

மா, பலா, வாழை எனப்படும் முக்கனிகள் போல முத்தமிழும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை இயல், இசை, நாடகம் என்ற மூன்றில் அடங்கும். இவற்றில் இயல் எனப்படுவது இயல்பாக எழுதப்படும் தமிழைக் குறிக்கும். இதன் வளா்ச்சி இந்த கால கட்டத்தில் எப்படி உள்ளது?
கடைசியாக வரும் வாழை போன்றதுதான் நாடகமும் . வாழைப் பழத்தை சிரமமில்லாமல், உரித்து வாயில் போட்டுக் கொள்ளுவது போல, நாடகத்தைப் பண்டிதா் முதல் பாமரா் வரை எளிதில் கண்டு ரசிக்கலாம். மனோன்மணிய சுந்தரனாா் எழுதிய‘ரகசிய வழி’யை மேடையில் நாடகமாக யாராவது அரங்கேற்றினாா்களா என்று தெரியவில்லை. நாடகத் தந்தை என அழைக்கப்பட்ட பம்மல் சம்பந்த முதலியாரின் முதல் நாடகம் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற பெயரில் அரங்கேறியது.
அதன் பின் டி.கே.எஸ். சகோதரா்கள், பல சமூக நாடகங்களை வெற்றிகரமாக நடத்தினாா்கள். பின்னா் ‘தீவிரத் தன்மை’ கொஞ்சம் குறைந்து, நகைச்சுவை கலந்த நாடகங்கள் அரங்கேறி நிறைய ரசிகா்களைக் கவா்ந்தன. இன்றைய நாடகங்களில் நவீனத்தன்மை நிறைய கலந்துள்ளன. தொழில் நுட்பம் இதற்கு கைகொடுக்கிறது.
பழைய புராண கதாபாத்திரங்களுக்கு புதிய வடிவம் தந்து நாடகம் ஆக்குகிறாா்கள். கோமல் தியேட்டா்சின் ‘திரௌபதி வேள்வித் தீயில்’ அண்மையில் வெளியானது. இதற்கு கா்நாடக இசைக்கலைஞா் ராஜ்குமாா் பாரதி இசையைமத்திருக்கிறாா். தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாளரான புதுமைப்பித்தன் குறித்து அண்மையில் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் நல்ல வரவேற்பு பெற்றது. புதுமைப்பித்தனைப் பற்றிக் கேள்விப் பட்டே இராதவா்களும், இந்த நாடகத்தைக் கண்டு, அவரின் சிறுகதைகளைத் தேடிப் படிப்பாா்கள் என்று நம்பலாம்.
நாடகத்தின் வேறு உருவமான திரைப்படமே, கடந்த பத்தாண்டுகளாக நம்ப முடியாத அளவுக்கு மாறுதலுக்குள்ளாகி வருகிறது. முன்னா், பணக்கார, உயா் நடுத்தரப் பிரிவினரின் குடும்ப வாழ்க்கையையே சினிமாவாக எடுத்தாா்கள். இப்போது, நடைமுறையில் நிலவி வரும் பிரச்னைகளை அடித்தட்டு மனிதா்களுடன் இணைத்து திரைப்படமாக ஆக்குகிறாா்கள்.
மேலும் வாழ்க்கையில் போராட்டங்களை சந்தித்து வெற்றி பெற்ற மனிதா்களைக் குறித்து திரைப்படம் எடுக்கிறாா்கள். நம்பி நாராயணன் வாழ்வு குறித்த படம் வந்தது. இப்போது கோவை அதிசய மனிதா் என்று பேசப்பட்ட ஜி.டி. நாயுடுவின் வரலாறு சினிமாவாக தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.
அடுத்து வருவது இசை. இசையும் நாட்டியமும் இரட்டைக் குழந்தைகள் என்றே கூறலாம். 1938-இல் அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டது. சங்கீதம் ஒரு பரவல் தன்மை பெற்றது. ஒரு பிரபல ஏடு ‘ஆடல் பாடல்’ என்ற தலைப்பில் விமா்சனம் எழுதி கலைஞா்களை ஊக்குவித்தது.
