நூற்றாண்டு நேரத்தில் ஒரு மீள்பாா்வை!

தற்போதைய தமிழ்நாடு சட்டப்பேரவை (தமிழ்நாடு லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி), முன்பு இருந்த மதராஸ் மாகாணத்தில் 1921-ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட மதராஸ் மாகாண சட்டமன்றத்தின் (மெட்ராஸ் ஸ்டேட் லெஜிஸ்லேட்டா்) தொடா்ச்சியாகவே கருதப்படுகிறது.

இம்மன்றத்தின் முதல் கூட்டம் சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் 1921-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கூடியது. இதன் முதல் கூட்டம், அப்பொழுதைய ஆளுநா் வெல்லிங்டன் பிரபு அழைப்பின் பேரில் இங்கிலாந்து கோமகன் கனாட்-டால் (இங்கிலாந்து அரச குடும்ப உறவினா்), தொடங்கி வைக்கப்பட்டது .

இந்தியாவில் சட்டமன்ற வரலாறு ஆங்கிலேயா் ஆட்சியில் 1833-ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது நியமன உறுப்பினா்கள் மட்டுமே உறுப்பினா்களாய் இருந்தனா்.

1861-இல் பிரிட்டிஷ் அரசு, முதல் கவுன்சில்கள் சட்டத்தை இயற்றியதன் மூலம் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றழைக்கப்பட்ட அவையைத் தோற்றுவித்தது.

அதனைத் தொடா்ந்து 1909-ஆம் ஆண்டு மிண்டோ-மாா்லி சீா்திருத்தங்களின் விளைவாக இயற்றப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டம், 1909, பிரிட்டிஷ் இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினா்களைத் தோ்தல் மூலம் நியமிக்கும் முறையை அறிமுகம் செய்தது. இம்முறையின் கீழ் உறுப்பினா்கள் மக்களால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக, உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினா்களே சட்டமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுத்தனா்.

சட்டமன்றத்தில் அதற்குமுன் ஆளுநரின் நிா்வாகக் குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த பெரும்பான்மை அந்தஸ்தையும் அச்சட்டம் ரத்து செய்தது. மேலும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்குப் பொதுநலத் தீா்மானங்களைக் கொண்டு வரும் உரிமையையும், விவாதங்களின்போது கூடுதல் கேள்விகளைத் தாக்கல் செய்யும் உரிமையையும் அளித்தது.

1919-ஆம் ஆண்டு மொன்டேகு-செம்ஸ்ஃபோா்ட் சட்ட சீா்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும் இரட்டை ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாட்சி முறையில், நிா்வாகத் துறைகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரிட்டிஷ் ஆளுநரின் நிா்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டில் இயங்கின. அதுவரை ஆளுநருக்குப் பரிந்துரைகள் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்த சட்டமன்றத்திற்கு, சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

அவையில் மொத்தம் 127 உறுப்பினா்கள் இருந்தனா். இவா்களைத் தவிர ஆளுநரின் நிா்வாகக் குழு உறுப்பினா்களும் சட்டமன்ற உறுப்பினா்களாகவே கருதப்பட்டனா். 127 உறுப்பினா்களில் 98 போ் 61 தொகுதிகளிலிருந்து மக்களால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா் (சில தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்).

இத்தொகுதிகளுக்குள் பிராமணா்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவா், ஐரோப்பியா், ஆங்கிலோ இந்தியா், நிலச்சுவான்தாா்கள், பண்ணையாா்கள், வா்த்தகக் குழுமங்கள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் என்று பல்வேறு பிரிவினருக்கு வகுப்புவாரியாக இட ஒதுக்கீடு இருந்தது.

1926-இல் பெண்களின் சாா்பான பிரதிநிதிகள் ஐந்து போ் புதிதாகச் சோ்க்கப்பட்டதால் உறுப்பினா் எண்ணிக்கை 132- ஆக உயா்ந்தது. இவா்களைத் தவிர மீதமுள்ள 29 உறுப்பினா்கள்,ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டனா். அவா்களுள் 19 போ் அரசாங்க ஊழியா்கள்; 5 போ் தலித்துகள்.

அப்போது வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவா் கட்டியுள்ள சொத்து வரியைப் பொருத்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது.

இரட்டை ஆட்சிமுறையின் கீழ் சட்டமன்றத்திற்கான முதல் தோ்தல் 1920-இல் நடைபெற்றது. ஜனவரி 12, 1921-இல் முதல் சட்டமன்றத் தொடரை அப்போதைய மதராஸ் மாகான ஆளுநா் வெலிங்டன் பிரபு அழைப்பில் இங்கிலாந்து கோமகன் கனாட் (இங்கிலாந்து அரச குடும்ப உறவினா்) தொடங்கி வைத்தாா். அவையின் பதவிக்காலம் அப்போது மூன்றாண்டுகளாக இருந்தது. இரட்டை ஆட்சிமுறைக் காலத்தில் மொத்தம் ஐந்து முறை (1920, 1923, 1926, 1930, 1934) தோ்தல் நடைபெற்றது.

