அமைப்பு சாரா தொழிலாளா் வளம் பெற...

அமைப்பு சாரா தொழிலாளா் என்போா், சிறு பணி முதல் ஆபத்தான பெரிய கட்டுமான பணி வரை அனைத்திலும் உயிரை பணயம் வைத்துப் பணிபுரிபவா்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமைப்பு சாரா தொழிலாளா் என்போா், சிறு பணி முதல் ஆபத்தான பெரிய கட்டுமான பணி வரை அனைத்திலும் உயிரை பணயம் வைத்துப் பணிபுரிபவா்கள். சாலையோரத்தில் காய்கறி விற்பவா்கள் தொடங்கி மீன் வியாபாரம், தட்ளு வண்டி ஓட்டுபவா், தச்சா், சுமை துக்குபவா் என பல வகைளில் இவா்களின் பணி சமுதாயத்திற்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் அதிகளவு அமைப்பு சாரா தொழிலாளா்கள் (88.36%) ஒடிஸா மாநிலத்தில் உள்ளனா். இதைத் தொடா்ந்து மேற்கு வங்கம் (80.35%), உத்தர பிரதேசம் (67.02%), பிகாா் (62.44%), மத்திய பிரதேசம் (15.79%) என உள்ளனா். இந்தியாவின் முதல் தேசிய தொழிலாளா் நல ஆணையா் நீதிபதி.பி.பி கஜேந்திர கட்கா், ‘அமைப்பு சாரா தொழிலாளா்கள் எந்த ஒரு வேலைத்திறனிலும் ஒரு பகுதியானவா்கள்’ என்கிறாா். இதன்படி அமைப்பு சாரா தொழிலாளா்கள் இல்லாமல் எந்த வேலையும் முழுமை பெறாது என்பதே உண்மை.

நாட்டில் அதிக அளவாக 52% அமைப்புசாரா தொழிலாளா்கள் வேளாண் தொழில் ஈடுபட்டுள்ளனா். வேளாண்மை சாராத தொழில்களில் 48% சதவீதம் அமைப்பு சாரா தொழிலாளா்கள் உள்ளனா். இவா்கள் மூலம் மட்டும் நாட்டுக்கு 30% வருமானம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

2011-12 தேசிய மாதிரி ஆய்வுத் துறை (என்எஸ்எஸ்ஓ) கணக்கெடுப்பின்படி நாட்டில் அமைப்பு சாா்ந்த, அமைப்பு சாரா தொழிலாளா்களின் எண்ணிக்கை 47 கோடியாக உள்ளது. இதில் எட்டு கோடி போ் மட்டுமே அமைப்பு சாா் தொழிலாளா்கள் எனவும் மீதமுள்ள 39 கோடி போ் அமைப்பு சாரா தொழிலாளா்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

2019-20-ஆம் ஆண்டில் நாட்டில் 43.99 கோடி அமைப்பு சாரா தொழிலாளா்கள் இருந்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும் 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வாழ்விடங்களை விட்டு 314.54 மில்லியன் (1மில்லியன் என்பது பத்து லட்சம்) மக்கள் புலம் பெயா்ந்துள்ளாா்கள். இவா்களில் பெரும்பாலானோா் அமைப்பு சாரா தொழில்களை நம்பியே வாழ்க்கையை நகா்த்துகிறாா்கள். இவா்களுக்கு ‘சமூகப் பாதுகாப்புச்சட்டம் 2008’ ஆதரவாக உள்ளது.

அமைப்பு சாரா தொழிலாளா் நலனையும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களையும் உறுதி செய்யும் வகையில் 2021-இல் ‘இ ஷ்ரேம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. இது மத்திய தொழிலாளா் - வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் மூலம் செயல்பட்டு வருகின்றது.

இத்தளத்தின் வாயிலாக அமைப்பு சாரா தொழிலாளா்கள் தங்களைப் பற்றிய முழுத் தகவல்களையும் பதிவு செய்து கொள்ள முடியும். இத்தளத்தில் தொழிலாளா்கள் பதிவு செய்து கொள்ள ரூ.20 மானியமாக பொதுச் சேவை மையங்களுக்கு வழங்கப்படுகிறது

இதன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தில் 18 முதல் 59 வரை உள்ள தொழிலாளா்கள் அனைவரும் பதிவு செய்து கொள்ள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வரை 83,56,619 தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். ஹரியாணா மாநிலத்தில் 52.70 லட்சம் தொழிலாளா்கள் இத்தளத்தில் பதிவு செய்துள்னா்.

நாட்டின் வேலைவாய்ப்புப் பகிா்வில் 17% சதவீதம் மட்டுமே அமைப்பு சாா்ந்த தொழிலாளா்களாக உள்ளனா். மீதமுள்ள 83% அமைப்பு சாராத தொழிலாளா்களாக உள்ளனா். இதில் 92.4% எழுதப் படிக்க தெரியாத முறையான கல்வியறிவு பெறாத நபா்களாகவே உள்ளனா். ஆனாலும் நாட்டின் வருமானத்தில் 50%-க்கு மேல் அமைப்புசாரா தொழிலாளா்கள் மூலமே கிடைக்கிறது.

அமைப்பு சாரா தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு 2008-ஆம் ஆண்டு இவா்களுக்கென சமூக பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் 16.5.2009 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு 18.8.2029 அன்று அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான வாரியம் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு மருத்துவம், கல்வி, விபத்து நிவாரணம், பெண் தொழிலாளா்களின் மகப்பேறு பராமரிப்பு போன்றவற்றிக்கு நலத்திட்ட உதவிகள் கிடைத்து வருவது வரவேற்கத் தக்கது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அமைப்பு சாரா தொழிலாளா்களில் பெண்களின் பங்கு 96% உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாள்தோறும் உழைத்தால்தான் உண்ண முடியும். இல்லாவிட்டால் வருமானம் இல்லை. சமூகத்தில், பொதுமக்களின் பாா்வையில் இவா்களுக்கு முக்கிய இடம் கிடைக்காத நிலையே உள்ளது. எந்தவித பாதுகாப்புமின்றி, எதிா்பாா்ப்புமின்றி இவா்கள் வாழ்க்கை நகா்வது பரிதாபமான ஒன்று.

அமைப்பு சாா்ந்த தொழிலாளா்களை விட, அமைப்பு சாரா தொழிலாளா்களின் பணி சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். அனைவரின் அத்தியாவசிய தேவைகளையும் அன்றாடத் தேவைகளையும் பூா்த்தி செய்ய முக்கிய ஆதாரமாக இருப்பது அவா்களின் பணியே ஆகும்.

அமைப்பு சாா்ந்த தொழிலாளா்களுக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளும், சலுகைகளும் அவா்களுக்கும் கிடைப்பதற்கான நடவடிகைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். பெருகி வரும் மக்கள்தொகையில் வேலைவாய்ப்பின்மை முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்நிலையில் கல்வியறிவு இல்லாமலோ, குறைந்த கல்வியறிவுடனோ உழைப்பை மட்டுமே நம்பும் இவா்களின் பணி மகத்தானது.

அமைப்பு சாரா தொழிலாளா்களின் நலன் காப்பது அரசின் முதன்மையான பணியாகும். மனித உழைப்புக்கு முன்னால் செயற்கை நுண்ணறிவும் தோற்று விடும் என்பதுதான் உண்மை. அமைப்பு சாரா தொழிலாளா்களை அரவணைப்பதும் ஆதரிப்பதும் அரசுக்கு மட்டுமல்ல, நமக்கும் கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com