மூன்றாவது கண்
புராணங்களில் சில விநோதங்கள் உண்டு. பத்துத் தலைகள், இருபது கைகள், காதுகள், கண்கள் என்னும் இயற்கைக்கு முரணான பலவற்றைக் காணலாம்.


புராணங்களில் சில விநோதங்கள் உண்டு. பத்துத் தலைகள், இருபது கைகள், காதுகள், கண்கள் என்னும் இயற்கைக்கு முரணான பலவற்றைக் காணலாம். இவை பெரும்பாலும் கடவுள்களின் பெருமையையும் ஆற்றலையும் பறைசாற்றவே பயன்பட்டன. ஆனால் கடவுள்களுக்குப் போட்டியாக அசுரர்களும் அத்தகைய விநோத உருவங்களைத் தங்களது
சக்தியாலும் சாபங்கள்- வரங்களாலும் பெற்றுள்ளனர்.
இவற்றுக்குப் பின்னால் தொடர்புடைய கதைகளும் உண்டு. சிவபெருமான் தனது உடலில் இரு பாகங்களை உடையவர். வலதுபுறம் தானும், இடதுபுறம் அம்மையுமாய்ப் பிரிந்திருக்கும் இரு கூறுகளையுடையது அவரது திருமேனி.
அவர்தம் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாக முக்கண்ணன் என்னும் உறுப்புப் பெயரைக் கொண்டவர் அவர். ஏனைய கடவுள்களைப் போலவே மற்ற உறுப்புகள் அமையப் பெற்றாலும், கண்கள் மட்டும் அவருக்கு மூன்று. நான்முகன், முருகப் பெருமான் முதலியோருக்கும் நிறையக் கண்கள் உண்டு என்றாலும் அவை இயல்பாக முகத்தோடே அமைந்தவை. ஆனால், சிவபெருமானின் மூன்றாவது கண் அவருடைய நெற்றியில் அமைந்திருக்கும்.
இந்த நெற்றிக் கண் தனிச்சிறப்புடையது. அவருடைய ஏனைய இரண்டு கண்களும் மோனத்தில் ஆழ்ந்திருக்க மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண் உலக நடப்புகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் என்று இலிங்க புராண விளக்கம் கூறுகிறது.
இன்றைய அறிவியல் யுகத்தில் நமக்குக் கிடைத்திருக்கிற மூன்றாவது கண்ணாக விளங்குவது கேமராதான். புகைப்படக் கருவியாகத் தோன்றிய இது பின்னாளில் பொழுதுபோக்கும் திரைப்படக் கருவியாகித் தொடர்ந்து தகவல்களை ஒளிபரப்பும் ஊடகக் கருவியாகித் தற்போது உள்ளதை உள்ளவாறு காட்டுவதற்கான சிசிடிவி என்னும் கண்காணிப்புக் கருவியாக - மூன்றாவது கண்ணாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது.
சிவபெருமானின் மூன்றாவது கண் எவ்வாறு உலகத்தைக் கண்காணிக்கிறதோ அதைப் போலவே இந்த சிசிடிவி கேமராக்களும் காணும் இடங்களிலெல்லாம் நீக்கமற நிறைந்திருந்து கண்காணித்துக் கொண்டேயிருக்கின்றன.
குற்றங்களைத் தடுக்கவும், என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக அறியவும் இக்கருவி பேருதவியாக இருப்பதை மறுப்தற்கில்லை. கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் கண்காணிப்புக் கேமரா காட்டுவதே உண்மை என்று எல்லாரும் ஏற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
தன்னை யார் கேட்கப் போகிறார்கள் என்றும், தான் செய்வதை யார் பார்க்கப் போகிறார்கள் என்றும் எண்ணி, கொடுமையான குற்றச் செயல்களைப் புரிகிறவர்கள் அந்தக் காட்சிகளை உலகமே காணுகிறபோது தாங்களே அந்தக் குற்றத்தின் கடுமையை உணர்ந்து உளம் நொந்து போவார்கள். ஒருவேளை இதுதான் மெய்ப்பொருள் என்பதோ? தானாக ஆடாதவர்களையும் தசையாடச் செய்து விடுகிறது இந்த மூன்றாவது கண்.
