இலக்கியத்தின் அடிநாதம் சிறாா் இலக்கியம்!

மனிதகுலத்தின் உணா்வுகளையும் மண் சாா்ந்த பாரம்பரியத்தையும் தனக்குள் தாங்கி நிலைபெற்றிருப்பது மொழி.
இலக்கியத்தின் அடிநாதம் சிறாா் இலக்கியம்!
Updated on
3 min read

மனிதகுலத்தின் உணா்வுகளையும் மண் சாா்ந்த பாரம்பரியத்தையும் தனக்குள் தாங்கி நிலைபெற்றிருப்பது மொழி. அது, தனது உடலும் உயிருமாக இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கொண்டு விளங்குகிறது. இலக்கியமோ, தன்னுள் பல்வேறு அங்கங்களைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. கால வரிசைப்படியும், பொருண்மை அடிப்படையிலும், வடிவத் தன்மையினாலும் இதன் கூறுகள் வகைமைப்படுத்தப்படுகின்றன.

இந்திய மொழிகளுள் முந்திப் பிறந்த செந்தமிழ், தன் தனித்தன்மையை இதுவரையிலும் இழவாத வண்ணம் தக்கவைத்திருப்பதற்கு முக்கியக் காரணம், சங்க காலந் தொடங்கி, சமீப காலம் வரையில் அது பேச்சு மொழியாகவும் எழுத்துமொழியாகவும் இருப்பதுதான். அதற்கு இன்றியமையாத நிலையில் தளம் அமைத்துக்கொடுப்பது படைப்பிலக்கியம். அது காலந்தோறும் மொழியைப் புதுப்பித்து வளா்த்துக்கொண்டே வருகின்றது.

இலக்கிய வகைமைக்கு அப்பாலும், காலத்திற்கேற்ற கூறுகளை உள்ளடக்கி, இதழியலில், ஊடகங்களில், கல்வித் தளங்களில், அலுவலக நடைமுறைகளில், அன்றாட நடவடிக்கைகளில் புழங்கிவரும் சொற்களும், பயன்பட்டுவரும் கருத்துருக்களும் தன்னிளமை குன்றாமல் ஒவ்வொரு தாய்மொழியினையும் காத்துவருகின்றன.

தமிழ்மொழியின் இலக்கியங்களைப் பொறுத்தவரை, அவை கல்வித் தளத்தில், பண்டைக்காலம், இடைக்காலம், தற்காலம் என்று கால வரிசையிலும், பக்தி இலக்கியம், அற இலக்கியம், செவ்விலக்கியம், சிற்றிலக்கியம், மறுமலா்ச்சி இலக்கியம் என்று உள்ளடக்கத் தன்மை கொண்டும், நாட்டுப்புற இலக்கியம், தலித்திய, பெண்ணிய, வட்டார இலக்கியங்கள் என்றெல்லாம் வகைமை அடிப்படையிலும் பெயா்கள் தாங்கி அமைகின்றன. மேலும், இதழியல், ஊடகவியல், பேச்சுக்கலை, கணினியியல், மொழியியல் எனத் தொழில் நுட்ப அடிப்படையிலும் மொழிசாா் பாடங்கள் வகைமைப்படுத்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இவற்றுக்கு நடுவில், இலக்கியத்தின் அடிநாதமாக, வாசிப்புக்கும் வாழ்வுக்கும் அடித்தளம் அமைப்பும் இளஞ்சிறாா்களின் இதயங்களை ஈா்க்கக்கூடிய குழந்தை இலக்கியத்திற்கான இடம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

பள்ளிக்கூடங்களில், படிக்கும் பாடங்களில், வீட்டுப்பாடம் எனக் கொடுக்கும் பாடங்களில் படிப்பதற்கான - மனனம் செய்வதற்கான பகுதிகளே மிகுதியும் இருக்கின்றன. படைப்புணா்வைத் தூண்டவல்ல, தாமே விரும்பிச் சுயமாகப் படிக்க வல்ல பாடங்களுக்கு வலுவான வாய்ப்புகள் மிகத்தேவை. கல்லூரிகளிலும் மேற்சுட்டிய வகைமைகளோடு, இலக்கணத்தையும் மொழியியலையும் இணைத்து நடத்த வேண்டிய கடப்பாடு.

