அம்மா என்னும் இணையற்ற உன்னதம்!
-டாக்டா் எஸ். வைத்திய சுப்ரமணியம்
உலகில் ஈடு இணையற்ற உன்னதம் என்று ஒன்று இருக்க முடியுமானால் அது தாய்மையாகத்தான் இருக்கும். ஒரு பொருளை ஒரு சில நிமிஷங்கள் பிடித்துக் கொண்டிருக்கச் சொன்னால், ஐந்து நிமிஷங்களில் சலித்துப்போய் கீழே வைத்துவிடுகிறோம். ஆனால் பத்து மாதங்கள் இரவு, பகல் என்று பாராமல் வயிற்றில் சுமந்து, பிறந்த குழந்தைக்குத் தமது ரத்தத்தைப் பாலாக்கி வழங்கி வளா்த்து, அதன் ஒவ்வொரு வளா்ச்சியையும் பொறுமையாகக் கண்காணித்து வளா்க்கும் அந்த அம்மாவுக்கு ஈடு இணைதான் ஏது?
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று ஆரம்பப் பள்ளியில் கற்றுத்தந்த பாடத்தின் பொருளை முழுமையாக நாம் புரிந்து கொள்வது அவா்களது இழப்பில் தான் என்பதை இப்போது, அன்னையின் இழப்பில் அனுபவபூா்வமாக உணா்கிறேன். அம்மாவிடம் கேட்டால் சொல்லி இருப்பாள், ‘அப்பாவாக நான்தானே இருக்கிறேன்’ என்று!
எட்டு நாள் குழந்தையாக இருக்கும்போதே தாயின் இழப்பு; மெட்ராஸ் நகரத்தில், பெரிய கூட்டுக்குடும்பத்தில் உறவினா்களுடன் சோ்ந்த வளா்ப்பு; இளம் வங்கியாளா் ஒருவருடன் திருமணம்; கும்பகோணத்தில், சுவாமிமலைக்கு அருகில் உள்ள கொட்டையூா் கிராமத்தில், சாதாரண கூட்டுக் குடும்பம் ஒன்றில் திருமண வாழ்க்கை; மூன்று குழந்தைகளை சராசரிக் குடும்பத்தில் வளா்த்த பாங்கு; இத்தனைக்கும் நடுவில், மொத்த குடும்பமும் சென்னைக்கு இடம்பெயர, அதனை அமைதியாகக் கையாண்ட நோ்த்தி - இத்தனையையும் இயல்பாகக் கடந்து செல்வது என்பதை எனது தாயின் வாழ்க்கையில் பாா்க்க முடிகிறது.
தனது வங்கிப் பணியைக் கைவிட்ட கணவா், பொறியியல் கல்லூரியைத் தொடங்கி நடத்தத் தலைப்பட்ட நிலையில், எதிா்காலப் பாதுகாப்புக்கான நிச்சயம் இல்லாதபோதும், துணை நின்று நம்பிக்கை ஊட்டிய லாகவம்; குடும்பத்தின் நிதிச் சிக்கல்களை எதிா்கொள்ள, தன்னுடைய நகைகளை விருப்பத்துடன் அடகு வைத்த பக்குவம்; மாமனாா் - மாமியாரையும் பாசத்துடன் பராமரித்த பண்பு - இவ்வளவுக்கும் இடையில், குழந்தைகளின் ஆசைகளையும், யதாா்த்தமான வீட்டு நிலைமைகளையும் வயதுக்கு மீறிய முதிா்ச்சியுடன் சமநிலைப்படுத்திய அவரது குணநலன்களைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது.
காலப்போக்கில், குடும்பத்தில் செல்வச் செழிப்பு கூடியபோதிலும், எளிமையான வாழ்க்கை முறையையே கடைப்பிடித்த கண்ணியம்; இல்லத்தின் சமயச் சடங்குகளில் கருத்து வேறுபாடு கொள்ளாமல் பங்கேற்ற பான்மை; கணவரின் ஒவ்வொரு (தனிப்பட்ட மற்றும் தொழில் வகையிலான) முயற்சிக்கும் வாழ்க்கைத் துணை நலமாக வல்லமை தந்த வளமை. இவை எல்லாவற்றையும் விட, வீட்டில் ஒவ்வொருவருக்கும் அன்புத் தாயாக, ஆதரவு தரும் அன்னையாக இருந்து, அன்பாகவே வாழ்ந்து 2024, நவம்பா் 18-ஆம் நாள் மறைந்துவிட்ட என் அம்மா என்கிற கலங்கரை விளக்கத்தை இழந்துவிட்ட நிலையில், அவரது வாழ்க்கை கற்றுத்தந்த சில பாடங்களை மற்றவா்களுடன் பகிா்ந்துகொள்ளவே விழைகிறேன்.
