கோப்புப்படம்
கோப்புப்படம்

மதிப்பெண்ணைவிட மதிப்பு மிக்கது

Published on

அண்மைக்காலமாக மாணவர்களின் செயல்பாடுகள் வேதனை தர கூடியவையாக மாறிவிட்டன. ஆசிரியர்களை மதிக்காத போக்கு நாள்தோறும் வளர்ந்து வருகிறது. வகுப்பறைக்கு பாடம் எடுக்க செல்வதற்கே ஆசிரியர்கள் அச்சப்படக்கூடிய நிலை உருவாகி விட்டது. மாணவர்கள், பாடத்தை கவனிக்காவிட்டாலும், கேள்விக்கு விடை சொல்லாவிட்டாலும், தேர்வு எழுதாவிட்டாலும் ஏன் என்று கேள்விகேட்க முடியாதபடி அவர்களின் கைகள் கட்டப்பட்டு விட்டன.

கரோனா நோய்த்தொற்று காரணமாக இரு ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மாணவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். கரோனா காலகட்டத்தில் இணையவழியில் வகுப்புகள் நடைபெற்றதால் மாணவர்களின் கைகளில் பெற்றோரே கைப்பேசியைக் கொடுக்க வேண்டியதாயிற்று. இதனால், கைப்பேசியை நாள்தோறும் பார்க்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தது. 

வகுப்பு நேரம் முடிந்த பின்னும் கைப்பேசியில் மூழ்கியதால், மோசமான விஷயங்கள் அவர்கள் கண்களில் பட்டு, அவர்களின் மனதைக் கெடுத்தன. அதன் விளைவுதான் பள்ளி மாணவர்களின் விரும்பத்தகாத செயல்பாடுகள் என்று உளவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வரும் மாணவர்களின் செயல்பாடுகள் காண்போரின் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. இப்படி மாணவர்களின் விரும்பத்தகாத செயல்கள் அதிகரித்து வந்த சூழலில், அரசும், காவல்துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி விட்டன. இது போன்று தொடர்ந்து நடந்தால் மாணவரின் மாற்றுச் சான்றிதழில் அது குறித்து பதிவு செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் மனநிலையை சரியாக மாற்றியமைப்பதற்கான செயல்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மாணவர்களிடம் திறமையும் ஆற்றலும் இயற்கையாகவே அமைந்திருக்கும். அவற்றை வெளிக்கொணரும் வகையில் கல்விமுறை இருந்து விட்டால் பிரச்னையில்லை.  மனிதப் பண்புகளையும் மனிதநேய செயல்பாடுகளையும் ஒவ்வொரு மாணவனும்  உணர்ந்துகொள்ளும் வகையில் கல்விமுறை அமைந்தால் மாணவர்களின் மனநிலையில் நிச்சயம் மாற்றம் உருவாகும். 

அத்தகைய சூழலை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர், பெற்றோர், அரசு, சமூகம் என அனைத்து தரப்பினரும் இருக்கிறோம். முன்பெல்லாம், இத்தகைய மனிதநேய செயல்பாடுகள் மனிதர்களுக்கு இயற்கையாகவே இருந்தது. ஆனால், தற்போது நாம் அதை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டிய சூழல் உள்ளது.

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரை தங்கள் கைப்பேசியில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிடும் மனநிலையில்தான் இன்றைய மாணவர்கள் இருக்கின்றனர். 

அவசர நேரத்தில் உதவி செய்யும் அடிப்படை மனிதப்பண்பை கூட இன்றைய மாணவர்கள் இழந்து விட்டதற்கு முக்கியக் காரணம், கல்விமுறையில் மனிதப் பண்பாடு குறித்த பாடப்பிரிவு  இல்லாததுதான். அவசர காலத்தில் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை மாணவர்களுக்கு ஊட்ட வேண்டும். அப்படி உதவக்கூடிய மனம் மாணவர்களுக்கு வந்துவிட்டால் பிறரோடு சண்டையிடுவதற்கோ, பிறரைத் தாக்குவதற்கோ மாணவர்கள் துணிய மாட்டார்கள்.

பள்ளிகளில் முன்பு நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் அவை நிறுத்தப்பட்டு விட்டன. நீதிபோதனை அந்த பாட நேரத்தை கணிதமோ, ஆங்கிலமோ எடுத்துக்கொள்கிறது. இதனால் மனிதப் பண்பாடு குறித்த அறிவை மாணவர்கள் பெற முடியாமலேயே போய்விட்டது. அதுவும் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு நீதிபோதனை வகுப்பு என்றால் என்னவென்றே தெரியாத நிலைதான் உள்ளது. 

எனவே, இன்றைய சிக்கலான சூழலில், மனிதப் பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மாணவர்களின் விரும்பத்தகாத செயல்பாடுகள் நிச்சயம் மாறும். அன்பை போதிக்கும் பாடங்களை, கதைகளை, பாடல்களை பள்ளிதோறும் கற்பித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். 

ஒரு மாணவன், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை சிறப்பாகக் கற்றாலும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெற்றாலும் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும் என்பது உண்மை. அதனால் அவனுக்கு  நற்பண்புகள் குறித்துத் தெரிந்துவிடாது. 

எனவே, சமூகத்திற்கு தேவையான நற்பண்புகள் கொண்ட மாணவனை உருவாக்குவதற்கு,  பண்பாடு, கலாசாரம், மனித நேயம் தொடர்புடைய கற்றல் முறைதான் இன்றைய காலத்திற்கு கட்டாயம் தேவை. அதை உருவாக்குவதற்கு மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.

மாணவர்களின் பெற்றோரும் மதிப்பெண்களை மட்டுமே தனது பிள்ளைகளின் தகுதியாக நினைக்கின்றனர். இதுவும் கூட ஒரு விதத்தில் மாணவர்களை பாதிக்க கூடும். எனவே மதிப்பெண்கள் மட்டும் போதாது. நற்பண்புகள்தான் நல்ல பெயரை பெற்றுத் தரும் என்றும், மதிப்பெண்களை தாண்டிய மதிப்பு உடையது ஒழுக்கம் என்றும் பெற்றோர் சொல்லி வளர்த்தால் அது பலன் தரும்.

தொழிலில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் கடின வார்த்தைகளைப் பேசினால், அந்த மருத்துவரை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, நற்பண்புகளுடன் கூடிய, மனித நேயத்துடன் கூடிய கல்வியே சிறந்த வெற்றியை தரும் என்பதை பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். 

மாணவர்கள், ஆசிரியர்களைத்தானே தாக்குகிறார்கள் என நினைத்து அது குறித்து சிந்திக்காமல் விட்டு விட்டால் எதிர்காலத்தில் அத்தகைய மாணவர்கள் வழிதவறி சென்று சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும். அப்போது, அந்த பிள்ளையை பெற்ற பெற்றோரையும் இந்த சமூகம் ஒதுக்கிவிடும்.

எனவே, மனிதநேய சமூகத்தை உருவாக்க, மாணவர்களை நற்பண்புகளுடன், மனித பண்புகளுடனும் உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர், காவல்துறை, அரசு என அனைவருக்குமே உள்ளது. இதனை உணர்ந்து செயல்படுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com