ஆல்போல் தழைத்து இமயம்போல் எழும்! 

இந்திய அரசியல் சட்டம், இந்திய மோட்டார் வாகனச் சட்டம், இந்திய அரசுப் பணியாளர் சட்டம்,

இந்திய அரசியல் சட்டம், இந்திய மோட்டார் வாகனச் சட்டம், இந்திய அரசுப் பணியாளர் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம், இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் - இப்படி நாடாளுமன்ற இரு அவைகளின் மூலம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற சட்டங்கள் அனைத்தும் "இந்திய', "இந்திய' என்றுதான் இயற்றப்பட்டிருக்கின்றன. நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிகை, நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் எல்லாம் ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவை அடிமையாக்கிய காலத்திலிருந்தே இருக்கின்றன. விடுதலை பெற்ற இந்தியாவிலும் 73 ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் "ஒன்றியம்' என்றோ "ஒன்றிய அரசு' என்றோ குரல் எழுந்ததில்லை. 

சீனாவின் சர்வாதிகார வஞ்சக மூளையில்கூட இப்படிப்பட்ட ஒரு எண்ணம் தோன்றவில்லை. இந்தியாவின் இறையாண்மையை எந்தச் சூழ்நிலையிலும் இழிவுபடுத்திடும் வகையில் பகை நாடுகளோ பயங்கரவாதிகளோ நினைத்துக்கூட பார்த்ததாக குறிப்பு இல்லை. ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள்கூட அங்குள்ள வீதிகளில் பாகிஸ்தான் தேசியக் கொடியை தூக்கிப் பிடித்து முழக்கமிட்டார்களே தவிர, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெயர்களில் "நாடு' என்ற சொல் இடம் பெற்றிடவில்லை. ஆனால், "தமிழ்நாடு' என்று தமிழ் இனத்தைப் பெருமைப்படுத்துகின்ற வகையில் மத்திய அரசு மதித்ததோடு, "திராவிடநாடு' கொள்கையை கைவிட்ட அண்ணாவின் இந்திய இறையாண்மை உணர்வை பெருமைப்படுத்திடும் வகையில், பெயர் மாற்றத்தை ஏற்றுக்கொண்டது அன்றைய பிரதமர் நேருவின் தலைமையிலான மத்திய அரசு.

"மெட்ராஸ்' என்ற பெயர் மாற்றப்பட்டு "சென்னை' என்று பெயர் சூட்டப்பட்டது அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதியால். ஆனால், "மெட்ராஸ் ஹைகோர்ட்' என்பது "சென்னை உயர்நீதிமன்றம்' என்று மாற்றம் பெற்றதா? "மெட்ராஸ் யுனிவர்சிட்டி' என்பது "சென்னைப் பல்கலைக்கழகம்' ஆனதா? ஏன் இந்த பெயர் மாற்றங்கள் நடைபெறவில்லை என்பதற்கான காரணங்களை இன்றைய அரசியல்வாதிகள் புரிந்துகொண்டார்களா? 

இந்தியப் பேரரசில் நிதி அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ராணுவ அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், வருவாய்த்துறை அமைச்சகம் - இப்படி மத்திய அமைச்சர்களின் துறைகளுக்கெல்லாம் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மாநிலங்களில் உள்ள அமைச்சர்களின் துறைகளுக்கு "அமைச்சகம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறதா? மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் அறிக்கைகள் அந்தந்த அமைச்சகங்களின் பெயராலேயே வெளியிடப்படும். ஆனால், மாநிலங்களின் எந்தத் துறைக்கும் அந்த அதிகாரம் இல்லை. எல்லா அறிவிக்கைகளும் ஆளுநர் பெயரில்தான் வெளியிடப்படும் .

இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; தேசிய கீதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; ஆகஸ்ட் 15 சுதந்திர திருநாளில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துகிறார்; நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்; குடியரசு நாளைக் கொண்டாடுகிறோம்; ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் துறைகள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

எல்லையோரப் பாதுகாப்பில், பேரிடர் காலங்களில் இந்தியப் பேரரசின் இமாலயப் பணிகள் ஏராளம். கடலோர பாதுகாப்பிலும் மத்திய அரசுதான் ஈடுபடுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கலில் தொடங்கி, வெற்றி பெற்ற பிறகு பதவியேற்கும்போது, "இந்தியப் பேரரசின் அரசியல் சாசனத்தின்படி...' என்றுதானே பதவியேற்கிறார்கள்? முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் எப்படி பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்? இந்திய அரசியல் சாசனப்படி உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளில் பொறுப்புக்கு வருவோர் எதைச் சொல்லி பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்?

