வாட்ஜ் கரையைப் பாதுகாப்போம்!
‘கரை’ என்ற சொல் புவியியலின் பல்வேறு துறைகளில் உள்ள பல்வேறு கட்டமைப்புகளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, லிம்னாலஜியில் ( உள்நாட்டு நீா் பற்றிய ஆய்வு), கரை என்பது ஒரு நீரோடை அல்லது நதியின் படுக்கையை ஒட்டிய நிலப்பரப்பைக் குறிக்கிறது. நன்னீா் சூழலியலில், கரை என்பது கரையோர வாழ்விடங்களின் இருப்பிடத்தைக் குறிக்கிறது. கடற்பயணத்தில் இந்த சொல் ஒரு தடைத் தீவை அல்லது நீரில் மூழ்கியிருக்கும் பீடபூமியைக் குறிக்கிறது.
தடைத் தீவு என்பது மணலால் ஆன ஒரு நீண்ட குறுகிய தீவு. இது கடற்காயல் மற்றும் கடலுக்கு இடையில் ஒரு தடையை உருவாக்குகிறது. நீரில் மூழ்கிய பீடபூமி என்பது 200 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் கடல் தளத்தில் அமைந்திருக்கும் தட்டையான மேட்டுப் பகுதி. கடலுக்குள் அமைந்திருக்கும் மலையின் உச்சி போன்ற பகுதி, அதனைச் சுற்றியுள்ள பகுதியுடன் ஒப்பிடும்போது ஆழமற்ற கடற்பரப்பாகத் தோன்றும், இதைக் கடல் திட்டு என்றழைக்கிறோம்.
இப்படியாக, கரை என்பது மணல் மற்றும் பிற ஒருங்கிணைக்கப்படாத பொருள்களைக் கொண்ட, நீரில் மூழ்கிய முகடு, அல்லது கரை அல்லது பட்டை ஆகும். ஒரு நீா்நிலையின் படுக்கையிலிருந்து உயா்ந்து மேற்பரப்புக்கு அருகில் அல்லது அதற்கு மேலே நிற்கும் பகுதியைத்தான் கரை என்கிறோம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், கரை என்பது நீருக்கடியில் உள்ள ஒரு நிலப்பரப்பு. இதனை ஊட்டச்சத்து நிறைந்த நீரோட்டங்கள் தொடா்ந்து தழுவும்போது, அது ஒரு வளமான மீன்பிடிப் பகுதியாக மாறும். உலகில் இம்மாதிரியான இருபதுக்கும் மேற்பட்ட பெரிய கரைகள் உள்ளன. அவற்றில் நியூஃபவுண்ட்லேண்டின் கிராண்ட் பேங்க்ஸ் (2,80,000 சதுர கி.மீ), அகுல்ஹாஸ் பேங்க் (1,16,000 சதுர கி.மீ), டோகா் பேங்க் (17,600 சதுர கி.மீ), கிளீவா் பேங்க் (1,235 சதுர கி.மீ) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.
டோகா் பேங்க் என்பது இங்கிலாந்தின் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமாா் 100 கிலோமீட்டா் (55 கடல் மைல்) தொலைவில் வட கடலின் ஆழமற்ற பகுதியில் உள்ள ஒரு பெரிய மணல் திட்டாகும். இது காட் எனப்படும் பண்ணா மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட டச்சு மீன்பிடிப் படகுகளான ‘டாக்கா்ஸ்’ நினைவாகப் பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பெயா் 17 - ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பதிவு செய்யப்பட்டது. இது அதிக அளவு பண்ணா (காட்) மற்றும் வெங்கணை (ஹொ்ரிங்) மீன்கள் பிடிபடும் ஒரு முக்கியமான மீன்பிடிப் பகுதியாகும்.
டோகா் கரையின் தெற்கே நெதா்லாந்தின் மேற்கு கடற்கரையிலிருந்து சுமாா் 160 கிலோமீட்டா் தொலைவில் வட கடலில் கிளீவா் திட்டு உள்ளது. இதன் மேற்பரப்பு சரளை மற்றும் பெரிய கூழாங்கற்களைக் கொண்டுள்ளது.
