தேரிக்காட்டுக்கு ஆபத்தா?

மக்களவைத் தேர்தல் பணிகளின்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பரந்துள்ள தேரிக்காடுகள் வழியாக பயணிக்கும் சூழல்
Updated on
3 min read

மக்களவைத் தேர்தல் பணிகளின்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பரந்துள்ள தேரிக்காடுகள் வழியாக பயணிக்கும் சூழல் ஏற்பட்டது. இயற்கையின் கொடையான குதிரைமொழி தேரிக்காடு மழையில்லாமல் பாலைவனம்போல தற்போது காட்சியளிக்கிறது. 
செக்கச்செவேலென்று இருக்கும் தமிழக வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அழகிய தேரிக்காட்டுக்கு மெய்ஞானபுரம் கேந்திர ஊராக விளங்குகிறது. நாசரேத், தோப்பூர், பிள்ளைவிளை, வாலிவிளை, தாய்விளை, சத்யாநகர், எள்ளுவிளை, கரிசன்விளை, வீரப்பநாடார் குடியிருப்பு, தேரிக்குடியிருப்பு, காயாமொழி, நாதன்கிணறு, பூச்சிக்காடு, கச்சனாவிளை, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, உவரியின் அருகே வரை 15,000 ஏக்கர் நிலத்தில் விரிந்துள்ளது. இங்கு செல்லவேண்டுமென்றால் நாலுமாவடி, திசையன்விளை வழியாகத்தான் செல்லவேண்டும். 
தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பங்குளத்திலிருந்து இந்த நிலப் பகுதி தொடங்குகிறது. மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு, தென்கிழக்காக விரிந்து தேரிக்காடுகள் அமைந்துள்ளன. வங்கக் கடலில் இருந்து சற்று தொலைவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரத்திலும், சில சமயம் வேகமான காற்றடித்து செம்மண்ணின் குவியல் 25 மீட்டர் வரைகூட உயர்ந்துவிடும். வேகமான காற்றின் போக்கால் சில இடங்களில் மணல் மேடுகள் திட்டுகளாக மாறிவிடும். இந்த மணல் மேடு திட்டுகள் தேரிக்காட்டில் இடம்பெயர்வதும் உண்டு. 
தேரிக்காட்டில் எவ்வளவு மழை பெய்தாலும் பூமிக்குள் எடுத்துக் கொண்டு ஒட்டகத்தைப் போல அதைத் தேக்கி வைத்துக் கொள்ளும். பனை, வேம்பு, கருவேலம், முந்திரி, உடை மரம், சில இடங்களில் வாழை போன்ற மரங்களோடு பல மூலிகைச் செடிகளும் அதிகமாகத் தென்பட்டன. இந்தச் செம்மண் காட்டில் தென்மேற்குப் பருவ மழை காரணமாக மே முதல் செப்டம்பர் வரை மழையும், பலத்த காற்றும் வீசி மணல் திட்டுகள் மணல் குன்றுகளாகக்கூட சில சமயங்களில் மாறுவது உண்டு. 
இந்த மண்ணில் மேல்புதுக்குடியில் கோடைக் காலத்தில் சுவையான தண்ணீர் கிடைக்கும்; சுனைகளும் ஏற்படும். மழைக் காலங்களில் வெள்ள நீர் இந்தச் செம்மண்ணில் ஏரிகள்போல அமைந்துவிடும். அதை தருவை என்று அழைப்பார்கள்.
இந்தத் தேரிக்காட்டில்தான் புனித சவேரியார், வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் தங்களுடைய களப் பணிகளை ஆற்றினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அந்த வட்டாரத்தின் போராளிகளாக விளங்கிய கே.டி.கோசல்ராம், ராஜகோபால், பெஞ்சமின் போன்றோர் இந்தத் தேரிக்காட்டில் ஆங்கிலேயே காவல் துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். வெறும் மிருதுவான சிவப்பு மண், மாவைப் போன்று கற்கள் இல்லாமல் இருக்கும். இந்த மெல்லிய மண்ணில் காலைப் பதித்தால், பூமிக்குள் முட்டியளவுக்குக்கூட கால் சென்றுவிடும்.
