கருத்துரிமை காப்போம்!

அண்மைக் காலமாக எங்கும் கருத்துரிமை குறித்த முழக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
Updated on
3 min read

அண்மைக் காலமாக எங்கும் கருத்துரிமை குறித்த முழக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா ஊடகங்களும் கருத்துரிமை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றன. எதிரெதிராகப் பேசுபவர்கள், அவரவர் சொல்வதே சரியானது என்று ஆரவாரம் செய்கிறார்கள். அடித்துப் பேசிவிட்டால் அது உண்மையாகி விடும் என்று நம்புகிறார்கள்.
உரிமையும், கடமையும் ஒரு மனிதனின் இரண்டு விழிகளாக இருப்பதால் இந்தப் போராட்டம் தொடர்கதையாகிறது. மக்களாட்சியில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டங்கள் இதன் இன்றியமையாமையை ஏற்றுக் கொண்டுள்ளன. என்றாலும் என்ன? அதனை ஏற்றுக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களா என்பதுதான் கேள்வி.
கருத்துரிமைக்கான போராட்டம் தேச எல்லைகளைத் தாண்டி எல்லா நாடுகளிலும் நடக்கின்றன. எல்லா நாடுகளிலும் ஆட்சியாளர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால் அந்த அரியாசனத்தை இழப்பதற்கு அவர்கள் மனம் இடம் கொடுப்பதில்லை.
குடிமக்களுக்கு உரிமை கொடுத்துவிட்டால் அந்த ஆயுதம் தங்கள் மேல் பாய்ந்துவிடும் என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். அதனால்தான் அளவான உரிமைகளையே தந்து கண்காணிப்பில் வைத்துக் கொண்டுள்ளனர். எந்த நேரத்தில் எது வெடிக்குமோ என்று அச்சத்திலேயே அவர்கள் உள்ளனர்.
காலனியாதிக்கத்தை எதிர்த்து நாம் போராடிய போது அது தேச துரோகமாகக் கூறப்பட்டது. விடுதலையடைந்த நாட்டிலும் அதே சட்டம் வேறு உருவத்தில் உலவுகிறது. ஆட்சியாளர்கள் தவறு செய்யும்போது மக்கள் ஆர்த்து எழுந்தால் அதுவே அரச குற்றமாக அறிவிக்கப்படுகிறது. அந்த மக்களை ஆதரிக்கும் கட்சிகளும் எதிர்க்கட்சியாகாமல், எதிரிக் கட்சிகளாகவே ஆகின்றன.
மன்னர்கள் காலத்திலிருந்து பிரபுக்கள் காலம் வரை குடிமக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். அவர்கள் வாய் திறவாமல் இருந்தால்தான் உயிர்வாழ முடியும். அவர்கள் உண்ணும்போது மட்டுமே வாயைத் திறக்க வேண்டும். மற்றபடி வாய்திறந்து பேசமுடியாத அடக்குமுறை.
மக்கள் தூங்கிக் கிடந்தவரை எங்கும் அமைதி நிலவியது. அவர்கள் விழித்துக் கொண்டபோது கலவரம் வெடித்தது. கலகத்தில் பிறப்பது நீதி என்பது அப்போதுதான் தெரிந்தது. ஆளுவோரின் கோட்டைகளும், கொத்தளங்களும் நொறுங்கி தரைமட்டமாயின. அதைத்தான் புரட்சி என்றார்கள்.
இங்கிலாந்தின் தொழிற்புரட்சியும, பிரான்சில் நடந்த பிரெஞ்சுப் புரட்சியும் மனிதகுல வரலாற்றில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கின. மக்களாட்சிக்கு அடித்தளம் இட்டன. இந்த மக்களாட்சியை விடச் சிறந்த ஆட்சி கிடைக்காததால் இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மக்களாட்சியின் சிறப்பு என்பதே அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட்டிருப்பதுதான். நமது இந்திய அரசமைப்புச் சட்டமும் இதற்கு வழிவகுத்துள்ளது.
சமத்துவ உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை, சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு உரிமை, விரும்பிய சமயத்தை பின்பற்றும் உரிமை, பண்பாடு - கல்வி தொடர்பான உரிமைகள், சொத்துரிமை, அரசியலமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு தேடும் உரிமை என்னும் பல வகைகளில் அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன.
குடிமக்களின் வளர்ச்சிக்கும், மகிழ்வான வாழ்வுக்கும் ஏழு உரிமைகள் சுதந்திர வாழ்வு பெறும் உரிமை என்னும் விதியின்படி வழங்கப்பட்டுள்ளன. அரசமைப்பின் 19-ஆம் விதி அந்த ஏழு உரிமைகளைக் குறிப்பிடுகிறது.
இதன் முதல் விதியே பேச்சுரிமையும், கருத்தை வெளிப்படுத்தும் உரிமையும் ஆகும். இதற்குத் தடை வரும்போதெல்லாம் நாட்டில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் பொங்கி எழுகின்றன. பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் தங்கள் உரிமைகள் நசுக்கப்படுவதாக குரல் எழுப்புகின்றன.
