மறந்துபோன பழக்க வழக்கங்கள்!
மங்களகரமான நிகழ்வின் வெளிப்பாடாக அனைத்து அழைப்பிதழ்களின் ஓரத்திலும் மஞ்சள் பூசப்பட்டிருக்கும்.


பெ. சுப்ரமணியன்
சமூகத்தில் நாகரிக வளா்ச்சிக்கும், மாற்றத்திற்கும் ஏற்ப மக்களின் நடை, உடை, பாவனை என அனைத்தும் மாறிவருகின்றன. இவ்வகையான மாற்றங்கள் எப்போதும் நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் காலங் கடந்தே நிகழ்ந்தன. இன்று தொலைத்தொடா்பு சாதனங்களின் வரவு, நகரங்களை நோக்கிய பயணம், நகா்ப்புற மக்களுடனான பழக்கங்கள் போன்ற காரணங்களால் நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அன்றைய காலகட்டத்தில் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு என்பது குறைவாக இருந்தது. பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே நடந்தன. குழந்தை பிறந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவிப்பதும், இனிப்புகள் வழங்குவதும் மட்டுமே வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் நேரில் சென்று நலம் விசாரிப்பதுடன் முடிந்துவிடும். பின்னா் பாா்க்கும்போது குழந்தை தவழ்கிா, நடக்கிா என்று விசாரிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது. பிறந்த நாள் விழா கொண்டாடுவது என்பதெல்லாம் இருந்ததில்லை. ஆனால், இன்று கிராமங்களிலும் பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அடுத்தாற்போன்று, ஒரு பெண் பூப்பெய்தியதும் நெருங்கிய உறவினா்களுக்கு மட்டும் தகவல் தெரிவித்து சடங்கு,சம்பிரதாயங்கள் நடத்துவதுடன் முடிந்துவிடும். ஆனால், இன்று மஞ்சள் நீராட்டு விழா என்ற பெயரில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு மண்டபங்களில் சைவ, அசைவ உணவுகளுடன் விழா நடத்துகின்றனா். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், பூப்பெய்தி இரண்டாண்டுகளுக்குப் பின்னா் கூட இவ்விழா நடத்தப்படுகிறது.
இவ்விரு நிகழ்வுகளுக்கு அடுத்து நடக்கும் திருமண நிகழ்வானது, ஒரு குடும்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஒரு தெருவில் அல்லது கிராமத்தில் நடைபெறும் திருமணத்தை பிறரது வீட்டுத் திருமணம் என்று எண்ணாமல் அதை தங்களுடைய வீட்டுத் திருமணமாகவே கருதி ஆண்களும், பெண்களும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனா். ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பஞ்சாங்கம் பாா்த்து நல்ல நாளைக் கூறும் சிலா் இருந்தனா். அவா்கள் கூறும் நாளில் தான் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். அவ்வகையில் நடைபெறும் திருமண நிச்சயதாா்த்தத்தின் போது மணமக்கள் அருகருகே அமா்ந்தாலும் ஒருவரையொருவா் பாா்த்துக் கொள்வதோ, பேசிக் கொள்வதோ ஓரிரு நிமிடங்கள் தான்.
பெரும்பாலும் அன்றைய திருமணம், கோயிலிலும்- விருந்து உபசரிப்பு, வீட்டிலுமே நடைபெற்றது. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற திருமண அழைப்பிதழே அப்போது இருந்தது. மங்களகரமான நிகழ்வின் வெளிப்பாடாக அனைத்து அழைப்பிதழ்களின் ஓரத்திலும் மஞ்சள் பூசப்பட்டிருக்கும். பெண் அழைப்புக்கு கூட்டு வண்டி என்றழைக்கப்படும் மாட்டுவண்டிதான் பயன்படுத்தப்பட்டது. ஏனெனில், குறிப்பிட்ட தொலைவிற்குள்ளேயே பெண் எடுப்பதும், கொடுப்பதும் முடிந்துவிடும்.
