பெரிய மனிதர்களைப் பாராட்டுவதன் மூலம் தேசமே பெருமையடைகிறது. அவர்கள் பணம் பதவிக்காக உழைக்கவில்லை; பிற்காலத்தில் தமக்குச் சிலை வைப்பார்கள், விழாக்கள் நடத்துவார்கள் என்பதற்காகவும் அவர்கள் தொண்டாற்றவில்லை. நாட்டுக்கும், தம்மைச் சுற்றிய சமூகத்துக்கும் பணியாற்றுவதையே தங்கள் பிறவிக் கடமையாகக் கொண்டிருந்தனர்.
'சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இந்த நூற்றாண்டில் மறைந்த இரண்டு பெரும் புலவர்கள் தமிழுக்கு ஆக்கத்தை அளித்து புகழ்படைத்தனர். ஒருவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்; மற்றொருவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள்' என்று வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். (அவர் குறிப்பிட்ட இரு நூற்றாண்டுகள் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள்).
பாரதியார் அற்புதமான புதிய கவிதைகளைப் பாடி தமிழ்த்தாயை அலங்கரித்தார். உ.வே.சா. அவர்களோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சங்க நூல்களையும், வேறு பழைய காவியங்களையும் கண்டெடுத்து ஆராய்ந்து அருமையான முறையில் பதிப்பித்து உதவினார்கள்.
அந்த நூல்களால்தான் தமிழின் தொன்மையையும், பெருமையையும், பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் உலகம் தெரிந்து கொண்டது. உலகில் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை உலகப் பேரறிஞர்கள் ஒத்துக் கொண்டனர். இதனால் உலகம் முழுவதும் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன. இப்போதும் நடைபெற்று வருகின்றன.
திருவல்லிக்கேணிப் பகுதிக்குப் பெருமை சேர்ப்பது பார்த்தசாரதி கோயில் மட்டுமல்ல, மகாகவி பாரதியாரும், தமிழ்த்தாத்தா உ.வே.சா.வும் வாழ்ந்ததும்தான். அதற்கான அடையாளங்களை அழிக்க அல்லது அழிய விடலாமா?
'ஐயரவர்கள் சுமார் 60 ஆண்டுகளாகத் தமிழையே சிந்தித்து வந்தார்கள். தமிழ் நூல்களையே ஓதி வந்தார்கள்; தமிழ் நூல்களையே போதித்து வந்தார்கள். தமிழ் நூலாராய்ச்சிகளையே செய்து வந்தார்கள். தமிழ் நூல்களையே பதிப்பித்து வந்தார்கள். தமிழ் நூல்களையே தேடிப் பெற்றுத் தொகுத்து வந்தார்கள். இவர்கள் இல்லத்தைத் தமிழ்த் தெய்வத்தின் திருக்கோயில் என்றுதான் சொல்ல வேண்டும்...' என்று தமிழறிஞர் எஸ். வையாபுரி பிள்ளை கூறியுள்ளார்.
அந்தத் திருக்கோயிலை நினைவில்லமாக ஆக்கி அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பது தமிழ் அமைப்புகளின் கோரிக்கை.
1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று கும்பகோணத்தை அடுத்த உத்தமதானபுரத்தில் பிறந்த சாமிநாதையர் தம் தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரிலிருந்த ஆசிரியரிடம் பயின்றார். பின்னர் தம் 17-ஆம் அகவையில் திருவாவடுதுறை சைவ ஆதீனப் புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் முறையாகத் தமிழ் பயின்றார்.
'பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்துக்காகக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம் போல அவர் (மீனாட்சி சுந்தரம் பிள்ளை) வந்தார்...' என்று உ.வே.சா. தம் ஆசிரியரைப் பற்றிப் பெருமையோடு குறிப்பிடுகிறார்.
'ஐயரது 17-ஆம் அகவையில் 1871-இல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை அடுத்து, 1876-இல் தம் பேராசிரியர் சிவபதம் அடையும் வரை அவரிடம் கல்வி கற்று வந்தார்...' என்று வையாபுரி பிள்ளை குறிப்பிடுகிறார்.
1880-இல் கும்பகோணம் அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். அங்கு 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்தபோது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடியேறினார்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முதல் மாணவரான சி.தியாகராச செட்டியார் தாம் பணிபுரிந்த கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஐயரை ஆசிரியராக அமர்த்தினார். அந்த நன்றிப் பெருக்கினால் தமது இல்லத்துக்கு 'தியாகராச விலாசம்' என்று பெயரிட்டார். அந்த இல்லம்தான் இப்போது இடிக்கப்பட்டிருக்கிறது.
ஐயரவர்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார் என்பதைவிட அழிந்து கொண்டிருந்த தமிழ்ச் சுவடிகளைத் திரட்டித் தந்தார் என்பதில்தான் அவரது தனித்தன்மை காணப்படுகிறது.
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என 90-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை அச்சிட்டுப் பதிப்பித்ததோடு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்துத் தமிழ் உலகத்துக்கு அளித்துள்ளார்.
சமயக் காழ்ப்புணர்ச்சியில்லாமல் அவற்றைப் பதிப்பித்தார் என்பது அவருக்குக் கூடுதல் சிறப்பாகும். சமண சமய இலக்கியமாகிய சீவக சிந்தாமணியையும், பெளத்த மத நூலாகிய மணிமேகலையையும் மிகுந்த ஈடுபாட்டோடு பல பிரதிகளைச் சீர்தூக்கிப் பார்த்து அச்சு வடிவம் தந்துள்ளார்.
