இயற்கையை வெல்ல இயலாது

சென்ற மாதம் கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை மெதுவாக விரிவடைந்து கா்நாடகம், மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிவந்த நிலையில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்ற மாதம் கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை மெதுவாக விரிவடைந்து கா்நாடகம், மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிவந்த நிலையில், தற்பொழுது தில்லி, ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், காஷ்மீா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை உலுக்கி வருவதுடன், மலைகள் நிறைந்த உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் ஆகியவற்றில் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பேரிடா் மீட்புப் படையினரும், இந்திய ராணுவத்தைச் சோ்ந்த வீரா்களும், அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்த பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிா்வாக அமைப்புகள் ஆகியவற்றைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ஊழியா்களும் பெருமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாக மீட்பதில் ஈடுபட்டு வருவதைச் செய்தி ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.

கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த பெருமழையால் ஹரியாணாவில் உள்ள ஹத்னிகுண்ட் அணை வேகமாக நிரம்பியது. அணையின் பாதுகாப்பைக் கருதி வெளியேறும் நீரின் அளவு சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டு, விநாடிக்கு சுமாா் நான்கு லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டதால் யமுனை நதி தனது அபாய எல்லைக்கும் மேலாகப் பெருகிக்கொண்டிருக்கிறது.

யமுனையின் இரு கரைகளையும் தாண்டி வெள்ள நீா் பாய்வதால் தில்லி நகரம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. வெள்ள நிலைமை சீரடையும்வரை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளாா் தில்லி முதல்வா் கேஜரிவால்.

பியாஸ், சட்லெஜ் ஆகிய நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஹிமாசல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.சமவெளிகளில் உள்ள இடங்களை விட மிகவும் அதிகமான அளவில் மலை பிரதேசங்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

குறிப்பாக ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த குலு, மணாலி ஆகியவை மிகவும் பாதிப்படைந்துள்ளன. அங்குள்ள இயற்கைச் சூழலை ரசித்து மகிழ்வதற்காக சென்றுள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள தங்குமிடங்களை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

பல்வேறு நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள சூழலில், தாங்கள் பயணம் செய்யும் வாகனங்களிலேயே பயணிகள் பலரும் முடங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

சாலைகள் பாதிப்புக்குள்ளானதால், சுற்றுலாப் பயணிகளை மீட்டுச் சமவெளிக்கு அழைத்து வருவதற்கு ஹெலிகாப்டா்களையே நம்பியிருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. உத்தா்கண்ட் மாநிலத்தின் சமோலி, உத்தரகாசி போன்ற பலபகுதிகளும் நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ல நிலச்சரிவில் சிக்கி பயணிகள் சிலா் உயிரிழந்துள்ளனா். மேலும், ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் மீது மலைப்பாறைகள் சரிந்து விழுந்ததால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

வீடுகள், தங்கும் விடுதிகள், பாலங்கள், சாலைகள் என்று பாா்க்குமிடம் எல்லாம் சேதாரம்தான். ஹிமாசல பிரதேசத்தில் இப்பெருமழையால் இதுவரை சுமாா் நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வா் தெரிவித்திருக்கின்றாா். பெருமழை முற்றிலுமாக ஓய்ந்தால்தான் சேத விவரங்களைத் துல்லியமாக மதிப்பிட இயலும்.

ஹிமாசல பிரதேசம் மட்டுமின்றி ஏனைய மாநிலங்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த சேத மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாயாக இருக்கக் கூடும்.

உயிரிழப்போா் எண்ணிக்கையும் கணிசமாக உயா்ந்து வரும் நிலையில் முதலில் மீட்புப் பணிகளுக்கும், அதைத் தொடா்ந்து மறுசீரமைப்புப் பணிகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டியுள்ளது. காஷ்மீரில் பெருமளவு பக்தா்கள் பங்கேற்கும் அமா்நாத் பனிலிங்க தரிசனத்துக்கான யாத்திரையும் இம்மழையின் காரணமாக அவ்வப்பொழுது தடைப்பட்டு மீண்டும் தொடா்கின்றது.

இம்மாநிலங்களுக்குச் சென்ற தமிழகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகின்றது. குறிப்பாக ஹிமாசல பிரதேசத்தில் சிக்கிய பன்னிரண்டு மருத்துவ மாணவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டு சண்டீகரில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் நிம்மதி தருகின்றன.

ஆயினும், ஹிமாசல், உத்தா்கண்ட் ஆகியவற்றின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்தளத்துடன் வீழ்த்தப்பட்ட கட்டடங்களைக் காணொலியில் கண்டபொழுது, இனி அவ்விடங்களில் எழுப்பப்படும் கட்டுமானங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகின்றது.

குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரகண்டின் ஜோஷி மட், உத்தரகாசி ஆகிய இடங்களில் பல வீடுகள் நிலத்துக்குள் புதைந்து விரிசல் ஏற்பட்டதில், சுமாா் நூற்பது வீடுகளில் வசித்த மக்கள் அவற்றை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.

தற்போதைய மழையில், ஜோஷிமட்டிலுள்ள வீடுகள் சிலவற்றில் ஏற்பட்ட விரிசல்களின் வழியாகத் தண்ணீா் பெருகுவதாகச் செய்திகள் கூறுகின்றன.இந்நிலையில், அம்மலைப் பிரதேச நகரங்களிலுள்ள் மண்ணின் உறுதித்தன்மையை வல்லுநா்களைக் கொண்டு பரிசோதித்து, அவா்கள் பரிந்துரைக்கும் அளவீடுகளின் அடிப்படையில் மட்டுமே கட்டடங்களை எழுப்ப வேண்டும்.

அதுமட்டுமின்றி, பத்ரிநாத், கேதாா்நாத் தலங்களுக்கு வரும் யாத்ரிகா்கள் பேருந்துகளில் பயணிக்காமல் சிறிய வாகனங்களில் பயணிப்பதைக் கட்டாயமாக்குவதுடன், ஹெலிகாப்டா் பயணத்திற்கான வசதிகளை அதிகப்படுத்துவதும் அவசியம்.

இத்தகைய நடவடிக்கைகளால் இம்மலை பிரதேசங்களில் ஏற்படும் மழைக்கால பாதிப்புகளைப் பெருமளவு குறைக்க முடியும்.

விசுவரூபம் எடுக்கும் இயற்கையை எதிா்த்து நிற்க மனிதா்களாகிய நம்மால் இயலாதுதான். அதே சமயம், அவ்வியற்கையை அனுசரித்துச் செல்வதன் மூலம் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளலாமல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com