தனிமையில் விடுவோம்

அந்தமான்-நிக்கோபர் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த வடக்கு சென்டினல் தீவு, நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Updated on
2 min read

அந்தமான்-நிக்கோபர் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த வடக்கு சென்டினல் தீவு, நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்தத் தீவில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் காலடி எடுத்து வைத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் என்ற 26 வயது இளைஞர், அத்தீவில் வசிக்கும் பழங்குடி மக்களின் அம்புகளுக்கு இரையானது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
 ஜான் ஆலனின் உடலை மீட்க அந்தமான்-நிக்கோபர் காவல் துறை எடுத்திருக்கும் முயற்சியும், அதனால் அந்தப் பழங்குடி இன மக்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தும் பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
 சென்டினல் தீவு பழங்குடியினர் அபாயகரமானவர்களா, பரிதாபத்திற்குரியவர்களா என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சி 1967-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை முடிவு கிடைக்காமல் தொடர்கிறது. அந்தமான்-நிக்கோபர் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த தீவுகளுள் ஒன்றான வடக்கு சென்டினல் தீவு, சுமார் 60 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மிகச் சிறிய கடற்கரையையும், எஞ்சிய பகுதி அடர்ந்த காடுகளையும் கொண்டது. இதுவரையிலான ஆய்வு முடிவுகளின்படி இத்தீவில் வசிக்கும் பழங்குடிகள் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. வேட்டை சமூகமான இவர்கள், அந்நியர்களை தங்கள் நிலத்துக்குள் அனுமதிப்பதில்லை. இவர்கள் பேசும் மொழி, வாழ்க்கை முறை எதுவும் வெளி உலகிற்குத் தெரியாது. மொத்தமே சுமார் 150 பேர் இருக்கலாம் என்று தெரிகிறது.
 அந்தமான்-நிக்கோபர் தீவு நிர்வாகமும், அங்குள்ள மானுடவியல் ஆய்வு மையமும் 1967-ஆம் ஆண்டு, இந்தப் பழங்குடி இன மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டன. ஆய்வு
 மையத்தின் பொறுப்பாளர் டி.என்.பண்டிட் தலைமையில், காவல் துறையினர், கடற்படையினர், உள்ளூர் மீனவர்கள் அடங்கிய குழு, ஒரு சிறிய கப்பலில் சென்று இத்தீவுக்குள் இறங்கி ஒரு கி.மீ. தொலைவு நடந்து சென்று ஆய்வு செய்தது. மீனை சமைத்ததற்கான தடயம், குடிசைகள், வில், அம்பு முதலிய ஆயுதங்களை அக்குழு கண்டது. பாதுகாப்பு கருதி, மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்யாமல் திரும்பியது.
 அதன் பிறகு 1991-இல், டி.என்.பண்டிட் தலைமையிலான குழு மீண்டும் சென்டினல் தீவுக்குச் சென்றது. இந்த முறை சென்டினல் பழங்குடிகள் மிகவும் விரும்பும் இளநீர் (அத்தீவில் தென்னை மரங்கள் இல்லை), இரும்புக் கம்பிகள் (அம்பு செய்வதற்குப் பயன்படும்) உள்ளிட்டவற்றை பரிசுப் பொருளாகக் கொண்டு சென்று, கப்பலில் இருந்தே தூக்கி வீசினர். அப்போது ஆண்கள், பெண்கள், சிறார்கள் என கூட்டமாக தீவிலிருந்து வெளிப்பட்ட பழங்குடியினர், அந்தப் பரிசுப் பொருள்களை ஆர்வத்துடன் சேகரித்துக் கொண்டனர். ஆனால், குழுவினரை தீவுக்குள் அனுமதிக்கவில்லை. இதுதான் சென்டினல் பழங்குடிகளுடனான முதலும் கடைசியுமான தொடர்பு.
 அதன் பிறகு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் அந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியை இந்திய அரசு கைவிட்டது. மேலும், சென்டினல் தீவிலிருந்து 3 கடல் மைல் தொலைவுக்குள் செல்வது சட்டவிரோதம் எனவும் அறிவித்து, அப்பழங்குடி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அந்தஸ்தையும் அளித்தது.
 2006-ஆம் ஆண்டு, இந்திய மீனவர்கள் இருவர் சென்ற மீன்பிடிப் படகு, தற்செயலாக சென்டினல் தீவு அருகே கரை ஒதுங்கியது. அப்போது இரு மீனவர்களும் பழங்குடிகளின் அம்புகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதன் பின்னர், இப்போது அத்தீவுக்குள் நுழைந்த அமெரிக்கரான ஜான் ஆலன் கொல்லப்பட்டுள்ளார்.
 நிகழாண்டு தொடக்கத்தில் வெளிநாட்டவர்கள் சிறப்பு அனுமதி பெற்று சென்டினல் தீவு உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள சில தீவுகளுக்குச் செல்லலாம் என இந்திய அரசு அறிவித்தது. ஆனால், சாகசப் பயணம் செல்லும் நோக்கத்தில் அல்லது கிறிஸ்தவத்தை அப்பழங்குடிகளுக்குத் தெரிவிக்கும் பொருட்டு சென்ற ஜான் ஆலன், அதிகாரிகளிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. உள்ளூர் மீனவர்களுக்குப் பணம் கொடுத்து படகில் அத்தீவுக்குச் சென்றுள்ளார்.
 ஆனால், கடற்கரை மணலில் காலடி எடுத்து வைத்தவுடனேயே அம்புகளால் துளைக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலை பழங்குடி மக்கள் சிறிது தொலைவு மணல் பரப்பில் இழுத்துச் சென்று புதைத்ததாக நேரில் பார்த்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
 தற்போது ஜான் ஆலனின் உடலை மீட்கும் முயற்சியில் அந்தமான்-நிக்கோபர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தீவுக்குள் யாரையும் அனுமதிக்காத பழங்குடி மக்களை எதிர்கொள்வது எப்படி என்பதில்தான் சிக்கல்.
 அதிகாரிகள் உள்ளே நுழைந்தால் அவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் மோதல் ஏற்படலாம்; வெளி உலகத்துடன் தொடர்பே இல்லாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அத்தீவில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக மிகக் குறைவாக இருக்கும். வெளிநபர்களிடமிருந்து ஏதாவது நோய்க் கிருமிகள் தீவில் பரவினால் ஒட்டுமொத்த பழங்குடி இனமும் அழிந்துவிடும் அபாயமும் உள்ளது.
 ஆதலால், ஜான் ஆலனின் உடலை மீட்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் லண்டனைச் சேர்ந்த "சர்வைவல் இன்டர்நேஷனல்' அமைப்பின் தலைவர் ஸ்டீபன் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்டினல் பழங்குடி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் என அந்தமான்-நிக்கோபர் தீவுக் குழும காவல் துறை தலைவர் தீபேந்திர பதக் கூறியுள்ள கருத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
 சென்டினல் பழங்குடி மக்கள், "எங்களைத் தனித்திருக்க விடுங்கள்' என்று கோருகிறார்களே தவிர இந்த உலகத்திடம் இருந்து அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களைத் தனித்திருக்க விடுவோம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com