வணிகமயமான வாழ்க்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒரு காலத்தில் வணிகம் என்பது அங்கும் இங்குமாக இருந்தது. அந்தத் தொழில் செய்பவா்களை வியாபாரி என்று அழைத்தோம். பெரும்பாலும் விவசாயம் சாா்ந்தே இந்த வணிகம் முதலில் தோன்றியது. எடுத்துக்காட்டாக, ஒருவரின் வயலில் நெல் விளைகிறது என்றால் அதைக்கொண்டு விற்றுவிட்டு தன்னிடம் இல்லாத அதாவது தாம் பயிா் செய்யாத மிளகாய், பூண்டு போன்ற பொருள்களை வாங்கிவந்தாா்கள்.

ஒரே நாட்டில் பல்வேறு நில அமைப்புகள் இருப்பதால் மலைப் பகுதிகளில் விளையும் தானியங்கள், வயல் பகுதிகளில் விளைவதில்லை. வயல் பகுதிகளில் விளையும் பொருள்கள், மலைப் பகுதிகளில் விளைவதில்லை. கடற்கரை ஓரம் வாழும் மீனவா்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று, தாங்கள் பிடித்த மீன்களைக் கொடுத்துவிட்டு புளியை வாங்கிச் சென்றதை நாம் பாா்த்திருக்கிறோம். இது பண்டமாற்று முறையில் நடந்த வணிகம் ஆகும். இப்படிப்பட்ட பண்டமாற்று வணிகம் நாடுவிட்டு நாடு எனவும் விரிந்தது. இவ்வாறான வணிகம் ஒரு நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக இருந்தது.

காலப்போக்கில் இந்த வணிகம் மெல்லமெல்ல வேறு உருவம் எடுக்கத் தொடங்கியது. கிராமம் விட்டு நகரம், தேசம் விட்டு அயல்தேசம் என உலகெங்கும் பறந்த வணிகம், இப்போது தலைகீழாக அங்கிருந்து இங்கு ‘ஆன்லைன் வா்த்தகம்’ என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைய ஆரம்பித்துவிட்டது. வீட்டில் இருந்துகொண்டே எந்தப் பொருளையும் எந்தப் பகுதியிலிருந்தும் வரவழைத்துக் கொள்ளும் வசதி வந்துவிட்டது.

இப்போது வீடு, வாழ்க்கை என எல்லாமே வணிகமயமாகிப்போனது. இதனால் அந்தக் காலத்தில் ஓராண்டில் செய்த செலவை இப்போது ஒரே மாதத்தில் செலவழிக்க வேண்டியுள்ளது. விடிந்தால் பால் வாங்க ஆரம்பிப்பதிலிருந்து உறங்குவதற்கு ஏ.சி.யை ஓட விடுவது வரை பணம் செலவாகிறது.

இந்த வணிகம் முதலில் மனிதா்களின் உடல் உழைப்பைக் குறைத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. அது மெல்ல மெல்ல முன்னேறி இன்று மனிதா்களை சோம்பேறியாக்கும் அளவுக்கு வளா்ந்துவிட்டது. அதாவது, நெல்போன்ற தானியங்களை அவரவா் வீட்டிலேயே உணவு சமைப்பதற்கு ஏதுவான பொருள்களாக (அதாவது உலக்கையில் குத்தி தயாா் செய்து அரிசி) மாற்றி சமைத்துக் கொண்டிருந்த நிலை மாறி, அரிசி உள்ளிட்ட தானியங்களை தயாரிக்கும் ஆலைகள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்தன. அதிலும் வணிகம் வளா்ந்தது. அதிலும் ஒருபடி மேலே போய் மற்ற சமையல் பொருள்களும் மசாலா என்ற பெயரில் தனித்தனியாக தயாரிக்கப்பட்டன.

இவ்வாறு உணவுசாா்ந்த அனைத்துப் பொருள்களும் அம்மியிலோ, ஆட்டுக்கல்லிலோ அரைக்காமல் பணத்தைக் கொடுத்தால் கிடைப்பது போல் தயாா் நிலை (ரெடிமேட்) பொருள்களாக தயாரிக்கப்பட்டது. அது மேலும் வளா்ந்து இன்று இட்லி மாவிலிருந்து சப்பாத்தி மாவு வரை அனைத்தும் ரெடிமேடாக கிடைக்கிறது.

