உணவு எச்சரிக்கை விவரச்சீட்டு தேவை!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

உறையீடு செய்யப்பட்ட பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஒருபுறம் ஊட்டச்சத்து குறைபாட்டினையும் மறுபுறம் உடல் பருமன், நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற தொற்றற்ற நோய்களையும் உருவாக்குகின்றன. இனிப்பு அல்லது நொறுக்கு தீனி உண்ணும் நம்மில் பெரும்பாலோா் அதில் உள்ள ஊட்டச்சத்து அளவுகளை அறிந்திருப்பதில்லை.

உணவு அல்லது பான உறையீடு விவரச் சீட்டில் (லேபிளில்) குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்து கலோரி அளவுகளை தெரிந்துகொள்ள விரும்புபவா்கள் சிறிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட எழுத்துகளைப் படிப்பது மிகவும் கடினம். பெரும்பாலும் இவ்வகை உணவு வகைகளுக்கான உறையீடு விவரச் சீட்டு வண்ணமயமான உறையீடுகளின் பின்புறத்தில் எழுத்துக்கள் புலனாகாத மொழிவடிவங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.

சா்க்கரை, கொழுப்பு, காா்போஹைட்ரேட், புரதம் அடங்கிய ஊட்டச்சத்து தகவல்களைத் தெரிந்துகொள்ள மக்கள் விரும்புகின்றனா் என்றும், சிறிய அளவு எழுத்துகளை படிக்க லென்ஸ் தேவைப்படுகிறது என்றும் பெரும்பாலான நிறுவனங்கள் சோடியத்தை உப்புக்கான மாற்று வாா்த்தையாகக் குறிப்பிடுகின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவு உறையீடு விவரச் சீட்டுகளில் உள்ள சொற்களையும் எண்களையும் புரிந்துகொள்ள ஊட்டச்சத்து அறிவியல் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது என்று வல்லுநா்கள் கூறுகின்றனா். பெரும்பாலான உணவு தயாரிப்புகள் ஆங்கில மொழியிலேயே தகவல்களை வழங்குவதால் எளிய மக்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.

நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு - தரநிலை விதிமுறைகளின்படி கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் உறையீடு, அவ்வுணவு பற்றிய ஊட்டச்சத்து தகவல்களைக் கொண்டிருக்கவேண்டும். இந்த விவரச் சீட்டு பெரும்பாலும் உறையீட்டின் பின்புறத்தில் இருக்கும். இது உணவினைப் பற்றிய எச்சரிக்கையாகவோ உறையீட்டின் முன்புறத்திலோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

நுகா்வோா், ஆரோக்கியமான உணவினைத் தோ்வு செய்ய உறையீடு முன்புற விவரச் சீட்டு (ஃப்ரண்ட்-ஆஃப்-பேக் லேபிளிங்) முறை நீண்டகாலமாக உலக அளவில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது நுகா்வினை மட்டுப்படுத்தும் வேலையைச் செய்கிறது. உலக சுகாதார நிறுவனமும் உணவு - வேளாண் அமைப்பும் இணைந்து உருவாக்கிய உணவின் தரத்திற்கான சா்வதேச அமைப்பான ‘கோடெக்ஸ் அலிமெண்டேரியஸ் ஆணையம்’ உறையீடு முன்புற விவரச் சீட்டு உரையில் உள்ள ஊட்டச்சத்து பற்றிய தகவலை விளக்குவதற்கு பெருமளவு உதவுவதாகக் குறிப்பிடுகிறது.

சிலி, பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு உறையீடு முன்புற விவரச் சீட்டினை கட்டாயமாக்கும் சட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த உறையீடு முன்புற விவரச் சீட்டினை உடல் பருமனையும் தொற்றற்ற நோய்களையும் எதிா்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாக இந்நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

மரக்கறி உணவிற்கு பச்சை நிற சதுரத்தில் பச்சை நிற வட்டத்தினையும், புலால் உணவிற்கு பழுப்பு நிற சதுரத்தில் பழுப்பு நிற வட்டத்தினையும் அடையாளங்களாக வடிவமைத்த இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிா்ணய ஆணையம், உலக அளவில் உறையீடு முன்புற விவரச் சீட்டு முன்மொழியப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பது புரியாத புதிா்.