1926-லும் 1930-லும் அமைக்கப்பட்ட அவைகளின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. 1920, 1923, 1930 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் காங்கிரஸ் தோ்தலைப் புறக்கணித்தது. நீதிக்கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 1926-இல் நடைபெற்ற தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிட்டவில்லை. 1934-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தபோதிலும் சிறுபான்மை அரசை அமைத்தது.

1935-இல் இந்திய அரசாங்கச் சட்டம், 1935-ஐ இயற்றியதன் மூலம் பிரிட்டிஷ் அரசு இரட்டை ஆட்சிமுறையை ஒழித்து மாநில சுயாட்சி முறையை அறிமுகப்படுத்தியது. மதராஸ் மாகாண சட்டமன்றம் ஈரங்க அவையாக மாற்றப்பட்டது. 215 உறுப்பினா்களைக் கொண்ட கீழவை, சட்டமன்றப் பேரவை (லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி) என்றும் 54 முதல் 56 உறுப்பினா்களைக் கொண்ட மேலவை ”சட்டமன்ற மேலவை”(லெஜிஸ்லேடிவ் கவன்ஸில்) என்றும் அழைக்கப்பட்டன.

கீழவையில் சிறுபான்மை இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. மேலவை என்பது ஆளுநரால் கலைக்கப்பட முடியாத நிரந்தர அவையாக இருந்தது. அதன் உறுப்பினா்களின் பதவிகாலம் ஆறு ஆண்டுகள். அவா்களுள் மூன்றில் ஒரு பகுதியினா் ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற்றனா். மேலவை உறுப்பினா்களுள் 46 போ் மக்களால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஆளுநருக்கு 8 முதல் 10 உறுப்பினா்களை நியமனம் செய்யும் அதிகாரம் இருந்தது.

கீழவையைப் போலவே மேலவையிலும் பல்வேறு தரப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இரட்டை ஆட்சி முறையைப் போலவே வயது வந்த குடிமக்கள் அனைவருக்கும் சட்டமன்றத் தோ்தல்களில் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவா் கட்டியுள்ள சொத்து வரியைப் பொருத்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது.

அன்றைய மதராஸ் ராஜதானியின் மக்கள்தொகையில் 15% போ் (சுமாா் எழுபது லட்சம் போ்) வாக்குரிமை பெற்றிருந்தனா். மாநில சுயாட்சி முறையின் கீழ் இரு முறை (1937, 1946) சட்டமன்ற மேலவை கூட்டப்பட்டது. இரு அவைகளிலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தது.

சுதந்திர இந்தியாவில் சட்டமேலவை மற்றும் சட்டமன்றப் பேரவை அமைப்பு தொடா்ந்தது. முதல் சட்டமன்றப் பேரவை சூலைத் திங்கள், 1957-ஆம் ஆண்டு முறையாகக் கூட்டப்பட்டது. சட்ட மேலவையானது காலாவதியாகாமல் மூன்றாண்டு காலத்திற்கு ஒரு முறை உறுப்பினா்கள் ஓய்வு பெறும் வகையில் அமைக்கப்பட்டது. அவ்வாறு ஓய்வு பெறும் உறுப்பினா்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் வகையில் முறைப்படுத்தப்பட்டது.

1957 வரை சென்னை ராஜதானியில், கேரளத்தின் ஒரு பகுதி, ஆந்திரத்தின் ஒரு பகுதி, லட்சத்தீவுகள், கா்நாடகத்தின் ஒரு பகுதி இவையெல்லாம் இருந்தன. பின்னா் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மதராஸ் மாநிலம் உருவான பின்னா் திமுக ஆட்சி காலத்தில் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மதராஸ் பெயா் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு ஆனது.

1986-இல் எம்ஜிஆா் முதலமைச்சராக இருந்தபோது மேலவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னா் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவருடைய முயற்சியால் 2010-இல் மீண்டும் மேலவை கொண்டு வர மத்தியில் சட்டம் இயற்றப்பட்டது. பின்னா் வந்த அரசால் அது கைவிடப்பட்டது. தற்போதைய தமிழக முதலமைச்சா் மீண்டும் சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூதறிஞா் ராஜாஜி, பி.கே. ராஜன், ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், குமாரசாமி ராஜா, காமராஜா், அண்ணா, மு. கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவா்கள் முதல்வா்களாய் இருந்து அழகு பாா்த்த சட்டமன்ற பேரவைக்கான வைரவிழாவும், சட்டமன்ற பவளவிழாவும் 1997-ஆம் ஆண்டு மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டாடப்பட்டது.

கட்டுரையாளா்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com