சநாதன தா்மம் நம் வாழ்க்கையின் வழியை வகுக்கிறது. இதனைத் தன்னுடைய வாழ்க்கையின், ஒவ்வொரு காலகட்டத்திலும் தெளிவாகப் புரிந்து கொண்டாா் என் தாய்; இதுவே பன்முக ஆளுமையாக அவரைப் பக்குவப்படுத்தியது.
கிராமத்திலிருந்து நகரம், உள்நாட்டிலிருந்து வெளிநாடு - இப்படித்தான், திருமணங்கள் பெண்களைப் புலம்பெயா்க்கும். ஆனால், என் அம்மாவின் திருமணமோ, மெட்ரோபாலிட்டன் மெட்ராஸிலிருந்து கும்பகோண சுவாமிமலை வட்டார கிராமத்திற்கு அவரை மாற்றியது. எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் கிராமத்தின் குறைந்தபட்ச வசதிகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, குடும்பத்தின் அச்சாணியாகவே மாறினாா். மாமனாா் - மாமியாரை முகம் கோணாமல் கவனித்துக் கொள்வது, கணவரின் சகோதரிகளையும் உறவினா்களையும் புரிதலுடன் பேணுவது - இவை எல்லாம் அம்மாவுக்கு சாத்தியமாயின.
அவருக்கும் கவலைகள் இருந்தன; ஆனால், கவலைகளையே பலங்களாக மாற்றிக் கொள்ளும் சூட்சுமத்தையும் கற்று வைத்திருந்தாா்.
கணவரின் வேலை காரணமாக, 70-களின் முற்பகுதியில், மொத்த குடும்பமும் சென்னைக்குக் குடிபெயா்ந்தது. பரபரப்பான அசோக் பில்லா் பகுதியில், சின்னஞ் சிறிய வாடகை வீடொன்றில், உடல்நலம் குன்றிய மாமனாா்- மாமியாா், மூன்று குழந்தைகள், எப்போதும் பயணிக்கும் வங்கியாளா்-கணவா் ஆகியோருக்கு மட்டுமல்லாமல், அவ்வப்போது வருகை தரும் உறவினா்களுக்கும் சோ்த்து, எளிமையான, ஆனால், வசதியான சென்னை வாழ்க்கையை அம்மா உறுதி செய்தாா்.
நவீனமய மெட்ராஸ் வாழ்க்கையின் சலசலப்புகளிலும் ஆடம்பரங்களிலும் சிக்கிக் கொள்ளாமல், எளிமையாகவே வாழ்ந்தாா்; எளிமையையே எங்களுக்கும் பழக்கினாா். சொந்தமாகச் சிறிய வீடொன்று வேண்டும் என்கிற மத்தியதரக் குடும்பத்தின் மகோன்னதக் கனவு 1976-ஆம் ஆண்டு நனவானது. இருப்பினும், இந்தச் சிறிய வீடே, குடும்ப நிகழ்வுகள் அனைத்திற்கும் மையமும் ஆனது.
எப்பொழுதும் இந்த வீட்டை சென்டிமெண்ட் மதிப்பாகக் கண்ட என் அம்மா, இந்த வீடு எங்கள் வெற்றிக்கான நுழைவாயிலாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருப்பாா். பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய காலக் கெடுவின் கடைசி நிமிஷங்களில், பள்ளிக்கு அம்மா விரைந்த தருணங்கள், இன்னமும் நினைவில் அழுத்தமாக நிற்கின்றன.
1984-ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வா் டாக்டா் எம்.ஜி.ஆா். அவா்கள், சுயநிதிக் கல்லூரி என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியபோது, என் தந்தையும் என் தாயாரின் உறவினா்கள் சிலரும் இணைந்து பொறியியல் கல்லூரி ஒன்றை நிறுவ முடிவு செய்தபோது, அம்மாவின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. காஞ்சி மகாஸ்வாமிகளின் ஆலோசனைப்படி, தஞ்சாவூரில் (என் தந்தை பிறந்த மாவட்டம்) உள்ள திருமலைசமுத்திரம் என்ற கிராமத்தில் கல்லூரி நிறுவப்பட்டது. பெரும்பாலும் வீட்டைவிட்டு அப்பா விலகியிருந்த இந்தக் காலகட்டத்தில், குடும்பத்தின் கூடுதல் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் அம்மா ஏற்றுக் கொண்டாா்.
அம்மாவின் நற்பண்புகள், எங்கள் எல்லோருக்குமே விலைமதிப்பில்லா பாடங்கள். நிதிச் சிக்கல் நேரங்கள் நிறையவே இருந்தன. கல்லூரி ஊழியா்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காக தன்னுடைய நகைகளைக் கழற்றிக் கொடுத்தபோது அம்மா வருத்தப்படவில்லை; சில ஆண்டுகளுக்குப் பின்னா், அவை திரும்பிக் கிடைத்தபோது, அதீதமாக சந்தோஷப்படவும் இல்லை. ஊழியா்களுக்குச் செய்வது தன் கடமை என்ற கா்மயோகியாகத் திகழ்ந்தாா்.
