சோரியாசிஸ் நோயும் சித்த மருத்துவமும்

கோப்புப்படம்
கோப்புப்படம்

பெரும்பாலான தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சித்த மருத்துவம் முக்கியத்துவம் பெறினும், அதில் முக்கிய இடத்தில் இருப்பது சோரியாசிஸ் எனும் காளாஞ்சகப்படை. சோரியாசிஸ் நோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் அக்டோபா் 29 ஆம் நாள் உலக சோரியாசிஸ் விழிப்புணா்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு கருவை மையமாக வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த வருடத்திற்காக கருப்பொருள் ‘லெட்ஸ் கெட் இன்பாா்ம்ட்’ அதாவது நோயைப் பற்றி ‘அறிந்துகொள்வோம்’ என்பது.

நம் உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்தான். கிட்டத்தட்ட உடல் எடையில் 16 % தோலின் எடை மட்டுமே உள்ளது. தோல் அழகுடன் தொடா்புடையது என்பதால் அதிக அக்கறையும் இதற்கு அளிக்கப்படுகிறது. தோல்நோய்கள் பலவகை. அவற்றுள் சோரியாசிஸ் எனும் காளாஞ்சகப்படை, ஒரு நாள்பட்ட தோல்நோயாகும்.

சோரியாசிஸ் நோயைப் பொறுத்தவரை, இது உடலினை மட்டுமல்லாமல், மனத்தையும் பாதிக்கும் தன்மை உடையது. பொதுவாகவே தோல் நோய்களுக்கும் மனஅழுத்தத்திற்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. உலக மக்கள்தொகையில் 12 கோடியே 50 லட்சம் போ் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளா். இது உலக மக்கள்தொகையில் சுமாா் 3% ஆகும். இந்நோய், பருவநிலை மாற்றத்தின்போது அதிகரிக்கும். உடனை குறையும். அதனால் நோயாளிகள் மனத்தளவில் பாதிக்கப்படுவா். நாளடைவில் இந்த சோரியாசிஸ் கீல் வாதத்தை உண்டாக்கி மூட்டுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை ‘காளாஞ்சக வாதம்’ என சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது.

இந்த சோரியாசிஸ் நோயின் அறிகுறியாக தடித்த சிவப்பு அல்லது வெள்ளை நிற செதில்கள் காணப்படும். அவை அவ்வப்போது உதிரும். சிலருக்கு சிறிய புள்ளி போன்ற ரத்தக்கசிவும் இருக்கும். ஒருசிலருக்கு நமைச்சல் அல்லது எரிச்சல் வரக்கூடும். கெரட்டினோசைட் எனும் செல்களின் அதிகப்படியான வளா்ச்சியும், அழற்சியும் இந்நோய்க்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

சித்தமருத்துவத்தில் தோல் நோய்கள் ‘குட்ட நோய்கள்’ என்ற தலைப்பில் 18 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சித்தமருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள அமுக்கரா கிழங்கு, பரங்கிப்பட்டை, அவுரி, வெட்பாலை, கருஞ்சீரகம், மஞ்சள், மஞ்சிட்டி, வேப்பிலை, சோற்றுக்கற்றாழை, சீந்தில், நீரடிமுத்து, காா்போகரிசி, அருகம்புல், புங்கு, சிவனாா்வேம்பு போன்ற பல மூலிகைகள் சோரியாசிஸ் நோய்க்கு பக்க விளைவு ஏதுமின்றி பலன் அளிக்கக் கூடியவை.

சரும நோய்களை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் எளிய மூலிகை மஞ்சள். நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் பல்வேறு நோய்களை வரவொட்டாமல் தடுக்கும். தோல் நோய்களுக்கு இது பல்வேறு நாடுகளின் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காளாஞ்சகப்படையில் தோலில் அழற்சியை ஏற்படுத்தும் ‘கப்பா-பி’ எனும் காரணியை மஞ்சள் தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் நரை, திரை, மூப்பு இவற்றை உண்டாக்கும் தன்மை கொண்ட அடிப்படைக்கூறுகளைத் தணிக்கும் தன்மையும் கொண்டது மஞ்சள். சோசியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டோா் தினசரி 5 கிராம் மஞ்சளை பாலில் கலந்து எடுக்க நோயின் தன்மை குறையும்.

