சட்டம் யார் கையில்?

ஒரு நாட்டில் அமைதி நிலவ வேண்டுமென்றால் அங்கு சட்டமும், ஒழுங்கும் சீரோடும், சிறப்போடும் பேணப்படுதல் வேண்டும். அரசு சட்டம் இயற்றும் பணியையும், அதை அமல்படுத்தும் பணியை அரசு நிருவாகவும்
Updated on
2 min read

ஒரு நாட்டில் அமைதி நிலவ வேண்டுமென்றால் அங்கு சட்டமும், ஒழுங்கும் சீரோடும், சிறப்போடும் பேணப்படுதல் வேண்டும். அரசு சட்டம் இயற்றும் பணியையும், அதை அமல்படுத்தும் பணியை அரசு நிருவாகவும், அதைக் கட்டிக் காக்கும் பணியை நீதித் துறையும் செவ்வனே செய்துவரும் வேளையில், அச்சட்டத்தைப் பின்பற்றி ஒழுங்காக நடக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் மக்களிடம்தான் உள்ளது.
நம் நாட்டில் நிறைய சட்டங்கள் இருக்கின்றன, ஆனால் ஒழுங்குதான் இல்லை. 
மக்களுக்காக, மக்கள் நலன் கருதித்தான் மக்களால் ஆளப்படும், மக்கள் நல அரசுகளால் அவ்வப்போது சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எனவே, சட்டம் என்பது நமக்கு நாமே வகுத்துக் கொண்ட சில நெறிமுறைகளின் தொகுப்புதான். ஆனால், அதை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டிய மக்களே தங்கள் கடமையை அவ்வப்போது மறந்து, தாங்களே சட்டத்தை மீறி, பொறுப்பற்ற முறையில் நாட்டின் அமைதியைக் கெடுக்கிறார்கள். 
சமீப காலமாக மக்களில் சிலர் விலங்கனைய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபட்டு மனிதர்களுக்கே உரித்தான மனிதநேயத்தை தொலைத்து வருகிறார்கள். இதனால் மனித உரிமைகள் மீறப்பட்டு, சட்டத்தை தங்கள் கையிலெடுத்து உயிர்க் கொலைகளைப் புரிவதோடு, மன வலியையும், உடல் வலியையும் ஏற்படுத்தி ஜனநாயக நாட்டில் மனிதக் குலத்திற்கு இழுக்கை ஏற்படுத்தித் தருகிறார்கள். 
அண்மையில் சிவகங்கையில் ஒரு சம்பவம். அங்கே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது பரமக்குடி செல்லவிருந்த அரசுப் பேருந்தை அதன் ஓட்டுநர் இயக்க முற்பட்டபோது, வழக்குரைஞர்களில் ஒருவர், பேருந்தின் பக்கவாட்டு கம்பியை பிடித்துக் கொண்டு பேருந்து இயக்கத்தை தடுக்க முற்பட்டதாகவும் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பதற்றமடைந்த சில வழக்குரைஞர்கள், அப்பேருந்து ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து இழுத்து, வயதானவர் என்றும் பாராமல் பலமாக தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்குரைஞர்களின் தாக்குதலுக்குள்ளான ஓட்டுநர் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சட்டத்தைக் காக்க வேண்டியவரில் சிலரே சட்டத்தைக் கையிலெடுத்ததால் நேர்ந்த சோகம் இது.
மற்றொரு சம்பவம் தலைநகர் சென்னையில் நடந்தது. மாநகர அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி, சுய ஒழுக்கமில்லாமல் திடீரென எச்சிலை வெளியே உமிழ்ந்தார். அது பேருந்தையொட்டி இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் மீது படவே, வெகுண்ட அவர்கள் பேருந்தை மறித்து தகராறு செய்து, ஓட்டுநரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. அவ்வழியே வந்த வேறு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தான் பழி ஓரிடம், பாவம் வேறிடம் என்று சொல்வார்கள்போலும். பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தைக் கையிலெடுத்து, ஓட்டுநரைத் தாக்கியதால் அப்பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்திவிட்டனர். 
இன்னொரு சம்பவம் - செங்கல்பட்டை அடுத்த காந்தலூர் என்னும் கிராமத்தில் பூட்டிய வீட்டின் கதவை ஒருவர் உடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவ்வூர் பொது மக்கள், அவர், யார், எவர் எனத் தெரியாமல் கண்மூடித்தனமாக அந்நபரைத் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருட வந்ததாக கருதப்பட்ட நபரை, பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைந்திருந்தால் ஓர் உயிர் பலி நிகழ்ந்திருக்காது. இங்கு பொதுமக்களை சட்டத்தைக் கையிலெடுத்து தண்டனையைக் கொடுத்துள்ளனர். 
அண்மையில் கேரளத்தில் மனநலம் பாதித்த பழங்குடி இளைஞர் ஒருவர் கடைகளில் உணவுப் பண்டங்களைத் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர். அது போதாதென்று, அவரைக் கட்டியிட்டு கைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பரப்பினர். பலமாகத் தாக்கப்பட்ட அந்தப் பழங்குடி இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இது அந்த மாநிலமே கொந்தளிக்கச் செய்த சம்பவமாயிற்று. இங்கும் பொதுமக்களே சட்டத்தைக் கையிலெடுத்து, குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கி, தண்டனை விதித்துள்ளனர். 
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ (எச்)-இன்படி அறிவியல் மனநிலை, மனித நேயம், புலனறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்ந்து செய்யப்படும் சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். எனினும், காரண காரியங்களையும், பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்ட அறிவியல் மனநிலையிலிருந்து இப்போது மக்கள் சற்றே விலகி, மனித நேயமற்ற கற்காலத்திற்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இன்றைய சட்டங்கள் இல்லாத பண்டைய காலத்திலும் நெறி வழி நடந்து தெய்வநிலை அடைந்தோர் உண்டு. நவீன யுகத்தில் சட்டத்தின் மாட்சியின் கீழ், ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ, பாதுகாப்புடன் வாழ உரிமை இருக்கிறது. நீதியையும் நெறியையும் பின்பற்றினால் மனிதனும் தெய்வமாகலாம். நேர்மையும் நெறியும் தவறினால், மனிதனும் விலங்காகலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com