மதமாற்றம் தேசிய அபாயம்!

 டாக்டர் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட நமது அரசியல் சாசனத்தின் 25-ஆவது பிரிவு, மத சுதந்திரம் குறித்து விளக்குகிறது
மதமாற்றம் தேசிய அபாயம்!
Published on
Updated on
3 min read

 டாக்டர் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட நமது அரசியல் சாசனத்தின் 25-ஆவது பிரிவு, மத சுதந்திரம் குறித்து விளக்குகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தனது மனசாட்சிப்படி செயல்படவும், விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், அதை சமூக ஒழுக்கம் பாதிக்காத வகையில் பிரசாரம் செய்யவும் உரிமை உள்ளது. அதேபோல, மதப் பிரிவுகள் தங்கள் சுய விவகாரங்களை நிர்வகித்துக் கொள்ளும் உரிமையை 26-ஆவது பிரிவு வழங்குகிறது.
 இந்த அரசியல் சாசன உரிமையை தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த லாவண்யாவிடமிருந்து தட்டிப் பறித்துள்ளது, அவர் படித்த கிறிஸ்தவக் கல்வி நிறுவனம் என்பதுதான் குற்றச்சாட்டு. அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், இந்தப் பிரச்னையில் பல உண்மைகளை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான்.
 ""விடியோவில் பதிவு செய்யப்பட்ட மரணத்துக்கு முந்தைய அவரது வாக்குமூலம், மதமாற்றக் காரணத்துக்காக விடுதிக் காப்பாளரால் அவர் துன்புறுத்தப்பட்டிருப்பதை தெளிவாகக் கூறுகிறது. முன்கூட்டியே முடிவுகளைத் தீர்மானிக்கும் தமிழ்நாட்டு காட்சி ஊடகங்கள், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயிடமே சிறிதும் இரக்கமின்றி குறுக்கு விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றன'' உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கில்லை.
 முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்பதால்தான் உயர்நீதிமன்றம் இப்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. காவல்துறை இந்த வழக்கைக் கையாண்ட முறையும், லாவண்யா மரணம் தொடர்பாக நடத்தப்படும் திசை திருப்பும் முயற்சிகளும் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. அரசியல் சாசனத்தைக் காப்பதாக உறுதி எடுத்தவர்கள், லாவண்யாவின் மரணத்துக்கு உரிய விசாரணை நடத்துவதற்கு முனைப்புடன் செயல்படவில்லை என்பதுதான் உயர்நீதிமன்ற உத்தரவு தெரிவிக்கும் செய்தி.
 உயர்நீதிமன்ற உத்தரவில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, நீதிபதிக்கே சாயம் பூச முற்பட்டிருப்பது அதைவிட வேதனை. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் கேரளத்தில் அமைந்த முதலாவது கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவே இருந்தவர். அதற்காக அவரது தீர்ப்புகளை கட்சிப் பின்னணியுடன் இணைப்பது முட்டாள்தனம்.
 இந்த இடத்தில் ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனர் மறைந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் கருத்து எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் மதமாற்றம் ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு வன்முறை என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். மதம் மாற்ற விரும்புபவர் தனது சொற்களாலோ, நடத்தையாலோ, ஒருவருடைய மத நம்பிக்கைகளையோ, மூதாதையரையோ, தெய்வங்களையோ இழிவுபடுத்துவது வன்முறையே ஆகும். ஒருவரை மதம் மாற்றினால், அவர் தனது குடும்பத்திலிருந்தும், தான் சார்ந்த சமூகத்திலிருந்தும், தனது பண்பாட்டு வேர்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டு விடுகிறார்.
 ஒட்டுமொத்த உலகிற்கும் உயரிய மனிதகுல மதிப்பீடுகளை அளித்த தர்மத்தின் மையமாக இந்தியா இருந்து வருகிறது. "உன்னதமான கருத்துகள் எங்கிருந்தாலும் வரட்டும்'' என்று நமது உபநிடதங்கள் கூறுகின்றன. வீட்டின் கதவுகளையும் சாளரங்களையும் அடைத்துக்கொண்டு வாழ நாம் விரும்பவில்லை.
 ராமகிருஷ்ண மடத்தின் நிறுவனரான சுவாமி விவேகானந்தர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மிக உருக்கமாக விவரிப்பார். உலகம் முழுவதும் உள்ள தங்கள் மடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை அவர்தான் அறிமுகப்படுத்தினார்.
