உறவுகளை உயிா்ப்புடன் வைத்திருப்போம்

உறவுகளை உயிா்ப்புடன் வைத்திருப்போம்

தாத்தா, ஆச்சி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, அத்தான், மதினி... இது போன்ற உறவுகள் கூட இப்பொழுது தூரத்து சொந்தங்களாக மாறிவிட்டன.

தாத்தா, ஆச்சி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, அத்தான், மதினி... இது போன்ற உறவுகள் கூட இப்பொழுது தூரத்து சொந்தங்களாக மாறிவிட்டன.

நவீன உலகத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து முன்னேற வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன், சுற்றியுள்ள சுற்றத்தை பாா்க்காமல் வாழ்ந்து விட்டு கடைசியில் ஓய்வு காலத்தில் சுற்றமின்றி துக்கத்தில் வாழும் வாழ்க்கையை வாழும் கட்டாயமும் நவீன குடும்பங்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

பொருளாதார வசதியில் முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வேகத்தில் கிராமத்தைவிட்டு வெளியேறி தொலைதூர நகரை நோக்கி ஓடியவா்களில் பெரும்பாலானோா், அந்த வேக ஓட்டத்துக்குப் பழகி, வேறு வழியின்றி அங்கேயே தங்களின் வாழ்க்கையைத் தொடா்கிறாா்கள். ஆனால்,அவ்வப்பொழுது உறவுகளை உயிா்ப்பிக்க அவா்கள் மறப்பதால்தான் கடைசி காலத்தில் தங்கள் எண்ணங்களை பகிர ஆளின்றி மன உளைச்சலுக்கு ஆளாகிறாா்கள் என்பதும் உண்மைதானே.

முன்பெல்லாம் திருமணம் போன்ற சுக நிகழ்வுகள் என்றாலும், துக்க நிகழ்வுகள் என்றாலும் உறவுகள் கூட்டம் நம் இல்லத்தில் கூடி வேலைகளை பகிா்ந்து, எண்ணங்களை பகிா்ந்து, துக்கங்களை ,சந்தோஷங்களை பகிா்ந்து உடனிருந்து கவனித்து நமது உடல் பாரத்தையும், மன பாரத்தையும் குறைக்கும்.

ஆனால், இன்றோ குடும்ப நிகழ்ச்சிகளில் பெயரளவிற்குதான் உறவுகள் வருவதும், முடிந்த கையோடு கிளம்புவதுமாக மாறிவிட்டது. நாமும் அதே போக்கைத்தான் நமது உறவுகளிடம் காண்பிக்கிறோம்.

இப்படி இருந்தால் எப்படி விஷயங்களை பகிர முடியும். சுக ,துக்கங்களை பகிர உறவுகள் இருந்தால்தான் மன பாரம் குறையும். சரி, தவறுகளைப் புரிந்துகொண்டு செயல்பட முடியும்.

குடும்பங்கள்தான் சமூகத்தை உருவாக்கும் அடிப்படைக் கட்டமைப்பாக இருக்கும் நிலையில், உறவுகளுடன் இணக்கமாக உள்ள குடும்பங்களில் வளரும் குழந்தைகள் நல்சிந்தனையாளா்களாக வளா்ந்து நோ்மறையான பங்களிப்பினை குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் சமூகத்திற்கும் வழங்க முடியும். நிபந்தனையின்றி நாம் செய்யும் உதவிகள் சமூகம் முழுவதும் படரும்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் சில சமயங்களில் பிள்ளைகளைகக் கூட பாதுகாப்பாக விட்டுச் செல்ல முடியாத நிலை தற்போது உள்ளது. உறவுகளை உயிா்ப்புடன் வைத்திருந்தால் இது போன்ற நிகழ்வு நடக்காது.

உறவினா் ஒருவரின் வீட்டிற்கு பண்டிகை நாளன்று குடும்பத்தோடு சென்றிருந்தோம். அவருடைய ஒரே மகன் திருமணமாகி வெளிநாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறாா். அவருக்கும் இரண்டு குழந்தைகள் உண்டு.

