பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை

தமிழ் நாட்டின் கடேலார மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக வீசி மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச்


தமிழ் நாட்டின் கடேலார மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக வீசி மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது. சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பாதிப்பைக் குறைத்துள்ளதாகவும் முழு வீச்சில் மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு கூறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓரளவு பாராட்டினாலும், உரிய மறுவாழ்வுப் பணிகள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. பேரிடர்கள் என்பது இன்று நேற்று வருவன அல்ல. காலந்தோறும் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள்தான்.
இடர்கள் வரும்பொழுது எவ்வெவ்வாறு தடுக்க வேண்டும், அவற்றிலிருந்து எவ்வாறு மக்களைக் காக்க வேண்டும், இடர்கள் தரும் அழிவுகளிலிருந்து எவ்வாறு மீட்டு மறுவாழ்வு அளித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டு நிலையான நடவடிக்கைக் குறிப்புகளை வரையறுக்க வேண்டும். இதற்கெனப் பேரிடர்க் கால மறுவாழ்வு அமைப்பு என நிலையான ஓர் அமைப்பையும் அரசு உருவாக்க வேண்டும்.
புயல், வெள்ளம், நிலநடுக்கம், கடல்கோள்(சுனாமி)முதலான பேரழிவு நேர்ச்சிகளில், இயற்கையால் விளையும் கொடுமைகளில் இருந்து மீள இதுவரை என்னென்ன பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் வந்த இன்னல்கள் என்னென்ன? இனி அவற்றை எவ்வாறு தடுப்பது? எவ்வாறு அவற்றிலிருந்து மீள்வது? எனக் குறிப்புகளை உருவாக்க வேண்டும். உருவாக்கப்படும் அமைப்பு கட்சி சார்பற்ற முறையில் செயல்படும் வகையில் இருக்க வேண்டும்.
உணவு, உடை, பயன்பாட்டுப் பொருள்கள் முதலியவற்றின் சேமிப்புகள், சாலை போக்குவரத்து சரிசெய்தல், மின் இணைப்புகளைச் சரி செய்தல், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் முதலான பொது அலுவல் மனைகள், உதவகங்கள் ஆகியவற்றை இடிபாடுகள், அழிவுகளிலிருந்து மீட்டெடுத்தல், அழிவிற்குள்ளாகும் தேவைப் பொருள்களை வழங்குதல், பேரிடர்க் காலங்களில் ஏற்படும் நோய், நலக்குறைவு முதலியவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கான மருத்துவ வசதிகள், மருந்துகள் முதலியவை குறித்த தெளிவான திட்டமிடல் வேண்டும்.
சாலைச் சீர்குலைவு, ஊர்மக்களுடன் தொடர்புகொள்ள இயலாமை போன்ற பல்வேறு காரணங்களால், மறுவாழ்வுப் பணிகளில் தேக்கம் ஏற்படுவது இயற்கை. இத்தகைய பேரிடர்களில் உதவும் பணிகளில் ஈடுபடுபவர்களும் தத்தம் குடும்பத்தினருக்கு இடர் ஏற்பட்டுத் துன்பத்தில் உழன்று கொண்டிருப்பர். இதனை உணராமல் நாம் பொதுவாகக் குறை கூறுவதும் தவறு.
23.12.2005 அன்று, இந்திய அரசு, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றியது. 09.01.2006-இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றது. இதன்அடிப்படையில், தலைமையமைச்சர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority NDMA) அமைக்கப்பட்டது; அதன் கட்டுப்பாட்டில் தேசியப் பேரழிவு மீட்புப் படையும் உள்ளது.
பேரிடர்க்கால மீட்புப் படை மாநிலந்தோறும் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருப்பினும் எந்த மாநிலமும் மீட்புப் படையை அமைக்கவில்லை. அவ்வாறிருந்தால் பேரிழப்பு காலங்களில் மக்கள் தொடர்பும் உதவி வழங்கலும் எளிமையாய் இருந்திருக்கும்.
இயற்கைப் பேரழிவுகள் மட்டுமல்லாமல், உயிரியல், வேதியல், அணுக்கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளின் பொழுதும், முன் நடவடிக்கைகள், விளைவுகளை எதிர்நோக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு உருவாக்கபட்டதே தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம். (அணுக்கதிரியக்கம் போன்றவற்றால் ஏற்படும் 
அழிவுகளுக்கு மத்திய அரசே காரணமாக இருப்பதுதான் கொடுமை.)