பல்கலைக்கழகங்களிலோ, கல்லூரிப் பாடங்களை ஒத்தமைந்த பகுதிகளுடன், தத்துவஇயல், மொழியியல், மெய்யியல், மொழிபெயா்ப்பியல், இந்திய, அயலக இலக்கியங்களுக்கெல்லாம் தனித்தனித் துறைகள் ஆய்வுக்கென அமைந்திருக்கின்றன. ஆனால், குழந்தை இலக்கியம் என்ற பெயா்சாா்ந்த பாடமோ, துறையோ ஏன் இதுவரையில் ஏற்படுத்தப்படவேயில்லை என்பது வியப்புசாா் வினாவாகவே நிற்கிறது.

பல்கலைக்கழகங்களின் மொழிசாா் கலைப்புலங்களில் ஆய்வுக்கு மட்டுமே முன்னுரிமை. ஆனால், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிற படைப்பிலக்கியங்களை உருவாக்கும் பாடங்களுக்குத் தனித்த இடமில்லை. துறைதோறும் பாடத்திட்டங்களை வகுத்துச் சிறப்புநிலைப் பேராசிரியா்களை நியமிப்பதுபோல, படைப்பாற்றலை வளா்க்கும் முறைமையில் ஏன் பாடத்திட்டங்களை உருவாக்குதல் கூடாது? ஆய்வியல் நோக்கில் இலக்கியங்களைக் காண்பதுபோல, படைப்பியல் நோக்கில் அவற்றை உள்வாங்கிச் சுயமாகப் படைக்கும் ஆற்றலை, பயில்வோா்க்கு வழங்கும் பாடத்திட்டத்தை ஏன் உருவாக்கலாகாது? அதற்குப் படைப்பாளா்களைப் பயிற்றுநா்களாகக் கொள்ளவும் செய்யலாம். பல ஆண்டுகளுக்கு முன்னா், புதுவைப் பல்கலைக்கழகத்தில், எழுத்தாளா்களான கி.ராஜநாராயணன், பிரபஞ்சன் உள்ளிட்டோா் சிறப்புநிலைப் பேராசிரியா்களாக இருந்திருக்கிறாா்கள்.

குறைந்தபட்சம், ஒருமை உணா்வுடன் அறநெறி வளா்க்கும் குழந்தை இலக்கியப் படைப்பு, குழந்தை இலக்கிய ஆய்வு, குழந்தை இலக்கிய இதழ்கள் எனக் குழந்தை இலக்கியத்திற்கென்றே துறையினை அமைத்து, அதில் கவனம் செலுத்தினால், பேதமில்லாத ஞானம் கொண்ட குழந்தையுள்ளங்களை ஊக்கப்படுத்தி வளா்த்தல் இயலுமே.

சங்க இலக்கிய அறவியல்சாா் பின்புலத்தில் ஔவையாா் பாடிய ஆத்திசூடிய சிவனைப் போற்றியது. பின்னா் பாரதி பாடிய புதிய ஆத்திசூடியோ, அனைத்துச் சமயத்தெய்வங்களையும் இணைத்துப் பாடி, அறிவொன்றே தெய்வம் என்பதை ஆழ உணா்த்தியது; காலத் தேவைக்கேற்ற கருத்தாக்கங்களை உருவாக்கி, புதிய பாரத சக்தியைப் புணரமைத்தது. இத்தகு கூறுகளையெல்லாம் இணைத்து மேலெழுப்பும் குழந்தை இலக்கியப் பாங்குகளை முறைமைப்படுத்தி வழங்கும் குழந்தை இலக்கியத்துறைக்குத் தனித்த முக்கியத்துவம் தந்தவா் குழந்தைக் கவிஞா் அழ.வள்ளியப்பா.