பண்டைய காலங்களில் ஒருவரைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப் பெற்ற செயல்களை உளவு என்றும் ஒற்று என்றும் குறிப்பிடுவர்.
உளவிலும் ஒற்றிலும் சாதக பாதகங்கள் உண்டு. நடுநிலை இல்லாத உளவாளிகளும் ஒற்றர்களும் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்குத் தகுந்தவாறு தகவல்களைக் கூட்டி, குறைத்துக் கூறி செய்தியின் உண்மைத் தன்மையைக் குலையச் செய்து விடுவார்கள். இதனால் அறத்தில் பிழை நேரலாம். ஆனால் இன்றைய சிசிடிவி கேமிராவில் இந்தப் பிரச்னை இல்லை. அது உள்ளதை உள்ளவாறு, ஒளிவுமறைவின்றி, மாறுபாடில்லாது காட்டும்.
உளவும் ஒற்றும் குற்றங்களைக் கண்டுபிடிக்க மட்டும்தான் பயன்படும் என்று எண்ண வேண்டாம். தன்னைத்தானே அறநெறியில் நிறுத்திக் கொண்டு தன் மனத்தையே கண்காணிப்புக் கருவியாக மாற்றிக் கொண்டு அதன்மூலம் உலகப் புகழ் அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.
மகாகவி பாரதியாருடைய வாழ்வியல் பதிவுகளும் அவருடைய பல அரிய கவிதைகளும் அழியாமல் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அன்று அவரைத் துரத்தித் துரத்தித் துன்புறுத்திய உளவாளிகள்தான்.
தான் மேற்கொள்ளும் எந்தச் செயலையும் தான் உச்சரிக்கும் எந்தச் சொல்லையும் இந்த உலகமே உற்று நோக்குகிறது என்று அறிந்து கொண்ட மகாத்மா காந்தி தன்னுடைய வாழ்வை ஒளிவு மறைவின்றித் திறந்த புத்தகமாக்கினார். ஒற்றறிவதற்காகத் தன்னைச் சூழ்ந்திருந்த கருவிகளுக்கு மத்தியில் தனது கருவியாக அவர் சத்தியத்தையே நூற்பதைப் போல கைராட்டையில் நூலை நூற்றுக் கொண்டிருந்தார்.
இன்றைக்கு உண்மையை உரித்து உரித்துக் காட்டுகிறது இந்த சிசிடிவி கேமரா. மனிதர்களுக்குள் இருக்கும் மிருகங்கள் வெளிவந்து துள்ளி ஆட்டம் போடுவதை அந்தக் கேமராக்கள் வழியே ஊடகவெளிகளில் எங்கும் பார்க்க முடிகிறது.
பொது இடங்கள் எல்லாவற்றிலும் வைக்கப்பட்டிருக்கிற அந்த சிசிடிவி கேமராவின் கீழே நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்று எழுதப்பட்டிருக்கும் வாசகம் ஒருகணம் நாமும் குற்றவாளிதானோ என்று நம்மை சிந்திக்கத்தான் வைக்கிறது. என்றாலும் மறுகணமே மனத்துக் கண் மாசிலாத நிலையை நாம் பெற்றிருப்பதால் அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு விட முடிகிறது.
கண்காணிப்புக் கருவி என்னும் அந்தக் கேமரா ஒருபுறம் இருக்கட்டும். நமது மனசாட்சி உள்ளிருந்தே நம்மைக் கண்காணிப்பதை நாம் அறிந்து கொண்டால், மிருக குணத்தை வென்று தெய்வ குணத்தை நாம் பெறலாம். மனிதனின் மூன்றாவது கண், அவன் மனசாட்சியே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...