இந்தியாவின் எல்லையோர நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, வங்க தேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, மோரீஷஸ் என அனைத்து நாடுகளையும் வளைத்துப் போட்டுக் கொண்டு, இந்தியாவையும் கபளீகரம் செய்ய காத்துக்கொண்டிருக்கின்ற சீனாவை விரட்டிட, 135 கோடி இந்திய மக்களைக் காத்திட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கண் துஞ்சாமல் பணியாற்றி வருகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின்படி முதல் தேர்தல் 1952-ஆம் ஆண்டில் நடந்தது. 1957-ஆம் ஆண்டுதான் திமுக நேரடியாக தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டது. 1962, 1967 என தொடர்ந்து அதிகாரபூர்வ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பெற்று களத்தில் நின்றது. மத்தியில் பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான அரசிலும்,  வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசிலும், காங்கிரஸின் மன்மோகன் சிங் தலைமையிலான அரசிலும்  திமுக-வினர் அமைச்சர் பதவிகளில் அமர்ந்தனர். இந்தியா முழுவதும் இந்தியப் பேரரசின் திட்டங்களை திமுக அமைச்சர்கள் செயல்படுத்தினர்; அதிகாரம் செலுத்தினர்; பெரும் பணமும் சம்பாதித்து பெருவாழ்வு வாழ்கின்றனர்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றிட உறுதியாக இருந்தபோது, ஆங்கிலேயே அரசிடம் ஈ.வெ.ரா. ஆணித்தரமாக கேட்டிருந்தால் "திராவிட நாடு' என்று ஒரு பகுதியையும் பிரித்து வழங்கிட வெள்ளை ஏகாதிபத்தியம் தயங்கி இருக்காது. ஆனால் ஈ.வெ.ரா. மட்டும் என்ன செய்ய முடியும்? ஆந்திரம், கர்நாடகம், கேரளப் பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் "திராவிட நாடு' என்ற முழக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அவர்கள் ஈ.வெ.ரா-வையும், அண்ணாவையும் பார்த்து கேலி பேசினார்கள் என்பதே உண்மை.

1967-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தை திராவிட இயக்கங்கள் (தி.மு.க. - அ.தி.மு.க.) மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இழந்தோம்; சேது கால்வாயில் இரண்டாயிரம் கோடி ரூபாய் பணத்தை அன்றைக்கு மத்தியில் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு கொட்டினார்; முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு இல்லை; காவிரிப் பிரச்னை தீர்ந்தபாடில்லை; நதிகள் இணைப்பு பேச்சோடு சரி; ஈழப் பிரச்னையில் விடிவு இல்லை; அங்கு இரண்டு லட்சம் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது; மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. தமிழ் இனத்தின், தமிழ் மண்ணின் வீரர்கள், தீரர்கள் என்ன செய்தனர்? ஒருவர் கள்ளத்தோணியில் அங்கு சென்று வந்தார். காவல்துறை கைது செய்து, மாலையில் விடுவித்தது. பாசமும் நேசமும் பகல் வேடமானது. 

தாய்த் தமிழகம் காத்திடும், கரை சேர்த்திடும் என நம்பிய ஈழ மக்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். மாநில சுயாட்சியை திமுக மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது; புதிய கல்விக் கொள்கையை திமுக மட்டுமே எதிர்க்கிறது; ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் திறமையுள்ளவன் டாக்டராகிட "நீட் தேர்வு' ஒரு வரப்பிரசாதம் - அதை திமுக மாத்திரமே எதிர்க்கிறது. இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்புக் குரல் இல்லை. அங்கெல்லாம் சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லையா? உண்மை என்னவென்றால் தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் திமுக அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் சொந்தமானவை. 

"ஒன்றிய அரசு' என்ற புரிதல் இல்லாத ஒரு புதிய கூற்றை தமிழகத்தில் ஒரு சிலர் முணுமுணுத்திடத் தொடங்கியிருக்கின்றனர். இது "திராவிட நாடு திராவிடருக்கே' என்பதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. அதாவது,  "தமிழ்நாடு தமிழருக்கே' என்ற குழப்பத்தை மக்களிடம் விதைத்துக் கொண்டிருக்கின்ற நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோரின் தாக்கத்தின் விளைவுதான் இது. 

"நான் திராவிடன்' என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டுகிறார். "திராவிடநாடு' பிரிவினையை கைவிடுகின்ற முடிவுக்கு அண்ணா வந்தபோது, திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் பேசுவதற்காக, அண்ணா ஒரு நோட்டில் தன் கைப்பட பேச்சை எழுதித் தயாரித்தார். அண்ணாவால் அன்றைய திமுக பொதுக்குழுவில் படிக்கப்பட்ட உரைதான் திமுக-வின் அரசியல் சாசனம். அந்தப் பேச்சு, மு. கருணாநிதியின் அணிந்துரையோடு வெளிவந்திருக்கிறது. திமுக நண்பர்களே, தயவு செய்து அந்தப் புத்தகத்தை தேடிப் படியுங்கள். அதன்பின் திராவிடத்தைப் பற்றிப் பேசுங்கள்.

அப்படி ஒரு புத்தகத்தை பார்க்காமலே தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியிருக்கிறார் 'ஒன்றிய அரசு என்றுதான் சொல்லுவேன்... சொல்லிக் கொண்டே இருப்பேன்...' என்று வீரம் பொங்கிட சூளுரைத்து இருக்கிறார். "வென்றவர் சொல்வதெல்லாம் வேதமாகி விடாது' என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். 

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும் சக்திகளை எப்படி அழைத்தாலும் அதன் தன்மை மாறிவிடாது; மாற்று குறைந்துவிடாது. இந்தியப் பேரரசை எறும்புகள்கூடியா இல்லாமல் ஆக்கிடமுடியும்? அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆல்போல் தழைத்தோங்கி - இமயம்போல எழுந்து நிற்கும்! தொடர்ந்து சரித்திரம் படைத்திடும்!

கட்டுரையாளர்: தலைவர், இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com