விநாயகர் வழிபாட்டின் மகத்துவம்

"நீஎன்ன பெரிய கொம்பனா?' என்று கேட்பது நம் பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால், தன்னுடைய கொம்பையே ஒடித்து எழுதுகோலாக்கி பிள்ளையார் சுழி போட்டு மகாபாரதமாகிய ஐந்தாம் வேதத்தை

"நீஎன்ன பெரிய கொம்பனா?' என்று கேட்பது நம் பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால், தன்னுடைய கொம்பையே ஒடித்து எழுதுகோலாக்கி பிள்ளையார் சுழி போட்டு மகாபாரதமாகிய ஐந்தாம் வேதத்தை வழங்கிய விநாயகர்தான் உண்மையிலேயே பெரிய கொம்பன்.
 "அதிகமாகப் பேசாதே' என்பதைத் தனது மறைவான வாயினாலும் "அதிகமாகக் கேள்' என்பதைத் தன் பெரிய காதுகளாலும் சுட்டிக் காட்டுகிறார் பிள்ளையார், சலந்திரன் முதலான அசுரர்களைச் சிவபெருமான் ஆண் யானை வடிவம் எடுத்து அழித்தபோது, பெண் யானை வடிவம் எடுத்து அம்பிகை புணர்ந்ததால் யானை வடிவில் பிறந்ததாக "செற்றிட்டே' எனத் தொடங்கும் தேவாரத்தில் பாடுகிறார் திருஞானசம்பந்தர்.
 பூமியில் தோன்றிய முதல் தாவரமாகிய புல், பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. இந்தப் புல்லினை வழிபாட்டில் ஏற்கும் விநாயகர் குளம், ஆறு போன்றவற்றைக் காக்க நீர்நிலைகளின் கரைகளிலும் மரங்களைப் பாதுகாக்க மரத்தின் அடியிலும் இருக்கிறார்.
 தமிழர்களின் விநாயகர் வழிபாட்டு மரபான தோப்புக்கரணம் உருவானது குறித்து புராணக் கதைகள் உள்ளன. கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தனக்கு தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார். அசுரன் முன் போட்ட தோப்புகரணத்தை விநாயகர் முன் பக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போடும் பழக்கம் வந்தது.
 இதே போன்று மேலும் ஒரு புராணம் உண்டு. அகத்தியர் கொண்டுவந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து வந்த விநாயகர் கவிழ்த்தார். பின், ஓர் அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காக காவிரி நதியை உருவாக்க அவ்வாறு செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகருக்கு தலையில் குட்டி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. தோப்புக்கரணம் சிறந்த உடற்பயிற்சியாகவும் கருதப்படுகிறது. இது அயல்நாட்டுப் பள்ளிகளில் ஒரு பயிற்சியாகக் கற்றுத் தரப்படுகிறது.
 மஞ்சள், மண், சாணம் என எதிலும் உருவாக்கப்பட்டு வழிபடக்கூடிய விநாயகர் வழிபாடு உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது.
 ஆப்கானிஸ்தானில் நரசிங்கவாரா, நேபாளத்தில் காத்மாண்டு, சீனாவில் துன்ஹீவாய் மற்றும் குங்கியான் அரண்மனை, மங்கோலியாவில் நார்த்தன் (நர்த்தன விநாயகர்), இலங்கையில் கதிர்காமம் மற்றும் திரிகோணமலை எனப் பல இடங்களில் கணபதி காணப்படுகிறார்.
 திபெத்தில் கணேசாணி என்னும் பெயரில் பெண் வடிவிலும் பர்மாவில் பத்மாசனர் என்ற பெயரிலும் விநாயகரை வழிபடுகின்றனர்.
 திரிபுரம் எரித்தபோது சிவபெருமானும், வள்ளியைத் திருமணம் செய்யும்போது முருகனும், இரணியன் மற்றும் மகாபலி வதையின்போது திருமாலும் பிள்ளையாரை வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. "காணாபத்தியம்' என்ற பெயரில் ஒரு தனியான சமயக் கடவுளாக விநாயகரை வழிபட்டாலும் வைணவ சமயத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்றும், பெளத்த சமயத்தில் வைரோசன கிரந்தத்தில் ஒரு கடவுள் என்றும் ஜைன சமயத்தில் கணேஸ்வரி என்று ஒரு யோகினியாகவும் வழிபடப்படுகிறார்.
 இவர் சிதம்பரத்தில் பன்னிரு திருமுறைகளை அபயகுல சேகர மன்னனுக்குக் காட்டியதால் அங்கு திருமுறை காட்டிய விநாயகர் என்றும், திருச்செந்தூரில் கோபுரம் கட்டிய பணியாளர்களுக்கு முருகன் வழங்கிய திருநீற்றைப் பணமாக மாற்றியதால் அங்கு தூண்டுகை விநாயகர் என்றும், நன்னிலம் என்ற ஊரில் மனிதத் தலையுடன் விளங்குவதால் நரமுக விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.
 நூலினை இயற்றும் புலவர்கள் முதலில் விநாயகரை வணங்கிக் காப்புச் செய்யுள் இயற்றும் பழக்கம், ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுந்த இலக்கியங்களில் காணப்படுகின்றன. எதையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கும் வழக்கம் தமிழர்களிடம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
 விநாயகர் மகிழ்ந்து ஏற்கும் மலர்கள் "அலரி, துளசி, மருது, எருக்கோடு, அருகு, கையாந்தகரை, முள்ளி, அரசு, பச்சை நாயுரு, எழில்சேர் நாவல், இலகு, நொச்சில், சாதிப்பூ, இலுப்பை, வன்னி, ஊமத்தை, இலந்தை, தேவதாருடன், எழில் மாதுளை, விஷ்ணுகாந்தி, குலவும் இருபத்து ஒன்று' என்று அரும்பத்தைப்புரி பிள்ளைத்தமிழ் 21 மலர்களைப் பட்டியலிடுகிறது.
 வடநாட்டிலிருந்து வந்த வழிபாடு எனினும் அது நமக்கு வழங்குவது ஒன்றுதான். அதுவே புலனடக்கம். மகாபாரதத்தை அமைதியாக எழுதிய விநாயகரிடம்,மெளனத்தைப் பற்றி வியாசர் கேட்டபோது, "மெளனமே புலனடக்கத்தின் முதல்படி' என்று கூறினாராம். மேலும், தன்னையே கட்டுப்படுத்தும் அங்குசத்தை விநாயகர் கையில் வைத்திருப்பதும் புலனடக்கத்திற்கான ஒரு குறியீடு; ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வதே உண்மையான ஐங்கரன் வழிபாடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com