழ் மரபு மீண்டும் மேலெழுந்து விளங்க வேண்டாமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...