அரசியல் களத்தில் வெற்றிடம்

தமிழ்நாட்டு அரசியல் களம் கொஞ்ச காலமாகப் பரபரப்புடன் காணப்படுகிறது. இதற்குக் காரணம் திரையுலக முன்னணி நடிகர்கள் அரசியலில் இறங்க முன்வந்திருப்பதுதான்.
Updated on
3 min read

தமிழ்நாட்டு அரசியல் களம் கொஞ்ச காலமாகப் பரபரப்புடன் காணப்படுகிறது. இதற்குக் காரணம் திரையுலக முன்னணி நடிகர்கள் அரசியலில் இறங்க முன்வந்திருப்பதுதான். ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி, அரசியல் கட்சிகளைத் தொடங்குவது தொடர்பான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ்நாடு அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் நல்லாட்சியை அமைக்க முடியும் என்று சொல்கின்றனர். அதன் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்யப் போகிறார்களாம்.
மக்களுக்குச் சேவை செய்வது வரவேற்க வேண்டியதுதான். அதுவும் தலைவணங்கி வரவேற்க வேண்டும். அதற்கு அரசியல் பதவி அவசியம் வேண்டுமா? அரசியல் இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்ய முடியாதா? அவ்வாறு பணியாற்றிய தலைவர்களும், நிறுவனங்களும் இல்லையா? இதுவரை இவர்கள் செய்த பணி என்ன?
இப்போது அரசியல் என்பது முதலீடு இல்லாத வணிகமாகிவிட்டது. அழுக்கு நிறைந்த குட்டையாக மாறி நெடுங்காலமாகிவிட்டது. ஊழல்மயமாகிவிட்ட அரசியலில் நல்லவர்கள் வருவதற்கே அஞ்சுகின்றனர். இந்த நிலை மக்களாட்சி முறைக்கு நல்லதல்ல என்றாலும் உண்மை அதுதான்.
திரையுலகில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணமும், புகழும் கொட்டிக் கிடக்கின்றன. அடுத்து அவர்களுக்குத் தேவை பதவி. அந்தப் பதவி அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும் என்று திட்டமிடுகின்றனர். அரசியல் பரபரப்புக்கு இதுவே காரணம்.
அரசாங்கத்தின் அரியாசனத்தில் அமர்வதென்பது, புலியின்மேல் சவாரி செய்வது போன்றது. அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வும் இல்லை, உல்லாச வேளையும் இல்லை என்றார் பண்டித நேரு.
உண்மையான அரசியல் தலைவர்களுக்கு இது பொருந்தும். அரசியலை வணிகமாகக் கருதுகிறவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு அரசியல் என்பது ஊழலில் திளைக்கும் உல்லாசபுரியாகவே இருக்கிறது. சுயநலத்துக்காக சொந்த நாட்டையே சூறையாடுகின்றனர்.
ஆமைகளாகவும், ஊமைகளாகவும் அடங்கிக் கிடக்கும் மக்கள் ஒருநாள் ஆர்த்து எழுவார்கள். அப்போது அவர்கள் எல்லாம் அந்தப் புரட்சித் தீயில் பொசுங்கிப் போவார்கள். சர்வாதிகார ஆட்சிகள் சரிந்த கதைகளை வரலாறுகளின் பக்கங்களில் காணலாம்.
திராவிடக் கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்கின்றன. மாநிலம் முன்னேறவில்லை. ஊழல்தான் முன்னேறியிருக்கிறது. மக்களின் வாழ்க்கை வறுமையின் உச்சத்தில் உள்ளது. திராவிடக் கட்சிகளை இனியும் ஆட்சி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது. அதையே இப்போது வரும் நடிகர்களும் கூறத் தொடங்கியுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் 1967 வென்று, அதன் தலைவர் அண்ணா முதலமைச்சர் ஆனார். நீண்ட நாள் அவர் ஆட்சியைத் தொடர முடியவில்லை. நோய் வாய்ப்பட்டு விரைவில் காலமானார்.
அதன்பின் மு. கருணாநிதி 1969-இல் முதலமைச்சர் பதவி ஏற்றார். இரண்டு முறை ஆட்சியமைத்த பிறகு உள்கட்சிப் பிரச்னையால் கட்சி பிளவுபட்டது. பிரிந்து வந்த எம்.ஜி.ஆர். 1977-இல் ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆனார்.
மும்முறை தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்த எம்.ஜி.ஆர். காலமானதும், கருணாநிதி 1989-இல் மீண்டும் முதலமைச்சர் ஆனார். அடுத்து 1991-இல் நடந்த தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.
இவ்வாறு இவ்விரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தன. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் காலமானார். முதுமை காரணமாக கருணாநிதியும் செயல்பட முடியாத நிலையில் உள்ளார். எனவே தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகக் கருதி முன்னணி நடிகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் எனத் துடிக்கின்றனர்.
அரசியலில் வெற்றிடம் என்பது தற்காலிகமானதுதான். நாட்டின் முதல் பிரதமர் பண்டித நேரு திடீரென காலமானார். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. உடனடியாக அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார்.
அவர் திடீரென மரணமடைந்தார். அப்போதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்திரா காந்தி பிரதமர் ஆனார். இவ்வாறு வெற்றிடம் நிரப்பப்படுகிறது.
