வாராக்கடன் குறைகிறது; வளர்ச்சி எப்போது?

வங்கிகளைப் பீடித்திருந்த வாராக்கடன் என்னும் நோய், கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருகிறது. இது புத்தாண்டில் புலப்படும் நல்ல அறிகுறி.

வங்கிகளைப் பீடித்திருந்த வாராக்கடன் என்னும் நோய், கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருகிறது. இது புத்தாண்டில் புலப்படும் நல்ல அறிகுறி. இந்திய ரிசர்வ் வங்கி வழக்கமாக வெளியிடும் நதி ஸ்திரத்தன்மை பற்றிய அறிக்கை அண்மையில் வெளிவந்துள்ளது.
கடந்த ஆறுமாத காலத்தில், நாட்டின் அனைத்துவகை வணிக வங்கிகளிலும் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் தொகையில் வாராக்கடன் விகிதம் சற்று குறைந்துள்ளது. 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 11.5 சதவீதமாக இருந்த வாராக்கடன் தொகை, சென்ற செப்டம்பர் மாதத்தில் 10.8 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க முன்னேற்றம்.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த வாராக்கடன் விகிதம், முதல் முறையாக இறங்குமுகத்தில் உள்ளது. அதுமட்டும் அல்லாமல், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள் என்ற பாகுபாடு இல்லாமல் இரண்டு வகை வங்கிகளிலும் வாராக்கடன் தொகை குறைந்துள்ளது. 
மேலும், பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை தொடர்புடைய பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, வங்கிகளின் வாராக்கடன் விகிதம் 2019 மார்ச் மாத இறுதியில், மேலும் குறைந்து, 10.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 
அந்த வகையில் இந்திய வங்கிகள் வீழ்ச்சிப் பாதையிலிருந்து விலகி, வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அண்மையில் கூறியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
அரசுடைமை வங்கிகளின் வாராக்கடன் விகிதம், தனியார் துறை வங்கிகளின் வாராக்கடன் விகிதத்தைவிட சற்று அதிகமாகத்தான் இப்போதும் உள்ளது என்பது கவலை அளிக்கிறது. பெரிய தொகையிலான கடன்களில் பெரும்பகுதியை அரசுடைமை வங்கிகள்தான் வழங்கியுள்ளன என்பதும், அத்தகைய கடன்கள், ஒட்டுமொத்த வங்கிக் கடனில் 55 சதவீதமாக இருப்பதும்தான் அதற்குக் காரணம் என்பது வெளிப்படை.
கடந்த மூலின்று ஆண்டுகளாக அவ்வப்போது வெளிவந்த அரசுடமை வங்கிகளின் வாராக்கடன் பற்றிய தகவல்கள், பொதுமக்களிடையே, வங்கிகளின் செயல்பாடுகள் மீது அதிருப்தியையும், பீதியையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல. இந்த நிலையில் மேற்கூறிய புதிய தகவல்கள், மக்களுக்கு வங்கிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இந்த முன்னேற்றத்துக்கு ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுதான் காரணமாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல. அதுதான் உடனுக்குடன் முறைப்படுத்தும் நடவடிக்கை. 
ஒரு விஷயத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது. நான் அறிந்தவரை ரிசர்வ் வங்கியின் வேறு எந்த ஒரு செயல்பாடும் மேற்கூறிய விதிமுறையைப்போல் கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளானதில்லை. பரவலாக எழுந்த இந்தக் கண்டனத்துக்கு என்ன காரணம் என்றால், வாராக்கடனை ஒரு குறிப்பிட்ட அளவு குறைக்கும்வரை சம்பந்தப்பட்ட வங்கி புதிய கடன்களை வழங்க முடியாது என்ற விதிமுறைதான். 27 பொதுத்துறை வங்கிகளில் 11 அரசுடமை வங்கிகள் இந்தக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
தொடர்புடைய வங்கிகளைக் காப்பாற்ற வேண்டுமானால் புதிய கட்டுப்பாடு அவசியம் தேவை என்று ரிசர்வ் வங்கி கருதியது. அதேசமயம், 11 வங்கிகள் சிறுதொழில் கடன் உள்பட எந்த ஒரு கடனும் வழங்காவிடில், அது தொழில் துறையை மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்பதால் புதிய கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் அல்லது தளர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு உள்பட பல தரப்பினரும் முன்வைத்தனர்.
வாராக்கடன் குறைந்திருக்கும் இந்தப் புதிய சூழலில், புதிய சிந்தனைகளுக்கு இடம் ஏற்பட்டுள்ளது. அதுவரை புதிய திவால் சட்டத்தின் (இன்ஸால்வன்சி மற்றும் திவால் சட்டம்) மூலம், 12 பெரும் நிறுவனங்களின் வாராக்கடன் கணக்குகளிலிருந்து, மார்ச் மாதத்துக்குள் ரூ.70,000 கோடி வசூலாக உள்ளது என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
வாராக்கடன் தவிர, வங்கிகள் எதிர்கொண்டுள்ள இன்னொரு பிரச்னை, கடன் மோசடிகள் லிமூலம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்புகள். ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை பற்றிய அறிக்கையின்படி, கடந்த ஆறு மாதங்களில் நிகழ்ந்த வங்கி மோசடிகளில், 95 சதவீதம் கடன் மோசடிகள் என்பது அதிர்ச்சித் தகவல். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளும், வங்கிகளுடைய கண்காணிப்பும் எந்த அளவு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதையே மேற்கூறிய நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
விவசாயிகளுக்கும், சிறு, குறு, நிடுத்தர மற்றும் பெரும் தொழில்களுக்கும் கடன் வழங்குவதுதான் வங்கிகளின் முக்கியப் பணி. குறுகிய கால கடன், நீண்டகால கடன் ஆகிய இரண்டும் இதில் அடங்கும். தனி நபர்கள் தொழில் நிறுவனங்கள் தவிர, வங்கிசாரா நிதி நிறுவனங்களும் (என்.பி.எஃப்.சி.) எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் நிதித் தேவைகளுக்கு வங்கிகளையே நம்பியுள்ளன.
