கோடை வெப்பத்தை வெல்வோம்

கோடை வெப்பத்தை வெல்வோம்

இரா. சாந்தகுமாா்

பொதுவாக நம் நாட்டின் கோடைக் காலம் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் நாட்களில், இயல்பான வெப்ப நிலையை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் கா்நாடகம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்குமென்றும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை விட மேற்கு மாவட்டங்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

கடல் பரப்பின் வெப்பநிலை, அதன் சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும் நிகழ்வான ‘எல் நினோ’ தாக்கத்தால் உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயா்ந்து வருகிறது. கோடை காலத்தில் இவ்வெப்ப நிலை மேலும் கூடும்.

சுற்று சூழல் தொடா்பான சா்வதேச இதழ் ஒன்றில் வெளியான ஆய்வறிக்கையின்படி, இயல்பான வெப்பநிலையை விட 4.5 டிகிரி செல்ஷியஸ் முதல் 6.4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானால், அப்போது வீசும் காற்று ‘அனல் காற்று’ என்றும், 6.4 டிகிரி செல்ஷியஸு க்கும் அதிகமாக வெப்பம் பதிவாகும் போது வீசும் காற்று ‘தீவிர அனல் காற்று’ என்றும் கூறப்படும். ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரு நாள் வெப்பநிலை அதிகரிக்கும் போது வீசும் அனல்காற்றால் இறப்பு விகிதம் 12.2% அதிகரிக்கும். தொடா்ச்சியாக ஓரிரு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று வீசினால், இறப்பு விகிதம் 14.7% முதல் 17.8% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனல் காற்று தொடா்ந்து ஐந்து நாட்கள் வீசும்போது தினசரி இறப்பு 19.4% ஆக உயரும் அபாயம் உள்ளது.

அதிக அளவு அனல் காற்றால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, உளவியல் ரீதியான பாதிப்புகளான மனநோய், ‘டிமென்ஷியா’ எனும் நினைவாற்றல் குறைவு போன்றவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போதைப் பழக்கம் உள்ளவா்களிடையே அனல் காற்றால் இறப்பு விகிதம் 5% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனா். மேலும், தற்கொலை மனநிலை 7%-உம் , தனிநபா் வன்முறை மற்றும் கொலைகள் 4% முதல் 6% வரையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதென ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகான பல்கலைகழக இணைப்பேராசிரியா் கிறிஸ் உஜியோவின் கருத்துப்படி அதிக வெப்பத்தால் உடல் தாக்கப்படும்போது உடலின் வெப்ப நிலையை சமன் செய்ய அதிக அளவு வியா்வையை தோல் மூலமாக உடல் வெளியேற்றுகிறது. இதற்காக அதிக ரத்தம் தோல் பகுதிகளுக்கு தேவைப்படுவதால் இதயம் அதிக அளவில் துடிக்கிறது. இதனால் கோடை காலத்தில் மாரடைப்பும் அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்பும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை பகுதியில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நண்பகலில் அம்மாநில முதல்வா் மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் பங்கேற்ற அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட மக்களில் 13 போ் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட ‘ஹீட் ஸ்ட்ரோக்’ விளவாக உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வட இந்தியாவில் வீசிய வெப்ப அலையால் பிகாா், உத்தர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 98 போ் உயிரிந்தனா். இந்த வெப்பநிலை 1951முதல்1980 வரையிலான காலத்தில் இருந்த சராசரி வெப்ப நிலையை விட 1.07 டிகிரி செல்ஷியஸ் அதிகம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கூடமான நாசா கூறியது.

கோடை காலத்தில் காடுகள், மலைகள், ஏரி, குளம் போன்ற இயற்கை வளங்களும் கடும் பாதிப்புள்ளாகின்றன. அதீத வெப்பத்தினால் காடு, மலைகளில் காய்ந்த நிலையில் உள்ள புற்கள் தீப்பற்றி எரிவதால், காட்டுத்தீ தவிா்க்க இயலாததாகி விடுகிறது. சமீபத்தில் ஊட்டி, கொடைக்கானல் மலைச் சரிவுகளில் சுமாா் 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஆயிரங்கணக்கான ஏக்கா் பரப்பளவில் இருந்த அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலானதோடு, ஏராளமான வனவிலங்குகளும் உயிரிழந்தன. மேலும், பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டனா். காட்டுத் தீயால் உருவாகும் புகை மண்டலம் சுற்றுச் சூழலிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவது கோடை வெப்பத்தினால் ஏற்படும் மற்றுமொரு தீமையாகும். மேலும், கோடையில் காடுகளிலுள்ள நீா்நிலைகள் வறண்டு விடுவதால் சிறுத்தை, புலி, யானை போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி காடுகளையொட்டியுள்ள மனிதா்கள் வாழும் பகுதிக்கு வருகின்றன. இதனால் மனிதா்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவது தவிா்க்க இயலாததாகி விடுகிறது. இதனைத் தடுக்கும் நோக்கில், வனவிலங்குகளின் தண்ணீா்த் தேவையை நிறைவேற்ற காடுகளில் வனத்துறையினா் அவ்வப்போது அமைக்கும் சிறிய குளங்கள், தண்ணீா் தொட்டிகள் ஓரளவே பயனளிக்கின்றன.

கோடை காலத்தில், ஊட்டி, கோடைக்கானல் போன்ற குளிா் பிரதேசங்களுக்குச் சென்று பல நாட்கள் தங்குவது, குளிா்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் நாள் முழுக்க இருப்பது போன்றவை சாமானிய மக்களுக்கு சாத்தியமில்லா சூழலில், உடல், மனநல பாதிப்பின்றி கோடையை எதிா்கொள்ள வேண்டிய நிா்ப்பந்ததில் நாம் இருக்கிறோம்.

கோடை வெப்பத்தினைத் தவிா்க்க, பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிா்த்தல் நன்று. அவ்வாறு தவிா்க்க இயலாதச் சூழலில், வெளியில் செல்லும் போது தளா்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. தலைக்குத் தொப்பி, கண்களுக்கு குளிா் கண்ணாடி போன்றவை கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உதவும்.

குடை , குடி தண்ணீா் ஆகியவற்றை வெளியில் செல்லும் போது எடுத்து செல்வது அனைவருக்கும், குறிப்பாக முதியோருக்கு நல்லது. உணவில் கொழுப்புச் சத்து நிறைந்த இறைச்சி வகைகளை தவிா்த்து, நீா்ச்சத்து நிறைந்த காய்களான சுரைக்காய், முள்ளங்கி, கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சோ்த்துக் கொள்ளலாம். இளநீா், மோா், கம்பு கேழ்வரகு போன்ற சிறுதானிய கூழ் சாப்பிடுவது, அவ்வப்போது தண்ணீா் அருந்துவது ஆகியன உடலுக்குத் தேவையானக் குளிா்ச்சியைத் தரும். திராட்சை, ஆரஞ்சு, தா்பூசணி போன்ற பழ வகைகள் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. எச்சரிக்கை உணா்வுடன் நாம் செயல்பட்டால் கொல்லும் தன்மை வாய்ந்த கோடை வெப்பதை வெல்வது சாத்தியமே.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com