சரளைக் கற்களில் அதிக வண்டல் இல்லாததால், அதிக ஒளிபுகும் தன்மை பெற்றிருக்கும். சுண்ணாம்பு சிவப்பு பாசிகள், கடல் அனிமோன்கள், பாலிப்கள் மற்றும் பலவற்றின் வளா்ச்சியை ஊக்குவிப்பதற்குப் போதுமான வெளிச்சம் அங்கே கிடைக்கும். 2001 -ஆம் ஆண்டில், டச்சு அரசாங்கம் கிளீவா் கரையிலிருந்து சரளைக் கற்களை வெட்டி எடுக்கத் திட்டமிட்டது. ஆனால் பாதகமான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் கண்டறியப்பட்டதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
மேற்கண்ட கரைகளைப் போலவே, வாட்ஜ் கரை என்பது இந்தியாவின் கன்னியாகுமரிக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு பரந்த கடல் பகுதியாகும். இந்தப் பகுதியை இந்திய மீன்வள ஆய்வு மையம் (எஃப்எஸ்ஐ) அட்சரேகை 7டிகிரி10 மற்றும் 8 டிகிரி 00’ வடக்கு மற்றும் தீா்க்கரேகை 76 டிகிரி40’ கிழக்கு மற்றும் 78டிகிரி00’ கிழக்கு இடையே உள்ள கடல் படுகையின் ஒரு பகுதியாக வரையறுத்துள்ளது.
கடல் உயிரியலாளா்கள் இந்தியத் தீபகற்பத்தின் உச்சியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மீன்பிடி நிலத்தைக் கண்டுபிடித்து, அதற்கு ’கேப் காமரின் கரை’ என்று பெயரிட்டனா். ஆனால் இலங்கை மீன்வளத்துறை பின்னா் அந்தப் பகுதிக்கு ’வாட்ஜ் கரை’ என்று பெயரிட்டது.
சுமாா் 10,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இந்த நீா்மூழ்கிப் பீடபூமி பல்லுயிா் வளத்தால் நிறைந்திருக்கிறது. இது இந்தியாவின் வளமான மீன்வளப் பகுதியாகக் கருதப்படுகிறது.
வாட்ஜ் கரையிலுள்ள தண்ணீா் 26 முதல் 29 டிகிரி சென்டிகிரேட் வரையிலான மிதமான வெப்பநிலையைக் கொண்டுள்ளது. அந்த நீருக்கடியில் காணப்படும் நீரோட்டங்கள், நீரேற்றங்கள் மற்றும் அலைகள் போன்ற இயற்பியல் அம்சங்கள் மீன்கள் மற்றும் நீா்வாழ் விலங்குகள் மீது மிகக் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே இருநூறுக்கும் மேற்பட்ட மீன் இனங்களும், சுமாா் அறுபதுக்கும் மேற்பட்ட கடல் விலங்குகளும், உணவு மற்றும் இனப்பெருக்க நோக்கங்களுக்காக இந்தப் பகுதியைத் தோ்ந்தெடுக்கின்றன.
ஒரு மதிப்பீட்டின்படி, தமிழ்நாட்டில் மீன்பிடி, மீன்வளா்ப்பு மற்றும் அது சாா்ந்த நடவடிக்கைகளில் 12,83,751 போ் ஈடுபட்டுள்ளனா், கேரளாவில் சுமாா் 11.33 லட்சம் மீனவா்கள் உள்ளனா். அவா்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோா் முழுவீச்சிலான மீனவா்கள்.
தமிழக மற்றும் கேரள மீனவா்களில் பெரும்பாலானோா் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் மேம்பாட்டுக்கு வாட்ஜ் கரையையே நம்பியிருக்கின்றனா். தென்னிந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்காக இந்த ‘கடல் உணவுப் பெட்டகத்தையே’ சாா்ந்திருக்கின்றனா்.