 அதேசமயம் மதம் மாற்றத் துடிக்கும் கிறிஸ்தவர்களைக் கண்ட அவர், ""நீங்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல. நீங்கள் கிறிஸ்துவிடம் மனம் திரும்புங்கள்'' என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார்.
 ஹிந்துக்கள் மீது திணிக்கப்படும் கிறிஸ்தவ மதமாற்றத்தை மகாத்மா காந்தி கடுமையாகக் கண்டித்திருக்கிறார். "கிறிஸ்தவர்கள் அல்லாதோரிடம் உங்கள் கடவுள் பாரபட்சம் காட்டுவாரா? பிறகு ஏன் அவர்கள் மதம் மாற வேண்டும்? அவர்கள் அவரவர் மதத்தில் இருந்தால் நீங்கள் அவர்களுக்கு சேவை செய்ய மாட்டீர்களா?'' என்று கிறிஸ்தவ போதகர்களிடம் அவர் சவால் விடுத்தார்.
 நேருவின் மகளான இந்திரா வேற்று மதத்தைச் சார்ந்த பெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்டபோது, ""திருமணத்துக்காக மதம் மாறுவதை நான் ஆதரிக்கவில்லை. மதம் என்பது மாற்றி உடுத்தும் ஆடை அல்ல'' என்றார் காந்தி.
 மகரிஷி அரவிந்தரும் மதமாற்றத்துக்கு எதிரானவர். "ஒரு மனிதனுக்கு மத நம்பிக்கை இல்லை என்றால் அவன் தாராளமாக எதற்காக வேண்டுமானாலும் மதம் மாறட்டும்; மத நம்பிக்கை இருப்பவர் மதம் மாற முடியாது'' என்பார் அவர்.
 கேரளத்தில் சமூக சீர்திருத்தத் துறவி சுவாமி நாராயணகுரு, தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பியது மட்டுமே பேசப்படுகிறது. அவர் மதமாற்றத்திற்கும் எதிராகப் போராடியவர். தனது ஈழவ சமுதாயத்தினர் மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதும்கூட அவரது ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன அமைப்பின் நோக்கம். அதனால்தான் அவர் சொன்னார் - "மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் நன்றாக வேண்டும்'' (மதம் ஏதாயாலும் மனிஷ்யன் நன்னாகணும்).
 இந்த இடத்தில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த மறைந்த பரமாச்சாரியார் குறித்த நினைவு ஒன்றைப் பகிர விரும்புகிறேன். பிரிட்டனைச் சார்ந்த கிறிஸ்தவ தம்பதி காஞ்சி மடத்தில் தங்கி வேதாந்தம் பயின்றனர். ஓராண்டுக்குப் பிறகு அவர்கள் ஹிந்து மதத்துக்கு மாற விரும்பி பரமாச்சாரியாரிடம் கூறியபோது, ""வேதாந்தம் உங்களை கவர்ந்திருக்குமானால், அதை உங்கள் வாழ்வில் கடைப்பிடியுங்கள். அப்போது நீங்கள் இன்னமும் மிகச் சிறந்த கிறிஸ்தவராகலாம்'' என்று கூறி மதமாற்றத்தை நிராகரித்தார்.
 இதுவே ஹிந்து தர்மத்தின் சிறப்பு. அதனால்தான் தர்மம் என்பதை முழுமையாக நம்மால் மொழிபெயர்க்க முடியவில்லை. தர்மம் என்பது தற்போதைய மதம் என்ற பொருளில் பயன்படுத்தும் சொல் அல்ல.
 நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது மதமாற்றத்துக்கு எதிரான மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தேன். மதமாற்றம் ஒரு திட்டமிட்ட சதித்திட்டம் என்றும், வெளிநாட்டினரால் திறம்படக் கையாளப்படும் ஓர் அரசியல் கருவி என்றும் அதில் குறிப்பிட்டேன். ஜம்மு - காஷ்மீரிலிருந்து ஹிந்து பண்டிட்டுகள் எவ்வாறு விரட்டி அடிக்கப்பட்டனர் என்பதை அப்போது உதாரணமாகக் காட்டினேன். இந்தியாவில் ஹிந்து பெரும்பான்மை இருக்கும் வரையே இங்கு ஜனநாயகமும் சகிப்புத்தன்மையும் அரசியல் சட்டமும் இருக்கும் என்றேன்.
 உலகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையான மத நம்பிக்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் வாய்ப்பளிக்கும் நாடாக இந்தியா உள்ளது. பிற மதத்தினரை வேட்டையாடுவதை இந்தியா கனவிலும் கருதாது. உலகில் பிற மதத்தினரால் விரட்டப்பட்ட பார்ஸிகளுக்கும் யூதர்களுக்கும் புகலிடம் கொடுத்த நாடு இந்தியா. அவர்கள் இந்தியாவில் பாலோடு சர்க்கரையாகக் கலந்துவிட்டார்கள்.
