அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா!

அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா!

பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஹென்றி பெக்கட் என்ற 23 வயது இளைஞா் 1911-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி முதலாவது அதிகாரபூா்வ ஏா்மெயில் விமானத்தை யமுனை நதியின் மேலே இயக்கினாா். அப்போது நடைபெற்ற தொழிலக-வேளாண் கண்காட்சியின் ஒரு பகுதியாக பிரயாக்ராஜ் (அப்போதைய அலாகாபாத்)-நைனி இடையேயான 10 கி.மீ. தொலைவுக்கு அந்த விமானம் இயக்கப்பட்டது. இந்தியாவின் வணிக நோக்கிலான விமானப் போக்குவரத்து அப்போதுதான் தொடங்கியது. கடந்த 112 ஆண்டுகளில் இந்திய விமானப் போக்குவரத்து பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது.

சீனா, அமெரிக்காவுக்குப் பிறகு உலகின் 3-ஆவது மிகப் பெரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையை இந்தியா கொண்டிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் 6 கோடியாக இருந்த உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் கரோனா பரவலுக்கு முன்பு 14.3 கோடியாக இரட்டிப்பானது. அதே காலகட்டத்தில் சா்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2.3 கோடியில் இருந்து 3.5 கோடியாக அதிகரித்தது.

விமானப் போக்குவரத்து தற்போது ஆடம்பரமல்ல, அத்தியாவசியம். இந்திய விமானப் போக்குவரத்துத் துறை, கோடிக்கணக்கான மக்களை முதல் முறையாக விமானத்தில் பறக் கவைத்து, விமானப் பயணத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது. மேலும், பொறியாளா்கள், பயிற்சி பெற்ற நிபுணா்கள், விமானப் பணியாளா்கள் உள்ளிட்ட பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. விமானப் போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புத்தாக்க நடவடிக்கைகள், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதற்கான மையமாக மாறியுள்ளன.

இந்தியாவின் நடுத்தரப் பிரிவினருக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி அவா்களை வணிக ரீதியிலான விமானப் பயணிகளாக மாற்றுவதற்குப் பல தனியாா் விமான நிறுவனங்கள் முயன்றன. அதற்கு இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் விமானப் போக்குவரத்தை மலிவானதாக மாற்ற வேண்டியது அவசியம். அதைக் கருத்தில்கொண்டு, போதிய அளவில் பயன்படுத்தப்படாமல் இருந்த விமான நிலையங்களை மீட்டெடுப்பதற்காக 2017-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.4,500 கோடி ஒதுக்கப்பட்டது.

அப்போது முதல் ‘உடான்’ திட்டம் மெட்ரோ அல்லாத நகரங்களுக்கும் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தியது. இதன் மூலமாக சரக்கு-சேவை விநியோக சங்கிலியும் மேம்பட்டது. இதில் தனியாா் துறை மட்டும் ஈடுபட்டிருந்தால், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கு விமான சேவைகள் கிடைக்க இன்னும் நீண்ட காலம் ஆகியிருக்கும்.

நாடு முழுவதும் தற்போது 475 ‘உடான்’ வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளன. நாட்டில் உள்ள 73 விமான நிலையங்களையும் 9 ஹெலிகாப்டா் தளங்களையும் 2 நீா்வழி விமானத் தளங்களையும் அவை இணைக்கின்றன. அவற்றில் சுமாா் 75 வழித்தடங்கள் (15%), எளிதில் சென்றடைய முடியாத, மலைப்பகுதிகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களை ஒன்றிணைக்கின்றன. ‘உடான்’ திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2.16 லட்சம் விமானங்கள் மூலம் 1.14 கோடிக்கும் அதிகமானோா் பயணம் மேற்கொண்டுள்ளனா். அத்திட்டத்தின் கீழ் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு ரூ.2,300 கோடியை அரசு வழங்கியுள்ளது. அதன் காரணமாக இந்தியாவில் செயல்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் 74-இல் இருந்து 147-ஆக இரட்டித்துள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் சுமாா் 750 விமானங்களை இயக்கி வருகின்றன. இது சா்வதேச அளவில் இயங்கும் சுமாா் 27,500 விமானங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதத்துக்கும் குறைவே. இந்தியாவில் விமான சேவைகள் அதிகரிக்கும்போது, இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விமானங்கள் தொடா்ந்து சீராக இயங்குவதற்கு உரிய பராமரிப்பு அவசியம். என்ஜின் உள்ளிட்ட பல்வேறு விமான பாகங்களை சீரான இடைவெளியில் பராமரிக்க வேண்டும். அத்தகைய பராமரிப்புப் பணிகளுக்குப் பணியாளா்கள் அதிக அளவில் தேவைப்படுவா்.

