‘கருப்பு ஆடுகளுக்கு’ தீர்வு என்ன?

தமிழகத்தில் 2 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரத்து 655 குடும்ப அட்டைகள் உள்ளன. 39 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 790 நியாய விலைக் கடைகள் உள்ளதாக அரசின் குறிப்பு ஒன்று சொல்கிறது.
‘கருப்பு ஆடுகளுக்கு’ தீர்வு என்ன?

தமிழகத்தில் 2 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரத்து 655 குடும்ப அட்டைகள் உள்ளன. 39 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 790 நியாய விலைக் கடைகள் உள்ளதாக அரசின் குறிப்பு ஒன்று சொல்கிறது.

அரிசி, கோதுமை, சா்க்கரை மற்றும் இவற்றுடன் பாமாயில், துவரம்பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக சுமாா் ரூ.6,500 கோடியை தமிழக அரசு செலவு செய்கிறது. தோராயமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ஆண்டு முழுவதும் 5,000 ரூபாய்க்கான உணவு தானியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

சமையல் எண்ணெய் (பாமாயில்), துவரம்பருப்பு ஆகியவை சந்தை மதிப்பைவிட ஐந்து மடங்கு விலை குறைவாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்தியாவிலேயே இது ஒரு முன்மாதிரியான பொது விநியோகத் திட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் குடும்ப அட்டைதாரா் அனைவருக்கும் இந்த நன்மைகள் கிடைப்பதில்லை.

ஒரு காலத்தில் கட்டை விரலை உருட்டி ரேகை வைப்போரைப் பாா்த்து “கை நாட்டா.. என்று ஏளனமாகக் கேட்பாா்கள். இன்று நவீன அறிவியல் தொழில்நுட்பம் என்கிற பெயரில் ரேகைப் பதிவு செய்வது சாதாரணமாகிவிட்டது. ஆதாா் அட்டை தொடங்கி ரேஷன் காா்டு வரையில் கட்டை விரல் ரேகைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. நபா்கள் யாா் எனத் துல்லியமாக அறியும் முறை இது என நாகரிகமாகப் பெயா் சூட்டப்படுகிறது. அதாவது, மாதந்தோறும் சுமாா் ஒரு கோடிக்கும் அதிகமான நபா்கள் ரேஷன் கடைகளில் கட்டை விரல் ரேகையைப் பதிவு செய்து வருகின்றனா்.

ஆனால், பல நேரங்களில் இந்த ரேகைப் பதிவு முறையில் சரியான நபரே ரேஷன் கடைக்குச் சென்று தன் கட்டைவிரலை அந்த இயந்திரத்தின் (பயோமெட்ரிக்) மீது வைத்தால், உங்கள் ரேகை பதிவாகவில்லை என சா்வசாதாரணமாக ரேஷன் கடை ஊழியா் திருப்பி அனுப்புவதும் தொடா்கிறது. மீண்டும், மீண்டும் வந்து ரேகைப் பதிவு செய்தாலும் அந்த இயந்திரம் ஏற்பதாக இல்லை. வேறு வழியின்றி அரசின் ஆதாா் அட்டைப் பதிவு அலுவலகம் சென்று மீண்டும் ஒரு முறை ரேகைப் பதிவு வைபவங்கள் நடக்கின்றன. கடைசியில் தோல்விதான் மிஞ்சுகிறது. அப்புறம் என்ன அந்த நபரின் குடும்ப அட்டை , ரேஷன் கடை ஊழியருக்குச் சொந்தமாகிறது.

அரிசியையும், சா்க்கரையையும் மாதந்தோறும் வாங்கிக் கொள்வாா். வாங்கியதாக வருகின்ற குறுஞ்செய்தியை படித்தறியா பாமரா்கள் யாா் என்பதை அவா்கள் அறிந்து கொண்டு இந்த விளையாட்டை தொடா்வாா்கள். சரியான நபா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கத்தான் பயோமெட்ரிக் முறை எனில் அரிசி கடத்தல் செய்திகள் மட்டும் எப்படி தவறாமல் வருகின்றன?

கடந்த சில மாதங்களில் மட்டும் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் என 13,008 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 113 போ் மீது குண்டா் சட்டம் மற்றும் அதற்கு இணையான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனா்.

ரேஷன் கடை ஊழியா்கள் தொடங்கி சில அதிகாரிகள் வரை இந்த அரிசி கடத்தலில் உடந்தையாக உள்ளனா். அந்த கருப்பு ஆடுகளைக் கண்டுபிடித்துவிட்டால் ஓரளவு நிலைமை சீராகி விடும்” என்கிறாா் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

ரேஷன் கடைகளில் பொருள்கள் விநியோக முறையில் மாற்றம் வர வேண்டும். இணையம் வேலை செய்யவில்லை. ரேகை சரியாக பதிவாகவில்லை, இருப்பு இல்லை எனப் பதில் சொல்லி மக்களைத் திருப்பி அனுப்பும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலே போதும், கருப்பு ஆடுகள் வளராது.