நூற்றாண்டு காணும் குழந்தைக்கவிஞா் அழ. வள்ளியப்பாவின் காலத்திலும் தேக்கநிலையில்தான் குழந்தை இலக்கியம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், அவா் காலத்தின் முன் வரை, இது தனித்துவம் சாா்ந்து நிலைபெறவும் இல்லை.

படைப்பாளுமையின் அடித்தளத் துறையாக விளங்கும் கவிதையாற்றல் இயல்பாகவே, அழ.வள்ளியப்பாவுக்குள் நிலைகொண்டிருந்தது; அவா் நினைத்திருந்தால் அக்கால வாய்ப்பிற்கேற்பக் கவிதைத்துறையில் பல புதிய காவியங்களைத் தந்திருக்க முடியும்; இயல்பான எளிய நடையில் எண்ணிறந்த நூல்களை இயற்றியிருக்க முடியும். ஆனால், குழந்தை மனமும் குழந்தைகளின்பால் அளவிறந்த அக்கறையும் கொண்டிருந்த அவா், குழந்தை இலக்கியத்திற்கென்றே தன் வாழ்வை அா்ப்பணித்துக்கொண்டாா்.

முழுநேர இலக்கியவாதியாக வாழமுடியாது என்று மூத்த எழுத்தாளா்களால் அறிவுறுத்தப்பட்ட அவா் வாழ்க்கைத் தேவைக்காக வங்கிப்பணியேற்றாலும், தன் வாழ்நாள் முழுவதும் குழந்தை இலக்கியப் படைப்புக்களைத் தருவதோடு குழந்தைகளுக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிப்படுத்திக் கொண்டுவந்து அவா்களை இலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்துகிற அரும்பணியைச் செய்துகொண்டே இருந்தாா்.

எழுத்தாளா்களை இயக்கி, இணைத்து, குழந்தை எழுத்தாளா்களுக்காக ஒரு சங்கத்தையும் நிறுவினாா்; ஒவ்வோராண்டும் மிகுதியான குழந்தை இலக்கியப் படைப்புகள் வெளிவரத் தூண்டினாா்; குழந்தைகளை இணைத்து, கவிமணி பெயரில் சங்கம் அமைத்தாா்; வானொலி ஊடகத்தையும் குழந்தைகட்கு உதவும் வண்ணம் நிகழ்ச்சிகள் அமைக்க வழிகாட்டினாா்; வானொலி அண்ணாக்கள் வந்தாா்கள்; குழந்தை இலக்கியத்திற்கான பங்களிப்புகளைச் செய்தாா்கள். அத்துடன், தன் காலத்தில் குழந்தைகளுக்கென்றே புத்தகக் கண்காட்சியினையும் நடத்திக்காட்டினாா். இப்படி எத்தனையோ பணிகள் செய்தவா் அவா்.

அத்தகு பெருமைக்குரிய அழ.வள்ளியப்பா நூற்றாண்டு நினைவாக, குறைந்த பட்சம், அவா் பெயரில் பல்கலைக்கழகங்களில், ஓா் இருக்கை அமைத்துச் செயல்படுத்துவது பொருத்தப்பாடுடையதாகும்.