சமயத் தொண்டு வேறு, இலக்கியத் தொண்டு வேறு என்பதில் சரியாக இருந்தார். ஆறுமுக நாவலர் சமயத் தொண்டில் ஈடுபட்டு, சமய நூல்களையே அச்சிட்டு வந்த காலத்தில், இவர் சமயங்களுக்கு அப்பாற்பட்டுத் தமிழ்த் தொண்டாற்றி வந்தார்.
சமண, பெளத்த நூல்களை அச்சிடும்போது அவற்றில் ஏற்படும் ஐயப்பாடுகளை அவ்வம்மத அறிஞர்களைக் கலந்து பேசி சீர் செய்துள்ளார். பிற சமய நூல்களை அச்சிடுவது பற்றிச் சிலர் நிந்தித்தபோதும், அதுபற்றிக் கவலைப்படாமல் தமது தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.
பெளத்த காப்பியமான குண்டலகேசியும், அதற்கு மறுப்பாக எழுந்த நீலகேசியும் அக்காலத்தில் கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் குண்டலகேசி முற்றிலும் அகப்படாமல் அழிந்து போனது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றினை இழந்தது தமிழுக்குப் பேரிழப்பாகும் அல்லவா!
இவற்றையெல்லாம் அவரது சுயசரிதையான 'என் சரித்திரம்' நூலில் விரிவாக எழுதியுள்ளார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது பணியைப் பாராட்டி, மகா மகோபாத்தியாய என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமான டி.லிட். பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1919-ஆம் ஆண்டு உ.வே.சா. சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். ஒரு சமயம், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் சென்னைக்கு வந்து வழக்குரைஞர் டி.எஸ்.இராமசாமி ஐயருடைய வீட்டில் தங்கியிருந்தார். அப்போது வங்க மகாகவியிடம் உ.வே.சா. தமிழ்த்தொண்டு பற்றிக் கூறினார்.
அன்று மாலையே உ.வே.சா.வின் இல்லமாகிய தியாகராச விலாசத்துக்கு வந்து, அவர் பதிப்பித்துள்ள நூல்களைக் கண்டு வியந்தார் தாகூர்; அவர் வருகையை அறிந்தவர்கள் ஐயரின் பெருமையையும் அறிந்து கொண்டனர்.
1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற பாரதிய சாகித்ய பரிஷத்தின் மாநாட்டில் உ.வே.சா. வரவேற்புக்குழுத் தலைவராக இருந்து உரை நிகழ்த்தியுள்ளார். அப்போது காந்திஜிக்கு இவர் மீது மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது.
தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ? என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு மாமனிதர்களால் போற்றப்பட்ட உ.வே.சா. அவர்கள் இடைவிடாது பணியாற்றி 1942 ஏப்ரல் 28 அன்று நிரந்தர ஓய்வு பெற்றார். இவரது மகனார் கல்யாண சுந்தரம் ஐயரும் இப்பணியைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
எண்ணற்ற மகான்களும், புலவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் வந்து போன வணக்கத்துக்குரிய அவரது இல்லம் 'தியாகராச விலாசம்' போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டாமா? வங்கக் கவிஞர் தாகூரும், மகாத்மா காந்தியடிகளும் வந்து போன அந்த அறிவாலயம் இடிக்கப்படுவது தமிழ் மக்களின் பண்பாட்டையே தகர்ப்பதற்கு ஒப்பாகும் அல்லவா!
உ.வே.சா.வின் மறைவிற்குப் பிறகு அவரது உறவினர்களால் விற்கப்பட்ட அந்த வீட்டை இடிப்பதற்கு 2012-ஆம் ஆண்டே முயற்சிகள் நடந்தன. பாதி இடிக்கப்பட்ட நிலையில் தமிழ் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பினால் தடைபட்ட அப்பணி, இப்போது முழுமையாகவே தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதியார் சென்னையில் வாழ்ந்த இல்லமும் இப்படித்தான் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பிறகு தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று திரும்பக் கட்டி புதுப்பிக்கப்பட்டது. இப்போதும் இந்த முன்மாதிரியை ஏற்று, தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்.
இந்திய அரசியல் சாசனச் சிற்பி டாக்டர் அம்பேத்கர் 1921-22ஆம் ஆண்டுகளில் லண்டன் பொருளாதார கல்வி நிறுவனத்தில் படித்தார். அந்தக் காலகட்டத்தில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை மகாராஷ்டிர அரசு சுமார் ரூ.40 கோடிக்கு வாங்கி நினைவு இல்லம் அமைத்துள்ளது. 1915-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அதனைத் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.
இதேபோல தமிழக அரசும் சென்னை திருவேட்டீஸ்வரன்பேட்டையிலுள்ள உ.வே.சா. வாழ்ந்த இடத்தையும் வாங்கி அவருக்கு நினைவில்லம் அமைக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை எழுப்பி வருகின்றன. அரசுக்கு விண்ணப்பங்களும் அனுப்பியுள்ளன.
தமிழ்த் தாத்தாவுக்கு விரைவில் நினைவில்லம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாம் நன்றியுள்ள மக்கள் என்பதை வேறு எப்படி வெளிப்படுத்துவது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.