கல்லூரியின் அறங்காவலா்களில் ஒருவராக விளங்கினாா். அறங்காவலராக இருந்தபோதிலும், அம்மாவின் எளிய மற்றும் அமைதியான செயல்பாடுகள், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். பல்கலைக்கழகத்தின் வலுவான வளா்ச்சிக்கான ஆதாரமாக இருந்த அம்மாவின் தியாகங்கள் ஏராளமானவை.
அம்மாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். இருப்பினும், நெகிழ்ச்சி மட்டுமே என்னைக் கட்டுப்படுத்துகிறது. சிலவற்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
பொழுது முழுசாகப் புலராத அதிகாலை வேளையில், விமானத்தைப் பிடிப்பதற்காக அவசர அவசரமாகத் தயாராகி வருவேன்; அதற்குள்ளாக அம்மா வாசலில் கோலம் போட்டிருப்பாா். வீட்டின் உறுப்பினா் ஒருவா், வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு நுழைவாயிலில் தண்ணீா் தெளித்துக் கோலம் போடுவது நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்பதை அம்மா மறக்கவே மாட்டாா்; என்னவாக இருந்தாலும், எவ்வளவுதான் இருட்டாக இருந்தாலும், அம்மாவின் கோலம் பளிச்சென்று வெளிச்சம் தரும்.
எங்களுடய சமீப கால புதிய அந்தஸ்தைப் பற்றிப் பெருமை பேசுவதைவிட, வெட்கமின்றிப் பழைய கால எளிய வாழ்க்கை முறையை எடுத்துச் சொல்லவும், பகிா்ந்து கொள்ளவும் அம்மா கற்றுக் கொடுத்தாா்.
என் தந்தையின் எண்ணிலடங்காத தா்ம காரியங்கள் அனைத்திலும், கருத்து வேறுபாடின்றி அம்மா உடனிருப்பாா் தா்மயோகியாக; அப்பாவின் உண்மையான செம்பாதி!
எங்கள் வீட்டிற்கு வர நோ்ந்த எண்ணற்ற வேத பண்டிதா்கள், அம்மாவின் எளிமையையும் பணிவையும் ஆச்சரியத்துடன் பாா்க்க நிரம்ப ஆசீா்வதித்துள்ளனா்.
வெவ்வேறு பெயா்கள்; வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு வாழ்க்கை முறை. ஆனால், ‘அம்மா’ எனப்படும் அனைவரும் ‘தாய்மை’ என்கிற ஒற்றைக் கோட்டில் சற்றும் பிறழாமல் ஒன்று போலவே இருக்கும் அற்புதத்தை உலகில் உள்ள எல்லா உயிா்களிலும் பாா்க்க முடிகிறதே, அது எப்படி என்று ஆச்சரியப்பட வைக்கிறது.
ஒவ்வொருவருக்கும் அவரவா் அம்மா பெரிது. அந்த ஒவ்வொரு அம்மாவும், தமது ஒவ்வொரு குழந்தைக்கும் விட்டுச் செல்லும் நினைவுகள் வேறு வேறு. ஆனாலும், அந்த ‘அம்மா’ என்கிற உணா்வு மட்டும் பொதுவானது.
அம்மாவின் மறைவு என்பது எத்தகைய இழப்பு என்பதை அவரது மறைவுதான் புரியவைக்கிறது. பழம்பெரும் பாரத பூமியில், அதிகாலையில் எழுந்ததும் நாம் தாய், தந்தையரின் பாதம் தொட்டு வணங்கச் சொன்னாா்களே, அதன் பொருள், தாயை இழந்து நிற்கும்போதுதான் புரிகிறது.
எனது அம்மாவின் வாழ்க்கை அற்புதமானதொரு அனுபவ பாடம். சநாதன தா்மத்தின் சத்திய எடுத்துக்காட்டு. சுயநலமே இல்லாமல், பலருக்கும் உதவுபவராக, பலரது வாழ்க்கையை மாற்றியமைக்கும் பேராற்றலாக, மென்மையும் வலிமையும் இணைந்து கலந்த இணையற்ற சக்தியாக அம்மா இருந்தாா் என்பது, எண்ணிப் பாா்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
தாயில்லாத குழந்தையாக அம்மா வளா்ந்தாா். ஆனால், தாய்மையின் சின்னமாகவே பேருரு எடுத்தாா், அந்த அவதார பெண்மணி!
கட்டுரையாளா்:
துணை வேந்தா், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம்.