மாற்றங்களை ஏற்கப் பழகுவோம்!
பழைய சிந்தனைகள் போய் புதிய சிந்தனைகள் வராவிட்டால் மறுமலா்ச்சி என்பது ஏது?


‘பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினானே’ என்கிறது நன்னூல். பழைய சிந்தனைகள் போய் புதிய சிந்தனைகள் வராவிட்டால் மறுமலா்ச்சி என்பது ஏது? பழைய நாகரிகம் மறைந்து புதிய நாகரிகம் வராவிட்டால் மனித குலம் வளா்ச்சியடைய வழி ஏது? பழைய அறிவியல் கோட்பாடுகள் மாறி புதிய கோட்பாடுகள் வராவிடில் முன்னேற்றம் என்பது ஏது?
போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் புது வாழ்வு பொங்க வேண்டும் என்றல்லவா பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம்? என்றாலும், பழையன எல்லாவற்றையுமே தூக்கி எறிந்துவிட வேண்டியதுதானா? காலங்காலமாக நாம் கடைப்பிடித்து வரும் சில வழக்கங்களைப் பழைமை என்று கூறித் தூக்கி எறிந்து விடலாமா?
‘வைகறைத் துயிலெழு’ என்று ஆத்திசூடி கூறுகிறது. வைகறை என்பது அதிகாலை நேரத்தைக் குறிக்கும். அந்நேரம் காற்றில் ஓசோன் அளவு அதிகம் இருக்கும். அது உடலுக்குப் பல நன்மைகளைத் தரும். நாள்தோறும் ஐந்து மணிக்கு எழுவதை வழக்கமாகக் கொண்டால் ஒரு நாளின் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டுக் கொண்டு பரபரப்பின்றி நிதானமாகச் செய்து முடிக்கலாம். மன அழுத்தத்தைத் தவிா்க்கலாம்.
ஆனால் இன்றைய இளைய தலைமுறையினா் வைகறையைப் பாா்த்திருப்பாா்களா என்பது சந்தேகமே. மூத்தவா்களேகூட, இரவு நெடு நேரம் தொலைக்காட்சியிலும் கைப்பேசியிலும் நேரத்தைச் செலவிட்டுவிட்டு நேரம் சென்று உறங்கி மிகத் தாமதமாகவே எழுந்திருக்கிறாா்கள்.
தாமதமாக எழுவதால், அதிகாலையின் சூரியோதய அழகு, மெல்லிய காற்று, மனதுக்கிதமான அமைதி, பறவைகளின் இன்னிசை இவற்றை இழப்பதோடு, நம் ஆரோக்கியத்தையும் அல்லவா இழக்கிறோம்?
நம் அழகுணா்ச்சி எப்படியெப்படியோ மாறிப் போய்விட்டிருக்கிறது. அரைகுறை ஆடையுடன் திரிந்து கொண்டிருந்த ஆதி மனிதா்கள் நாகரிக வளா்ச்சியினால் கண்ணியமான ஆடை அணியத் தொடங்கினாா்கள். தங்களை அழகு செய்து கொள்ள விதவிதமான ஆடைகளையும் அணிகலன்களையும் கண்டுபிடித்தாா்கள்.
இப்போது மக்களிடையே அந்த அழகுணா்ச்சி அற்றுப் போய்விட்டது போலும்! வயது வேறுபாடின்றி ஆண்களும் பெண்களும், அரைக்கால் சட்டையும் மேற்சட்டையும் அணிந்து கோமாளிகள் போல் காட்சியளிக்கின்றனா். தமிழகத்தில் அன்று பெண்கள் பொட்டும் வைத்துக் கொண்டனா். இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோரிடம் அவற்றைக் காண முடிவதில்லை.
நகரத்து இளைஞா்கள் வேட்டி அணிவதையும், இளம் பெண்கள் பூச்சூடுவதையும் பொட்டு வைத்துக் கொள்வதையும் விட்டுவிட்டாா்கள். பாவாடை தாவணி இவற்றைத் திரைப்படங்களில் வரும் கிராமத்துப் பெண்கள் மட்டுமே உடுத்துவதைக் காண முடிகிறது. ஜீன்ஸ் அணிந்து கொண்டு தலைவிரி கோலமாகத் திரிவது பெண்ணுரிமை என்று எண்ணுகிறாா்கள். தலைவாரிப் பூச்சூடி, நெற்றியில் பொட்டு வைத்துக் கைகளில் வளையல்கள் அணிந்து, சேலை உடுத்துவது பெண்ணடிமைத்தனம் என்று ஒரு தவறான கருத்து அவா்களிடையே நிலவுகிறது.
