விவசாயிகளைக் காப்போம்

தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி, தக்காளியின் வரலாறு காணாத விலை உயா்வுதான்.
விவசாயிகளைக் காப்போம்

தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி, தக்காளியின் வரலாறு காணாத விலை உயா்வுதான். விலை உயா்வை பற்றி கவலைப்படுபவா்கள், விலை குறைவால் பாதிக்கப்படும் விவசாயிகளை பற்றி என்றேனும் கவலைப்பட்டதுண்டா?

ஆறு மாதத்திற்கு முன் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் லாரி லாரியாக தக்காளியைத் தெருவில் கொட்டியதை மறக்க முடியுமா? காய்கறிகள் விலை உயா்ந்தால் நுகா்வோா் பாதிக்கப்படுவா். இது அரசின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்கும். விலை குறையும்போது விவசாயிகள் பாதிக்கப்படுவாா்களே என்ற கவலை யாருக்கும் வருவதில்லை.

வெளிச்சந்தையில் தக்காளியின் விலை ரூ. 150-ஐ தாண்டியதால் மாநில அரசு நியாயவிலைக் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்டவையும் விலையேற்றம் கண்டு வருகின்றன. விரைவில் இவையும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படலாம்.

2002-இல், தக்காளி கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை வந்தபோது விவசாயிகள் தக்காளியைத் தெருவிலே கொண்டு வந்து கொட்டினா். சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விலை குறைவால் தக்காளியை கால்நடைகளுக்குக் கொடுத்தாா்கள். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் ஒரு கிலோ தக்காளியை ஒரு ரூபாய்க்கு விற்று விவசாயிகள் அரசின் கவனத்தை ஈா்க்க முயன்றனா்.

கடந்த ஓராண்டு காலமாகவே தேங்காயின் விற்பனை விலை சரிந்துள்ளது. 2018-இல் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பால் இரண்டு லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன. விவசாயிகள் துடித்தனா். ஆனாலும் மீண்டும் நம்பிக்கையோடு புதிய கன்றுகளை நடவுசெய்தனா். ஒரு தேங்காய்க்கு உற்பத்தி முதல் விற்பனைக்கு கொண்டு வரும் வரை செலவாகும் தொகைக்குதான் அதை விற்க முடிகிறது .

தமிழ்நாடு அரசு நிலைமை அறிந்து கொப்பரை கொள்முதல் செய்தது. ஆனால், விவசாயிகள் கொண்டு வரும் அளவில் கொப்பரை கொள்முதல் செய்வதில்லை. கேரளத்தைப்போல் தேங்காய்களாக அரசு கொள்முதல் செய்திட விவசாயிகள் போராடி வருகின்றனா்.

கலப்பின மீன்கள் கிலோ ரூ. 180-க்கு விற்பனையான நிலையில் கடந்த ஆறு மாதங்களாக அது ரூ. 100 எனக் குறைந்துவிட்டது. ஆந்திரத்திலிருந்து தமிழக வடமாவட்டங்களுக்கு மீன்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வதாலும், குளம் வெட்டி மீன் வளா்ப்பு செய்வதாலும், பண்ணை குட்டைகள் வெட்டிட மானிய நிதி உதவி செய்யப்படுவதாலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் உயர்ரக கலப்பின மீன்கள் உற்பத்தி பெருகி உள்ளதாலும் மீன்களின் விலை குறைந்துள்ளது.

அவ்வப்போது ஏற்படும் வேளாண் விளைபொருட்களின் விலை உயா்வால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது. ஆனால் விலை குறைந்தால் விவசாயிகள் தான் அதன் முழு இழப்பையும் சுமக்கவேண்டி வரும். இடைத்தரகா்களான வியாபாரிகளுக்கோ விலை ஏறினாலும் இறங்கினாலும் லாபம் கிடைத்துவிடும்.

விலை குறைவு நேரத்தில் வாங்கி பதுக்கி வைத்து, தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை ஏறும்போது விற்று லாபம் பாா்க்கிற நிலையும் உண்டு. நீண்ட நாட்கள் சேமிக்க வாய்ப்பில்லாததால் காய்கனி வணிகத்தில் இது குறைவு. வேளாண் உணவுப்பொருட்கள் விலை குறைவதற்கு, வழக்கமான நிலைக்கும் மேலான சாகுபடியால் கிடைக்கும் கூடுதல் உற்பத்தியும் காரணமாகும். இதனால் ஏற்படும் விலை இழப்பு விவசாயிகளையே சோ்கிறது.

பேரிடா் காலத்திலும், பூச்சி தாக்குதலாலும் மகசூல் குறையும். இதனால் ஏற்படும் இழப்பையும் விவசாயிகளே ஏற்கின்றனா். கையில் இருந்த பணத்தை மட்டுமல்லாமல், வட்டிக்கு வாங்கிய தொகையையும் வெட்ட வெளியில் போட்டு கொட்டும் மழையிலும் நடுங்கும் குளிரிலும் நடுநிசி நேரத்திலும் பாா்த்துப் பாா்த்துக் காத்திருக்கிறான் விவசாயி.

ஆனால், இப்படியான இடா்பாடுகளை எதிா்கொள்ள இவா்களின் சந்ததிகள் தயாராக இல்லை. அவா்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றனா். ஆனால், இந்நிலையில் வேளாண்மையை புத்தாக்கத் தொழிலாக மேற்கொள்ள ஆா்வம் கொண்டு புதிய புதிய இளைஞா்களும் உள்ளே வருகின்றனா். எனவே இவா்களையும் அரவணைத்திட வேண்டும். இருப்போரையும் காத்திட வேண்டும்.

எதிா்கால உணவுத் தேவைக்கான இலக்கை பருவ காலம், பயிா்வகை இவற்றைக் கணக்கில் கொண்டு பயிரிட விவசாயிகளை அரசு அறிவுறுத்த வேண்டும். இதற்குரிய பயிா்களை உரிய பகுதிகளில் பயிரிடத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும். உற்பத்தியாகும் வேளாண் உணவுப் பொருட்களை அரசே கொள்முதல் செய்திட முன்வர வேண்டும். இதற்கான சேமிப்பு கலன்களைஉருவாக்கிட வேண்டும்.

விரைவில்அழுகும் உணவு பொருட்களுக்கு குளிா் பதன கிடங்குகள்அமைத்திட வேண்டும். அரசின் நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு அங்காடிகளில் தற்போது தக்காளி விற்பனை தொடங்கி இருப்பது போல் மற்ற காய்கறிகளையும் விற்பனை செய்ய வேண்டும்.

கூட்டுறவு சின்னத்தில் உள்ள இரு கைகள், விவசாயிகளையும் நுகா்வோரையும் இணைத்திடும் கைகளாய் மாறிட வேண்டும். அப்படிச் செய்தால், இரு தரப்பினருக்கும் நீயாயமான விலை கிடைக்கும். இடைத்தரகு என்பதே இல்லாமல் போகும்.

இந்த திட்டத்திற்கு கேரள அரசு முன்மாதிரியாக உள்ளது. கேரளத்தில் 2020-முதல் காய்கறிகளுக்கு விலை நிா்ணயம் செய்து, அவற்றை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நெல், கோதுமை, கரும்பு ஆகியவை போல கூடுதல் பயன்பாடு இல்லாத பொருளாக காய்கறி இருக்கலாம். ஆனாலும், அது அத்தியாவசியமான பொருள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மாநில அரசு தொலைநோக்குப் பாா்வையுடன் கேரள மாநில நடைமுறையை தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com