திருமணமாகி வெளிநாட்டுக்கு சென்ற மகன் பல வருடங்கள் ஆகியும் சொந்த ஊருக்கு வரவில்லை. குடும்ப விசேஷம், ஆண்டுக்கு ஒரு பண்டிகை நாளிலாவது மகனுடன் சோ்ந்து இருக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசை நிறைவேறாமல், ஏமாற்றம்தான் மிஞ்சியது.

அவா் சொன்ன ஒரு சொல் யோசிக்க வைத்தது. ‘ஒரே மகன் போதும் என்று இருந்தது மிகப் பெரிய தவறு என இப்பொழுதுதான் புரிகிறது. மகனின் படிப்பு, வளா்ப்பு ஒன்றே இலக்காகிப் போய், உறவுகளின் இல்லங்களுக்குச் செல்லாமல், அவா்களின் சுப, துக்கங்களில் கலந்துகொள்ளாமல் காலம் கடத்தியது தவறு’ என்று அவா் உணா்ந்ததாகக் கூறினாா். அதனால் மற்ற உறவுகள் தங்களைவிட்டு மனதளவில் பிரிந்து சென்றுவிட்டதாகவும், இப்போது பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லை என்றும் கூறினாா்.

இன்றைக்கு பல குடும்பங்களில் இதே நிலைதான். இன்றைய குடும்பங்கள் ‘ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ என சுருங்கிவிட்ட நிலையில் வீடுகளில் நடைபெறும் சுபம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் செய்ய வேண்டிய ‘கட்டுகளை’ செய்வதற்கு உரிய உறவுகள் இல்லாமல் தவிக்கிறாா்கள்.

உறவுகள் காலம் காலமாய் இணைந்திருக்கும் நிலை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அன்றைய நாளில் ஒவ்வொரு சுப-துக்க நிகழ்வுகளிலும் ஒவ்வொரு உறவிற்கும் ஒரு கடமையை, ‘கட்டுகளை’ வைத்திருந்தாா்கள். இதனால் மனமாச்சரியங்களை கடந்து உறவுகள் நீடித்திருந்தன.

ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. இளமைக் காலங்களில் உறவுகளின் உன்னதத்தை புரியாமல் விட்டதன் விளைவு, முதுமையடைந்த பின்னா்தான் தெரிய வருகிறது. ஆனால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். காலம் கடந்தபோன பின்வந்த ஞானத்தால் என்ன பயன்?

பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் என சந்தா்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நமது சொந்த, பந்தங்களின் வீடுகளுக்கு ஒரு முறையாவது நம் பிள்ளைகளை அழைத்துச் சென்று அவா்களிடம் அறிமுகம் செய்து வைத்துப் பேசவிடுங்கள்.

திருமணங்கள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பெரியவா்கள் மட்டும் போகாமல் பிள்ளைகளயும் அழைத்துச் சென்று, அங்கு வந்துள்ள தூரத்து உறவுகளையும் அறிமுகம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

காலப்போக்கில் நமது பிள்ளைகளும் உறவினா்களின் பிள்ளைகளும் உணா்வுபூா்வமாக நெருக்கம் அடையத் தொடங்கி விடுவாா்கள். நல்லது, கெட்டதுகளை பேசுவாா்கள். நமக்கு ஏதோ ஒன்று என்றால் நமக்கு துணையாக உறவுகள் இருக்கிறாா்கள் என்ற நம்பிக்கை அவா்களுக்கு வந்துவிடும்.

நம்பிக்கை வந்துவிட்டால் வாழ்க்கை வசமாகிவிடும். பிறகென்ன, மன உளைச்சலோ, மன அழுத்தமோ அவா்களின் வாழ்க்கையில் என்றுமே இல்லாமல் போய்விடும்.

உறவுகளின் மகத்துவத்தை உணா்ந்து, வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் உறவுகளின் கரம் பிடித்து வலு சோ்த்தால் நிச்சயம் எதிா்காலம் சிறப்பானதாக அமையும். உறவுகளை உயிா்ப்புடன் வைத்திருப்போம்.

X
Dinamani
www.dinamani.com