நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல் மேலாண்மை

காவல் துறை சேவைகள் சிறப்பாக இருக்க அவ்வப்போது பிரச்னைகளை ஆராய்ந்து, வளர்ந்து வரும் சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை கணித்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

News image
Updated On :28 மார்ச் 2018, 8:01 pm

ஆர். நட​ராஜ்

காவல் துறை சேவைகள் சிறப்பாக இருக்க அவ்வப்போது பிரச்னைகளை ஆராய்ந்து, வளர்ந்து வரும் சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை கணித்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
2000-ஆம் ஆண்டு பிறந்தபோது புத்தாயிரத்தில் காவல்துறையை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டது.
புத்தாயிரம் இலக்குகள் என்று ஒவ்வொரு நாடும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 2015-க்குள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வாறு ஐ.நா. பட்டியலிட்டதோ, அதே வகையில் உலக நாடுகளின் காவல்துறைகளும் நவீன உலகில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகளைப் பற்றி ஆராய்ந்து தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச போலீஸ் அமைப்பான 'இண்டர்போல்' அறிவுரை அளித்தது. 
பொது அமைதியை எடுத்துக்கொண்டால், பல நாடுகளில் பயங்கரவாதம்- 2001 நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு, 2005 லண்டன் குண்டுவெடிப்பு, இந்தியாவில் தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் குண்டுவெடிப்பு, 2008 மும்பை தாக்குதல், ஆப்கானிஸ்தான் தொடர் போர், இராக், சிரியா போர்க்களம், ஐஎஸ் பயங்கரவாதம் என்று உலகம் கலகக் களமாக மாறிவரும் நிலையில், பாதுகாப்பு பணியில் இருப்பவர்க்கு தயார் நிலை என்பது நிரந்தரமாகி வருகிறது.
பிரிட்டிஷ் போலீஸ் 2025-இல் எவ்வாறு உருவாக வேண்டும், எந்த மாதிரியான பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஆராய்ந்து அறிக்கை தயாரித்தது. அதில் முக்கியமான அம்சம், உள்ளூர் காவல் நிலையங்களை பலப்படுத்த வேண்டும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் போலீஸ் சேவைகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற இரண்டு குறிக்கோள்கள் மையமாக வைத்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.
இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் எங்கும் வியாபித்து வருகிறது. இதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு காவல்துறை தனது பணிகளை சீரமைக்க வேண்டும்.
இணையதளம் மூலம் தகவல் அளிக்கலாம், முதலறிக்கையும் பதிவு செய்யலாம் என்று முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால் அது இன்னும் நடை முறைக்கு வரவில்லை. பெங்களூரில் இணயதள காவல் நிலையம் துவங்கப்பட்டது. காலப்போக்கில் காவல் நிலையம் வந்து புகார் பதிவு செய்ய வேண்டும் என்ற பழைய நிலைக்கே திரும்பியது.
புதிய நூற்றாண்டின் நவீன உலக பிரச்னைகளை சமாளிக்க எவ்வாறு காவல் கட்டமைப்பை சீரமைப்பது என்பது பற்றி விரிவாக ஆராய மத்திய அரசு ஒரு மேலாண்மைக் குழுவை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் முன்னாள் உள்துறை செயலர் மதுகர் குப்தா தலைமையில் இக்குழு இயங்கும். ஓய்வுபெற்ற டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், பாதுகாப்பு நிபுணர் அஜய் சஹானி இதில் உறுப்பினர்கள். மத்திய உள்துறை அமைச்சர் கீழ் இயங்கும் இக்குழு செம்மையான வழிகாட்டுதலையும் தீர்க்கமான காவல் முன்னேற்றப் பாதை வகுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
காவலர் பற்றாக்குறைதான் பெருவாரியான சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு காரணம் என்பது ஒருபுறம். மறுபுறம் புகுமுகப் பயிற்சி, பணியிடை நன்னடத்தையை உறுதி செய்ய நடவடிக்கை போன்ற சவால்கள், காவலர் எண்ணிக்கையை கூட்டுவது எளிதல்ல என்பதை உணர்த்தும். காவலர் பணியிடங்களை அவ்வளவு எளிதில் நிரப்ப முடியாது. ஒரு காவலரைத் தேர்வு செய்து பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்துவதற்கு குறைந்தபட்சம் மூன்றாண்டுகளாகும்.
