வங்கிக் கடன் வட்டி குறையுமா?

ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கை ஆய்வுக்கூட்டம் (மானிடரி பாலிசி குழு) பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நிகழ உள்ளது.


ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கை ஆய்வுக்கூட்டம் (மானிடரி பாலிசி குழு) பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நிகழ உள்ளது. இது ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்ததாஸ் தலைமையில் நடைபெற உள்ள முதல் கடன் கொள்கை ஆய்வுக்குழு கூட்டம். இது ஆறு பேர் கொண்ட குழு.

இந்தக்குழுவின் கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. முந்தைய ஆய்வு கூட்டம் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையில் நடைபெற்றது. அது சமையம் வட்டிவிகிதம் (ரெப்போ ரேட்) குறைக்கப்படவில்லை.

பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள ரெப்போ ரேட் (ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான (வட்டிவிகிதம்) குறையக்கூடும் என்று பொருளாதார நிபுணர்களாலும் அரசின் நிதி அமைச்சக  அதிகாரிகளாலும்  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்புக்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவு குறைந்து, 2.19 சதவீதமாக உள்ளது. உணவுப் பண்டங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதே பணவீக்க விகிதம் குறையக் காரணம். 

இரண்டாவதாக உர்ஜித் படேல் அணுகு முறைக்கும் சக்திகாந்ததாஸ் அணுகுமுறைக்கும் சிறிதளவேணும் வித்தியாசம் இருக்கக்கூடும் என்கிற பொதுவான நம்பிக்கை. தற்போது பணவீக்கம் குறைந்துள்ளதைக் சுட்டிக்காட்டி, தொழில் மற்றும் வணிகக் சம்மேளனங்களின் தலைவர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநரை அண்மையில் சந்தித்து ரெப்போ ரேட்டைஅரை சதவீதம் குறைக்கவேண்டும் என்னும் கோரிக்கையை  முன்வைத்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன? ரிசர்வ் வங்கியின் முக்கிய கடமை பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன்கள் தங்கு தடையில்லாமல் தொழில் துறையினருக்கும் இதர துறையினருக்கும் போய்ச் சேர வழிவகை செய்திட வேண்டும். அதேசமயம், பணவீக்கம் அதிகரிக்காமலும், அதன் காரணமாக விலைவாசி ஏற்றச் சுமை மக்கள் தலையில் விழாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும். இந்த இரட்டை இலக்கை எட்ட வேண்டும் என்பதே பிரதான குறிக்கோள்.

நிதி மற்றும் கடன் கொள்கையின்÷நோக்கம் பொருளாதார வளர்ச்சியா? அல்லது பணவீக்க கட்டுப்பாடா?  என்னும் கேள்வி எழும்போது, பணவீக்க கட்டுப்பாடுதான் மிக முக்கியமானது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.

இன்னும் சொல்லப் போனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான், நிதி மற்றும் கடன்கொள்கையை நிர்ணயிக்க பிரத்தியேகக் குழு நிறுவப்பட்டது. அதன் சட்டப் பூர்வமான கடமை பணவீக்கம்  4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்துவதுதான் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி எதிர்கொள்ளும் பிரச்னை என்னவெனில், தற்போது பணவீக்கம் குறைந்துள்ளது உண்மைதான்; ஆனால், அடுத்து வரும் வாரங்களில் அல்லது மாதங்களில் இதே நிலை தொடரும் என்று சொல்ல இயலாது. காரணம், சில்லரை விலை அடிப்படையில் பணவீக்கம் குறைந்திருப்பதற்கு உணவுப் பண்டங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு மட்டுமே. இதர பொருள்களின் விலைகள் அடிப்படையில் பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட 6 சதவீதமாக உள்ளது.

இந்தத் தகவலை ரிசர்வ் வங்கி ஆளுநர் குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் அண்மையில் பேசியபோது வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி மாதம் முதல் தேதி மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நடைபெற  உள்ள ஆண்டில், சாதாரணமாக இடைக்கால பட்ஜெட்டைதான் மத்திய அரசு அறிவிக்கும். ஆனால், இந்தமுறை முழுமையான பட்ஜெட் அறிவிக்கப்படலாம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஒரு பொது நிகழ்ச்சியில்  குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு÷ நேருமேயானால், பட்ஜெட்டில், வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தை  போக்கும் வகையில், பெரிய திட்டங்களை அறிவிக்கலாம். அதற்கான பெரும் நிதி ஒதுக்கீடும் செய்யப்படலாம். அதேபோல், சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கும் புத்துயிர் ஊட்டும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம். அப்படி நிகழுமானால், பணவீக்கம்  அதிகரிப்பது  இயல்பு.
மேற்கூறிய திட்டங்கள் நிதிப்பற்றாக்குறை விகிதத்தையும் பாதிக்கும். ஜி.டி.பி.யில் (ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு) 3.3 சதவீதம் வரை நிதிப்பற்றாக்குறை இருக்கலாம் என்று தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு தொடருமா அல்லது 3.3 சதவீதத்துக்கும் அதிகமாக இலக்கு நிர்ணயிக்கப்படுமா என்பதை பொருத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.
குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பொருளாதார நிலை குறித்து விரிவாகப் பேசிய சக்திகாந்ததாஸ் ஏனோ நிதி பற்றாக்குறை விகிதம் குறித்துப் பேசவில்லை.