இந்தப் பல்வேறு வகை கடன்களும் தங்கு தடை இல்லாமல் வழங்கப்படும்போதுதான் தொழில் வளர்ச்சி ஏற்படுகிறது. தொழில் வளர்ச்சி ஏற்படும்போதுதான் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இதைக் கருத்தில் கொண்டுதான் அரசுடைமை வங்கிகளின் மூலிலதனம் குறையும்போதெல்லாம் அதனை ஈடு செய்வதற்கு மத்திய அரசு கூடுதல் மூலிலதனத்தை வங்கிகளுக்கு வழங்குகிறது.
நம் நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை. அமைப்பு சார்ந்த துறைகளில் (ஆர்கனைஸ்டு செக்டர்) வேலைவாய்ப்பு பற்றிய புள்ளிவிவரங்கள் நம்பத்தக்கவை. ஆனால், அமைப்புசாரா துறைகளின் புள்ளிவிவரங்கள் விஞ்ஞான ரீதியில் தொகுக்கப்பட்டவை என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தத் துறையில்தான் அதிகபட்ச வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ஆனால் ஒரு விஷயம் தெளிவு. பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
2018-19-ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், தற்போது உலக நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவில் 7.4 சதவீதம் இல்லாவிட்டாலும், 7.2 சதவீதம் ரிதல் 7.4 சதவீதம் வரை இருக்கக்கூடும் என்பது நிபுணர்களின் கருத்து.
சர்வதேச நிலையைச் சற்று கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாகும். அமெரிக்காவில் 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் வீழ்ச்சியிலிருந்து அந்த நாடு மெல்ல, மெல்ல மீட்சி அடைந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் மந்த நிலை உருவாகி வருகிறது.
சீனாவின் தனியார் துறை தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவு, முதல் முறையாக சீனாவின் தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இதே நிலைதான். இந்தப் பின்னணியில், இந்தியாவில் கிட்டத்தட்ட 7 சதவீத வளர்ச்சி என்பது, உலக அளவில் அதிகபட்ச வளர்ச்சி விகிதமாக இருக்கும்.
இந்த நிலையில் ஒரு கேள்வி எழுகிறது. 7 சதவீத வளர்ச்சிக்கான வேலைவாய்ப்பு எங்கே? ஏன் வேலைவாய்ப்புடன்கூடிய வளர்ச்சியாக நமது வளர்ச்சி இல்லை? வேலைவாய்ப்புகள் இரண்டு வகையில் உருவாகின்றன. 
ஒன்று, புதிய முதலீடுகள் அதிக அளவில் செய்யப்பட்டால், அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் அதிக அளவில் பெருகும். இரண்டாவது, ஏற்கெனவே உள்ள முதலீடுகளை மேலும் திறம்பட பயன்படுத்தி, உற்பத்தியைப் பெருக்கினால், வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால், குறைந்த அளவில் மட்டுமே அவை இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் இரண்டாவதாக கூறிய வழிமுறையில்தான் வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதால் அவை குறைந்த அளவில்தான் உள்ளன.
2004-05 முதல் 2009-10 வரையிலான காலகட்டத்தில், வேலைவாய்ப்புகள் அதிக அளவில் பெருகின என்றால், அதற்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி முதல்முறையாக பெரிய அளவில் நிகழ்ந்ததுதான் காரணம். படித்த இளைஞர்கள் இத்துறையில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளைப் பெற முடிந்தது என்பது கண்கூடு. தற்போது உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால், மேற்கூறிய நிலைமை மாறிவிட்டது.
இனி புதிய வேலைவாய்ப்புகளை பெரிய அளவில் உருவாக்கிட வேண்டுமெனில், தனியார் துறையிலும், பொதுத்துறையிலும் புதிய முதலீடுகளை திரட்ட வேண்டும். இதற்கு ஏதுவாக வங்கிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். வாராக்கடன் குறைப்பு தொடர வேண்டும். ஏற்றுமதி பெருக்கத்துக்கு வழிவகை காணவேண்டும்.
உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பினும், வேறுவகையில் அதனைச் சமாளிக்க வேண்டும். உதாரணமாக, சீனாவின் சுணக்க நிலையை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்துக்கும் மேலாக விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதிலும், அரசுத் தரப்பு சலுகைகளை வழங்குவதிலும் முனைப்புக் காட்ட வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கே செயல்படுத்தினால், வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி விரைவில் வசப்படும்.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com