தமிழ்நாட்டிலும் வருவாய்-பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளது. என்றாலும் மாநிலத்தில் ஏதும் பேரழிவு ஏற்பட்டால் உடனடியாக மத்திய அரசின் துயர் கணிப்புக் குழு வருவதில்லை.
வெள்ளம் வடிந்தபின் பார்வையிடல் போன்று பேரிடர் பாதிப்புகள் மறைந்த பின்னரே மத்தியக் குழு வரும். மாநில அரசு நிதி உதவி கேட்டாலும் முதலில் பத்தில் ஒரு பங்கு போல் குறைந்த அளவுதான் நிதியை விடுவிக்கும். இத்தகைய தவறான போக்கிற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.
மறுவாழ்வுப் பணிகள் என்பன உடனடியாகவும் துயரங்களைத் தணிப்பனவாகவும் இருத்தல் வேண்டும். காலங் கடந்து தரும் உதவிகளால் உரிய பயன் கிடைக்காது. ஆதலின், உடனுக்குடன் உதவிகள் வழங்கப் பெறும் வகையில் பேரிடர் மறுவாழ்வு அமைப்பு, நிதி அதிகாரம் மிக்க தன்னிறைவான அமைப்பாக இருக்க வேண்டும். 
மத்திய அரசின் சார்பாளர்களும், தொண்டுஅமைப்பினரும் பிற கட்சிகள், இயக்கத்தினரும் இவ்வமைப்பில் இருக்க வேண்டும். துயர் துடைப்பு உதவிகள் உடனே வழங்கப்படும் வகையில் அமைப்பின் அதிகாரமும் இருக்க வேண்டும்.
பேரிடர் ஆணையம் அதற்கான சட்டப்படி மாவட்ட ஆணையம் அமைத்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படவில்லை. ஆறு ஆண்டுகள் இவ்வாணையம் கூட்டப்படவேயில்லை. இந்த ஆண்டுதான்(18.10.2018) இதன்ஆறாவது கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்படியானால் இதன் செயல்பாடு எந்த அளவில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் உதவிகள் உரிய காலத்தில் மட்டுமல்ல, காலந்தாழ்ந்தும் முழுமையாகக் கிடைப்பதில்லை என்பதே நடைமுறை. அஃதாவது, மறுவாழ்வுப் பொருள்கள் தில்லியிலிருந்து வரவேண்டிய நடைமுறையால் காலத்தாழ்ச்சி ஏற்பட்டு உரிய காலத்தில் பயன் கிட்டாமல் போகிறது.
எனவேதான் மறுவாழ்விற்கெனத் தனியமைப்பு மாநில அளவிலும் அதன் சார்பில் மாவட்ட நிலைகளிலும் இருக்க வேண்டும். பேரிடர்க்கால மறுவாழ்விற்கெனத் தனி அமைப்பு இருப்பதன் மூலம் மட்டுமே உடனடி உதவிகளில் கருத்து செலுத்த முடியும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் மக்கள் உயிரிழப்பு, உடைமைகள் அழிவு, வீடுகள் பிற கட்டட இடிபாடுகள், பயிர்கள் இழப்பு, கால்நடைகள் இழப்பு, உதவுநர் இருந்தாலும் உதவி கிடைப்பதற்குரிய போக்குவரத்து இன்மை போன்றவற்றால் பெரிதும் தரைமட்டமாகியுள்ளன; பிற மாவட்டங்களிலும் துன்பமே குடிகொண்டுள்ளது. 
அரசு இயந்திரம் எப்படி முடுக்கிவிடப்பட்டாலும் மக்களுக்கு வேண்டிய இடர்தீர்வு உதவிகள் தேவையான அளவு, தேவையான நேரத்தில் முழுமையாகக் கிட்டவில்லை என்பதே உண்மை. இனியொரு நிலைமை இது போன்று ஏற்படாத வகையில் மறுவாழ்வுப் பணிகள் சீராகவும் சிறப்பாகவும் நடைபெற இப்பொழுதாவது பாடங்கற்று பேரிடர்க்கால மறுவாழ்வு அமைப்பை உருவாக்க அரசு முன் வரவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com