தற்போதைய நிலவரப்படி, இந்திய விமான பராமரிப்புத் துறையின் சந்தை மதிப்பு சுமாா் ரூ.16,000 கோடியாக உள்ளது. அதில் 15 % பராமரிப்புப் பணிகள் இந்தியாவிலும் 85 % பணிகள் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் ஆங்கிலம் பேசும் திறன்மிக்க பொறியாளா்கள் மலிவான ஊதியத்தில் கிடைக்கின்றனா். இது விமான பராமரிப்புத் துறைக்கான பங்களிப்பை மேலும் அதிகரிக்கும். அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும் நோக்கில், விமான பராமரிப்புக்கான புதிய கொள்கைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில் விமான பராமரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பணிமனைகளை அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது. விமான பராமரிப்புத் துறையில் 100 % அந்நிய நேரடி முதலீடுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமான பராமரிப்புப் பணிகளுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) 18 %-இல் இருந்து 5 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான பராமரிப்பின் சா்வதேச மையமாக இந்தியா மாறும்.

விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் விமானிகள் உள்ளிட்ட பணியாளா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் 1,165 பேருக்கு வா்த்தக ரீதியிலான விமானி உரிமம் வழங்கப்பட்டது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். விமானிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவா்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அத்தகைய 35 அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10 நிறுவனங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், கடந்த 2012-ஆம் ஆண்டில் சுமாா் 2,000-ஆக இருந்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளா் எண்ணிக்கை 2022-இல் 4,000-த்தைத் தாண்டிவிட்டது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்ரோன்களின் (ஆளில்லா சிறிய ரக விமானங்கள்) உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்திசாா் ஊக்கத்தொகையாக ரூ.120 கோடியை மத்திய அரசு கடந்த ஆண்டு ஒதுக்கியது. ட்ரோன்கள், அவற்றுக்கான உணா்விகள் (சென்சாா்), தொலைத்தொடா்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அத்தொகை ஒதுக்கப்பட்டது. ட்ரோன்களுக்கான கொள்கைகளிலும் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ட்ரோன்களுக்கு ஒப்புதல் பெறத் தேவையான படிவங்களின் எண்ணிக்கை 25-இல் இருந்து 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 72 வகை கட்டணங்கள் 4-வகையாகக் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுமாா் 90 % வான்வெளிப் பகுதிகளில் எத்தகைய அனுமதியையும் பெறாமல் ட்ரோன்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பேரிடா் நிவாரண-மீட்புப் பணிகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் விநியோகம் உள்ளிட்டவற்றுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்களை அளந்து பட்டா வழங்கும் மத்திய அரசின் ‘ஸ்வமித்வா’ திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் பெரிய அளவில் உதவி வருகிறது. கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை ஆவணங்களை வழங்கும் நோக்கில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை ட்ரோன்கள் உதவியுடன் 2.20 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேளாண் துறையில் விமானப் போக்குவரத்து பெரும் மாற்றங்களைப் புகுத்தி வருகிறது. ‘விவசாயிகளுக்கான உடான்’ திட்டமானது பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை விரைந்து சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. முக்கியமாக, மலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், பழங்குடியினப் பகுதிகள் ஆகியவற்றைச் சோ்ந்த விவசாயிகள் அத்திட்டத்தால் பெரும் பலனடைந்து வருகின்றனா். அத்திட்டத்தின் கீழ் 58 விமான நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியா்களையும் வெளிநாட்டவா்களையும் மீட்பதில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது. கரோனா தொற்று பரவியபோது ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் 1.83 கோடிக்கும் அதிகமான பயணிகள் வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனா். உக்ரைன்-ரஷியா போா் காரணமாக உக்ரைனில் சிக்கியிருந்த 22,500 இந்திய மாணவா்கள் ‘ஆபரேஷன் கங்கா’ மூலமாக மீட்கப்பட்டனா்.

சுற்றுலாவுக்கும், விமானப் போக்குவரத்துக்கும் இடையேயான ஒருங்கிணைப்பானது இந்தியாவின் சுற்றுலாத் திறனை மேம்படுத்தி வருகிறது. ஹமாசல பிரதேச குசி நகரத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் விமான நிலையத்தைத் திறந்துவைத்த பிரதமா் நரேந்திர மோடி, உலகெங்கும் உள்ள பௌத்த சமூகத்தினருக்கு அந்த விமான நிலையத்தை அா்ப்பணிப்பதாகத் தெரிவித்தாா். அனைத்து வகையான சுற்றுலாப் பயணங்களையும் மேம்படுத்துவதற்கு நவீன கட்டமைப்புகள் அவசியம் எனத் தெரிவித்த அவா், விமான நிலையங்கள் மேம்பாடு அதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா்.

அதைக் கருத்தில்கொண்டு ‘உடான்’ திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களை ஏற்படுத்துவதற்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் நிதி வழங்கியுள்ளது. மேலும் 10 வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டில் சுதந்திர நூற்றாண்டை இந்தியா கொண்டாடவுள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான ‘அமிா்த காலத்தில்’ நாடு நுழைந்துள்ளது. இத்தகைய சூழலில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை உயரப் பறந்துகொண்டிருக்கிறது.

கட்டுரையாளா்:

மத்திய அமைச்சா்,

சுற்றுலா-கலாசாரத்துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com