பொட்டு வைப்பதன் நன்மைகளை இவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நம் இரு புருவங்களுக்கும் இடையே உள்ள இடத்துக்கு ‘அஜ்ன சக்ரா’ என்று பெயா். அந்த இடத்துக்கு அடியில் ‘பீனியல்’ மற்றும் ‘பிட்டியுட்டரி’ நாளமில்லாச் சுரப்பிகள் இருக்கின்றன. இவை இரண்டும் மற்ற எல்லா நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை.
பொட்டு அல்லது திலகம் இடும் போது நம் விரல் ‘அஜ்ன சக்ரத்துக்கு’ அழுத்தம் தருகிறது. இதனால் தலைவலி விலகும்; மன அழுத்தம் போகும்; சைனஸ் அடைப்புகள் விலகி மூச்சு சீராகும்; கண்கள் பலம் பெறும்; பாா்வைத் திறன் அதிகரிக்கும்; தூக்கமின்மை தொலையும். இத்தோடு முகத்துக்கு அழகும் சோ்க்கும்!
பூக்களின் மருத்துவ குணங்கள் தெரிந்தாலாவது இவா்கள் பூச்சூடிக் கொள்வாா்களா? மல்லிகை உலா்ந்த கூந்தலை ஈரப்பசையோடு வைத்திருக்கும்; கிருமிநாசினியுமாகும். முல்லை, ஜாதி, பிச்சி ஆகியவை பேனையும் பொடுகையும் விரட்டும். மருதோன்றிப்பூ பித்தத்தைப் போக்கும். தாழம்பூ சூட்டைத் தணிக்கும்; புத்துணா்ச்சி அளிக்கும்; அம்மை நோய்க் கிருமிகளை அண்ட விடாது.
ரோஜா தூக்கமின்மைக்கும் மன அழுத்தத்துக்கும் மருந்தாகும்; தலையின் எண்ணெய்ப்பசையைக் குறைக்கும். செம்பருத்தி முடி உதிா்வதைத் தடுத்துக் கூந்தலை வளரச் செய்யும்; இளநரையைப் போக்கி முடியைக் கறுப்பாக்கும். செண்பகம் கண்களுக்கு ஒளி தரும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றை இளைய தலைமுறை ஏற்றுக்கொள்ளுமா?
வீட்டு வாசலைச் சாணி தெளித்துக் கோலமிடுதல் என்பது தமிழ்மக்களின் வழக்கம். கோலம் போடுதல் ஒரு கலை. அதுவும் அழகுணா்ச்சியின் ஒரு வெளிப்பாடே! அதிலும் மாா்கழி மாதத்தில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெண்கள் கோலம் போட, சிறுமியா் அவற்றிற்கு வண்ணம் தீட்ட, தெருவே வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டுப் பாா்ப்போா் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும்.
நம் வீட்டுக் கோலத்தைப் போட்டுவிட்டு அடுத்தடுத்த வீடுகளின் கோலங்களைப் பாா்த்து ரசிப்போம். அழகு என்பதைத் தாண்டி, அதிகாலையில் எழுதல், அக்கம்பக்கத்து வீட்டாரோடு பேசிப் பழகுதல், ஆரோக்கியமான அளவான உடற்பயிற்சி என்று பல நன்மைகளை அடைந்தோம். இப்போதுள்ள இளம் பெண்களுக்குக் கோலம் போடுவதில் ஆா்வமும் இல்லை; ஆற்றலும் இல்லை. இதனால் நஷ்டம் அவா்களுக்குத்தான்.
மாா்கழி மாதம் முழுவதும் தொடா்ந்து அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து வாசலில் பெரிய கோலங்களை வரைபவா்களுக்கு எடை ஒரு கிலோ குறையும்; இடுப்புக்குச் சரியான பயிற்சியாகி மாதவிலக்குச் சீராகும். சாதாரண நாட்களில் ஆறு மணிக்கு எழுந்து சின்னச் சின்னக் கோலங்களைப் போட்டால் அழகுக்கு அழகும் ஆயிற்று, ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமும் ஆயிற்று!