மக்களாட்சியில் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகைகள் ஆள்வோருக்கு அடங்கி இருந்தால் நலம் என்று எண்ணுவது இயற்கை. அதற்கு எதிராக மாறும்போது அரசாங்கம் தனது அதிகாரத்தைக் காட்ட எண்ணுகின்றது. அதில் ஏற்படும் வெற்றியும், தோல்வியும் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. ஆட்சி மாற்றத்திற்கும் வழி வகுக்கின்றன.
அண்மையில் தமிழ்நாட்டில் ஒரு செய்தி வெளியிட்டது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதும் இப்படித்தான் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் இந்தியத் தண்டனை சட்டம்  124 என்னும் சட்டப்பிரிவை இதற்குப் பயன்படுத்தியதை பத்திரிகை உலகமே எதிர்த்தது. 
இதனை இதுவரை இந்தியாவில் பத்திரிகையாளர் மீது யாரும் பயன்படுத்தியது இல்லை என்றும், இப்போது இதனைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு தவறான முன் உதாரணம் ஏற்பட்டு விடக் கூடாது என்றும் பத்திரிகையாளர் சார்பில் கூறப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தது.
எல்லாருக்கும் இருப்பது போல பத்திரிகையாளர்களுக்கும் பொறுப்புணர்வு வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடுவு நிலையோடு செயல்பட வேண்டும். உரிமைகளுக்குப் போராடுவது போல கடமையிலும் கவனம் வேண்டும்.  "வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். வலி இல்லாத போராட்டம் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு வேள்வி. தீயில்லாத வேள்வியில்லை. வாழ்க்கை என்பது ஒரு கடல், அலையில்லாத கடல் இல்லை' என்றார் எழுத்தாளர் காண்டேகர். 
இலங்கையில் விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவாகப் பத்திரிகையில் ("நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு') கட்டுரை எழுதியதற்காக 2008 மார்ச் 7-இல் ஜே.எஸ். திசைநாயகம் என்னும் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார். தீவிரவாதத்தை ஆதரித்தது உறுதிப்படுத்தப்பட்டதால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது கொழும்பு உயர்நீதிமன்றம்.
இதேபோல் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வந்த வசந்தா விக்ரமதுங்க 2008 ஜனவரியில் தனது பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மூன்று ஆண்டுகளில்  இலங்கையில் ஒன்பது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டடனர். 27 பேர் தாக்கப்பட்டனர். அந்த நிகழ்வுகள் முடிந்துவிடவில்லை. இப்போதும் தொடர்கிறது.
"இலங்கையில் திசைநாயகம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு ஒரு உதாரணம்' என்று அமெரிக்காவின் அன்றைய அதிபர் பராக் ஒபாமா கூறினார். உலகப் பத்திரிகை சுதந்திர நாள் விழாவில் உரையாற்றுகையில் இதனைக் கூறினார்.
அண்மையில் நிகழ்ந்த சவூதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகியின் மரணத்தை கருத்துச் சுதந்திரத்தின் படுகொலை என்றே கூறுகிறார்கள். 
செய்தியாளர் கஷோகி, சர்ச்சையின் காரணமாகவே சொந்த நாட்டிலிருந்து தப்பித்து இலண்டன் சென்றார். அமெரிக்காவில் வசித்துவந்த அவர், அங்கிருந்து வெளியாகும் "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். சவூதி அரச குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில் துருக்கி நாட்டு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு அந்த நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத்தூதரகத்துக்குச் சென்றார். அதன்பிறகு அவரைக் காணவில்லை.
தூதரகத்துக்குள் அவரை சவூதி அரேபியா அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாகவும், கருப்பு நிறக் காரில் அவரது உடலை வெளியே கொண்டு சென்றதாகவும் துருக்கி அரசு கூறிவந்தது. அதற்கான ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகளிடம் இருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்தன.
அது உண்மை என்பது இப்போது தெரிய வருகிறது. துருக்கியில் உள்ள தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொலை செய்யப்பட்டதை முதல் முறையாக சவூதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இரு உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ததாகவும், 18 பேரை கைது செய்துள்ளதாகவும் அந்த நாடு அறிவித்திருப்பது ஊடக உலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "செய்தியாளர் கஷோகி மாயமானது பற்றி சவூதி அரபியா அளித்துள்ள விளக்கம் நம்பகத் தன்மை வாய்ந்ததாக உள்ளது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இவ்வாறு கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகள் உலகெங்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனை மீட்டெடுக்கும் பணியும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஐ.நா. அவையும் அதற்கான வழிகாட்டு நெறிகளை வகுத்து அளித்துள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு அரசுகள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்ட முடியும்.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் மனித உரிமைப் பிரகடனம் அதற்காகத்தான் அறிவிக்கப்பட்டது. 
"மனிதர்களை சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், இயற்கை பிறப்பிக்கிறது. ஆகவே இயற்கை நியதிப்படி மக்கள் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், சமத்துவமாகவும் வாழ்வதற்கு உரிமை உள்ளவர்கள் ஆகின்றனர்' என்கிறது பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம்.
இந்த உரிமையை அடைவதற்கு கருத்து உரிமையே ஆதாரமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து காப்பாற்றி வரவேண்டும். அந்தக் கடமை அரசுக்கு மட்டுமல்ல, எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் இருக்கிறது. அதனைக் கண்காணிக்கும் பொறுப்பு குடிமக்களுக்கு இருக்கிறது.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com