சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பரபரப்பைத் தவிர்ப்போம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. மருத்துவம் தவிர்த்து, பிற படிப்புகளுக்காக கல்லூரி இருக்கும் திசைகளைக் கண்டறிந்து பயணிக்கும் தருணம் இது.

News image
Updated On :20 ஜூலை 2020, 3:35 am

வி.குமாரமுருகன்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. மருத்துவம் தவிர்த்து, பிற படிப்புகளுக்காக கல்லூரி இருக்கும் திசைகளைக் கண்டறிந்து பயணிக்கும் தருணம் இது. தமிழகத்தில், 4,24,285 மாணவிகள் தேர்வு எழுதியதில் 94.80 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். 3,55,646 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 89.41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.3 சதவீத தேர்ச்சியாகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண் பட்டியலுடன் கல்லூரிகளை முற்றுகையிடுவதற்கு தயாராகி வரும் காலகட்டம் இது.  
பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவிகளின் கட்-ஆப் மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரி குறித்தும் தேர்வு செய்ய வேண்டிய பாடப்பிரிவுகள் குறித்தும் அலசி ஆராய்ந்து வருகின்றனர். பல பெற்றோர்களும் மாணவர்களும் பதற்றமான மனநிலையிலேயே பொறியியல் பிரிவுகளையும் கல்லூரிகளையும் தேர்வு செய்யும் நிலைதான் இன்றும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. பதற்றத்தால் பல வாய்ப்புகள் பறி போய்விடும் என்பதை அவர்கள் உணருவதில்லை.
மருத்துவப் படிப்பு கனவுடன் இருப்பவர்களுக்கு, பிளஸ்-2 மதிப்பெண்கள், கட்-ஆப் மதிப்பெண்கள் குறித்த கவலை இல்லை.  "நீட்' தேர்வு தொடர்பான அறிவிப்பு வந்த பின்னர்தான் அவர்கள் அது குறித்து யோசிக்க வேண்டும். மருத்துவம் அல்லாத பிற படிப்புகளை கற்க நினைப்பவர்கள்தான் இன்று பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கின்றனர். 
சராசரியாக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் எந்தவித பதற்றமும் இல்லாமல் கலை, அறிவியல் கல்லூரிகளில் கிடைக்கும் பாடப்பிரிவை ஏற்றுக் கொண்டு படிக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அதிக மதிப்பெண்கள் பெற்று, அதிகபட்ச கட்-ஆப் மதிப்பெண்களை வைத்திருப்போர்தான் மன அழுத்தத்தின் உச்சத்தில் உள்ளனர்.
பொறியியல் படித்த ஒருவர் அதிக ஊதியம் வாங்குகிறார் என்ற பழைய கதையை மட்டுமே அடிக்கடி பேசி, மாணவர்களின் மனத்தில் கனவை விதைத்திருக்கின்றனர் சில பெற்றோர். இதனால், பொறியியல்தான் சிறந்த படிப்பு, மற்ற எதுவும் சிறந்த படிப்பு இல்லை என்ற எண்ணம் மாணவர்கள் உள்ளத்தில் பதிந்துவிட்டது.
நல்ல கட்-ஆப் மதிப்பெண்கள் வைத்திருக்கும் சிலரோ, கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வது குறித்த விழிப்புணர்வு இல்லாமலேயே உள்ளனர். எண்ணற்ற இணையதளங்கள் தரமான பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும், கடந்த ஆண்டில் எந்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு எந்த பாடப் பிரிவு கிடைத்தது என்பதையும் தெளிவாக பதிவிட்டு வருகின்றன. 
இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட மாணவர்கள், கல்வியாளர்களின் உதவியுடன் சேகரித்து வைத்துக் கொண்டு அதில் நமக்கு சரியான பாடப்பிரிவுள்ள கல்லூரிகளின் விவரங்களை தொகுத்தெடுத்து இணையவழி (ஆன் லைன்) கலந்தாய்வில் பங்கேற்றால், நாம் விரும்பிய கல்லூரியை தேர்வு செய்யலாம்.
