சாமானியனுக்கும் எட்ட வேண்டும் சட்டம்!

சாமானியனுக்கும் எட்ட வேண்டும் சட்டம்!

அண்மையில் எங்கள் பகுதியில் சிலர் செய்த விதிமீறல்களால் ஒரு பொது பிரச்னை ஏற்பட்டது. அவர்களிடம் பல முறை சமாதானமாகவும், சட்டத்தைச் சுட்டிக்காட்டிக் கடுமையாகவும் பேசியும் பலனில்லை என்ற நிலையில் உள்ளூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டேன். விசாரிக்க வந்த காவலர்களோ சமரசம் செய்து வைக்க முயன்றார்களேயன்றி பிரச்னை உண்டாக்கியவர்களைக் கண்டிக்கவில்லை. வேறு வழியின்றி எழுத்து மூலமாக புகார் மனு கொடுக்க நான் காவல் நிலையம் சென்றேன்.
அங்கு மூன்று மணி நேரம் உட்கார வைக்கப்பட்டேன். மீண்டும் சமரசப் பேச்சு நடந்ததே தவிர விதிமீறல் செய்தவர்கள் கண்டிக்கப்படவில்லை; சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்படவில்லை. படித்த, சட்டங்கள் நன்கறிந்த, சமூக ஆர்வலர் என்பதால் ஓரளவு செல்வாக்குள்ள நமக்கே இந்த நிலையென்றால் சாமானியனின் நிலை என்ன என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
சட்டம் என்ன கூறுகிறது என்பது சாமனியனுக்குத் தெரியுமா? குற்றம் என்று எவ்வெவற்றை சட்டம் சுட்டுகிறது என்பதை சாமானியன் அறிவானா? அக்குற்றங்களை அவன் செய்யும் போது அவற்றுக்கான தண்டனை என்னவென்று அவனுக்குத் தெரியுமா? குற்றங்கள் அவன் மீது இழைக்கப்படும் போது சட்டத்தின் உதவியை நாடும் வழிமுறைகளை அவன் அறிந்திருப்பானா? சட்டம் அவனுக்கு உதவுமா? இக்கேள்விகளை நானே கேட்டுக்கொண்டேன்.
சட்டத்தை மீறுவது என்பது நம் நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று. சாலையில் எச்சில் துப்புவது, புகை பிடிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற சிறு சட்ட மீறல்கள் தொடங்கி நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது, போதைப்பொருள் விற்பது, கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது போன்ற பெரிய அளவு சட்டமீறல்கள் நம் நாட்டில் தினந்தோறும் நடந்து கொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.
படித்தவர், படிக்காதவர், செல்வந்தர், ஏழை என்று எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு நிலையில் சட்டத்தை மீறுகிறார்கள். சட்டம் ஏன் சிலவற்றைக் குற்றம் என்று கூறுகிறது? அவை சமுதாயத்துக்கு ஏதோ ஒரு வகையில் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால்தான்.
பொதுநலனை பாதிக்கும் ஒரு சட்ட மீறலை எதிர்கொள்ளும்போது நடப்பதைப் பார்ப்போம். முதலில் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரியிடம் எழுத்து வடிவில் ஒரு புகார் அளிக்க வேண்டும். நேரில் சென்று அளிப்பதென்றால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். சாதாரண அஞ்சலில் அனுப்பினால் எந்த பதிலும் வராது.
பதிவுத் தபால் மூலம் புகார்க் கடிதத்தை அனுப்பவேண்டும். அன்னாரிடம் கடிதம் போய்ச் சேர்ந்தது என்பதற்குண்டான அத்தாட்சி அட்டையை இணைத்து அனுப்ப வேண்டும். அப்படியும் பதில் வரும் என்பதற்கு உத்தரவாதமில்லை. பெரும்பாலும் இப்படி அனுப்பப்படும் புகார்களின் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.
நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் உயரதிகாரிக்கு அப்புகாரை மீண்டும் அனுப்பலாம். அப்போதும் "இப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும்' என்று குறிப்பிடப்பட்டு அது மீண்டும் கீழே உள்ளவர்களிடம் தான் வரும். அப்போதும் புகார் அனுப்பியவருக்கு நிவாரணம் கிடைக்காது. அடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அப்புகாரை அனுப்பலாம். "உங்கள் மனு எண்' என்று ஒரு எண் குறிப்பிடப்பட்டு உடனே கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி வரும்.