இப்படியான அதிசய மண் எப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை. இதை ஆய்வு செய்தபோது, இந்த மண் மூன்றடுக்குகளாக இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். முதல் அடுக்கு 8,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இரண்டாவது அடுக்கு 5,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. மேலடுக்கில் உள்ள மணற்பகுதி 1,000 அல்லது 2,000 ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று கூறப்படுகிறது.
இந்த மண்ணுக்குக் கீழ் ஆதிகாலத்து நாகரிகம் மற்றும் படிமங்கள் எல்லாம் தெரியும் என்று இந்த வட்டார மக்கள் கூறுகின்றனர்.  இந்த மண்ணில் சற்று ஆழமாகத் தோண்டினால் செந்நிற களிமண்ணும் உள்ளது. ஏனெனில், ஆதிச்சநல்லூர் இதன் அருகாமையில்தான் அமைந்துள்ளது. கால ஓட்டத்தால் அங்குள்ள வயல்வெளிகளும், சில கிராமங்கள்கூட தென்மேற்கு காற்றால் செம்மணல் இடம் மாறிப் புதைந்திருக்கலாம் என இங்கு ஆய்வு நடத்திய கால்டுவெல் தெரிவிக்கிறார்.
இங்கே காற்றின் போக்கால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்க பெரிய விருட்சங்கள் மற்றும் பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த இ.பி.தாமஸ் ஒரு திட்டத்தை முன்வைத்தார். இதன் விளைவாக ஏராளமான பனை மரங்கள் வளர்க்கப்பட்டன. 
இந்தச் செம்மண்ணில் அறிய ஏராளமான விஷயங்கள் உள்ளன. கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம் என்ற ஆங்கில நூலிலும், ஆங்கிலேயர் காலத்தில் வெளியிடப்பட்ட திருநெல்வேலி கெசட் என்ற விரிவான நூலிலும் இது குறித்தான கோப்புகளிலும் அதிசயமான மண் என்று குறிப்பிட்டிருந்தனர்.
தமிழர்கள் ஆதிகாலத்தில் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து நிலங்களாகப் பிரித்தனர். ஆனால், நெல்லைச் சீமைக்கு மட்டும் தேரிக்காட்டைச் சேர்த்து புது வகையாக அறுவகை நிலங்கள் உள்ளன. இப்போது இந்த மண்ணை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில்தான் தாது மணல்கள் சூறையாடப்படுகின்றன.
ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்னால் திசையன்விளையிலிருந்து திருச்செந்தூர் வரை (1914 முதல் 1940 வரை) தேரிக்காடு வழியாக ரயில் போக்குவரத்து இருந்தது. இந்த ரயில் மார்க்கம் சென்னையில் உள்ள பாரி அண்ட் கோ நிறுவனம் குலசேகரப்பட்டினத்தில் சர்க்கரை ஆலை தொடங்குவதற்காக அமைக்கப்பட்டது. குலசேகரப்பட்டினத்திலிருந்து உடன்குடிக்கு தனியாக ரயில் பாதை அப்போது அமைந்தது. 
 1930-களில் இந்தத் தேரிக்காடுகள் வழியாகச் சென்ற இந்த ரயிலில், சர்க்கரை ஆலைக்குச் சென்ற பதநீரில் குளத்து நீரையும் கலந்து அனுப்பியதாகவும், அந்த கலப்படமான பதநீரில் மீன்கள் செத்துக் கிடந்ததைப் பார்த்த பாரி நிர்வாகத்தினர் கோபம் அடைந்ததாகவும் தெரிகிறது.
இதற்கிடையே இரண்டாம் உலகப் போர் நெருக்கடியில் 1940-ஆம் ஆண்டு இந்த ரயில் மார்க்கத்தை பாரி நிறுவனம் நிறுத்திவிட்டது. பாரி நிறுவனம் அதை நிறுத்த முயன்றபோதும், அன்றைய திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ரயில் சேவையை தொடர்ந்து நடத்த முயற்சி செய்தும் நோக்கம் நிறைவேறவில்லை.