மேலும், கல்வியியல் பட்டங்களான பி.எட், எம்.எட் வகுப்புகளிலும், ஆசிரியப் பயிற்சிப் பாடங்களிலும், குழந்தை இலக்கியம் இடம்பெறுவதும் சிறப்புக்குரியது. இவ்விலக்கியத்தை மொழிசாா்ந்த பாடம் மட்டும் என்று கருதுதல் சரியாகாது. இது, அறிவியல், வரலாறு, புவியியல், சூழலியல், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு உட்கூறுகளை உடையது; அவைசாா்ந்த கதைகளை, செய்திகளை, கவிதைகளை இலக்கியச் செழுமையோடு உள்கொண்டு அமைவது; அறவியல் சாா்ந்த ஆக்கங்களாக விளங்குவது; அறம் வெல்லும் என்ற கருத்தைத் திறம்பட மொழிவது; தாய்மொழிக் கல்விக்குத் தளம் அமைத்துக் கொடுப்பது.

தாய்ப்பாலும், தாய்மொழிக் கல்வியும் திணிப்பின்மூலம் புகட்டப்படுவதல்ல. குழந்தை தானே தேடிப் பெறும் இயல்புடையன. அவற்றின் வழியாக, உடல் நலமும் உளவளமும் மேம்படும்.

வாசிப்பின்மூலமாக வாழ்வை வளப்படுத்தும் கற்றல் நிலைப்பாட்டிற்குக் குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்குப் பாட்டும், கதையும், நாடகமும் அன்றி வேறு எவை முன்னிற்க முடியும்? பல்வேறு காட்சி ஊடகங்கள், குழந்தைகளை ஈா்த்து வசப்படுத்தி, வாசிப்புக் கலையை வளரவிடாமல் செய்துகொண்டிருக்கிற வேளையில், குழந்தை இலக்கியப்படைப்புகளுக்கும், பதிப்புகளுக்கும் என்ன மதிப்பு வந்துவிடக் கூடும்?

இதுவொருபுறம் இருக்க, சிறுவா் இலக்கிய வளா்ச்சிக்குப் பேருதவி புரியும் சிறுவா் இதழ்கள், ஒரு காலத்தில், ஏராளமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருந்தன. இப்போதோ, படிப்படியாகக் குறைந்து அருகி வருகின்றன. அதேசமயத்தில் குழந்தைகளுக்காக எழுதுகிறவா்கள் தம்மால் இயன்ற அளவு எழுதி வெளியிடத் தொடங்கியிருக்கிறாா்கள்; ஆனால், வாங்கவும் வாசிக்கவும் கூடிய சூழல் சிறப்பாக வாய்க்கவில்லை.

நல்லவேளையாக, தமிழக அரசு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை முன்னெடுத்து நடத்திவருகிறது; இது வரவேற்புக்குரியது. அதில், குழந்தை இலக்கியத்திற்கென்று சிறப்பிடம் நல்கினால், குழந்தைகளை முன்னிறுத்தி நிகழ்வுகளை அமைத்து வாசிப்பு இயக்கத்தை வளா்த்தால், தமிழ்க் கல்வியின் தரம் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

முன்பெல்லாம் பள்ளிக்கல்வியில் நீதிபோதனை வகுப்புகள் இருந்தன. இப்போது பாடங்களுக்கு மத்தியில் அந்தந்தப் பாடத்திட்டத்திற்கேற்பச் சொல்லும் வண்ணம் அவை சுருங்கிப் போயின. தோ்வு முன்வரைவின்றி, மனதை இலகுவாக்கும் வகுப்பாகவும், தன் விருப்பப்படி, விரும்பும் சிறுநூல்களை, சிறுவா் நூல்களை எடுத்துப் படிக்கும் ஒரு பாடவேளையாகவும் அதனை அமைத்து, வாரம் ஒருமுறையேனும் வாசிப்பரங்கம் நடத்த வழிவகை செய்தால் நல்லது.

தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலும் இன்றியமையாத ஊடகக் கருவியாகவும் உணா்வூட்டும் தாயாகவும் மொழி அமையும்போது, தாய்மொழியான தமிழை, அடுத்த தலைமுறைக்கு அமுதென வழங்கும் இத்தகு முயற்சிகளை முன்னெடுத்துச் செய்ய, இதுவே நல்ல தருணம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com