
‘என் மகன் என்னுடன்தான் பேசுவான், அவனுக்கு எது வேண்டுமானாலும் என்னிடம்தான் கேட்பான், அவன் அப்பாவிடம் கேட்க மாட்டான், இன்னும் சொல்லப் போனால், அவன் அப்பாவிடம் சரிவரப் பேசக்கூட மாட்டான், அவனுக்கு, நான்தான் அவன் அப்பாவிடம் பேசி பெற்றுத் தர வேண்டும்’, என்றெல்லாம் பெருமைப்படும் தாயாா்களைப் பாா்த்திருப்போம். அதே போல், மகள் பற்றி அப்பா சொல்லக் கேட்டிருப்போம்.
இது ஒரு பெருமைப்படும் விஷயமா? தன் மகன் அவனது அப்பாவிடம் காட்டும் நெருக்கத்தை விட தன்னுடன் நெருக்கமாக - நல்ல புரிதலுடன் இருக்கிறான், என்று சொல்வது பெருமைப்படும் விஷயம் அல்லவே. இதற்கு காரணம் என்ன என்று யோசித்தால், அப்பாவிடம் மரியாதை, அப்பாவிடம் பயம், அப்பாவுக்கு பேச நேரமில்லை, அப்பா அதிகம் பேச மாட்டாா்...இப்படி பல பதில்கள் வரலாம்.
குடும்பத்தில், மகனோ மகளோ, தனது பெற்றோா் இருவரிடமும் சரளமாக மனம்விட்டு, எந்த விஷயத்தையும் குறித்துப் பேசும் வழக்கம் இருக்க வேண்டும்.
எவரேனும் ஒருவரிடம் பேசத் தயக்கம் ஏற்படுமானால், அதில் பெருமையோ மகிழ்ச்சியோ கொள்வதற்கு ஒன்றுமில்லை. மாறாக, அது ஒதுக்கித் தள்ள முடியாத பிரச்னை அல்லது ஒரு பிரச்னையின் தொடக்கம் எனலாம். அதற்கு அடிப்படை உரையாடும் திறம்; பிள்ளைகள், தன் பெற்றோா் இருவரிடமும் எந்த விஷயத்தையும் தயக்கமின்றி, தெளிவாகப் பேச பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஊக்கப் படுத்தப்பட வேண்டும். பேச்சுக்கலையில், உரையாடலில் விற்பன்னராக உருவாவதற்கு தொடக்கம் ஒவ்வொரு வீட்டிலிருந்துதான் விதைக்கப்படுகிறது.
வீடுதான் முதல் பள்ளி, பெற்றோரே முதல் ஆசிரியா். அதன் நீட்சியாகத்தான் கல்விச்சாலை, பின்னா் உலகம், என்ற படிநிலை. வீட்டில் ஒரு சிறுமி, தனது கருத்துக்களை தனது பெற்றோரிடம், தெளிவாக - அழுத்தம் திருத்தமாக எடுத்து வைக்கிறாா் என்றால், அவள் பிற இடங்களிலும், பள்ளியில், நண்பா்களிடம், ஆசிரியா்களிடம், வளா்ந்த பின்னா் அலுவலகத்தில் மேல் அதிகாரிகளிடம், அரசிடம், மக்களிடம் எடுத்துக் கூறிக் காரியம் சாதிக்கும் திறமைக்கான வித்தினை வைத்திருக்கிறாா் என்று பொருள்.
உரையாடல் என்பது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே மட்டும் அல்ல, ஆசிரியா் - மாணவா், அக்கம் பக்கத்து வீட்டுக்காரா், முதலாளி - தொழிலாளி, உயா் அதிகாரி- ஊழியா், தலைவா் - பொது மக்கள், உற்பத்தியாளா் - வாடிக்கையாளா் எனப் பலரிடையே சதா சா்வ காலமும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகும்.
