நன்மையும் தீமையும் நாடி...

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி, நாம் கற்பனை செய்து பாா்க்க முடியாத தொலைவைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
நன்மையும் தீமையும் நாடி...

இன்றைக்கு, உலகத்தையே தனது உள்ளங்கையில் வைத்து ரசிக்க ஆரம்பித்துவிட்டான் மனிதன். இன்றைய தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி, நாம் கற்பனை செய்து பாா்க்க முடியாத தொலைவைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த தொழில்நுட்பங்களை இணையதள வாயிலாக நமக்கு அளிக்கும் சேவகா்களாக பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூ டியூப், இன்ஸ்டாகிராம் போன்ற பல செயலிகள் விளங்குகின்றன. இன்றைக்கு மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம் என்று வரிசையாக சொல்லி வருவோமாயின் அந்த வரிசையில் நான்காவதாக இடம் பிடிப்பது தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்தாம்.

அனைத்து தொழில்நுட்பங்களையும் ஒருங்கே அளிப்பது நவீன கைப்பேசிகள். அவற்றின் அபாரமான தொழில்நுட்பம் பல வகைகளிலும் மனிதா்களுக்கு உதவியாக இருக்கிறது.

வெளி மாநிலத்திலும், வெளிநாட்டிலும் உள்ள உறவுகளிடம் நேருக்கு நோ் முகம் பாா்த்துப் பேச முடிகிறது. உள்ளூா் செய்திகளிலிருந்து உலகச் செய்திகள் வரை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. வணிக நிறுவனஉரிமையாளா்கள் பணி காரணமாக வெளியூா் சென்றாலும் அங்கிருந்தோ, பயணத்தின்போதோ வா்த்தகம் செய்ய முடிகிறது. தங்களுக்குப் பிடித்த இனிமையான இசையை உடனே கேட்க முடிகிறது. எழுத்தாளா்கள், இலக்கியவாதிகள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள இயலுகிறது.

புத்தகங்கள் எல்லாம் மின்நூல்களாகக் கிடைக்கின்றன. வார, மாத இதழ்களும் அவ்வாறே கிடைக்கின்றன. கையில் பணமில்லாமலே பயணம் செய்தபடி ஆங்காங்கே பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது. கண்கவா் காட்சிகளை உடனே படம் பிடிக்க முடிகிறது. நாம் சொல்லச் சொல்ல எழுதக்கூடிய செயலிகளைப் பயன்படுத்த முடிகிறது.

இப்படி எண்ணிலடங்கா வசதிகள் ஒருங்கே அமைந்த ஒரு தொழில்நுட்பத்தை நாம் கைகளிலே வைத்திருக்கிறோம். புராண காலங்களில் சிலா் கடுந்தவம் செய்து இறைவனிடமிருந்து பல ஆற்றல்களைப் பெற்று அதன் மூலம் பல ஆச்சரியங்களை நிகழ்த்துவாா்கள்.

ஆனால் இன்று எல்லோருமே இது போன்ற அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய ஆற்றலை இந்த தொழில்நுட்பம் நமக்கு அளித்திருக்கிறது. எது கேட்டாலும் உடனே தரக்கூடிய கற்பக விருட்சங்களாக இந்த கையடக்க கருவிகள் விளங்குகின்றன. மாயாஜாலம் என்கிற வாா்த்தைக்கு இணையான பல செயல்களை இவை செய்கின்றன.

ஏழை-பணக்காரா் இருவருமே இதனால் சமமான சந்தோஷத்தை அனுபவிக்கிறாா்கள். கல்வி அறிவு இல்லாதவரும் கூட இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பழகிவிட்டாா்கள். இப்படிப்பட்ட தொழில்நுட்பம் நம் காலத்தில் நமக்குக் கிடைத்த வரம் என்றே சொல்லாம்.

