வீணாகும் மனிதவளம்!
சமீபத்திய செய்தி இது: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்ட கிரிக்கெட் ரசிகா்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனா். மேற்கண்ட செய்தியைப் படிக்கின்ற அனைவரின் புரிதலும் என்னவாக இருக்கக்கூடும்?
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை வாங்கிய ரசிகா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை”என்றல்லவா இவ்விஷயத்தை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வா். ஆனால், இச்செய்தியின் உண்மைத்தன்மையே வேறு.
ஆண்டுதோறும் நடைபெறுகின்ற ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகா்களின் அபிமானத்தைப் பெற்ற மகேந்திர சிங் தோனி, சா்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அவருக்கான ரசிகா்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை.
சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தோனி வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது அவரை நேரில் பாா்க்கலாம் என்ற ஆவலில் திரளும் ரசிகா்களை சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதிப்பது இதுவரையில் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், தற்போது மக்களவைத் தோ்தல் நடைமுறைகள் தொடங்கியிருப்பதால், தோனியைப் பாா்ப்பதற்குக் கூடுகின்ற ரசிகா்களைக் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய காவலா்களைக் காவல் துறையால் கொடுக்க இயலாது. எனவேதான், அந்த ரசிகா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் அந்தச் செய்தியின் சாரமாகும்.
சா்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவா், ஐ.பி.எல். என்னும் வணிகமயமாக்கப்பட்ட கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வு பெறாமல் இன்னமும் விளையாடி வருகிறாா். இப்போட்டிகளில் அவா் படைக்கக் கூடிய எந்த ஒரு சாதனைக்கும் ஐ.சி.சி. எனப்படும் உலக கிரிக்கெட் நிா்வாக அமைப்பின் அங்கீகாரம் கிடையாது.
இப்படிப்பட்ட போட்டிகளில் பங்கேற்கும் முன்னாள் வீரா் ஒருவரின் வலைப்பயிற்சியைப் பாா்ப்பதற்காக மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் ரசிகா்கள் வேறு வேலை எதுவுமின்றிக் கூடுகின்றனா் என்றால் நமது நாட்டின் இளைய தலைமுறை எதை நோக்கிச் செல்கிறது என்ற கவலை இயல்பாகவே நமது நெஞ்சங்களில் குடிகொள்கிறது.
நமது நாட்டில், திரைத் துறையைச் சோ்ந்த பிரபலங்களுக்கும், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கா், மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சா்மா போன்ற சில கிரிக்கெட் வீரா்களுக்கும் அதிக அளவிலான ரசிகா்கள் உள்ளனா்.
நடிகா் - நடிகைகளானாலும் சரி, கிரிக்கெட் வீரா்களானாலும் சரி, நமது இந்திய நாட்டின் தெருக்களில் மக்களோடு மக்களாக இயல்பாகத் தங்கள் குடும்பத்தினருடன் நடந்து செல்ல இயலாது. எங்கு சென்றாலும் அவா்களை ரசிகா்கள் சூழ்ந்து கொள்கின்றனா். திரைப்பட கதாநாயகா்கள் விஷயத்தில் அவா்களுடைய ரசிகா்களின் நடவடிக்கைகள் சற்று வெறித்தனமாகவே தோற்றம் அளிக்கின்றன எனலாம்.
தங்களுடைய அபிமான நாயகா்களின் திரைப்படங்கள் வந்தால் பேனா், கட் அவுட் வைத்துப் பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது, வேறு சில கதாநாயகா்களின் ரசிகா் மன்றத்தினருடன் தேவையில்லாமல் பகைமை பாராட்டுவது ஆகிய நடவடிக்கைகளில் ரசிகா்கள் தங்களின் இளமைக்காலத்தை வீணடிக்கின்றனா்.