ஆனால், மேற்கூறியவை போன்ற பல்வேறு சாத்தியக் கூறுகள் நிதி மற்றும் கடன்கொள்கை ஆய்வு கூட்டத்தில் அலசப்படும் என்பது நிதர்சனம்.

இதுபோன்ற காரணங்களால் ஒருவேளை, ரெப்போ ரேட்டை  அரை  சதவீதம் அல்லது கால் சதவீதம் குறைப்பதற்கு ஆய்வுக்குழு தயங்கினால், ரெப்போ ரேட்டைத் தவிர வேறு ஓரிரு கருவிகள் ரிசர்வ் வங்கியின் கையில் உள்ளன. அதுதான், வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்புத் தொகை (கேஷ் ரிசர்வ் ரேஷியோ). ரொக்க இருப்புத் தொகை விகிதத்தை ஒரு சதவிகிதம் அல்லது அரை சதவிகிதம் குறைத்தால், வங்கிகளின் ரொக்க கையிருப்பு  கணிசமாக அதிகரிக்கும்.

மற்றொரு வாய்ப்பும் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. அதன் பெயர் ஸ்டேடுடரி லிக்குவிடிட்டி ரேஷியோ (எஸ்.எல்.ஆர்.). இது வங்கிகளுக்கு எதிர்பாராதவிதமாக, நிதி ஆதாரம் போதிய அளவு இல்லாமல், டெபாசிட்டர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், ரிசர்வ் வங்கி, வங்கிகளின் எஸ்.எல்.ஆர். தொகையிலிருந்து ஒரு பகுதியை வழங்கும். ஆக, வங்கிகளின் பாதுகாப்புக்காக ஏற்பட்டதுதான் இந்த எஸ்.எல்.ஆர். திட்டம். இத்திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய சதவிகிதத்தை ஒரு சதவிகிதம் குறைக்கலாம். இதன் வாயிலாக வங்கிகளின்  நிதி  ஆதாரம் பெருகும்.

ரொக்கக்கையிருப்பு விகிதத்துக்கும் (சி.ஆர்.ஆர்.) எஸ்.எல்.ஆர். திட்டத்துக்கும் என்ன வித்தியாசம் என்றால், ரொக்ககையிருப்பை, வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு முழுக்க முழுக்க ரொக்கமாகச் செலுத்த வேண்டும். ஆனால், எஸ்.எல்.ஆர். திட்டத்தின் கீழ், வங்கிகள், ஏற்கெனவே அரசு பாண்டுகளில்  முதலீடு செய்திருக்கும் பாண்டுகளையே, ரொக்கத்திற்கு பதிலாக ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்யலாம். 

இதனால் வங்கிகளின் ரொக்கக் கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்படாது. உலக அளவில் உள்ள ரிசர்வ் வங்கிகள் எஸ்.எல்.ஆர். விகிதத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி எஸ்.எல்.ஆர். விகிதத்தை ஒரு சதவிகிதம் வரை குறைக்கலாம்.

இன்னொரு கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், நடப்பாண்டில் முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும் என ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தரகு நிறுவனமான÷ நோமுரா உள்ளிட்ட பல ஆய்வு  அமைப்புகள்  தெரிவிக்கின்றன.

கடந்த 2017 முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக காணப்பட்ட நிலையில் நடப்பாண்டில் முதல் அரையாண்டில் இது 6.6 சதவீதமாக குறையும் என்றும் இதற்கு சர்வதேச சுணக்க நிலையும் ஒரு காரணம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை குறைப்பதன் லிமூலமோ, அல்லது மேற்கூறிய சி.ஆர்.ஆர். என்னும் ரொக்கக்கையிருப்பு விகிதத்தை குறைப்பது மூலமோ அல்லது எஸ்.எல்.ஆர். என்னும் பாண்டுகளை வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் சட்டப்படி டெபாசிட் செய்யும் அளவை குறைப்பதன் லிமூலமோ வங்கிகளின் நிதி ஆதாரத்தைஅதிகரிக்கச் செய்திட வேண்டும்.

இந்த வழிமுறையின் வாயிலாக, வங்கிக்கடன் கிடைக்காமல் தவிக்கும் தொழில்துறையினருக்கும் இதர வணிகத்துறையினருக்கும் நியாயமான காரணங்களுக்கான கடன்களை தாமதமின்றி வழங்கிடவேண்டும்.

இந்த செயல்பாடு பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட மிகவும் அவசியமான ஒன்று. தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்தான் புதிய வேலைகள் உருவாகும். பொருள்களின் உற்பத்திப் பெருகி விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நடுத்தர மக்களின் வங்கிக் கடன்வட்டி (இ.எம்.ஐ.) சுமை குறையும். இவையே வளம் பெருக வழிவகுக்கும்.

கட்டுரையாளர்:வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com