தீநுண்மி காரணமாக தற்போது அனைத்து கலந்தாய்வு நடைமுறைகளும் (அதாவது விண்ணப்பிப்பது, பணம் செலுத்துதல் சிறப்பு ஒதுக்கீடு பெறுவது முதல் விரும்பிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு செய்து ஒதுக்கீட்டு ஆணை பெறுவது வரை) இணைய வழியாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், இணைய வழியில் படிவங்களை நிரப்பி அனுப்புவது தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருந்தால், அவையும் கலந்தாய்வு நேரத்தில் கை கொடுக்கும். இதை விட்டுவிட்டு, எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் இருந்தால் சிறந்த கல்லூரியும் அங்குள்ள நல்ல பாடப்பிரிவும் நம் கையை விட்டு போய்விடும். 
அதுவும் இணையவழிக் கலந்தாய்வில், மாநில அளவில் தர வரிசையில் சிறப்பிடம் பிடித்துள்ள கல்லூரிகள், அக்கல்லூரிகளில் உள்ள சிறப்பான பாடப்பிரிவுகள் உள்ளிட்ட விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தால் மட்டுமே, விரும்பிய பாடப்பிரிவை எடுத்து படிக்க முடியும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்தால் போதும் என்ற மனநிலையில் செயல்பட்டால், பொறியியல் பட்டம் மட்டும்தான் கிடைக்கும். எந்தெந்த கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளில் வளாகத் தேர்வு நடைபெற்றது? எந்தெந்த நிறுவனங்கள் அக்கல்லூரிகளில் வளாகத் தேர்வை நடத்தின? எத்தனை பேர் வளாகத் தேர்வு மூலம் பணி நியமனம் பெற்றனர் என்பதையெல்லாம் தெரிந்து செயல்பட்டால் கூடுதல் சிறப்பு. சில கல்லூரிகளில் சில பாடப் பிரிவுகளுக்கு மட்டுமே வளாகத் தேர்வு நடைபெறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கலந்தாய்வு குறித்த தகவல் எதையும் அறிந்திராமல், கலந்தாய்வு நடைபெறும் நேரத்தில் கணினி திரையின்முன் அமர்ந்து கொண்டு, கிடைக்கும் சொற்ப நேரத்தில் எதை தேர்வு செய்வது என தெரியாமல் குழம்பினால் பதற்றம்தான் அதிகரிக்கும்.
பதற்றமான மனநிலையில் தேர்வு செய்யும் தரமற்ற கல்லூரிகளில் பொறியியல் பட்டம் பெறுவது வெறும் பட்டமாகத் தான் இருக்குமே தவிர, எதிர்கால வாழ்க்கைக்குப் பயன்படாது.  கிராமப்புறப் பள்ளி மாணவர்கள், கலந்தாய்வு குறித்த விவரங்களை, பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அதற்கேற்ப  செயல்பட வேண்டும். மேலும், மாணவர்களுக்கு வழிகாட்ட, காட்சி ஊடகங்கள் பல்வேறு கல்வியாளர்களைக் கொண்டு எந்தவகை பாடப்பிரிவுகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் விளக்கங்களை அளித்து வருகின்றன. 
இத்தகைய நிகழ்ச்சிகளை பார்த்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதும்,  நாளிதழ்கள் வெளியிடும் உயர்கல்வி குறித்த விவரங்களை தொகுத்து வைத்துக் கொள்வதும் கலந்தாய்வு நேரத்தில் கைகொடுக்கும்.
எல்லாவற்றையும் தாண்டி,  மாணவர்கள், பொறியியல்தான் படிப்போம் என்ற எண்ணத்தை விட்டு விட்டு, அதைத் தவிரவும் எத்தனையோ சிறப்பான படிப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அத்தகைய படிப்புகள் குறித்து இணைய வெளியில் உலவி, அதில் எந்த படிப்பு நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்றது என்பதை உணர்ந்து கொண்டு, கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்தால் உயர்கல்வி என்பது வாழ்க்கையை உயர்த்தும் கல்வியாக மாறும். எனவே, உயர்கல்வியை தேர்வு செய்ய பதற்றமில்லாமல் பயணப்படுவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.