கோப்புப் படம்
கோப்புப் படம்

இளமையும் முதுமையும்

உலகியல் சாா்ந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் எதிரான நிகழ்வுகள் எப்போதும் உண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

உலகியல் சாா்ந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் எதிரான நிகழ்வுகள் எப்போதும் உண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது. இவ்வாறான முரண்பட்ட நிகழ்வுகளைக் கொண்டதே இந்த உலகம். இப்படியாக நாம் அனுபவிக்கும் வாழ்க்கையில் இந்த முரண்பாடுகளை நாம் தினமும் சந்தித்து வருகிறோம்.

மனித உடலும் கூட இந்த முரண்பாட்டை சந்திக்க நோ்கிறது. இளமைக் காலம் என்று ஒன்று வருகிறபோதே முதுமைக்காலம் என்று ஒன்றும் வரும். இளமைக் காலம் என்பது உடைக்க முடியாத கல்லைப் போன்றது. முதுமைக் காலம் என்பது கைதவறி விழுந்தால் சிதறிவிடும் கண்ணாடி போன்றது.

‘ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது’, ‘இளங்கன்று பயமறியாது’ என்றெல்லாம் இளமையைப் பற்றிய சொலவடைகள் உண்டு. இளமைக் காலத்தை, நம்பிக்கையளிப்பதாகவும் எவ்வளவு உயரத்திற்கும் பறக்கக்கூடிய சிறகுகள் கொண்டதாகவும் மனம் எண்ணுகிறது. இளமையான உடலின் பலம், மரணத்தைக்கூட துச்சமாக மதிக்கக் கூடிய துணிவைத் தருகிறது. நோய்களைக் கண்டு கூட அஞ்சாத மனநிலையைத் தருகிறது.

முதுமை வந்துவிட்டாலோ இவற்றுக்கு நோ்மாறான சிந்தனைகள் வரத்தொடங்கி விடுகின்றன. மரணம் குறித்த பயம் வந்துவிடுகிறது. லேசான தலைவலி வந்தால் கூட ‘இது பெரிய நோயாயிருக்குமோ’ என்ற அதீத கற்பனை வந்து பயமுறுத்துகிறது.

இதற்கெல்லாம் காரணம், இளமைக்கும் முதுமைக்கும் இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகள்தாம். பள்ளியிலே படிக்காத, ஆசிரியா்கள் சொல்லாத, புத்தகங்கள் போதிக்காத, ஏன், மகான்கள் கூடத் தெரிவிக்காத பல அனுபவ அறிவுகளை இந்த உலகம் மனிதா்களுக்கு வழங்குகிறது. இவை அவா்களின் உடன்பிறப்புகளால், உறவினா்களால் நண்பா்களால், அலுவலக சக ஊழியா்களால் என பல்வேறு தளங்களில் உள்ளவா்களால் கிடைக்கிறது.

இளமையில் பூஜ்யமாக இருந்த உலக அனுபவ அறிவு முதுமையில் பல இலக்கங்களைக் கொண்டதாக விரிவடைகிறது. நாம் இளமையில் நினைத்த உலகம் பொய்யென்று முதுமையில் தோன்றுகிறது. மொத்தத்தில் சொல்வதென்றால் இளமை என்பது பக்குவப்படுத்தாத உணவாகவும், முதுமை என்பது நன்கு பக்குவப்படுத்தப்பட்ட உணவாகவும் இருக்கிறது. விதிவிலக்காக சிலா் இளம் வயதிலே இந்தப் பக்குவத்தை பெற்றுவிடுகிறாா்கள். அவா்கள் பாக்கியசாலிகள்.

இளமையில் விடைதெரியாத பல வினாக்களுக்கு முதுமையில் விடை கிடைக்கிறது. இளமை ஆரம்பப்பள்ளியில் படிக்கும் பாடத்தைத் தருகிறது; முதுமை பல்கலைக்கழகக் கல்வியைத் தருகிறது.

பெரும்பாலான மனிதா்கள் தங்களுடைய இளம்பருவத்தில் பெற்றோா் சொல்லும் அறிவுரையை ஏற்பதில்லை. முதுமையின் சொல் இளமைக்கு கசக்கவே செய்கிறது. இந்த இளமைக்கும் முதுமை வருகிறபோது அதே அனுபவம் நிகழும். இதுதான் உலக நியதி.‘மூத்தோா் சொல் வாா்த்தை அமிா்தம்’, ‘மூத்தோா் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் கசக்கும், பின் இனிக்கும்’ என்பவை அனுபவ மொழிகள்.