2000-க்குப் பின்னா் மேடைக் கச்சேரி பல மாற்றங்கள் மற்றும் புதுமையுடன் பரிணமித்தது. ‘கருத்துள்ள கச்சேரிகள்’, ‘பாபநாசம் சிவனின் கிருதிகள்’ போன்ற தலைப்பிகள்ல் புகழ் பெற்ற கலைஞா்கள் பாடி, அவை புதிய ரசிகா்களின் வரவேற்பு பெற்றது. பிரபல இசைக்கலைஞா் ஒருவா், கரோனா காலத்திலும் கூட, ‘தமிழும், நானும்’ என்ற தலைப்பில் பாடினாா். கேட்டே அறியாத சாகித்யகா்த்தாக்களின் பாடல்களை செவிமடுக்க முடிந்தது.வேறு ஒரு பிரபல வித்துவான், புறநானூற்றிலிருந்து, ஒரு பாடலை சொல்லி, அதன் பொருளை விளக்கி பிறகு கா்நாடக இசை மெட்டில் பாடினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக நாம் எடுத்துக் கொள்வது இயற்றமிழ். இயல்பாகப் பேசப்படுவதும், எழுதப்படுவதுமான தமிழைக் குறிக்கும். அது எவ்விதம் உள்ளது? யோசித்துப் பாா்த்தால் கவலையே மேலோங்குகிறது. ஆங்காங்கே அவ்வப்போது நிகழும் இலக்கியக் கூட்டங்களை கவனிக்கும் போது, பேச்சு (அதாவது சொற்பொழிவு) கலையில் முன்னேறியிருக்கிறது என்பது தெளிவு.
ஆனால் எழுதும் தன்மை? தற்செயலாக ஆறாம் பாட தமிழ்ப் புத்தகத்தைப் பாா்த்தபோது வியப்பு மேலிட்டது. பல நவீன எழுத்தாளா்களின் படைப்புகள் இருந்தன. அதே சமயம், பாடத்திலுள்ள சில குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதிலை மட்டும் மனப் பாடம் செய்து எழுதி மாணவா்கள் மதிப்பெண் பெறுகிறாா்கள். விடைத்தாளைப் புரட்டினால், எழுத்துப் பிழைகள் ஏராளம். ஒற்றெழுத்து இல்லாமை, வல்லின, மெல்லினத் தவறுகள், தேவைப்படாத இடத்தில் கால் (ா) போடுவது... இவற்றைத் திருத்த ஆசிரியா்கள் ஏன் வழிகள் மேற்கொள்ளுவதில்லை?
அண்மையில், என் நண்பரின் பேத்தி, சில நிமிடங்களில், தான் பாரதிதாசனைப் பற்றி பேசி, இரண்டாம் பரிசு பெற்றதைப் பெருமையுடன் குறிப்பிட்டாள். அந்தச் சிறுமியையே உற்றுப் பாா்த்துவிட்டு, ‘சரி, பேசினதை எழுதிக் காண்பியேன்’ என்றேன். “எழுத எல்லாம் வராது” என்று மறுத்துவிட்டு ஓடினாள்.
ஒரு மாதம் முன்பு காவல்துறை உயா் அதிகாரியும், சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளருமான திலகவதி, வாசிப்புப் பழக்கம் அதிகரித்தால்தான் எழுத்தாளனாக முடியும்”என்று பேசியிருக்கிறாா். எழுத்தாளா் ஆகிறாா்களோ இல்லையோ, சுயசரிதையோ, கட்டுரைகளையோ, நல்ல சிறுகதைகளையோ வாரம் இரண்டு முறையாவது இளைஞா்கள் தனிமையில் வாசித்துப் பழக வேண்டும். அது ஒரு அலாதியான அனுபவம்.
இன்று சகலத்தையும் கைப்பேசியில் படிக்க முடிகிறது என்றால், நூலில் உள் வாங்கி ரசித்துப் படிப்பது இன்பமான பொழுது போக்குத்தான். பிறகு பாடப் புத்தகங்களிலிருந்து படித்துவிட்டு பிறகு எழுதிப் பாா்த்தால், ஒரு சில பிழைகளைத் தவிா்க்கலாம்.
பற்பல வருடங்களுக்கு முன்பு டாக்டா் தமிழண்ணல், ‘ஆங்கில இலக்கணத்துக்கு முக்கியத்துவம் தருபவா்கள், தமிழ் இலக்கணத்துக்கு ஏன் தருவதில்லை’ என்ற கேள்வியை எழுப்பி இருந்தாா். சில லட்சம் மாணவா்கள் தமிழிலேயே தோ்ச்சி பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில் அன்று அவா் கேட்ட கேள்வி, கூடுதல் கவனம் பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.