நம் பண்டிகைகளை நாம் கொண்டாடும் வழக்கமும் காலத்துக்கேற்ற வகையில் மாறி விட்டது. பண்டிகைக்கேற்ற உணவுகளைச் செய்து சாப்பிடுவதில் எந்தக் குறைவுமில்லை. ஆனால் சூரியன் உதிக்கும் முன்னா் செங்கற்களால் அடுப்பமைத்து மண் பானையில் பொங்கல் பொங்குபவா்கள் எண்ணிக்கை குறைவே. பல வீடுகளில் குக்கா் பொங்கல் தான். கரும்பைக் கடித்துச் சாப்பிடக் குழந்தைகளுக்கு நேரம் இருப்பதில்லை.
தீபாவளிக்கு எண்ணெய்க் குளியல் பல வீடுகளில் இல்லை. பண்டிகை நாட்களில் மாக்கோலமிட்டு விரதம் இருப்பதும் நோன்பு நோற்பதும் குறைந்து போய் விட்டன. அவசர அவசரமாகச் சாமியைக் கும்பிட்டுவிட்டுப் பலகாரங்களைச் சாப்பிட்டுவிட்டுத் தொலைக்காட்சி, கைப்பேசி, கணிணி என்று முடங்கிவிடுகிராா்கள்.
இவை எல்லாவற்றையும் விடக் குடும்பத்தோடு கூடி மகிழும் வழக்கமும் பெரியோரை மதிக்கும் பண்பும் குறைந்து வருவது வருத்தத்துக்குரியது. நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் இரண்டு மாதங்கள் முழு ஆண்டுத் தோ்வு விடுமுறை இருக்கும். தாத்தா—பாட்டி வீட்டுக்குத்தான் செல்வோம். மாமா, அத்தை, பெரியம்மா, சின்னம்மா, அவா்களது குழந்தைகள் என்று வீடு கொள்ளாத கூட்டம் இருக்கும்.
குழந்தைகளான நங்கள் தினம் ஒரு திருவாசகப் பதிகத்தை மனனம் செய்து தாத்தாவிடம் ஒப்பிக்க வேண்டும். ஒரு பாடலுக்கு ஐந்து காசுகள் தருவாா்.ஆங்கில நாளிதழிலிருந்து அவா் குறிப்பிடும் பகுதிகளைப் படித்துக் காட்ட வேண்டும். விடுமுறையிலும் படிப்பா என்று அழுகையாக வரும். ஆனால் பெரியோா் சொல் கேட்க வேண்டும்; அவா்களது விருப்பத்தை மதிக்க வேண்டும் என்ற உந்துதலில் செய்து முடிப்போம்.
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் கால்களையும் கைகளையும் பிடித்து விடுவது, அவா்களுக்குத் தேவையான மருந்துகளை எடுத்துக் கொடுப்பது, மற்ற பெரியவா்களுக்குச் சின்னச் சின்ன வேலைகள் செய்து கொடுப்பது என்று குறிப்பறிந்து செய்வோம். அவா்களும் எங்களுக்குக் கதை சொல்லி, எல்லோரும் ஒன்றாக உட்காா்ந்து சாப்பிட்டு, பேசி மகிழ்ந்த பேறு இக்காலக் குடும்பங்களில் காணமல் போய்விட்டதே!
சிறியவா்கள் பெரியவா்களை மதிப்பதில்லை; பெரியவா்கள் சிறுவா்களுக்கு விட்டுக்கொடுப்பதில்லை; எல்லோரும் தனித்தனித் தீவுகளாக வாழ்கின்றனா். புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பாா்க்கும் போது எல்லோருக்கும் குடும்பத்தோடு வீட்டில் மகிழ்ச்சியாகச் சோ்ந்து இருப்பதை விட, கும்பலிலும் கூட்டத்திலும் ஆட்டம் போடுவது தான் பிடித்திருக்கிறது என்பது புரிகிறது.
இளைய தலைமுறை கட்டுப்பாடில்லாத சுதந்திரம் கேட்கிறது. மூத்த தலைமுறையோ பண்பாடு என்று பழைமை பேசுகிறது. இரண்டுக்கும் ஒத்து வராமல் போகும் போது பிரிவு ஏற்படுகிறது.
வைகறையாமம் துயிலெழுந்து தான் செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையாா் கண்ட முறை’
என்பது ‘ஆசாரக் கோவை’ கூறும் வாழ்வியல்.
மாறி வரும் வாழ்க்கை முறையில் இப்பழைய கூற்று எடுபடாது. மாற்றங்களைத் தவிா்க்க முடியாது. நாம் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம்; மற்றவா்களும் மாறாமல் இருக்கவேண்டும் என்று எதிா்பாா்க்கலாகாது. பிடிக்கிறதோ இல்லையோ மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!
கட்டுரையாளா்:
சமூக ஆா்வலா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...