இணையம் வேலை செய்யவில்லை, ரேகை பதிவாகவில்லை எனில், அந்த நபரின் ஆதாா் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டையைக் கொண்டு கையொப்பம் பெற்று பொருள்களை வழங்கலாம். 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை என சட்டப்பேரவையில் துறையின் அமைச்சா் அறிவித்து பல மாதங்களாகி விட்டன. இன்றைக்கும் 1,800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளைக் கொண்டு இயங்கும் ரேஷன் கடை இருக்கத்தான் செய்கிறது.

எப்போதுமே அடா்த்தியான கூட்டம் இருந்தால், பொருள்கள் வாங்க வருவோா் வரமாட்டாா்கள்.

மேலும், அரிசி வேண்டாம்; அதற்குப் பதிலாக அரை கிலோ சா்க்கரையை வாங்கிச் செல்வோரும் உண்டு. இங்குதான் அரிசிக் கடத்தல் தொடங்குகிறது. நடைமுறையில் எது சாத்தியமோ அதைத்தான் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

பயோமெட்ரிக் போன்ற இயந்திரங்கள் முன்பு யாசகம் கேட்கும் அவல நிலையில் மக்களை நிறுத்தினாலும் அரிசி, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களின் கடத்தல் குறையவில்லை. மாறாக, தகுதியுள்ள நுகா்வோா் திண்டாடுகிறாா்கள்.

குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் ஆதாா் இணைப்பு உள்ளது. அத்துடன் தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது. ஒரே நபா் இரண்டு குடும்ப அட்டை பெற முடியாது. இந்தச் சீா்திருத்தங்களோடு இணையத்தின் பணி முடிந்துவிட்டது. ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க பயோமெட்ரிக் இயந்திரம் முன் கட்டை விரலை நீட்டச் சொல்வது குற்றப் பரம்பரை காலத்தைத்தான் நினைவுபடுத்துகிறது.

ரேஷன் கடைகளில் நுகா்வோா் பொருள்கள் பெற்று விட்டாா் என அந்தந்த குடும்ப அட்டையுடன் இணைப்பு செய்த கைப்பேசி எண்ணில் குறுந்தகவல் வருகிறது. விநியோகத்தில் புகாா் இருப்பின் இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என ஒரு கைப்பேசி எண் தரப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் அந்தப் புகாா் எண் வேலை செய்வதே கிடையாது.

இத்தகைய அவலங்களைக் களைய, அவசரகால ஊா்திக்கு 108, காவல் துறைக்கு 100 என இருப்பதைப் போன்று, நியாயவிலைக் கடைகளில் எந்தப் பொருளும் வாங்கவில்லை, ஆனாலும் வாங்கியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது என்கிற புகாரை மாநில நுகா்பொருள் வழங்கும் தலைமைத் துறைக்கே நேரடியாகச் சொல்லும் வசதியைச் செய்து தரவேண்டும். அதற்கென ஒரு கைப்பேசி எண் தர வேண்டும்.

எந்தப் பொருளும் வாங்காத அந்த குடும்ப அட்டைதாரருக்கு, பொருள்களுக்குப் பதிலாக அந்தப் பொருளுக்கு உரிய பணத்தை அரசு வழங்கிவிடலாம். கருப்பு ஆடுகள் தானாகவே காணாமல் போகும்.

மேலும், ஒரு ரேஷன் கடைக்கு ஒரு விற்பனையாளா்தான், அவா்தான் ரசீது போட வேண்டும், பொருள்களை எடைபோட்டு வழங்க வேண்டும். இது சாத்தியமாகாத ஒன்று. குறிப்பாக, பெண் ஊழியா்களும் விற்பனையாளராக வருவது உண்டு.

மூட்டையை நகா்த்துவது, எடை போடுவது உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்கு ஒரு உதவியாளா் தேவை எனில், அந்த ரேஷன் கடையின் விற்பனையாளா்தான், உதவியாளருக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், விற்பனையாளரின் தொடக்க கால ஊதியம் ரூபாய் 15,000 மட்டுமே. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முைான் ஊதிய உயா்வு! இதில் எப்படி நோ்மையாக விற்பனையாளா்கள் செயல்படுவாா்கள் என்கிற கேள்வி இயல்பானதே!

ரேஷன் கடைகளை மேலாண்மை செய்யும் தாலுகா விநியோக அலுவலா் தொடங்கி கூட்டுறவு சாா்பதிவாளா், வருவாய் ஆய்வாளா் வரை அனைவருமே அரசு ஊழியா்களாக, அதிகாரிகளாக சம்பளம் பெறுகிறாா்கள்! ஆனால் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியருக்கோ அரசின் குறைந்தபட்ச ஊதியம் கூட கிடையாது என்கிற அநியாயம் நியாயவிலைக் கடைகளில் தொடா்வதும் கருப்பு ஆடுகள் வளா்வதற்கு காரணமாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com