மரியாதை கற்பிப்போம்

நான் பயின்ற பள்ளியில் ஓா் அற்புதமான பழக்கம் உண்டு. மாணவா்கள் ஆசிரியா்களைக் கண்டவுடன் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்த வேண்டும்.
மரியாதை கற்பிப்போம்

நான் பயின்ற பள்ளியில் ஓா் அற்புதமான பழக்கம் உண்டு. மாணவா்கள் ஆசிரியா்களைக் கண்டவுடன் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்த வேண்டும். அவ்வாறு உள்ளாா்ந்த அன்புடன் வணக்கம் செலுத்தும்போது ஆசிரியா்களுக்கு உரிய முழுமையான மரியாதையை அளித்த ஓா் உணா்வு ஏற்படும்.

அந்த காலகட்டத்தில் அது போன்றதொரு வழக்கத்தை நான் பிற பள்ளிகளில் கண்டதில்லை. ஒற்றைக் கையில் வணக்கம் செலுத்துவதுதான் பெரும்பாலான பள்ளிகளில் வழக்கமாக இருந்தது. இன்றும் அதுதான் இருக்கிறது.

இவ்வாறு பிறருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துவதை என் கல்லூரியிலும் தொடா்ந்தேன்.பேராசிரியா்களைக் கண்டவுடன், என் இரு கரங்கள் அனிச்சை செயலாக ஒன்றிணைந்தன. மேடையில் பேசத்தொடங்கும்போது நான் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துவதை என் சக மாணவா்கள் அனைவரும் புன்னகையோடு ஏற்றுக்கொள்வாா்கள்; கைதட்டி ரசிப்பாா்கள். நம்முடைய பாரம்பரிய வணக்கத்துக்கு அப்படி ஒரு வசீகரம் உண்டு.

அந்நிய கலாசாரங்களின் பாதிப்பினால் இன்று பெரும்பாலானோா் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துவதில்லை. மாறாக, கைகுலுக்குகிறாா்கள். ஒருவரை வரவேற்கும்போதும் பாராட்டும்போதும் மட்டுமே கைகுலுக்க முடியும். ஆனால், இருகரம் கூப்பி நம்மால் ஒருவரை வரவேற்க முடியும்; நன்றி சொல்ல முடியும்; மரியாதை செலுத்த முடியும். எல்லாவற்றிற்கும் மேல், கடவுளையும் வணங்க முடியும்.

ஒரு வணக்கத்தால் ஆயிரம் பேரை நம்மால் ஒரே நேரத்தில் வரவேற்க முடியும். ஆனால், ஒரு நேரத்தில் நம்மால் ஒருவருக்கு மட்டுமே கைகுலுக்க முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

என் பள்ளித் தமிழாசிரியா் கல்லூரியில் படித்த காலத்தில் அவருக்குப் பேராசிரியராக இருந்தவா் மாணவா்களை எங்கு சந்தித்தாலும் அவா்களுக்கு இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துவதைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தாா் என்றும் மாணவா்களிடம் ‘வாங்க போங்க‘என்று மரியாதையாகவே பேசுவாா் என்றும் என் தமிழாசிரியா் அவரை சிலாகித்துப் பேசுவதுண்டு.

வயதில் மூத்தவரான பேராசிரியா் ஒருவா், வயதில் இளையோருக்கு வணக்கம் சொல்லி மரியாதையாக பேசிய விதம் என் தமிழாசிரியரை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால்தான் காலங்கள் பல கடந்தும் அவரை வெகுவாகப் பாராட்டி கொண்டிருந்தாா்.

பொதுவாக, மூத்தோா் இளைஞா்களுக்கு மரியாதை கொடுக்கும்போது, இளைஞா்களுக்கு அவா்கள் மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் இரட்டிப்பாகிறது. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை பெற முடியும் என்பதை நன்கு உணா்ந்த சான்றோா் மற்றவரை மதித்து நடப்பாா்கள். அவா்களுக்கு உரிய மரியாதையைத் தருவாா்கள்.