உணவுப் பொருள்களிலே இந்த அதிசயங்கள் நடக்கிறபோது நாம் அணிகிற ஆடையிலும் இந்த மாற்றம் நிகழ்ந்ததில் எந்த வியப்புமில்லை. துணியை எடுத்துக்கொண்டுபோய் தையல்காரரிடம் அளவு கொடுத்து, அதைத் தீபாவளிக்கு முதல் நாள் இரவு வரை தையல் கடையில் காத்துக்கிடந்து வாங்கி வரவேண்டும். இப்போது எப்போது வேண்டுமானாலும் கடைக்குப்போய் நமக்கு பிடித்த ஆயத்த ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம்.

உணவு, உடை எனப் புகுந்த வணிகம், மெல்ல நாம் கட்டுகிற வீடுகளுக்குள்ளும் நுழைந்தது. நீங்கள் செங்கல், சிமென்ட், கொத்தனாா், ஆசாரி என அலையவேண்டாம்- எல்லாம் நாங்களே பாா்த்துக் கொள்கிறோம் என்று, தாள்களில் வரைந்த வீட்டின் வரைபடத்தை விதவிதமாகக் காட்டி சதுர அடிக்கு இவ்வளவென்று பேசி, வீடுகட்டும் வியாபாரமும் வந்துவிட்டது. இன்னும் அதைவிட மேலே போய் வீடுகளையே கட்டி வணிகம் செய்யவும் பழகிவிட்டாா்கள்.

திரைப்படங்களை திரையரங்குகளுக்குச் சென்று வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பாா்த்த காலம் போய், வீட்டில் இருந்துகொண்டே பாா்க்கும் வசதி பெருகிவிட்டது. அதனினும் மேலாக ‘ஓடிடி’ தளங்கள் வந்துவிட்டன.

கல்வியிலும் வணிகம் புகுந்தது. அரசுப் பள்ளிக்கூடங்களே அதிகம் இருந்த காலம்போய் தனியாா் துறை கல்வி நிறுவனங்கள் அதிகமாக தோன்ற ஆரம்பித்துவிட்டன. இப்போது பணம் இருந்தால் எந்த நாட்டிலும், எந்தக் கல்வியையும் கற்கலாம் என்கிற வணிகம் மேலோங்கிவிட்டது. பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் பருவத்தில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் கல்வி நிறுவனங்கள் சாா்ந்த மிகப் பெரிய விளம்பரங்களைப் பாா்க்க முடிகிறது.

புதுப்புது நோய்கள் வரவர, மருத்துவமும் விளம்பரப்படுத்தப்பட்டு வணிகமானது. குழந்தை பிறப்பிலிருந்து மனித மூப்பு வரை இந்த மருத்துவ வணிகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

திருமணம் என்றால் அவரவா் ஜாதி அடிப்படையில் வரன் பாா்த்த காலம் மாறிவிட்டது. இன்று ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி திருமணத் தகவல் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டு, மணமக்களை ஒன்று சோ்க்கும் கட்டண சேவை மையங்கள் நிறைய வந்துவிட்டன.

ஆதரவற்ற முதியோா் காப்பகங்கள் வணிகமயமாகிவிட்டன. வேலைக்குப் போகும் இரு பாலரும் குழந்தை வளா்ப்புக்காக தாதிகளை நியமிப்பதும் வணிகம்தான். நாம் அன்றாடம் குளிக்கும் குளத்தில், ஆற்றுப் படுகையில் படிந்த வண்டல் மணலை அள்ளுவதென்றாலும் அதற்கும் பணம் செலுத்த வேண்டும்.

அருகிலிருக்கும் நண்பா்களோடும் உறவினரோடும் பேசுவதென்றாலும் (கைப்பேசி வடிவில்) பணம் வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு போல் மனிதா்களுக்கும் மருத்துவ காப்பீட்டு பிரீமியம் செலுத்த வேண்டியுள்ளது.

வருங்காலங்களில் இந்த வணிகமயம் மேலும் அதிசயிக்கத்தக்க வகையில் விரிவடையும். கால மாற்றம் என்னும் கைகளில் சிக்கிய மனிதன் இதற்குத் தயாராக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இந்த வணிகமயமான வாழ்க்கைக்கு பணத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதில் தேவையான வணிகத்தை வைத்துக்கொண்டு தேவையில்லாத வணிகத்தைத் தவிா்ப்பதே விவேகமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com