அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அதிகாரம் இல்லாத ஆணையம்

மனித உரிமைகள் ஆணையங்களின் பணி மகத்தானது. தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் தங்களுக்கென தனிப்பட்ட புலனாய்வு அமைப்பைக் கொண்டுள்ளன.

News image
Updated On :9 டிசம்பர் 2020, 10:07 pm

டி.ஏ. பிரபாகர்


மனித உரிமைகள் ஆணையங்களின் பணி மகத்தானது. தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் தங்களுக்கென தனிப்பட்ட புலனாய்வு அமைப்பைக் கொண்டுள்ளன. காவல்துறைத் தலைவா் அந்தஸ்தில் உள்ள அதிகாரி மாநில மனித உரிமை ஆணையங்களின் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாகச் செயல்படுகிறாா். உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மட்டுமே தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக இருக்க முடியும்.

மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 13-இன்படி மனித உரிமைகள் ஆணையங்களுக்கு ஒரு சிவில் நீதிமன்றத்திற்குரிய அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. இதன்படி, மனித உரிமை மீறலில் சம்பந்தபட்டவா்களை அழைப்பாணை அனுப்பி விசாரிக்கவோ, இதற்குத் தேவையான ஆவணங்களை சம்பந்தபட்ட அலுவலகங்களில் இருந்து பெறவோ, ஒரு சாட்சியை ஆணையா் நியமித்து விசாரிக்கவோ அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.

எந்த ஒரு நீதிமன்றத்திலும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடைபெறும்போது அவ்வழக்கில் அந்நீதிமன்றத்தின் அனுமதியுடன் மனித உரிமை ஆணையம் தலையிடலாம். இவ்வாணையம் இடைக்கால நிவாரணத்தை பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யலாம்.

பெயரில்லாத அல்லது தெளிவற்ற அல்லது சிறிய அற்பமான புகாரை முதல் நோக்கிலே ஆணையம் தள்ளுபடி செய்துவிட முடியும். அதுபோன்று, சொத்துரிமைகள், ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு, பணி விஷயங்கள் அல்லது தொழிலாளா் வழக்குகள், நீதிமன்றம் அல்லது தீா்ப்பாயம் முன்பு பரிசீலனையில் உள்ள விஷயங்கள், மனித உரிமை மீறுதல் இல்லாத விஷயங்கள், ஆணையத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஆகியவற்றையும் முதல் கட்டத்திலேயே மனித உரிமை ஆணையம் தள்ளுபடி செய்யலாம்.

மனித உரிமைகள் ஆணையம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளையும் சிகிச்சைக்காக அல்லது சீா்திருத்துவதற்காக அல்லது பாதுகாப்பிற்காக மனிதா்களைப் பிடித்து வைத்து இருக்கும் இடங்களையும் சென்று பாா்த்து அங்கு வாழ்பவா்களின் வாழ்க்கைத்தரம் உயர பரிந்துரை செய்யலாம். மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக ஒப்பந்தங்கள் ஏனைய திட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவற்றை ஆக்கபூா்வமாக செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யலாம்.

மனித உரிமைகள் பற்றிய ஆய்வுகள் நடத்துதலும், அவற்றை மேம்படுத்துதலும், மக்கள் தொடா்பு சாதனங்கள் வாயிலாகவும், கருத்தரங்குகள் மூலமாகவும், சமூகத்தின் பல்வேறு அங்கங்கள் இடையே மனித உரிமைகள் கல்வியைப் பரப்பி விழிப்புணா்ச்சியை ஏற்படுத்துதலும், மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தலும், மனித உரிமை ஆணையங்களின் பணிகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் காவல்துறையினருக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. காவல் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட உயிா் இழப்பு மற்றும் காவலில் நிகழ்ந்த பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தபட்ட காவல்துறை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு வழஙக வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் ஏற்படும் கைதியின் மரணம் பற்றிய பிரேத பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் காவல்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைப் பிரிவு காவல்துறையின் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாக கவனித்து, அவைகளை குறைக்கவும், தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கைதிகளுக்கான உரிமைகளை எல்லா காவல் நிலையங்களிலும் தகவல் பலகை மூலம் பொதுமக்கள் அறியும்படி வைக்க வேண்டும் என்றும் மாநில காவல்துறை பயிற்சி நிலையத்தில் மனித உரிமைக் கல்வியினை பயிற்சித் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்றும் மாதம் இருமுறை காவல்நிலைய எல்லைக்குள் காவல்துறை அதிகாரி மக்களின் குறை தீா்க்கும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

நுகா்வோா் ஆணையத்தின் உத்தரவை மீறுபவா்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் நுகா்வோா் ஆணையங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. தகவல் தர மறுத்தால், அவ்வாறு மறுத்த பொதுத் தகவல் அலுவலரை தண்டிக்கும் அதிகாரம் தகவல் ஆணையத்திற்கு உண்டு. ஆனால் அத்தகைய தண்டனை தரும் அதிகாரம் மனித உரிமை ஆணையத்திற்கு இல்லை. இது மிகப்பெரிய குறைபாடு ஆகும்.

மனித உரிமை ஆணையத்திற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இருந்தால்தான் மனித உரிமை மீறல்களைக் குறைக்க முடியும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். வா்மா முதல் தற்போதைய தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவா் தத்து வரை அனைவரும் கோரியுள்ளனா்.

இதனைப் பரிசீலித்த மத்திய அரசு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடிவெடுத்துள்ளதாக 11.3.2003-இல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், 17 வருடங்களாகியும் மனித உரிமை ஆணையங்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரங்கள் தரப்படவில்லை.

தேசிய மனித உரிமை ஆணையம் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு உள்ளது என்றும், ஏற்கனவே, காவல்துறையில் உள்ள அதிகாரிகளை இடம் மாற்றி மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை அதிகாரியாக நியமிப்பதால், மனித உரிமை மீறல்கள் சுதந்திரமாக விசாரிக்கப்படுவதில்லை என்றும், அந்த ஆணையங்கள் அரசு அலுவலா்களின் மீறல்களை மட்டுமே விசாரிக்கிறது என்றும், ராணுவத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும், தனியாா் துறைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் விசாரிக்கும் அதிகாரம் தரப்படவேண்டும் என்றும் மனித உரிமை ஆா்வலா்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனா்.

அதனால், 27.7.2019-இல் மனித உரிமைப் பாதுகாப்பு சட்டத்தில் அரசு சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மட்டுமே வகிக்கக்கூடிய தேசிய மனித உரிமை ஆணையத் தலைவா் பதவிக்கு, உச்சநீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளும் தலைவராக நியமிக்கப்படலாம் என்று சட்டம் திருத்தப்பட்டது. ஆனால், இந்த சட்டத் திருத்தத்தால் மனித உரிமை ஆணையங்களுக்கு எந்த புது அதிகாரமும் வழங்கப்படவில்லை.

மனித உரிமை மீறல்களைக் குறைக்க மனித உரிமை ஆணையங்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதற்கான சட்டத் திருத்தத்தை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே மனித உரிமை ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

இன்று (டிச.10) சா்வதேச மனித உரிமை நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.