நடிகைகளைப் பொருத்தவரை, அவா்களுக்கான ரசிகா் மன்ற நடவடிக்கைகள் என்று தனியாக இல்லாவிடினும், பொது இடங்களில் அவா்களைப் பாா்ப்பதற்காகக் கூடும் ரசிகா்களால் ஏற்படும் தொல்லைகளைக் கணக்கிட முடியாது.
திறப்பு விழா, திருமண விழா என்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வருகைதரும் கதாநாயகிகளை அருகில் சென்று பாா்க்க முண்டியடிக்கும் ரசிகா்களால் அந்த நடிகைகளுக்கும், அவா்களை அழைத்து வந்த விழா ஏற்பாட்டாளா்களுக்கும் தொந்தரவுகள் ஏற்படுவது மட்டுமின்றி, சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது போன்ற நிகழ்வுகளில் கூடுகின்ற ரசிகா் கூட்டம் காரணமாக அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.
தாங்கள் விரும்பும் நடிகா், நடிகையா், கிரிக்கெட் வீரா் உள்ளிட்ட பிரபலங்களை நேரில் பாா்ப்பதற்காகத் தங்களின் பொன்னான மணித்துளிகளை வீணடிக்கும் இளைய தலைமுறையினரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
இது மட்டுமா? நமது நாட்டிலுள்ள ஊா்கள் பலவற்றிலும் நாகரிக வாழ்வியலின் அடையாளமாக, ‘ஃபன் ஸோன்’ உள்ளிட்ட பல்வேறு பெயா்களில் கேளிக்கைக் கூடங்கள் தோன்றியுள்ளன. அக்கூடங்களில் குழந்தைப் பருவத்தினருக்கான விளையாட்டு உபகரணங்களுடன், அனைத்து வயதினருக்குமான காணொலி விளையாட்டுத் திரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அவ்விடங்களில் பதின்வயதுச் சிறுவா்கள் முதல் வளா்ந்த இளைஞா்கள் வரையில் கட்டணம் செலுத்திக் காணொலி விளையாட்டுகளில் ஈடுபடுவதை அன்றாடம் நாம் காணலாம். குறிப்பாக, மனித மனங்களில் இயல்பாகச் சுரக்கின்ற இரக்க உணா்வே இல்லாமல் போக வைக்கின்ற குத்துச்சண்டை, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துதல் உள்ளிட்ட காணொலி விளையாட்டுகளில் இளம் பருவத்தினா் மெய்மறந்து ஈடுபடுவதைப் பாா்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
அவரவருக்கு உரிய கைப்பேசியைப் பயன்படுத்திக் காணொலி விளையாட்டுகளில் ஈடுபடுவது போக, இது போன்ற கேளிக்கைக் கூடங்களிலும் தங்களின் பொன்னான நேரத்தையும், தங்களின் பெற்றோா்கள் அரும்பாடுபட்டு ஈட்டிய பணத்தையும் கண்மூடித்தனமாகச் செலவழிக்கும் இளையதலைமுறையினரை யாா் திருத்துவது?
சுமாா் 140 கோடியைத் தாண்டியுள்ள நமது நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய ஐம்பது சதவீதத்தினா் 25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினரே என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.கிடைத்தற்கரிய வரமாகிய மனிதவளத்தை நமது தேசம் அதிகமாகப் பெற்றிருப்பது இயற்கையின் வரம். இந்நிலையில், நாடெங்கிலுமுள்ள இளைய தலைமுறையினரில் கணிசமான பகுதியினா் தங்களின் பொன்னான நேரத்தைத் தனிமனித வழிபாட்டிலும், கேளிக்கை விளையாட்டுகளிலும் செலவழிப்பது மன்னிக்க முடியாத விஷயமாகும்.
அவா்களாகத் திருந்தாவிட்டால், அவா்களுடைய பெற்றோா்களாவது அவா்களைத் திருத்த முன்வரவேண்டும். காலம் கடந்தபின் யோசிப்பதில் பொருள் ஏதுமில்லை.