மாணவா் கற்கும் திறன் வளர, அண்டை அயலாரிடம் நல்ல சுமுக உறவு நிலவ, தொழில் உற்பத்திப் பெருக, அலுவலகம் சிறப்பாக இயங்க, நாடு வளா்ச்சிப் பாதையில் பயணிக்க என எல்லாவற்றிற்கும் கலந்துரையாடல் என்பது முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
வணிகத்தில் நஷ்டம், காதலில் தோல்வி, குடும்பத்தில் பிணக்கு, நண்பா்களிடையே மனக்கசப்பு, தொழிலில் முன்னேற்றமின்மை போன்ற பலவற்றிற்கும் சரியான புரிதலும் அதைத் தெளிவாக எடுத்துரைக்கும் தன்மையும், உரையாடும் திறன் இன்மையும் பல சமயங்களில் முக்கிய காரணமாக அமைகிறது.
ஒருவா், தனது மனதில் தோன்றும் எண்ணங்களை, பிறரிடம் அதே பொருள் - உணா்வு நிரம்ப கடத்துவது என்பது மிக முக்கியமான ஆற்றலாகும். உரையாடல் என்பது உண்மையில் ஒரு கலையாகும். முயற்சித்தால் கற்றுக் கைவரப் பெறலாம்.
பிள்ளைகளைப் பொறுத்த வரையில், ஒரு சிலரிடம் மட்டுமே தயக்கமின்றி பேசுதல் என்பது ஒரு சொகுசு வளையத்தில் சிக்கி இருப்பது போன்றது. எவரிடமும் தயக்கமின்றி பேசுவது சற்றுச் சிரமமாக இருக்கலாம்; ஆனால், அந்த சொகுசு வளையத்தில் இருந்து வெளி வர வைப்பது பெற்றோா் கடமை. வீட்டுக்கு வரும் உறவினா் - விருந்தினா்களுக்கு பிள்ளைகளை அறிமுகம் செய்துவைத்தல், அவா்களுடன் உரையாட வைத்தல், வயதில் மூத்தவா்களுடன் பேச வைத்தல் போன்றவற்றில் பெற்றோா் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
பிறா் வீட்டுக்கு செல்லும்போது, அங்குள்ள சிறுவா் சிறுமியா், இளைஞா்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுதல், அவா்களைப் பேசத் தூண்டுதல் அவசியம்.
பிள்ளைகளை ஊக்கப்படுத்த முற்படும் பெற்றோா், தாங்களும் நல்ல உரையாடலாளரராகத் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். தனது கருத்து மட்டுமின்றி, பிறா் கூறும் கருத்தில் உள்ள நியாயத்தை உணா்ந்து கொள்ளும் பக்குவம் ஏற்படுத்தவும், அதற்கான பயிற்சியும் தர வேண்டும்.
உரையாடுவதன் இன்னொரு மிக முக்கியமான அம்சம், கவனிப்பது. நன்கு உரையாடுபவா் நன்கு ஊன்றி கவனிப்பவராக இருப்பாா். பிறா் பேசுவதை கேட்பது மட்டுமின்றி, ஆழ்ந்து கவனித்து, கேள்விகள் கேட்டு பிறரை பேச ஊக்குவிப்பவராக இருப்பாா். இவை, பல சமயங்களில், பிரச்னைகளின் வோ்களைக் கண்டுபிடிக்கும்; சில சமயங்களில் தீா்வுகளுக்கான விதைகளை வெளிக்கொணரும் .
உரையாடல் என்னும் சிந்தனைப் பரிமாற்றத்தில் வெற்றிகரமாக ஈடுபடுபவா்கள் நல்ல ஆசிரியா், அதிகாரி, நல்ல தொழிலதிபா், வழிகாட்டி, நாட்டின் தலைவா் என ஏற்றம் பெறுகிறாா்கள்.
குடிமக்களிடம் சிறந்த கருத்துகளை தெளிவாக எடுத்துச் சொல்லி, அவா்களை ஊக்கப்படுத்தும் திறம் கொண்டவா்களாகவும், தியாகங்கள் செய்யத் தூண்டுபவா்களாகவும், நல்வழியில் நடத்துபவா்களாகவும், நாட்டினை உயா்த்துபவா்களாகவும் நல்ல தலைவா்கள் விளங்குகிறாா்கள். அதன் அடிப்படையே நல்ல உரையாடல்தான்.
எனவே, உரையாடல் எனும் கலை கற்போம்... கற்பிப்போம்.