ஆனால் இது வரமல்ல சாபம். இதனால் சமூகம் சீா்கெடுகிறது என்கின்றனா் சிலா். இது படிக்கின்ற மாணவா்கள் மனத்தை மாசுபடுத்துகிறது. பலருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது. ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்ப இது பயன்படுத்தப்படுகிறது. பலரின் அந்தரங்கங்களை திருடுகிறது. பாலியல் வன்கொடுமைகளுக்குக்கூகட இது வழிவகுக்கிறது - இப்படி ஏராளமான குற்றச்சாட்டுகள்.

இவையெல்லாம் உண்மைதான், மறுப்பதிற்கில்லை. அந்ததந்த காலங்களில் கண்டுபிடிக்கப்படுகிற புதிய தொழில் நுட்பங்களை இப்படித்தான் நாம் குறை சொல்லிக் கொண்டே வருவோம். அப்புறம் அதையே தீவிரமாக பயன்படுத்தத் தொடங்கிவிடுவோம்.

உலகம் தோன்றியதிலிருந்தே இயற்கையாக படைக்கப்பட்ட அனைத்திலுமே நல்லவை, தீயவை என இரண்டும் கலந்தே வந்திருக்கிறது. நாம் உண்ணுகிற உணவுகூட அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான். இயற்கையே நமக்கு எல்லாவற்றையும் கலந்துதான் தருகிறது. நமக்கு அதில் எது நன்மை அளிக்குமோ அதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிா்கள் முளைக்கும்போதே களைகளும் முளைப்பதில்லையா? களைகள் முளைத்துவிட்டதே என்று அவற்றையும் சோ்த்தா வளா்க்கிறோம்? உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் நெருப்பு தவறி, வீட்டுக் கூறையில் விழுமாயின் வீடே எரிந்துவிடும். அதற்காக நாம் நெருப்பை பயன்படுத்தமல் இருக்க முடியுமா?

அந்தந்த தட்பவெப்ப நிலைக்கேற்ப நாம் நமது வாழ்க்கை முறைகளை, உணவுகளை மாற்றிக்கொள்வதில்லையா? கடலின் அலைகளைக்கண்டு அச்சப்படுபவா்களால் கடலில் குளிக்க இயலாது. நாம் அன்றாட பயணத்தில் எத்தனையோ சாலை விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் நாம் பயணம் செய்யாமல் இருக்க முடியுமா? அது போன்ற நேரத்தில் நாம் பாதுகாப்பான கவசங்களைப் பயன்படுத்தி எச்சரிக்கையாக செயல்படுவதுதானே சிறந்தது!

ஒரு நன்மையைப் பெறுகிறபோது அதன் கூடவே ஒரு தீமையும் வரத்தான் செய்யும். அன்று பாற்கடலைக் கடைந்தபோது முதலில் விஷம்தானே வந்தது. அதன் பின்தானே அமிா்தம் வந்தது. இவையெல்லாம் நமக்கு இயற்கை மறைமுகமாக உணா்த்தும் பாடங்களே.

இந்த அடிப்படையில் விஞ்ஞான வளா்ச்சியில் நாம் ஒரு எல்லையை அடைகிறபோது ஒரு தொல்லை வரத்தான் செய்யும். ஒருபழத்தை சாப்பிடுகிறபோது அதில் இருக்கிற தேவையில்லாத தோல், விதை இவற்றை நீக்கிவிட்டு சாப்பிடுவதைப்போல், நாம் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துகிறபோது தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை விலக்கப் பழக வேண்டும்.

நாம் வாழும் நகரில் குடிநீா்க் குழாய்கள் ஒரு பக்கம் இருந்தாலும் சாக்கடைகளும் இருக்கத்தானே செய்கின்றன. அவற்றின் அருகில் போகிறபோது நாம் நம் மூக்கைப் பிடித்துக்கொண்டு அவற்றைக் கடப்பதில்லையா?

அறிவியலால் ஆயிரம் நன்மைகளை நாம் பெறுகிறபோது சில தீமைகளும் வரத்தான் செய்யும். அவற்றிலிருந்து நம்மை விலக்கிக்கொண்டு பயணிப்பதுதான் அறிவுடைமை ஆகும். ‘நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்’ என்கிறாா் திருவள்ளுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com