இந்தியாவில் 2016 முடிய, காவலர் காலிப் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டதில் 21.8%.
220 பேருக்கு ஒரு காவலர் என்று ஐ.நா. நிர்ணயித்தாலும் இந்தியாவில் சராசரியாக 688 பேருக்கு ஒரு காவலர் என்ற நிலையை 2006-இல் எட்டியிருந்தோம்.இப்போதைய புள்ளிவிவரப்படி 518 மக்கள்தொகைக்கு ஒரு காவலர் என்ற நிலை. தமிழ் நாட்டில் இந்த விகிதம் 511; காலிப்பணியிடங்களைக் கணக்கில் கொண்டால் 542. 
இந்தியாவில் தற்போது 100 சதுர கி.மீ.க்கு 77.83 காவலர்கள் உள்ளனர்; அதுவே நமது மாநிலத்தில் 100 சதுர கி.மீ.க்கு 104.57-ஆக உள்ளது. அதிகமான காவல் பணியாளர்கள் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம்- 4.13 லட்சம்பேர், மகாராஷ்டிரம் 2.4 லட்சம், மூன்றாவது தமிழகம் 1.36 லட்சம்.
காவல் படையை சம்பவ இடங்களுக்கு துரிதமாக எடுத்துச் செல்வதில் வாகனங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. காவலர் எண்ணிக்கையைக் காண்பிக்கும் சக்தி படைத்தது. இந்தியாவில் மொத்த காவல் வாகனங்கள் 1,99,062. சராசரியாக 100 காவலர்களுக்கு 8 வாகனங்கள். தெலங்கானாவில் இந்த விகிதம் 15, உத்தரபிரதேசத்தில் மிகக் குறைவு - 3 வாகனங்கள், தமிழ் நாட்டில் 13 வாகனங்கள்.
இந்தியாவில் 15,579 காவல் நிலையங்கள். இதில் 64.5% கிராமப்புறங்களிலும், 32.1% நகரங்களிலும், எஞ்சியுள்ள 3.4% அரசு ரயில் காவல்நிலையங்கள். காவல் நிலைய எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் -மொத்தம் 1541.
விசேஷ காவல் நிலையங்கள் -குழந்தைகள் நலனுக்கு, கடலோரக் காவல், போக்குவரத்துக் காவல், போதைப் பொருள் தடுப்பு, சைபர் குற்றப் பிரிவு, போன்றவற்றிலும் தமிழகத்துக்கு முதலிடம். இத்தகைய காவல் நிலையங்கள் மொத்தம் 205 உள்ளன.
காவல்துறையின் திறன் என்பது பணியாளர் எண்ணிக்கையில் மட்டுமல்ல, அவர்களின் செயலாக்கத்தில் உள்ளது. இதில் அடிப்படைத் திறமை புலனாய்வு. நடந்த குற்றங்களை திறமையாகப் புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவதில்தான் போலீஸார் திறமை வெளிப்படும்.
ஆனால் சமீப கால நிகழ்வுகள் காவல் புலனாய்வுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கு போன்ற பொருளாதார குற்ற வழக்குகள் மற்றும் ஆருஷி கொலை வழக்குகளில் நீதிமன்ற கண்டனம்தான் எஞ்சியது. 
லத்தியை ஓங்கித் தட்டிவிட்டு சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கலாம். ஆனால் புலனாய்வில், குற்றவியல் நடைமுறையில் தேர்ந்த அறிவு, சட்ட நுணுக்கங்கள், சாதுர்யமான தடய சேகரிப்பு இவையோடு, பொறுமையாக உடல் வருத்திப் பணி செய்தால்தான் வெற்றி கிடைக்கும்.
மேலும் பொருளாதாரக் குற்றங்கள், சைபர் குற்றங்கள் நவீன உலகில் அதிகம் வருகின்றன. அதற்கு புலனாய்வு அதிகாரிகளுக்கு விசேஷப் பயிற்சியும் நிபுணர்களின் உதவியும் தேவை. அவை இப்போது போதுமானதாக இல்லை என்பதால்தான் வழக்குகள் நீதிமன்றத்தில் தோல்வி அடைகின்றன.
