அடிமையாக்கும் விளையாட்டு

டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் நினைத்தாலும் தடுக்க முடியாது. ஆனால், அதை எப்படிப் பயனுள்ள வகையில் நாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இந்தப் பொது முடக்கக் காலத்தில் பிள்ளைகளிடம் செல்லி
அடிமையாக்கும் விளையாட்டு



கடந்த மாதம் 29-ஆம் தேதி டிக்-டாக், யூசிப்ரெüசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளை இந்தியா தடை செய்தது. இந்தச் செயலிகளில் "பப்ஜி' மட்டும் நீக்கப்படவில்லை. இளைஞர்களை அதிகம் கவர்ந்த செயலியாக பப்ஜி விளையாட்டு விளங்குகிறது. இந்த விளையாட்டு 2017 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், உலகம் முழுவதும் 50 கோடி பேரை விளையாட வைத்திருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 25 கோடி பேர் விளையாடியிருக்கிறார்கள். விளையாட்டு (பப்ஜி) வீரர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இது ஒரு சாதாரண விளையாட்டுதானே என்று நீங்கள் நினைக்கலாம். இதுபோலத்தான் ப்ளூ வேலும் ஒரு சாதாரண விளையாட்டாக தொடங்கியது என்பதை நாம் மறந்து விட முடியாது. 

பப்ஜி (player unknown's battle grounds) விளையாடும் இளைஞர்கள் காதில் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு, இரு கைகளால் செல்லிடப்பேசியை பிடித்தவாறு, பொது இடங்களில் நடப்பதைப் பார்க்கலாம், பேருந்துகளிலும் பார்க்கலாம், ஏன் கொஞ்சம் திரும்பி பார்த்தால் உங்கள் அருகிலும் பார்க்கலாம். இதற்கு 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் விதிவிலக்கல்ல. அப்படி அங்கும்-இங்கும் திரும்பி பார்க்காமல் விளையாடும் பப்ஜியின் சுவாரஸ்யம் என்னதான் என்று பார்ப்போம்.

100 பேர் கொண்ட ஒரு விமானம் ஒரு தீவை நோக்கி செல்லும். பாராசூட் மூலம் எங்கு வேண்டுமானாலும் குதித்து கொள்ளலாம். ஒரு கட்டடம் நோக்கி செல்ல வேண்டும். அந்த கட்டடத்தில் இருக்கும் துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு, கவசம் போன்ற பொருள்களை ஒரு பையில் எடுத்து கொண்டு தோளில் மாட்டியபடி நகரும் போது, யார் கண்ணில் பட்டாலும் சுட வேண்டும் அல்லது கத்தியால் குத்த வேண்டும் அல்லது வெடிகுண்டு வீச வேண்டும். அப்படி எதிரியை தாக்காமல் சென்றால் அவர்கள் நம்மை தாக்கி நம்மிடம் உள்ள பொருள்களை பறித்து சென்று விட்டு கொன்று விடுவர். இதற்கு "லூட்' என்று பெயர். 

நேரம் ஆக ஆக தீவின் சுற்றளவு சுருங்கி கொண்டே வரும். அதற்குள் சென்று நாம் தப்பித்து விட்டால் "வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்' என்று சொல்கிறது இந்த பப்ஜி விளையாட்டு.

மற்ற விளையாட்டைப் போன்று இருக்கக் கூடாது என்று யோசித்து இயக்கினார் பிரெண்டன் கிரீன் என்பவர். படம் பார்ப்பது போல் ஒரு சுவாரஸ்யம் வேண்டாமா? அடுத்தடுத்த டாஸ்க்கை கடப்பதுதான் இதன் சுவாரஸ்யம். ஒரு குழுவில் நான்கு பேர் மட்டுமே. ஒருவர் திண்டிவனத்தில் இருந்தால் மற்றொருவர் தில்லியில் இருப்பார். இப்படி நான்கு பேரும் ஒவ்வொரு திசையிலும் இருப்பார்கள். இதற்கு நல்ல செல்லிடப்பேசி, பெரிய திரை, குறைந்தது 6 முதல் 8 எம்பி வரை டேட்டா செலவாகும்.   

இந்த விளையாட்டை பாதியிலும் நிறுத்த முடியாது. அதனால் இரவு முழுவதும் இந்த விளையாட்டை விளையாடும் இளைஞர்களும் உண்டு. 

இதுபற்றி பட்டதாரி இளைஞர்களிடம் (பப்ஜி வீரர்) கேட்ட போது, 100-க்கு 60% பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், 40% பேர் 6 மாதங்களாக விளையாடி வருவதாகவும் கூறுகின்றனர். பப்ஜியில் சாம்பியன் பட்டம் வெல்வது மிகவும் கடினமானது. 100 முறை விளையாடினால் 20 முறை மட்டுமே வெல்ல முடிந்தது என்கிறார்கள் பப்ஜி வீரர்கள். 

இந்த விளையாட்டு எங்களை ஈர்ப்பதற்கான முக்கிய காரணம் அதிலிலுள்ள கிராபிக்ஸ் தொழில்நுட்பம்தான். இதன் விளைவு இரவில் தூக்கம் 65% குறைந்துள்ளது. அப்படி விளையாடுவதால் அவர்களின் கண்கள்தான் பாதிக்கக்கூடும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கணினி, செல்லிடப்பேசியை அணைத்து வைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுவது பப்ஜியின் வீரர்களுக்கு தெரியுமா?

இந்த விளையாட்டால் சில விபரீதங்கள் நடக்கின்றன. சமீபத்தில் திருப்பதியில் சிறுவன் ஒருவன் விடியோ கேம் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் அவன் தற்கொலை செய்து கொண்டான். மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் விளையாடி கொண்டிருக்கும்போது தண்ணீருக்கு பதிலாக அமிலத்தைக் குடித்து விட்டார். புணே அருகே உள்ள ஷிண்டேவாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த விளையாட்டு மதுப்பழக்கம் போன்று நம்மை அடிமையாக்கும். குழந்தைகள் அதிக நேரம் செல்லிடப்பேசியில் மூழ்கிக் கிடப்பதை பெற்றோர் கண்காணித்து அதன் விளைவுகளை விளக்கி கூற வேண்டும்.

ப்ளூ வேல் இணைய விளையாட்டுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று நாம் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். இந்த விளையாட்டின் பாதிப்பை அறிந்த குஜராத் அரசு, சில மாதங்களுக்கு முன்பு இதற்குத் தடை விதித்தது. அதனையும் மீறி விளையாடிய 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த விளையாட்டு, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி, நம்மை செயற்கையான உலகில் வாழவைக்கிறது. 

டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் நினைத்தாலும் தடுக்க முடியாது. ஆனால், அதை எப்படிப் பயனுள்ள வகையில் நாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இந்தப் பொது முடக்கக் காலத்தில் பிள்ளைகளிடம் செல்லிடப்பேசியைக் கொடுக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். 

விபரீதங்களை ஏற்படுத்தும் இந்த விளையாட்டை மத்திய அரசு ஆலோசித்து இதற்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களை, இளைஞர்களை அடிமையாக்கும் இந்த விளையாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com