 உலகம் முழுவதும் 86-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நாடுகளால் வேட்டையாடப்பட்ட யூதர்களுக்கு புகலிடமாக அமைந்த ஒரே நாடு இந்தியா. அவர்கள் உலகிற்கு அளித்த பங்களிப்பு மிகச் சிறப்பானது. அவர்கள் இதுவரை இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்தைக் கேட்கவில்லை.
 அதேசமயம், சில கிறிஸ்தவ மதபோதகர்கள், ஹிந்துக்கள் தங்கள் மூதாதையரையும் பண்பாட்டையும் பண்டிகைகளையும் மறக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஹிந்துக் கடவுள்களை அவர்கள் எந்த அச்சமும் இன்றி நிந்திக்கிறார்கள்.
 பல கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ஹிந்து பழக்க வழக்கங்கள் இழிவாகப் பேசப்படுவதற்கான பல ஆதாரங்கள் இருக்கின்றன. பல கிறிஸ்தவப் பள்ளிகளில் மாணவிகள் குங்குமப் பொட்டு வைப்பதும் தலையில் பூச்சூடுவதும், கைகளில் வளையல் அணிவதும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இது ஒன்றும் ரகசியம் அல்ல.
 தாமாக விரும்பி மதம் மாறுவது இங்கு பிரச்னையே அல்ல. ஆனால், ஒருவரை வற்புறுத்தி மதம் மாற்றுவது என்பது கடவுளுக்கே எதிரானது. அந்தக் குற்றத்தை நிகழ்த்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்.
 பிரிட்டீஷார் மதமாற்றத்தை ஓர் அரசியல் கருவியாகவே பயன்படுத்தினர். வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பிரிவினைவாதக் குழுக்கள் அனைத்தும் கிறிஸ்தவப் பின்புலம் கொண்டிருப்பதைக் காண முடியும். எனவேதான் பெளத்தர்கள் அதிகமுள்ள லடாக்கில் மதமாற்றத்துக்கு எதிராக பெளத்தர்களும் குரல் கொடுக்கிறார்கள்.
 மதமாற்றம் என்பது இதயம் தொடர்பானது. இயேசு கிறிஸ்து எவ்வாறு தனது அடியார்களிடம் அன்பைப் பரப்புகிறார் என்பதை நாம் காண்கிறோம். அதேபோல புத்தர் கருணையையும் இரக்கத்தையும் சமத்துவத்தையும் உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறார். இவை வாள்முனையில் நடத்தப்படுபவையும் அல்ல, வற்புறுத்தல்களும் அல்ல.
 பாரதத்தின் அடிப்படை தார்மிக விழுமியங்களின் மனசாட்சியை லாவண்யா மரணம் உலுக்கி இருக்கிறது. இது அமெரிக்காவின் பூர்வகுடியினரான செவ்விந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய கொலம்பஸின் ஸ்பானிஷ் படை செய்த கொடூரத்தை நினைவுபடுத்துகிறது. கிறிஸ்தவத்தை ஏற்காதவர்கள் அங்கு கொல்லப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டனர். மிஞ்சியவர்கள் மதம் மாற்றப்பட்டனர். சூனியக்காரி என்று குற்றம் சாட்டப்பட்டு ஜோன் ஆஃப் ஆர்க் எரிக்கப்பட்டதும் மதமாற்றத்தின் கொடிய வடுவே ஆகும்.
 கிறிஸ்து என்றால் அன்பு மட்டுமே; மதம் மாற்றும் காட்டுமிராண்டித்தனமல்ல.
 மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தமிழகத்தில் இந்த விஷயத்தில் அமைதி காப்பது வியப்பாக இருக்கிறது. வட மாநிலங்களிலும் கூட லாவண்யாவுக்கு ஆதரவாகப் போராடுகின்றனர். இங்கோ பாஜக தவிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை.
 இதே சம்பவம் வேறு மாதிரியாக இருந்திருந்தால்? ஹிந்துக்களால் நடத்தப்படும் பள்ளியில் கிறிஸ்தவ மாணவி ஒருவர் மரணித்திருந்தால்? லாவண்யா பிரச்னை குறித்து விவாதிப்பவர்கள் தங்களது மனசாட்சியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளட்டும்.
 
 கட்டுரையாளர்:
 மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com