மலைகள் மைதானங்களல்ல


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் தம்முடைய நண்பர்களுடன் டிரெக்கிங் எனப்படும் மலையேறும் சாகசத்தில் ஈடுபட்டபோது, கால் தவறி விழுந்து பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்ட பாபு என்ற இளைஞரை ராணுவத்தினரின் உதவியுடன் மீட்டுள்ளனர். அவ்வாறு மீட்பதற்கு இரண்டு நாட்கள் ஆயின.
இயற்கை வளம் நிறைந்த சமதளங்களிலும், குறைந்த உயரமுள்ள மலைப்பாதைகளிலும் ஒரு சில நாட்கள் பயணிக்கும் நடைப் பயணத்தை ஆங்கிலத்தில் "ஹைகிங்' என்று கூறுகின்றனர். இது ஆபத்து ஏதுமற்ற குறுகிய காலப் பயணமாகும்.
இதற்கு அடுத்தபடியாக மலைப்பாதைகளில் மட்டுமின்றி சிறிய குன்றுகள், செங்குத்தான பாறைகள் போன்றவற்றில் குறைந்த உபகரணங்களுடன் ஏறி இறங்கும் மலையேற்ற சாகசமே "டிரெக்கிங்' எனப்படுகின்றது.
இவ்வகையான மலையேற்றத்திற்கும் தகுந்த அனுபவமுள்ள பயிற்சியாளரின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகும். சற்றே நீண்ட நாட்கள் பிடிக்கும் இத்தகைய மலையேற்றத்திற்குத் தேவையான உணவு, மருந்துப் பொருட்கள், உடைகள், படுக்கை, கூடாரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் அவசியம். பயிற்சியாளர் உடனிருப்பது மிக மிக அவசியம்.
இந்த வகையான மலையேற்றத்தில் நீண்டகாலப் பயிற்சி பெற்றவர்களே இமயமலை உள்ளிட்ட பல்வேறு உயரமான மலைகளின் சிகரங்களில் ஏறுவதற்குத் தகுதி பெற முடியும். இதை "மவுண்டனீரிங்' என்று அழைக்கின்றனர்.
பெருமலைச் சிகரங்களில் ஏறி இறங்குவதற்கு டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்தைக் காட்டிலும் பல மடங்கு பயிற்சியும் உபகரணங்களும் தேவைப் படுகின்றன.
எப்பொழுதும் சரியக்கூடிய வாய்ப்புள்ள பனிப்படலங்களில் சர்வ ஜாக்கிரதையாகக் கால்பதித்து ஏற வேண்டும். உயரம் கூடக் கூடக் கடுமையான குளிர், குறைவான பிராணவாயு ஆகிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். பிடிமானங்கள் சரியாக இல்லாத உயரமான மலைச்சரிவுகளில் ஏறுபவர்களின் உடல் எடை கூடி விட்டது போன்ற உணர்வும் ஏற்படுமாம்.
ஒருவழியாகச் சமாளித்து மலைச் சிகரத்தை அடைந்து விட்டால், பின்னர் கீழே இறங்குவது முன்பை விடச் சவால் மிகுந்ததாக இருக்கும். கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு வேறு உதாரணங்களைத் தேட வேண்டியதில்லை.
கஞ்சன் ஜங்கா, எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இமயமலைச் சிகரங்களில் ஏறுபவர்களில் முப்பது சதவீதம் பேர் வரையில் இறப்பைச் சந்திக்க நேர்வதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்ற நூற்றாண்டு தொடங்கி இதுவரையிலும் முன்னூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இமயமலைச் சிகரங்களை எட்டும் முயற்சியில் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது.
கடும் பனிப்பொழிவு, பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் மலையேற்றத்தின்போது இறக்கின்ற பலருடைய உடல்களை மீட்க முடியாமலே போய்விடுகிறது. பெரிய மலைச் சிகரங்களில் ஏறுபவர்கள் இவ்விதம் மீட்கப்படாதவர்களின் உடல்களை ஆங்காங்கே மலைச்சரிவுகளில் பார்க்க நேரிடுவதும் உண்டு. இவ்வளவு பேராபத்துகள் நிறைந்த மலையேற்றத்தையும் ஒரு சாகசமாக நினைத்து மேற்கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
உயிருடன் மீண்டால், எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டவர், கஞ்சன் ஜங்காவை வெற்றி கொண்டவர் என்ற செய்தியும் புகைப்படமும் ஊடகங்களில் வெளிவரலாம். இந்திய அளவில் லிம்கா சாதனையாளர்கள் பட்டியலிலும், உலக அளவில் கின்னஸ் பட்டியலிலும் இடம் பெறலாம்.
மலை ஏறும் வீரர்களின் சாதனைக்கு அங்கீகாரமாக இந்திய அரசு ஆண்டு தோறும் பரிசளித்து வருகிறது.
எட்மண்டு ஹில்லாரி என்ற நியூசிலாந்துக்காரருடன் இணைந்து முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த டென்ஸிங் என்ற மலையேற்ற வீரரின் நினைவாக நமது இந்திய அரசால் வழங்கப்படும் சாகசங்களுக்கான விருது இதுவரை எண்பதுக்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி வேறு பெரிய பரிசுகளோ கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைப்பது போன்ற கதாநாயக அந்தஸ்தோ இந்த மலையேற்ற வீரர்களுக்குக் கிடைப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், உலகின் எந்த சாகச விளையாட்டுகளைவிட மிகவும் அதிகமான ஆபத்து நிறைந்த மலையேற்றம் என்னும் இந்தச் சாகசத்தில் ஈடுபடப் பலரும் துணிவுடன் முன்வருவது விந்தையாகவே இருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டவர்களையே எடுத்துக் கொள்வோம். இவர்கள் ஒன்றும் இமயமலை போன்ற வழுக்கும் பனிப்பாறைகளைக் கொண்ட மிக உயரமான மலையில் ஏறவில்லை. சில நூறு மீட்டர்கள் உயரம் கொண்ட செங்குத்தான பாறையில் மூன்று பேர் ஏறினார்கள். அவர்களில் ஒருவரான பாபு என்பவர் கண நேர கவனச் சிதறலால் கீழே விழுந்தாலும், பாறை இடுக்கு ஒன்றில் சிக்கிக் கொண்டு உயிர் பிழைத்திருக்கிறார்.
ட்ரோன் உள்ளிட்ட நவீன உபகரணங்களின் மூலம் அவர் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டு காப்பாற்றவே இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.
கடந்த 2018-ஆம் வருடம் தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலையில் இதே போன்று மலையேறச் சென்ற டிரெக்கிங் குழுவினரில் பலரும் எதிர்பாராத காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். அக்குழுவினர் வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் வந்ததாக அப்போது கூறப்பட்டது.
மலைப்பிரதேசங்கள் இயற்கை நமக்கு அளித்த கொடையே அன்றி, விளையாட்டு மைதானங்களல்ல. மலைப்பிரதேசங்களுக்குச் சுற்றுலாவாகச் சென்று இயற்கையை ரசிப்பதே முறையானதாகும். மாறாக, தங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சாகசங்களில் ஈடுபடுவது சரிதானா என்று இக்கால இளைஞர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இத்தனை துணிச்சலும், இளைஞர்கள் மனது வைத்தால் வேறு பல விளையாட்டுகளில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டு ஒலிம்பிக் போன்ற களங்களில் பதக்கங்களைப் பெற்று நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கலாமே?
சற்றே சிந்தியுங்கள் இளைஞர்களே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...