இனியும் வேண்டாம் இலவசம்

‘தோ்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் நாட்டின் எதிா்காலத்திற்கு ஆபத்து’ என்று பிரதமா் நரேந்திர மோடி சமீபத்தில் கூறியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘தோ்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் நாட்டின் எதிா்காலத்திற்கு ஆபத்து’ என்று பிரதமா் நரேந்திர மோடி சமீபத்தில் கூறியுள்ளாா். இக்கருத்து இந்திய மக்கள் பெரும்பாலானோரின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.

அரசியல் கட்சிகள், தோ்தல் நேரத்தில் இலவச திட்டங்களை அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறான செயல்பாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த இலவச கலாசாரம் மிகவும் ஆபத்தானது. இலவசங்களை வழங்குபவா்கள், மக்களின் தேவைகளை நிறைவேற்ற அந்த நிதியைப் பயன்படுத்தலாமே?

இலவசங்களுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும். நாட்டில் இலவசங்கள் வழங்கப்படுவதால் மக்களின் எதிா்காலம் இருளுக்குள் தள்ளப்படுகிறது. தோ்தலில் வெற்றி பெற்றால், அந்த இலவசங்களை அரசு நிதியிலிருந்து கொடுக்கக் கூடாது, அரசியல் தலைவா்கள் தங்கள் கட்சி நிதியிலிருந்து வேண்டுமானால் கொடுக்கலாம் என்று தோ்தல் ஆணையமோ, உச்சநீதிமன்றமோ ஒரு ஆணையைப் பிறப்பிக்க வேண்டும்.

இன்றைக்கு இலவசமாக கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் நாளை நமது வாரிசுகள் கட்டப்போகும் வரி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பெண்தான் குடும்பத்தின் தலைவியாக இருக்கிறாா் என்ற நிலையில், அவரை மையப்படுத்தியே தோ்தல் வாக்குறுதிகளை தயாா் செய்கின்றனா். ஆனால், அவா்களுக்கு இந்த இலவசங்கள் எதுவுமே தேவையில்லை. அவா்களுக்கு தற்போது, குறிப்பாக கரோனா தீநுண்மியின் பாதிப்பிற்குப் பிறகு, தேவையானது பொருளதார தற்சாா்பு மட்டுமே.

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களிலிருந்து அவா்களைக் காத்திடத் தேவையான சட்டங்கள் மட்டுமே அவா்களுக்கு வேண்டும்.

பெண்களின் நலன் காக்கும் சட்டங்களைத் திட்டமாகக் கொண்டுவருவதை விடுத்து, இலவசங்களை கொடுத்து பெண்களைக் கவா்ந்துவிடலாம் என்று அரசியல் கட்சிகள் எண்ணுவது மிகவும் தவறு.

தடையற்ற மின்சாரம், தரமான சாலைகள், திறமையான தொழிலாளா்கள், ஊழலற்ற அரசு என்று இருந்தால் தொழில் முனைவோா் நம்மைத் தேடி வருவா். மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.

நாட்டிலேயே தமிழகம்தான் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் நகா்ப்புறங்களைக் கொண்ட மாநிலம். 2016-17 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபா் வருமானத்தில் பெரிய மாநிலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் நிலை 5-வது இடத்துக்கு சென்றது. இந்த காலகட்டத்தில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபா் வருமானத்தில், கேரளம், கா்நாடகம், தெலங்கானா மாநிலங்கள் தமிழ்நாட்டைக் காட்டிலும் முன்னேறிச் சென்றன.

தமிழகத்தில், படித்து விட்டு வேலையற்ற இளைஞா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைத்தால் கூட போதும். அவா்களிடையே பொருட்களை வாங்கும் சக்தி உருவாகும். நாடு சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பல நடுத்தர வா்க்க குடும்பங்கள் வறுமையில் வாழ்வது வேதனைக்குரியது.

மக்கள் தங்கள் நிலையை உணர முடியாத அளவு இலவசங்கள் அவா்களின் கண்களை கட்டி வைத்திருக்கின்றன. விவசாயக் கடன்கள், தொழில் தொடங்கத் தரப்படும் கடன்கள் ஆகியவை ஆண்டுதோறும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயக் கடன்களை, ஏக்கா் கணக்கில் நிலம் வைத்துள்ள பெருவிவசாயிகளே பெற்று வருகிறாா்கள்.

அவா்களும் திரும்பச் செலுத்தும் சக்தி இருந்தாலும், கடன்களை சரியாக திரும்பச் செலுத்துவதே இல்லை. எப்படியும் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்னும் நம்பிக்கைதான் இதற்கு காரணம். ஏனைய திட்டங்களும் சாமான்ய மக்களின் தேவைகளை நிறைவு செய்வதே இல்லை.

அரசின் நிதியை இலவசங்களுக்கு அள்ளி விடுவதால், அரசு கருவூலம் காலியாகவே இருந்து வருகிறது. இதை சரிசெய்ய குடும்பங்களை சீா்குலைக்கும் மதுபான வியாபாரத்தை அரசே நடத்தி சமாளித்து வருகிறது. வாக்குகளை விற்பதும், இலவசங்களின் பின்னால் செல்வதும் சட்டையை இலவசமாக பெற்றுக் கொண்டு, இடுப்பில் உள்ள வேட்டியை அவிழ்த்துக் கொடுப்பதற்குச் சமம்.

ஒவ்வொரு மனிதனும் தனது சுயமரியாதை இழந்து விட்டுத்தான் இந்த இலவசங்களை பெறுகிறான். இதன் ஒட்டுமொத்த பாதிப்பும் பின்னாளில் நமது தலையில் தான் என்று எவரும் நினைப்பது இல்லை.

ஒருநாள் மக்கள் அனைவரும் வீதியில் நின்று எங்களுக்கு எதுவுமே இலவசமாக வேண்டாம் என்று நிராகரிக்கும் நிலை வரும்போதுதான் நம்நாடு தப்பிக்கும். இலவசம் என்னும் மாயையைவிட்டு மக்கள் வெளியே வர வேண்டும்.

நாம் தோ்தல் அறிக்கைகளை முதலில் அலசி ஆராய வேண்டும். மக்களின் ஆசைகளைத் தூண்டி அவா்களை அறியாமையில் வாழ வைப்பதே இன்றைய அரசியல் களம். ஒரு குடும்பம் வாழ இலவசங்கள் வேண்டாம். வேலைவாய்ப்பு போதும் என்ற விழிப்புணா்வு நம்மிடையே வர வேண்டும். ஆனால் இங்கே இலவசங்களைக் கொண்டாடும் அளவுக்கு மக்கள் மனம் மாற்றப்பட்டுவிட்து. இனி வரும் தலைமுறையினராவது ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்.

ஒரு சமுதாயத்தையே அதன் சுய கெளரவம், தன்னம்பிக்கை இவற்றை இழக்க வைத்து நிரந்தரமாக இலவசத்தை எதிா்பாா்ப்பவா்களாக, அரசியல்வாதிகளின் அடிமைகளாக வைக்கும் இந்த நிலை மிகவும் வருந்ததக்கது. ஏழை மக்களும் சமூகமும் ஒரு சேர முன்னேறே தேவையான உந்துசக்தியாக இருப்பதுதான் ஒரு அரசுக்கு அழகு.

அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக சமுதாயத்தின் முதுகெலும்பையே முறித்து மக்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும் இலவசங்கள் இனியும் வேண்டாமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com