திரையுலகில் "வெள்ளையும், கருப்புமாக' தாராளமாகவும், ஏராளமாகவும் பணம் புரளுகிறது. பல தலைமுறைகளுக்குத் தேவையான பணம் திரட்டிக் கொண்ட பிறகு, பதவிக்காக சிலர் அரசியலை நாடுகின்றனர். அவர்களுக்கு முன்மாதிரியாக எம்.ஜி.ஆரையே நினைத்துக் கொள்ளுகின்றனர். அவர் வெற்றியின் அடையாளம்.
அரசியலில் ஈடுபட்டுப் படுதோல்வியடைந்த சிவாஜி கணேசனை வசதியாக மறந்துவிடுகின்றனர். அரசியல் அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் என்றாலும் அவர்களால் அதிலிருந்து விடுதலை அடைய முடியாது. பிறகு அவர்களின் நிலை புலிவால் பிடித்த கதைதான்.
கோடி கோடியாக ஊதியம் பெறும் நடிகர்கள் தங்களது நடிகர் சங்கக் கட்டடத்துக்கு பொதுமக்களிடம் நிதி கேட்டு அலைகின்றனர். நடிகர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகள் மூலம் நிதி திரட்டுகின்றனர். அவர்களது சொந்தப் பணத்தைச் செலவழிக்கத் தயங்குகின்றனர். இவர்கள்தாம் அரசியலுக்கு வந்து மக்களை முன்னேற்றப் போகிறார்களாம். கேட்பதற்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் தங்கள் உடல் பொருள் உயிரை அர்ப்பணித்தவர்கள் எத்தனை பேர்! சொத்து சுகங்களைத் துறந்தவர்கள் எத்தனை பேர்! அந்தத் தியாகிகளால்தான் தேசம் விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற நாட்டில் சுகங்களை அனுபவிப்பவர் யார்?
விடுதலை வேள்வியில் ஆகுதியாக ஆக்கிக் கொண்ட மகாத்மா காந்தி, வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடி தூக்குமேடை ஏறிய புரட்சி வீரன் பகத்சிங், ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்ட நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், கொடிக்காகப் போராடி உயிர்நீத்த குமரன் இவர்களைப் போல எத்தனையோ பேர்! இவர்களை மறக்க முடியுமா?
இவர்கள் எல்லாம் இந்த பூமியின் விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள்! விடுதலை பெற்ற நாட்டில் எந்த சுகத்தையும் அனுபவிக்காதவர்கள்!
அண்மையில் திரிபுராவில் நடந்த தேர்தலில் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் பதவியைவிட்டு விலகியதும், அவரும், அவரது துணைவியாரும் நடந்தே கட்சி அலுவலகத்துக்கு வந்துவிட்டனர்.
அவரிடம் இருந்த சொத்தாகக் கருதப்பட்ட கொஞ்சம் புத்தகங்களையும் கட்சி நூலகத்துக்கு அளித்துவிட்டார். இதுவரை முதலமைச்சராக இருந்த இவர் இப்போது கட்சி அலுவலகத்திலேயே தமது குடியிருப்பை மாற்றிக் கொண்டார். கட்சிக் குடும்பத்தில் அவரும், அவரது துணைவியாரும் இப்போது உறுப்பினர்கள். இப்படியும் ஓர் அரசியல்வாதி.
இப்படிப்பட்ட எளிமையான இடதுசாரிக் கட்சிகளும் தோல்வியைத் தழுவத்தான் செய்கின்றன. இதற்குக் காரணம் என்ன? 25 ஆண்டுகள் ஆளுவதற்கு அனுமதித்த மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கியே நகர்கின்றனர்.
மேற்கு வங்கத்திற்கு பிறகு திரிபுராவும் இடதுசாரிகளின் கையை விட்டுப் போய்விட்டது. இனி கேரளம் மட்டும்தான். தமிழ்நாட்டிலும் இந்த மாற்றம் நிகழலாம். ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிவிட்டது.
ஜனநாயக நாட்டில் அரசியலில் ஈடுபட அனைவருக்கும் உரிமையுண்டு என்னும்போது நடிகர்கள் மட்டும் விதிவிலக்கா? அவர்களும் அரசியலில் ஈடுபடத் தகுதி படைத்தவர்கள்தாம். மக்கள் விரும்பினால் அவர்களும் ஆட்சிக்கு வரலாம் என்பதில் இரு வேறு பேச்சுக்கே இடமில்லை.
மக்கள் எவ்வழியோ அரசும் அவ்வழி; நல்ல மக்கள் இருந்தால்தான் நல்ல அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியும். 
சட்டசபைச் சீர்திருத்தங்களை நிறைவேற்றிவிடுவதால் மட்டும் பலன் இல்லை. மனிதர்களின் மனோபாவங்களையே மாற்றி அமைத்தால்தான் பரிகாரம் காண முடியும் என்பது சிந்தனையாளர் பிளேட்டோவின் அரசியல் அறிவுரையாகும்.
மக்களை அறியாமையிலும், மது போதையிலும் வைத்துக் கொண்டு நல்ல அரசாங்கம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நிறைவேறும்? தூங்கிக் கிடக்கிற மக்களைத் தூக்கி நிறுத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உருவாக்கும் தொடர் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
அரசியல்வாதிகள் மக்களின் அறியாமையையே முதலீடாகக் கொண்டிருக்கின்றனர். அந்த நிலை மாறாமல் இந்த நிலை மாறாது. அரசியலில் வெற்றிடம் என்பது எப்போதும் இருக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com