வளர்ந்து வரும் நவீன உலக வர்த்தகத்தை மனதில் கொண்டு, குற்ற ஆராய்ச்சி மையம் ஒன்றை, குற்றவியல் நிபுணர் ரான் க்ளார்க் என்பவரின் தலைமையில் பிரிட்டிஷ் காவல்துறைஅமைத்துள்ளது. நடக்கக் கூடிய குற்றங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து தடுப்பு நடவடிக்கை மற்றும் புலனாய்வை செம்மைப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காவல்துறை விசேஷப் பிரிவுகள் நன்கு பலப்படுத்தப்பட்டு, பல திசைகளிலிருந்து வரக்கூடிய குற்ற நிகழ்வுகளை ஆராய்ந்து, மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், அதே வேளையில் உயர்ந்த சேவையைத் திருப்திகரமாக வழங்கவும் காவல்துறை செயல்படத் தயார்படுத்தப்படும் என்பது பிரிட்டிஷ் காவல்துறையின் தொலைநோக்குப் பார்வை. மேலும், காவல்துறையில் பணிபுரிய வல்லுநர்கள், சேவை மனப்பான்மை உடையோர் இணைவதற்கு சூழல் உருவாக்கப்படும் என்பதும் ஒரு முக்கியக் குறிக்கோள்.
மக்களின் நம்பிக்கையை ஒவ்வொரு நிலையிலும் காவல்துறை சம்பாதிக்க வேண்டும். மக்களோடு இணைந்து, அவர்களது பங்களிப்போடு போலீஸ் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்டால்தான், அதன் நல்விளைவு காவல்துறைக்கு வலு சேர்க்கும்.
சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, பயிற்சி அகாதெமி, நுண்ணறிவு, ஊழல் தடுப்பு, விழிப்புணர்வுப் பிரிவு என்று எல்லா பிரிவுகளும் ஒருங்கிணைந்து காவல் சீர்திருத்த நடவடிக்கைகளில் பங்கு கொள்ளுதல் அவசியம். இவை காவலர்களின் ஒழுங்குணர்வை மேம்படுத்தும், காவல் செயலாக்கத்தில் அடிப்படை நன்னெறி நடத்தைகளை உறுதி செய்யும் என்பது திண்ணம்.
பிரிட்டிஷ் காவல்துறை காவலர்களுக்கென நன்னெறிக் கோட்பாடுகளை வகுத்துள்ளது. நேர்மையும் நாணயமும் ஒருங்கே பெற்று, நேர்மையான முறையில் நாணயத்தோடு பணிகள் நிறைவேற்றல். சுயக்கட்டுப்பாட்டோடு நடத்தல், மக்களிடமும் சக ஊழியர்களிடமும் இனிமையாகப் பழகுதல், சகிப்புத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, நடுநிலை மாறா பண்பு இவற்றை உண்மை உணர்வோடு கடைப்பிடித்தல்.
பலப் பிரயோகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மிக குறைந்த அளவு, தேவைக்கேற்ப பிரயோகம் என்பதை எல்லா நேர்வுகளிலும் கடைப்பிடித்தல். சட்டத்திற்கு உட்பட்ட ஆணைகள் பிறப்பித்தல், நிறைவேற்றல் என்ற கொள்கையை பிசகின்றி அனுசரித்தல்; கடமை உணர்வோடு பணியாற்றல்; தகவல் பரிமாற்றத்தில் உரிய ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தல். 
கடமையாற்றுவதற்கு உகந்தவாறு உடலை பேணி பாதுகாத்தல், எந்நிலையிலும் நன்னடத்தை தவறாமல் காவல்துறைக்கு களங்கம் விளைவிக்காத வகையில் மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்துகொளல்.
இத்தகைய கோட்பாடுகளைப் பின்பற்றினால் காவல் துறை உன்னத நிலை அடையும் என்பதில் சந்தேகமில்லை. 
'வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை...மனிதன் மாறிவிட்டான்!' என்ற சிவாஜி திரைப்படப் பாடல் ஒன்று உண்டு. காவல்துறையைப் பொருத்தவரை, குற்ற உலகம் மாறிவிட்டது, காவலன் அணுகுமுறை மாறவில்லை, பத்தாம்பசலி புத்தி தீட்டப்படவில்லை. மத்திய அரசு அமைத்த காவல்துறை மேலாண்மைக் குழு இவற்றை ஆராய்ந்து, குற்றவியல் ஆளுமையில் காவல்துறை திறன் மேம்பட செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும். 
போலீஸ்காரன் காவலில் கெட்டிக்காரன் என்பது மட்டுமின்றி, புலனாய்விலும் சுட்டியானவன் என்ற நிலை வர வேண்டும்.
அந்த நாளும் வந்திடாதோ!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.