சட்டமும் சாமானியனும்
தரமான ஐஎஸ்ஐ ஹெல்மெட் அணிய நாங்கள் ரெடி; தரமான சாலைகளை அமைத்துத்தர நீங்கள் ரெடியா?'


தரமான ஐஎஸ்ஐ ஹெல்மெட் அணிய நாங்கள் ரெடி; தரமான சாலைகளை அமைத்துத்தர நீங்கள் ரெடியா?'
"ஒரு பேருந்தில் 55 பேர் மட்டுமே பயணம் செய்ய உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள்?'
"வீட்டில் ஹெல்மட்டை மறந்து வைத்துவிட்டு சென்றால், ஓட்டுநர் உரிமம், ஆவணங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்துக்கு அலைய விடுவது என்ன நியாயம்?'
மோட்டார் சைக்கிள்களில் பின் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று உயர் நீதிமன்ற அளித்த உத்தரவை அடுத்து சமூக வலைத்தளங்களில் பலர் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நீதிமன்றத்தை எதிர்த்து இதுபோன்ற கேள்விகளை எழுப்புவது சரியானது இல்லை என்றாலும், பொது மக்கள் தங்களது தினசரி வாழ்வில் சில காவல் துறையினரால் சந்திக்கும் பிரச்னைகளால் ஆதங்கத்தில் இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.
மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்று 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதுரை மாவட்ட வழக்குரைஞர்கள் சிலர் மீது நீதிமன்றமே அவமதிப்பு வழக்கு தொடுத்து அவர்களைக் கண்டிக்கவும் செய்தது.
கட்டாய ஹெல்மெட்டுக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் காலப்போக்கில் ஓட்டுபவர் பயன்படுத்த பழகிக்கொண்டனர்.
தற்போது பின் அமர்ந்து செல்வோரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இது இருசக்கர வாகன ஓட்டிகளான சாமானிய மக்களுக்கு எதிரான உத்தரவு என்பதைப்போல் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க என்ன காரணம்?
மோட்டார்சைக்கிளை மாதக் கடனில் வாங்கி, அதற்கு சாலை வரி, போக்குவரத்து பதிவு கட்டணம், காப்பீட்டு கட்டணம், தினந்தோறும் அதிகரிக்கும் பெட்ரோலுக்கான கட்டணம் போன்றவற்றை செலுத்திவிட்டு வாகனத்தை இயக்கும் போது ஹெல்மெட் அணியாததற்கும் அபராதமும் செலுத்த வேண்டுமா என்பதுதான் அவர்களின் ஆதங்கம்.
இந்த சட்டத்தை அமல்படுத்தும் காவல் துறையினரோ, சட்டத்தை மதிப்பதில்லை என்பதால் சாமானியனின் கோபம். ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக காவல் துறையினர் பறிமுதல் செய்யும் ஓட்டுநர் உரிமத்தைப் பெற நீதிமன்றத்துக்கு மாதக் கணக்கில் அலைய நேரிடுகிறது. ஆனால் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய காவல் துறை அதிகாரியே ஹெல்மெட் அணியாமல் செல்வதைப் பார்க்கும் பாதிக்கப்பட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்?
சில இடங்களில் காவல் துறையினர் மறைந்திருந்து சாலை விதிகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டிப் பிடிக்கும்போது உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன.
அதைப்போல், ஹெல்மெட் அணியாததற்காக சாலையில் நின்று கொண்டு சில காவல் துறையினர் பேசும் அவதூறு வார்த்தைகளால் அசிங்கப்பட்டு ஓட்டுநர்கள் அபராதம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே அவ்வழியாக போலீஸ் வாகனத்தில் சீட் பேல்ட் அணியாமல் செல்லும் காவல் துறை உயர் அதிகாரிக்கு சல்யூட் அடிக்கும் போலீஸாரைப் பார்த்தால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்?
இதுபோன்று சட்டத்தை மதிக்காமல் சாமானிய மக்கள் மீது மட்டும் சட்டத்தை காவல் துறையினர் திணிக்கும்போதுதான், பொது மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவல் துறையினர் குறித்து யாரிடம் புகார் அளிப்பது? சாலை விதிகளை மீறும் காவல் துறையினர் குறித்து யாரிடம் புகார் அளிப்பது? என்பதை சாமானிய மக்கள் கேள்வி எழுப்புகிறான்.
அசல் ஆவணங்களைக் காண்பிக்காத காரணத்தால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மாணவரை காவல் அதிகாரி அடித்து துன்புறுத்திய சம்பவம் சென்னையில் நடைபெற்றது. இதை தனது செல்போனில் பதிவு செய்து இணையதளத்தில் மாணவர் வெளியிட்டார். இதற்கு கிளம்பிய எதிர்ப்பால் அந்த காவல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுத்தார். இது வரவேற்க வேண்டிய நடவடிக்கை என்றாலும், போலீஸாரின் அனைத்து நடவடிக்கைகளையும் பாதிக்கப்பட்டவர்களால் செல்போனில் பதிவு செய்ய இயலாது என்பதே நிதர்சனமான உண்மை.
சட்டங்களைக் கடுமையாக்கினால் மட்டும் போதாது. அதை செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதால் கார்களில் கருப்பு ஸ்டிக்கர்களை அகற்ற உச்ச நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அப்போது, நாடு முழுவதும் கார்களில் கருப்பு ஸ்டிக்கர்கள் தீவிரமாக அகற்றப்பட்டாலும், தற்போது அரசு அதிகாரிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் கார்களிலேயே மீண்டும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு யார் காரணம்?
காவல் துறையினர் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம். ஆனால், தமிழக காவல் துறையில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஓட்டுநர் உரிமமே இல்லை என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் கார்களின் நம்பர் பிளேட்களில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த நான்கு சிங்கங்கள் கொண்ட சின்னங்களை அகற்றிவிட்டு, பதிவு எண் கொண்ட பலகை பொருத்த வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
நாட்டின் முதல் குடிமகன் பயன்படுத்தும் வாகன எண்ணை மாற்ற உத்தரவு பிறப்பிக்கும் நீதிமன்றம், ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தும் காவலர்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சாமானிய மக்களை யாரும் அவதூறான வார்த்தைகளில் பேசாமல் கண்ணித்துடன் நடத்த வேண்டும் என்றும் சட்டங்களை மீறும் காவலர்கள் மீதும் புகார் அளிக்கலாம் என்றும் உத்தரவிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...