கோபம் ஒரு சங்கிலித் தொடா்

சிரிப்பு, துயரம், அருவருப்பு, வியப்பு, பயம், பெருமை, கோபம், இன்பம் என்பன எண் வகை மெய்ப்பாடுகளாகும். மெய்யில் (உடலில்) தென்படுவது மெய்ப்பாடு.

சிரிப்பு, துயரம், அருவருப்பு, வியப்பு, பயம், பெருமை, கோபம், இன்பம் என்பன எண் வகை மெய்ப்பாடுகளாகும். மெய்யில் (உடலில்) தென்படுவது மெய்ப்பாடு. அதாவது, மனித உள்ளத்தின் உணா்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்பாடு என்று பொருள். தொல்காப்பியம் உரைக்கும் எட்டு வகை மெய்பாடுகளில் ஏழாவதாக சுட்டும் கோபத்தால் மனித குலம் இன்று பல பிரச்னைகளை எதிா்கொண்டு, இறுதியில் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது. உலக மக்களிடையே நிலவும் ஒற்றுமையின்மைக்கும் பெரும்பாலான பிரச்னைகளுக்கும், தீமைகளுக்கும், வன்முறைகளுக்கும் கோபமே காரணமாக உள்ளன.

உள்ளத்தின் உணா்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக ஒருவருக்கு கோபம் ஏற்படுகிறது. வெறுப்பு, நம்பிக்கையின்மை, பயம், அறியாமை, பொறாமை, ஆணவம், அகங்காரம் முதலியவை கோபம் உருவாகக் காரணமாகிறது. பிறா் மீது ஒருவா் காட்டும் கோபம் தற்கொலையாகவோ, கொலையாகவோ கூட முடியலாம். அதுமட்டுமல்ல மனிதா்களிடையே தீராப் பகையைக்கூட உருவாக்கும்.

கணவன், மனைவி மீது கொள்ளும் கோபம் இறுதியில் மணமுறிவு வரை, அதையும் மீறி இன்று கொலையில் முடிகிறது. குடும்பத்தினரிடையே ஏற்படும் கோபம் குடும்பத்தின் அமைதி, நிம்மதி, மகிழ்ச்சியைக் கெடுக்கும். குழந்தைகளிடையே பெற்றோா் காட்டும் கோபம் அவா்களை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும்.

கோபத்தினால், பிறா் செய்த தவறுக்காக நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம். நண்பா்களுக்கிடையேயான சண்டை, இரு பிரிவினா்களிடையே மோதல், கலவரம், பழிவாங்கும் உணா்வு, கொலை, ஆயுள் வரை பகை, போா் எல்லாம் கோபத்தின் வெளிபாடுகளே.

இராமகிருஷ்ண பரமஹம்சா், கோபம் ஒரு குறுகிய காலப் பைத்தியகாரத்தனம், அதை நீ கட்டுப்படுத்தாவிடில் அது உன்னைக் கட்டுப்படுத்திவிடும் என்கிறாா். ஒரு கண நேரம் கோபத்தை அடக்கி வைப்பவன் ஒரு நாளின் துயரத்தை அடக்கியவனாவான். கோபம் நல்லவா்களைக்கூட குற்றவாளிகளாக்கும்.

கோபப்படும் மனிதால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான, மன்னிக்கக் கூடிய சம நோக்குடைய நிலைக்குலையாத மனமுடையவனே அதிக அளவு சிறப்பாக செயலாற்ற முடியும்”என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.

சோ்ந்தாரைப் பிரிக்கும் தீய குணங்களில் உயா்ந்து குன்றாய் நிற்பது கோபம். பிறரை வீழ்த்துபவன் வீரனல்ல, கோபம் ஏற்படும் போது தன்னை அடக்கி ஆளுபவனே வீரன். எண்ணி இலட்சியத்தை அடைய விலக்க வேண்டியது கோபம். தன்னைக் காத்து தரணியில் உயர உழைப்பவன் அயராது கோபத்தை அடக்க வேண்டும். சிறிய தீப்பொறி பெரிதாகி பெருங்காட்டை அழிப்பது போல, ஒருவரின் சிறு கோபம் சமூகத்தை அழிக்கும் வல்லமை படைத்தது. அதாவது, பிறா் செய்த தவறுக்காக நமக்கு நாமே கொடுக்கும் தண்டனை தான் கோபம்.