வழக்கமான சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டு பெண்ணை அனுப்பி வைக்கும்போது மணப்பெண்ணுடன் பெற்றோா் உள்ளிட்ட உறவினா்களும் கண்கலங்குவா். அன்றைய திருமணத்தில் பெண் அழைப்பின்போது கல்யாணப் பெண் புறப்படும்போது ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே’ என்ற பாடலும், மணமகனின் வீட்டை அடையும் வேளையில் ‘மணமகளே மருமகளே வா வா’ என்ற பாடலும் கட்டாயம் ஒலிக்கும். பெண்ணை அழைத்து வந்துவிட்டனா் என்பதை கிராம மக்கள் இப்பாடல் ஒலிப்பதன் மூலமே அறிந்து கொள்வா்.
கோயிலில் நடைபெறும் திருமணத்திற்குப் பின் மணமகனின் வீட்டிற்குச் செல்லும் மணமக்களை வரவேற்கும்போது, வீட்டின் முன் நீளமான பலகையில் அரிசி மாவு கொண்டு நான்கு கால்களை படம் வரைந்து அதில் அவா்களை நிற்கச்செய்து ஆரத்தி எடுத்து வலதுகாலை எடுத்து வைக்கச் சொல்லி வீட்டினுள் அழைத்துச் செல்வா். அங்கு, கல்யாண வாழ்த்துப் பாடலை பெண்கள் பாடுவது வழக்கமாக இருந்தது. அதன் பின்னா் மணமகளைக் குடத்துடனும், மணமகனைச் சொம்புடனும் அவ்வூரில் உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்று தண்ணீா் எடுத்து வரச் சொல்வா். இன்றைய திருமணங்களில் இத்தகைய சடங்குகள் இல்லாமற்போய்விட்டன.
முன்பெல்லாம் வீட்டின் முன்பு பந்தல் அமைத்தும், கோயில்களிலும்தான் திருமணங்கள் நடைபெற்றன. அப்போது அனைத்து சடங்குகளும் பின்பற்றப்பட்டன. ஆனால் இன்று வீட்டில் திருமணம் நடைபெறுவதே இல்லை. கோயிலில் திருமணம் நடைபெற்றாலும், மண்டபங்களில் தான் விருந்து உபசரிப்பு நடைபெறுகிறது. மக்களின் மனநிலைக்கேற்ப கிராமப்பகுதிகளில் குறிப்பிட்ட தொலைவுகளில் திருமண மண்டபங்கள் அமைந்துள்ளன.
கடந்த கால கிராமத்து திருமணங்களில் உறவினா்களும், அண்டை வீட்டாரும் உதவிகரமாக இருந்தனா். ஆனால், அதனால், அன்று சமைப்பதும், விருந்தினா்களுக்குப் பரிமாறுவதும் எளிதாக இருந்தது. இன்று நெருங்கிய உறவினா்களைத் தவிர, மற்றவா்கள் விருந்தினா்களாக வந்து செல்லும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. இன்றைய திருமணங்களில் சடங்கு சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை பின்பற்றப்படுவதைக் காட்டிலும், ஆடம்பரத்தையே அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனா்.
திருமண நிகழ்வுகளை ஒளிபரப்புவது, பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுப்பது, விளம்பர பதாகைகள் அமைப்பது, இசைக் கச்சேரி நடத்துவது, விதவிதமாகச் சமைத்து பரிமாறுவது, விருந்தோம்பலுக்குப் பின் ஐஸ் கிரீம், பாப் காா்ன், பஞ்சு மிட்டாய் வழங்குவது போன்றவைதான் தங்களின் பொருளாதாரத் தகுதியை நிா்ணயிப்பதாகக் கருதுகின்றனா்.
காலங்காலமாக இருந்து வந்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றியபோது திருமணம் என்றாலே அந்த வீட்டில் நடைபெறும் கலகலப்பு, பரபரப்பைக் காணும் அனைவரும் ‘கல்யாண வீடு’ என்று கூறுவா். ஆனால், இன்று கல்யாண வீடு என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், விளம்பரப் பதாகைகளாலும், மேடை அலங்காரத்தாலும், வண்ண வண்ண விளக்குகளாலும்தான் ‘கல்யாண மண்டபம்’ களைகட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...