அதற்குப் பிறகு "உங்கள் புகார் இத்துறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது' என்று மற்றுமொரு குறுஞ்செய்தி வரும். அவ்வளவுதான். சில நேரம் கீழ்நிலை அதிகாரிகள் மாறிமாறி மனுதாரரைத் தொடர்பு கொண்டு சலிப்போடு பேசுவார்கள். சில சமயம் பெயருக்கு ஏதோ நடவடிக்கை எடுப்பார்கள்; பல சமயம் அதுவும் இருக்காது.
இப்படிப் புகார் அனுப்பும் ஒவ்வொரு முறையும் நாம் அந்த புகாரின் நகல் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். பல துறைகளுக்கும் ஒரே புகாரை அனுப்பும் பட்சத்தில் அத்தனை கடிதங்களையும் நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா அரசுத்துறைகளுக்கும் மின்னஞ்சல் முகவரி உண்டு. மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம். ஆனால் அது அதிகாரியின் உதவியாளரால் பார்க்கப்பட்டு, பிறகுதான் அதிகாரியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும்; கொண்டுசெல்லப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை உயரதிகாரிகள் எல்லோரும் மாதந்தோறும் "குறை கேட்புக் கூட்டங்கள்' நடத்துகின்றனர். இவையனைத்தும் குறை கேட்புக் கூட்டங்களேயன்றி, "குறைதீர்க்கும்' கூட்டங்களல்ல. சாமானியன் எத்தனை முறை சென்றாலும் அவன் பிரச்னைக்கு இங்கு தீர்வு கிடைப்பதில்லை.
சாமானியனுக்கு இத்தனை வழிமுறைகளும் தெரிந்திருக்குமா? தெரிந்திருந்தாலும் இவ்வளவு செலவு செய்ய முடியுமா? இவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமா? தன் நலனுக்கே போராட வேண்டியிருக்கும் நிலையில் சாமானியனால் பொது நலனுக்கென இவ்வளவு சிரமங்களை ஏற்க முடியுமா?
சமுதாய நலனைக் காக்கும் சட்டங்கள் பல உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தத்தான் ஆளில்லை. வழிபாட்டுத்தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைத் தடை செய்யும் சட்டம் இருக்கிறது. ஆனால் மதவேறுபாடின்றி எல்லா வழிபாட்டுத்தலங்களும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைக் கட்டி ஒலி மாசு உண்டாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
பெண்களை கண்ணியக் குறைவாகச் சித்திரிப்பதைத் தடை செய்யும் சட்டம் இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான பத்திரிகைகளும், திரைப்படங்களும், சுவரொட்டிகளும் பெண்களைத் தரக்குறைவாகவே சித்திரிக்கின்றன.
மிருகவதைத் தடுப்பு சட்டம் இருக்கிறது. ஆனால் சேவல் சண்டையும், ஜல்லிக்கட்டும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கனிம வளங்களைக் காப்பதற்கு சட்டம் இருக்கிறது. ஆனால் மலைகள் மொத்தமாக வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. வனப்பாதுகாப்பு சட்டம் இருக்கிறது. ஆனாலும் வனங்கள் நாளுக்குநாள் அழிந்துகொண்டேதான் இருக்கின்றன.
நீர்நிலைகளைப் பாதுகாக்க சட்டம் உள்ளது. ஆனால் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்படி எண்ணற்ற சட்டங்கள் இருந்தும், பல நிலைகளில் அவை மீறப்படும்போது, புகார் அளித்தும் நிவாரணம் கிடைக்காத நிலையில் சாமானியன் என்ன செய்ய இயலும்? நீதிமன்றத்தையே நாடவேண்டியுள்ளது.
நீதிமன்றத்தை நாடுவது அவ்வளவு எளிதன்று. நேரடியாக நீதிமன்றத்தில் புகார் செய்ய முடியாது. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு புகாரையும் சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர்களுக்கு, நீதிமன்றக் கட்டண அஞ்சல் தலையும் அத்தாட்சி அட்டையும் இணைத்து பதிவுத் தபாலில் அனுப்பவேண்டும். கோரப்பட்ட தகவலை அளிக்க அவர்களுக்கு நாற்பத்தி ஐந்து நாட்கள் வரை அவகாசம் உண்டு.
