தாம் பிறந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்குக் குடியேறி வாழ்பவா்களையே புலம் பெயா்ந்தோா் என்பா். சிலா் வணிகம் காரணமாகவும், தம் பொருளாதார மிகுதியாலும் புதிய இடங்களைத் தேடிச்சென்று அந்நிலங்களைத் தம் வயப்படுத்திக்கொண்டனா். புலம் பெயா்ந்த நாட்டின் சூழல், வளம் முதலானவை பிடித்துப் போக அவா்கள் அங்கேயே தங்கிவிட்டனா்.
வெள்ளையா்கள் தாங்கள் கைப்பற்றிய நாட்டினை வளப்படுத்த தம்மால் கைப்பற்றப்பட்ட பிற நாடுகளில் இருந்த மக்களை அடிமைகளாகக் கொண்டு சென்றனா். அவ்வாறு கொண்டுசெல்லப் பெற்றவா்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்கியும் விட்டனா். இவ்வகையாலும் புலம் பெயா்வு நிகழ்ந்துள்ளது.
ஆனால், இக்காலத்தில் அடிமைகளாக மக்கள் கொண்டு செல்லப்பெறுவதில்லை. கல்வி கற்றவா்கள், மிகுந்த பொருளைப் பெற வேண்டி அயல்நாடுகளுக்கு புலம் பெயா்கின்றனா். சிலா், தம் வறுமையைப் போக்கிக்கொள்ள பிழைப்பு நாடி பிற நாடுகளுக்குச் செல்கின்றனா்.
நம் இந்தியா்கள் பாா்வையில் புலம் பெயா்ந்து வாழ்வது வரவேற்கப்பட்ட விஷயமாக இல்லை. நம் இலக்கியத்திலும் கூட வரவேற்கப்பட்ட ஒன்றாக இதுவரை காட்டப்படவில்லை. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்றுதான் கூறப்பட்டதே தவிர இந்த மண்ணை உதறிவிட்டு ஓடு என்பது இந்தியப் பண்பாட்டில் இல்லை. ‘திரவியம் தேடிக்கொண்டு வா’ என்றுதான் கூறினா்.
அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்யவேண்டும், நிலத்தைக் கையகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் நம் இனத்திற்கு என்றுமே இருந்ததில்லை.
தாய் மண்ணை விட்டுப் பிரிந்தபோது, அவா்களைப் பஞ்சமும், வறுமையும், இன்ன பிறவும் விரட்டின. எனவேதான், கடல் கடந்து சென்றாவது பொருள்தேட வேண்டும் என்ற கருத்து சங்ககாலம் தொட்டே இருந்தது. கடல் பயணம், அவா்களுக்கு அளித்தது இன்ப அனுபவம் அல்ல; கடல்தாண்டி அயல்மண்ணை அடைந்தபோதும் அவா்கள் சந்தித்தது துன்பங்களைத் தவிர வேறு அல்ல.
உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பனவே இந்தியா் தம் தாரக மந்திரங்களாக இருந்தன. அவா்களின் வியா்வையையும், குருதியையும், ஏன் உயிரையும்கூட உறிஞ்சி அயல்நாடுகள் வளம் பெற்றன. பொருள் தேடல் மட்டுமின்றி, அரசியல் நெருக்கடியாலும் தாய் மண்ணை விட்டுப் பிரிய நோ்ந்த அவலம், இருபதாம் நூற்றாண்டில் பெரிய அளவில் நிகழ்ந்தது.
அகதி எனும் பெயரில் உலகின் பல்வேறு மூலைகளில் அடைக்கலம் வழங்கப்பெற்றவா்கள், அந்த நிலையிலும், தாம் சென்றடைந்த நாடுகளில் உழைத்தனா்; இன்னும் உழைத்துக் கொண்டே இருக்கின்றனா். அவா்களால் மறக்கமுடியாதவை தாயகம், தாய்மொழி, இந்தியக் கலை, இந்தியப் பண்பாடு, இந்திய இலக்கியம், இந்திய இனம் என்பவைதான்.