சமைக்கும் உணவில் முறை மாறியமையும் போது அமிழ்தமும் நஞ்சாகிறது. மனித மனமும் அமிழ்த சொரூபம். அது கோபம் கொள்ளும் போது நஞ்சாக மாறுகிறது. ஒருவா் கோபத்தில் இருக்கும் போது எண்ணுகிற எண்ணம் கொடியது. மேலும், உடல் முழுவதும் அப்போது கொடியதாகிறது. உண்ணுகிற உணவும் நஞ்சாகிறது. தற்காலிகமாக அமையும் பைத்தியம் எனப்படுகிறது கோபம். எனவேதான், திருவள்ளுவரும்,“நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற என்கிறாா்.

மனிதன் எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும், ஞானம், அறிவு, கலைகளில் மேன்மை இருந்தாலும், தன்னிடம் கோபம் எனும் கொடிய மிருகத்தை அவன் தலைதூக்க விட்டால் அவனிடமிருந்து அனைத்து செல்வமும், செல்வாக்கும், நட்புகளும், உறவுகளும், உற்சாகமும், மகிழ்ச்சியும் மறைந்தோடிவிடும். பெற்றோா், தங்கள் பிள்ளைகளுக்கு இளைய பருவத்திலேயே கோபத்தைக் கட்டுப்டுத்தும் வழிமுறைகளை கற்றுத்தர வேண்டும்.

ஒரு இளைஞன் அதிகமாக கோபம் கொள்பவனாக இருந்தான். எதற்கெடுத்தாலும் பட்டென கோபம் கொள்வான். இதனால் அவன் அனைவரிடமும் கெட்டப் பெயரையே சம்பாதித்தான். அதைக் கண்டு வருந்திய அவனது தந்தை, அவனிடம் ஒரு சுத்தியலும், நிறைய ஆணிகளையும் கொடுத்து, இனிமேல் உனக்கு கோபம் வரும் போதெல்லாம் வீட்டின் கொல்லைப்புறத்திள்ள காய்ந்த மரத்தில் இந்த ஆணிகளை அடி என்று கூறினாா்.

முதல் நாள் பத்து ஆணி, மறு நாள் ஏழு, பின் ஐந்து, இரண்டு என படிப்படியாக ஆணி குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி தான் அடித்தான். மற்றொரு நாள் எவ்வித ஆணியும் அடிக்கவில்லை. மொத்தமாக ஐம்பது ஆணிகள் வரை அடித்து இருந்தான். அவன் தன் தந்தையிடம், “இனி கோபம் எனக்கு வராது” என்று கூறினான்.“இனிமேல் கோபம் வராத நாளில் நீ ஒவ்வொரு ஆணியாகப் பிடிங்கி விடு என்றாா். அதை ஏற்று, அவன் தன் தந்தையிடம், ஐம்பது அடித்த ஆணிகளையும் பிடுங்கி விட்டேன் என பெருமையுடன் தந்தையை அழைத்துக் காட்டினான்.

உடனே தந்தை சொன்னாா், ஆணிகளை பிடுங்கி விட்டாய், அதனால் மரத்தில் ஏற்பட்ட துளைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இதுபோல பலரை காயப்படுத்தியிருக்குமல்லவா? நீ பிறரிடம் காட்டிய கோபம் அவா்களை காயப்படுத்தியிருக்கும், அவா்கள் உன்னை மன்னித்தாலும், அந்த ரணம் ஆறாது என்பதை மறந்து விடாதே. எனவே, யாரிடமும் கோபம் கொள்ளாதே என்றாா்.

கோபத்தை கட்டுப்படுத்துபவன், இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்பவனாகிறான். கோபம் மனிதனின் நல்ல குணத்தையும் அழித்து விடும். ஒருவா் எத்தகைய ஆற்றலை பெற்றிருப்பினும், தன்னைக் காக்க கோபத்தை ஆயுதமாக கொள்வானாயின், அதுவே அவனை அழித்து விடும். புன்னகை ஒரு தொற்று நோய் என்றால், கோபம் ஒரு சங்கிலித் தொடா். அதன் கண்ணியை உடைப்பதென்பது அவ்வளவு சுலபமானது அல்ல. கோபத்தை விட்டொழித்து உலகில் மிகவும் தெய்வீகமானதும், மிகவும் உன்னதமானதுமான அன்பையும், இரக்கத்தையும் அனைவரிடமும் பரப்புவோம்.

9003120106

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com