சந்தை வளம் கொழிக்கும் திசையன்விளை திருவிழாவுக்கு அப்போது சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டது. மெதுவாக மூன்று மணி நேரம் ஊர்ந்து செல்லும் இந்த ரயில் பயணத்துக்கு 13 அணா வசூலிக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார் மடம், சொக்கன் குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை, உடன்குடி போன்ற இடங்களில் ரயில் நிலையங்கள் இருந்தன.
இந்த ரயில் 30 முதல் 40 குதிரைத் திறன் கொண்ட நிலக்கரி இன்ஜினால் செயல்பட்டது. இந்த ரயில் இயக்கப்பட்டதன் அடையாளமாக குலசேகரன்பட்டினம் டி.எஸ்.எம். பள்ளிக்கூடத்தில் இந்த ரயில் மார்க்கத்தின் தண்டவாளப் பகுதி இன்றும் உள்ளது. இந்த ரயிலின் பயணச்சீட்டுகள் சென்னை பாரிமுனையில் உள்ள பாரி அண்ட் கோ நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்றைக்கும் காட்சிப் பொருளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 
தேரிக்காட்டில் கிடைக்கும் பதநீருக்கு மணம், சுவை உண்டு. இந்தப் பதநீரை வைத்துத்தான் பாரி நிறுவனம் சர்க்கரை தயாரித்தது. அப்போதே திசையன்விளையில் இருந்து இந்தப் பதநீர் அனுப்ப குலசேகரன்பட்டினம் வரை குழாய்களையும் பாரி நிறுவனம் பதித்ததாகச் செய்திகள் உண்டு. 
இதை சிவந்த பாலை நிலம் என்றும் சிவந்த மண் என்றும் கூறுவது உண்டு. அந்தக் காலத்தில்  விடுமுறை நாள்களில் சுற்றுலா செல்லும் தலமாக தேரிக்காடு இருந்தது. இங்குள்ள செம்மணல் மேடுகளில் ஏறி சறுக்கி விளையாடுவது பள்ளி சிறுவர்களின் பொழுதுபோக்காக இருந்தது. இன்றைக்கு அந்த மணல்மேடுகள் அதிகமாக இல்லை. அதிகமாக தரை மட்டமாகத்தான் காட்சி தருகிறது. மரங்கொத்தி, பஞ்சு சுருட்டான்கள், கவுதாரிகள், நீலப்புலி வண்ணத்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் என விதவிதமான பூச்சிகள் காணப்படுகின்றன. பல்லிகள் நடமாட்டமும் அதிகம். காம்புல் கோழி, குளத்துக் கொக்கு, செம்பருந்து, விதவிதமான எறும்புகள் என அந்த மண்ணில் கண்ணில் படுகின்றன. இந்தத் தேரிக்காட்டில் மயில்களும் உண்டு.
வறட்சியால் இந்த மண்ணில் இருந்த செடிகளும் காய்ந்து புதர்கள் மண்டிப் போயிருக்கின்றன. மது பாட்டில்களை வீசியெறிந்து இந்த மண்ணின் தரத்தை சமூக விரோதிகள் நாசப்படுத்திவிட்டனர். தண்ணீரை விற்கும் வியாபாரிகள் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை கபளீகரம் செய்து விற்பனை செய்துவருகின்றனர். 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு சோலைவனமாக காட்சியளித்த தேரிக்காடு, தற்போது வறட்சிக் காடாக மாறியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து மரங்களை வெட்டி பசுமையைச் சூறையாடினார்கள். ஆறுகளில் ஆயிரமாண்டுகள் தேங்கிக் கிடந்த மணல் குவியல்களை அள்ளிக் கெடுத்தனர். தமிழகத்தின் தென் கடற்கரையோரங்களில் தாது மணலை அள்ளிச் சூறையாடினர். இப்போது தேரிக்காட்டை வேட்டையாடுகின்றனர்.
மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை; மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, இதை மனம்தான் உணர மறுக்கிறது 
என்பதைப் புரிந்துகொண்டு இனியாவது தேரிக்காட்டையும் நமக்கு நிரந்தரமாக என்றைக்கும் இருக்கும் இயற்கை வளங்களையும் பாதுகாப்போம்.

கட்டுரையாளர்:
வழக்குரைஞர்,
செய்தித் தொடர்பாளர், திமுக.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com