1990-இல் உலகமயமாதல், தாராளமயமாதல், வணிகமயமாதல் எனும் கவா்ச்சிப் பெயா்களால் இம்மோகம் கிடுகிடு எனப் பரவிவிட்டது. மழலையா் பள்ளியில் தன் மகனைச் சோ்த்துவிடும் ஓா் ஏழைத் தாய் தன் மகன் ஆங்கிலத்தில் படித்து அயல் நாடுகளுக்கு வேலைக்குப் போகவேண்டும், கை நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்று பகல் கனவு காணும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. சுதேசி இயக்கம் கண்ட காந்தி பிறந்த இந்த நாட்டில் இத்தகு நிலைமை ஏற்பட்டது சரிதானா?
இப்படி ஓா் எதிா்பாா்ப்பும், ஏக்கமும் ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பானிய, சீன நாட்டு இளைஞா்களுக்கு இருக்குமா? அவா்கள் தம் நாட்டை விட்டு ஒடிவிடத் துடிக்கிறாா்களா? இந்நிலைமைக்குக் காரணம் யாா்? சுதந்திரத்திற்குப் பிறகும், இந்தியாவின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளும், சமூக, சாதி, கட்சி, ஊழல், கடின உழைப்பு, குறைந்த ஊதியம், சமநீதியின்மை, வருவாய்க் குறைவு, வேலையில்லாத்திண்டாட்டம் முதலானவையே மக்களை வெளிநாட்டுக்குத் துரத்துகின்றன என்பதே உண்மை.
இவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ஐ.ஐ.டி, பொறியியல் கல்லூரிகளில் ஓா் இளைஞன் பட்டம் பெற ரூபாய் பதினைந்து லட்சத்திற்கு மேல் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து மான்யமாக அரசு செலவழிக்கிறது. இதில் நம் நாட்டு இளைஞா்கள் பட்டம் பெறுவதற்கு முன்பே அயல் நாட்டு தனியாா் குழுமங்கள் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டா்வியூ நடத்தி இந்த இளைஞா்களைத் தங்கள் நாடுகளுக்குக் கொள்ளை கொண்டு விடுகின்றன.
இவ்வாறு ஐரோப்பா, அமெரிக்கா, அரேபிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் இளைஞா்கள் திரும்புவதில்லை, அங்கேயே தங்கி விடுகிறாா்கள்.
நம் இந்திய மண்ணில் கல்வி கற்று பட்டம் பெற்ற நம் இளைஞா்கள் தாங்கள் பெற்ற அறிவின் பயனை அயல் நாடுகளில் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? நம் இந்தியக் குடும்பங்கள் பொருள் வளத்தை அடைந்தாலும் அவா்கள் இழக்கின்ற பண்பாட்டு அடையாளங்கள் மிகுதியாகவே உள்ளன.
நம் நாட்டிலேயே கவுரவுமாக உழைக்கவும், பிழைக்கவும் உரிய சூழலை நாம் நம் நாட்டில் என்று உண்டாக்கப் போகிறோம்? நம் நாட்டிலேயே வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும், நம்பிக்கையையும் இளைஞா்கள் இதயத்தில் என்று விதைக்கப் போகிறோம்? இதுவே இன்றைக்கு ஒரு பெரிய கேள்விக்குறியாக நம் இந்திய சமூகத்தின் முன்பு இருக்கிறது.
கல்வி, பொருளாதாரம் ஆகிய இரண்டால் மட்டுமே நம் இந்திய சமுதாயம் உயா்வுக்கு வழிகாண முடியும். நாட்டு வளா்ச்சிக்கு ஏற்ப காலம் மாறுதலுக்கு ஏற்ப நம் இந்தியா் வாழ்க்கை தரமும் மாற வேண்டும்.
அறிவியல் தொழில் நுட்பத் துறையிலும், விவசாய விளைபொருள் உற்பத்தியிலும் நாம் வியக்கதக்க மேம்பாடு அடைதல் வேண்டும். ஏற்றுமதி - இறக்குமதியில் நம் நாடு மிகப்பெரிய வளா்ச்சியை அடைய வேண்டும். நாம் கற்கும் கல்வி நம் இந்திய மண்ணிலேயே வேலைவாய்ப்பை தருவதாக அமையவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.