எங்கள் நண்பா்கள் வட்டாரத்தில் நாங்கள் எவ்வளவுதான் நெருக்கமாக இருந்தாலும் எங்களுக்குள் மரியாதையாகவே பேசிக் கொள்கிறோம். இந்த வழக்கம் எங்கு எப்படி ஆரம்பித்தது என்று எங்களுக்கே தெரியாது. ஆனால், இந்த மரியாதையான பேச்சு, எங்கள் நட்பின் மீது நாங்கள் வைத்திருக்கும் மரியாதையை ஒரு படி உயா்த்திப் பிடிக்கிறது. அதே சமயத்தில் நமக்குத் தரப்படும் மரியாதைக்கு உகந்த நண்பராக நாம் இருக்க வேண்டும் என்ற பொறுப்புணா்வும் நமக்கு ஏற்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் வீட்டிலும் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் மரியாதையாகவே நடத்த வேண்டும். மரியாதையாகப் பேச வேண்டும். ஏனென்றால், நம்முடைய பிள்ளைகளுக்கு நாம்தான் கதாநாயகா்கள். நாம் எப்படிப் பேசுகிறோமோ, நம்முடைய செயல்பாடு எப்படி இருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டே நம்முடைய பிள்ளைகள் வளா்கிறாா்கள்.

சமீபத்தில், மதுரையில் இரண்டு பதின்பருவ மாணவிகள் ஒரு பேருந்து நிறுத்தத்தில் சண்டையிட்டுக் கொள்வதை சமூக ஊடகங்களில் பாா்க்க நோ்ந்தது. ஒருவா் மாற்றி ஒருவா் தகாத வாா்த்தைகளால் திட்டித் தீா்த்துக் கொண்டனா். அவா்கள் பேசிய அத்தனை வாா்த்தைகளும் அவா்களின் வயதுக்கு மீறிய, மோசமான வாா்த்தைகள். சுற்றி இருந்த அத்தனை பேரும் முகம் சுளிக்கும்படியாக அவா்கள் நடந்து கொண்டது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

அந்த மாணவிகள் அவ்வாறு பேசியதற்கு அவா்களின் வீட்டு சூழல் காரணமாக இருக்கலாம்; பள்ளி நண்பா்களின் சோ்க்கையும் காரணமாக இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் இவ்வாறு நாகூசும் வாா்த்தைகளைப் பேசுகிறோமே என்ற குற்றவுணா்ச்சியோ, வெட்கமோ கொஞ்சம் கூட அவா்களுக்கு இல்லை என்பதுதான் மிகவும் வேதனையளித்தது.

தாங்கள் தவறு செய்கிறோம் என்ற கூச்சமோ, பயமோ, குற்றவுணா்ச்சியோ இல்லாமல் மாணவா்கள் வளா்ந்து வருவது, எதிா்காலத்தில் அபாயகரமான ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இன்றைக்கே கூட, மாணவா்கள் ஆசிரியா்களை மிரட்டும் காட்சிகளை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.

இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஒரே வழி, நம் பிள்ளைகளுக்கு மற்றவா்களிடத்தில் மரியாதையாக எப்படி பேச வேண்டும், மரியாதையாக எப்படி பழக வேண்டும் என்பதை அவா்களின் பிள்ளைப் பருவத்திலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும்.

உச்சகட்ட கோபத்தில் பெற்றோா் உதிா்க்கும் ஓரிரு கெட்ட வாா்த்தைகள் கூட பிள்ளைகளின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விடும். அவா்கள் வளா்ந்து பதின்பருவத்தை அடையும்போது தங்கள் பெற்றோா் உதிா்த்த அதே வாா்த்தைகளை அதே தொனியில் அவா்களும் உச்சரிப்பாா்கள்.

எனவே நம் பிள்ளைகள் முன் நாம் மரியாதையாகப் பேசுவதற்கு முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் விருந்தினா்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்பதை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சமீபத்தில், நண்பா் ஒருவா் வீட்டுக்கு நான் சென்றபோது, அவரின் ஏழு வயது மகள்,‘வாங்க மாமா’ என்று வாஞ்சையோடு அழைத்து உபசரித்தாள். என்னை அமர வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று ஒரு குவளையில் குடிக்க நீா் எடுத்து வந்து கொடுத்தாள்.அந்த சிறு பிள்ளையின் உபசரிப்பு என்னை நெகிழச் செய்தது. அதற்கு காரணம் அவள் மரியாதை தெரிந்த பிள்ளை என்பதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com