அப்படியும் தகவல் கிடைக்காத நிலையிலோ, திருப்தியான பதில் கிடைக்காத நிலையிலோ அடுத்த முப்பது நாட்களுக்குள் அத்துறையின் மேல் முறையீட்டு ஆணையத்திடம் புகார் அளித்தவர் மேல் முறையீடு செய்ய வேண்டும். பதில் கிடைத்த பிறகு அனைத்து தகவல் பரிமாற்றங்களின் நகல்களோடு உயர்நீதிமன்ன்றத்தில் பொது நல வழக்கு தொடர வேண்டும். அவ்வழக்கை எடுத்து நடத்த நல்ல வழக்குரைஞரைத் தேர்வு செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் பணமும் நேரமும் அதிகம் செலவாகும்.
நீதிமன்றம் சாமானியன் அளிக்கும் புகாருக்கு வலுவான ஆதாரங்களைக் கேட்கும். குறிப்பிட்ட சட்ட மீறலால் என்னென்ன தீமைகள் விளைந்துள்ளன என்ற பட்டியலைக் கேட்கும். ஒரே அமர்வில் அவ்வழக்கு முடிந்து விடாது. பல அமர்வுகள், பல மாதங்கள் வழக்கு தொடர்ந்து நடக்கும். போதிய ஆதாரங்கள் இல்லை என்றால் நீதிமன்றம் அவ்வழக்கினைத் தள்ளுபடி செய்து விடவும் வாய்ப்பு உண்டு.
சில சமயம், நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாகக் கூறி மனுதாரருக்கு அபராதம் விதிப்பதுமுண்டு. இத்தனைச் சிக்கல்கள் இருக்கும்போது சாமானியன் நீதிமன்றத்தின் வாசலை நெருங்க பயப்படுவதில் வியப்பொன்றுமில்லை.
சாமானியனுக்கும் எட்டும் நிலையில் சட்டம் இல்லை. இந்நிலை மாறவேண்டும். அதற்குச் செய்ய வேண்டியன: பள்ளியிலேயே அடிப்படை சட்டங்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் புரிந்து கொண்டு அவற்றின் வழி நடக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
ஆன்மிகக் கூட்டங்கள், கலாசாரக் கூட்டங்கள், கருத்துக் கேட்புக் கூட்டங்கள் போல அடிப்படை சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள், கல்வியறிவு குறைந்த கீழ்த்தட்டு மக்களுக்கு அடிக்கடி நடத்தப்பட வேண்டும். சட்டக் கல்லூரி மாணவர்கள் இதை சேவை மனப்பான்மையோடு செய்ய முன்வர வேண்டும். அரசின் அனைத்துத்துறை ஊழியர்களுக்கும் பொதுசட்டங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சியளிக்கப்பட வேண்டும்.
சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணியில் காவல்துறையின் பங்கு இன்றியமையாதது. ஆனால் சாமானியனுக்கு காவல்துறையை அணுக எப்போதுமே ஒரு தயக்கம் இருக்கிறது. அதனைக் கடந்து வரும் அவன் பொய்யான புகாரைக் கொண்டு வருவானா?
இப்போது தமிழகத்தின் பெரும்பாலான காவல் நிலையங்களில் ஒருவர் புகார் கொடுக்க வரும்போது அவரை வரவேற்று உட்கார வைப்பது, பிறகு புகாரைக் கணினியில் பதிவு செய்வது போன்ற சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் அவை மட்டும் போதாது. நம்பிக்கையோடு வரும் சாமானியனுக்கு தீர்வு கிடைக்க சட்டத்தின் உதவியோடும் மனிதாபிமானத்தோடும் உதவிட வேண்டும்.
மற்ற எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்த்துப் பயனில்லாமல் போன பிறகுதான் சாமானியன் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறான். தவறான குற்றச்சாட்டாக இருப்பின் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்து வைத்திருப்பவன் பொய்யான புகாரை எடுத்து வருவானா?
நீதிமன்றம் சாமானியனையும் கருணையோடு நடத்தி நல்லொதொரு தீர்வைக் கொடுக்க வேண்டும். அநீதிக்கு எதிராக சாமானியனும் சட்டத்தை அணுகும் வண்ணம் வழிமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர்:
சமூக ஆர்வலர்.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com