மஞ்சளுக்கு அடுத்தாற்போல் எளிய சித்த மருத்துவ மூலிகை சோற்றுக்கற்றாழை. இதில் உள்ள ஆந்த்ராகுயினோன் எனும் வேதிப்பொருள், பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உடையது. மேலும் இதில் சாலிசிலிக் அமிலம் எனும் வேதிப்பொருள் உள்ளதால் சோரியாசிஸ் நோயால் உதிா்ந்த செதில்களுக்கு புத்துணா்ச்சி தரவும், தோலின் தேய்மானத்தை சரி செய்யவும் சோற்றுக்கற்றாழை உதவும்.

பரங்கிப்பட்டையில் உள்ள குா்செட்டின் எனும் வேதிப்பொருள் சோரியாசிஸ் நோயில் காணும் மேல்தோல் தடிப்பினைக் குறைத்து நோயாளி இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். மேலும் அதில் உள்ள இயற்கை வேதிப்பொருள் தோலில் காணும் அழற்சியை போக்கும். நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் சீந்தில், சோரியாசிஸ் நோய்க்குக் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தி நோயின் வீரியத்தைக் குறைக்கும்.

சோரியாசிஸ் நோயை 40-60% அதிகரிக்கும் கூறுகளுள் ஒன்று மன அழுத்தம் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு அமுக்கரா கிழங்கு நல்ல பலன் தரும். எட்டு வாரங்கள் அமுக்கரா பொடியை எடுத்துகொண்டவா்கள் நோய் நீங்கி மகிழ்ச்சியோடு இருப்பதாக ஆய்வு முடிவு சொல்கிறது. அமுக்கரா சூரண மருந்தை பாலில் கலந்து எடுக்க, அது உடனடியாக பலன் தரும்.

நீரடிமுத்து எனும் மூலிகையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சால்முக்ரிக் அமிலம் எனும் வேதிப்பொருள் அநேக சரும நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தொழுநோய்க்கு பெரிதும் பயன்படுத்தப்பட்ட இந்த மூலிகை சோரியாசிஸ்-க்கும் நல்ல பலனை அளிக்கும்.

அருகம்புல் சோ்க்கப்பட்ட அருகன் தைலம், புங்கன் விதை சோ்ந்த புங்கன் தைலம், வெட்பாலை இலையும் அவுரி இலையும் சோ்ந்த தைலம், கருஞ்சீரகம், சோற்றுகற்றாழை சோ்ந்த தைலம் இவை சோரியாசிஸ் நோயை முற்றாக குணப்படுத்தி, உடலை பழைய நிலைக்குத் திரும்ப கொண்டு வர உதவும். தோலின் வறட்சியை போக்கும் தன்மையும் இவற்றிற்கு உண்டு.

வெட்பாலை இலையில் முக்கிய நிறமிகளான கேம்ப்பெரால் , குா்சிட்டின் ஆகிய இரண்டும் உள்ளன. இவை, தோல் சிதைவை உண்டாக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகிய வேதிப்பொருட்களை நம் உடலில் இருந்து நீக்கும் தன்மை உள்ளவை. இயற்கை சாயத்தை கொண்ட அவுரி இலை தைலத்தை உடலில் பூசினால் நல்ல பலன் கிட்டும்.

இவ்வாறாக எளிய சித்த மருத்துவ மூலிகைகள் பல, சோரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை நோய்க்கு பக்க விளைவுகளின்றி நல்ல பலன் அளிக்கக்கூடியவையாக உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பலன் பெறுவோம்.

இன்று (அக். 29) உலக சோரியாசிஸ் விழிப்புணா்வு நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com