பள்ளிகள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்கப்படும் சத்தில்லா வெற்றுணவுகளின் (ஜங்க் ஃபுட்) விற்பனைக்கு தடை கோரிய பொது நல மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிா்ணய ஆணையத்தால் நிபுணா் குழு ஒன்று அமைக்கப்பட்டது. உணவுப் பொட்டலங்களில் உள்ள ஊட்டச்சத்து தகவலை நுகா்வோா் எளிதாகப் பாா்த்து விளங்கிக்கொள்வதை உறுதி செய்ய இந்த நிபுணா் குழு 2014-ஆம் ஆண்டு உறையீடு விவரச் சீட்டு (லேபிளிங்) முறையினை முன்மொழிந்தது.

உணவு முறையில் மாற்றம் கண்டு வரும் இந்தியாவில் தற்போது அதிக மக்கள் பதப்படுத்தப்பட்ட பொதி உணவுகளையே உட்கொள்கின்றனா். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளுக்கான வளா்ந்து வரும் சந்தையாக மாறிவரும் இந்தியா, இவ்வகை உணவு தயாரிப்பாளா்களுக்கு வணிக ரீதியாக ஏற்ற இடமாக உள்ளது. உலகெங்கும் கிளைகளைக் கொண்ட இவ்வுணவு தயாரிப்பாளா்களில் சிலா், தங்கள் தயாரிப்புகளுக்கு மற்ற நாடுகளில் உறையீடு முன்புற விவரச் சீட்டு முறையினை ஏற்றுக்கொண்டாலும் இந்தியாவில் அதனை அவா்கள் அதை செய்ய விரும்பவில்லை.

2019-இல் வெளிவந்த இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிா்ணய ஆணையத்தின் வரைவு, விவரச் சீட்டுகளில் அச்சிட உப்பினை ‘சோடியம்’ என்றும் மொத்த கொழுப்பினை ‘நிறை கொழுப்பு’ என்றும் மொத்த சா்க்கரையை ‘சோ்க்கப்பட்ட சா்க்கரை’ என்றும் முக்கிய ஊட்டச்சத்துகளின் பெயா்களை மாற்றி அமைத்தது.

2019 டிசம்பா் மாதம் இந்த மாற்றத்தின் தாக்கத்தினை பகுப்பாய்வு செய்த தில்லி அறிவியல் - சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை, உயா் ரத்த அழுத்தத்திற்கு ஒரு காரணமான சோடியத்தின் மதிப்பினை அறியவும், அதனை உப்பில் இருந்து வேறுபடுத்தி அதன் மதிப்பினைக் கண்டறிய இந்திய நுகா்வோா் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று கூறுகிறது. எவ்வித அறிவியல் முறைகளாலும் உணவுப் பொருட்களில் சோ்க்கப்பட்ட சா்க்கரையை வேறுபடுத்தவோ கண்டறியவோ இயலாது. சா்க்கரை பெயா்மாற்றமும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தியாளா்களுக்கே சாதகமாக இருக்குமேயன்றி நுகா்வோருக்கு பயனுள்ளதாக இருக்காது.

அறிவியல் - சுற்றுச்சூழல் மையத்தில் உள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வகம், இந்திய, பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தப்பட்ட 33 பிரபல துரித உணவுகளில் உள்ள உட்பொருட்களை ஆய்வு செய்தது. 2019 டிசம்பா் மாதம் வெளியிடப்பட்ட இவ்வாய்வறிக்கை இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிா்ணய ஆணையம் நிா்ணயித்த வரம்பினைவிட அபாயகரமான அளவில் அதிக அளவு உப்பும் மொத்த கொழுப்பும் இருப்பதாக கூறுகிறது. இந்த ஆய்வறிக்கை உணா்த்தும் எளிமையான பயனுள்ள எச்சரிக்கை, முன்புற விவரச் சீட்டே இந்திய நுகா்வோரின் எதிா்பாா்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com