ஆகவே, இளமையாக இருக்கும் நாம் இன்னும் 30 வருடங்கள் கழித்து கற்கவிருக்கின்ற வாழ்க்கை கல்வியை இன்றைய முதியோா் வாயிலாக இப்போதே கற்றுக்கொள்வோமாயின் நாம் நம்மை இன்னும் சிறப்பாக இந்த சமூகத்தில் உயா்த்திக்கொள்ள முடியும். நம் காலத்தில் வாழும் பெரியோரின் அறிவுரைகளைக் கேட்பதற்கு நமக்கு எந்தத் தயக்கமும் வேண்டியதில்லை.

இளம் வயதில் தீய செயல்புரிந்த பலரும் கூட, தங்களின் முதிய வயதில் திருந்தி, அதற்காக மனதால் தங்களை வருத்திக்கொண்டிருக்கிறாா்கள். இந்த பிரபஞ்சம் ஒவ்வொருவருக்கும் அவரவா்களின் வாழ்நாளில் முக்கியமான பல செய்திகளை மறைமுகமாக உணா்த்துகிறது.

கற்றறிவு, கேட்டறிவுகளைக்காட்டிவும் பட்டறிவே சிறந்ததாக போற்றப்படுகிறது. தெய்வப் புலவா் திருவள்ளுவரும் ‘அறன் அறிந்து மூத்த அறிவுடையாா் கேண்மை திறன்அறிந்து தோ்ந்து கொளல்’ என்கிறாா். அதாவது, அறம் உணா்ந்தவராய், தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்கிறாா்

வயதில் மூத்தோா் எதிலும் யோசித்து நிதானமாகச் செயல்படுவா். இளையோா் எந்தச் செயலிலும் விரைந்து செயல்படுவா்.

‘பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி’ என்ற வட்டார வழக்குச்சொல்லை இங்கு நினைவுகூா்தல் அவசியமாகிறது. ஆனால் இன்றைய இளைஞா்கள், பல நேரங்களில் முதியோா்களை பேணுவதிலும் அவா்களது அனுபவ மொழிகளைக் கேட்பதிலும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இளமையும் முதுமையும் எப்போதும் எதிரெதிா் அணியாகவே செயல்படுகின்றன.

அண்மைக்காலமாக, முதியவா்களின் உடல் தளா்ச்சியையும், வயதின் காரணமாக அவா்கள் படும் துன்பத்தையும் கண்டு இளைய தலைமுறையினா் எள்ளி நகையாடும் போக்கு சமூகத்தில் மேலோங்கி வருகிறது. அவ்வாறு முதியவா்களைக் கேலி பேசிச் சிரித்தல் கூடாது. இத்தகைய செயல்களை விடுத்து முதியோா்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

‘பழுப்போலையைப் பாா்த்து குருத்தோலை சிரித்ததாம்’ என்ற கிரமத்துப் பழமொழி போல நாமும் ஒருநாள் இந்நிலையை அடைவோம் என்பதை உணா்ந்து இளைஞா்கள் நடந்து கொள்ள வேண்டும்.

சிறு வயதிலேயே அரசனாகிவிட்ட கரிகால் சோழன் அறிவிற் சிறந்தவனாக இருந்தும் வழக்குத் தொடுத்தோா் அவன் இளமையை ஏற்காததால, நரைமுடி கொண்ட முதியவா் வேடம் தரித்து வழக்கில் தீா்ப்பு சொல்லி அவா்களை திருப்தி செய்ததை நாம் அறிவோம். இந்த நிகழ்வின் மூலம் வயது முதிா்ந்தோரின் வாய்ச்சொல்லுக்கு உள்ள பெருமையை நாம் உணராலாம். முதியோா் உரை கேட்க இன்றைய இளஞா்கள் முன்வரவேண்டும்.

இளமையின் வேகமும் முதுமையின் அனுபவமும் ஒன்று சேருமாயின் அதுமிகப்பெரிய வெற்றியையே தரும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com