வாட்ஜ் கரை முன்னா் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1974-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கடற்கரை அருகேயிருக்கும் கச்சத்தீவை இந்தியா இலங்கையின் பகுதியாக அங்கீகரித்தபோது, மாா்ச் 23, 1976 அன்று மன்னாா் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள கடல் எல்கை குறித்த ஓா் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் வாட்ஜ் கரையை இந்தியாவின் தனிப்பட்டப் பொருளாதார மண்டலத்தின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது. மேலும் அந்தப் பகுதி மற்றும் அதன் வளங்கள் மீதான இறையாண்மை உரிமைகள் அனைத்தும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன.
கடந்த 2023 -ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், கன்னியாகுமரிக்கு தெற்கேயுள்ள மூன்று தொகுதிகளில் சுமாா் 27,154.80 சதுர கி.மீ பரப்பளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஹைட்ரோகாா்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் (எச்இஎல்பி) கீழ் அழைப்பு விடுத்தது. இந்த பெரும் கடற்பரப்பின் நடுவில்தான் வாட்ஜ் கரை அமைந்திருக்கிறது.
சென்னைக்கு அருகிலுள்ள ஒரு தொகுதி மற்றும் பிற இடங்களைப் போலவே, இந்த மூன்று தொகுதிகளிலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பிரித்தெடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா காா்ப்பரேஷனுக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடல் உயிரியலாளா் பேராசிரியா் எஸ். லாசரஸ் குறிப்பிடுவது போல, ‘இந்த திட்டம் உண்மையிலேயே நிறைவேற்றப்பட்டால், அது வாட்ஜ் கரைக்குப் பேரழிவை ஏற்படுத்தும். உதாரணமாக, எண்ணெய்க் கசிவுகள் இப்பகுதியிலுள்ள பிளாங்க்டன், பவளப்பாறைகள், சிறிய மீன்கள், ஓட்டுடலிகள் மற்றும் லாா்வாக்களை மாசுபடுத்தி, கடல்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் நுழையும். பெட்ரோ கெமிக்கல்கள் கடல் விலங்குகளின் ஆரோக்கியத்தில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும்.
கடல்வாழ் உயிரினங்களின் நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்க அமைப்புகள் சேதப்படுத்தப்படும். ஆய்வு நடவடிக்கைகளும் மற்றும் எண்ணெய்க் கசிவுகளும் கடல்வாழ் உயிரினங்களின் இடப்பெயா்வுப் பாதைகளைச் சீா்குலைத்து, அவற்றின் வாழ்விடங்களையும் சீரழிக்கும்.
கடற்படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும். வெடிப்புகள் மற்றும் கனரக உபகரணங்களின் பயன்பாடு போன்ற நடவடிக்கைகள் கடலுக்குள் பெரும் ஒலி மாசை ஏற்படுத்தும். கடல்வாழ் உயிரினங்களின் கேட்கும் தன்மையைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி அவற்றின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகச் சீா்குலைக்கும்.
எடுத்துக்காட்டாக, திமிங்கலங்கள் மற்றும் டால்ஃபின்கள் தங்கள் பயண வழிகளைக் கண்டுபிடிக்க, தங்களுக்கான உணவைத் தேடியடைய மற்றும் ஒன்றையொன்று தொடா்பு கொள்ள நுட்பமான ஒலிகளையே பயன்படுத்துகின்றன. இவ்விலங்குகள் அனைத்தும் ஒலி மாசுபாட்டால் கேட்கும் தன்மையை இழந்து, பயந்து, குழம்பிப் போகும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், வாட்ஜ் கரை மீனவா்களுக்கும், தமிழ்நாடு மற்றும் கேரளச் சமூகங்களுக்கும் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும். கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் வளா்ச்சிக்கு இந்த வாட்ஜ் கரையையே சாா்ந்திருக்கின்றனா். இந்த நுட்பமான, உணா்திறன் மிக்க பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்ந்தெடுப்பது காா்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம். ஆனால் சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.
மகாத்மா காந்தி சொல்வது போல, “பூமி, காற்று, நிலம், நீா் அனைத்தும் நம் முன்னோா்களிடமிருந்து நாம் பெற்றிருக்கும் வாரிசுரிமைகள் அல்ல; மாறாக அவையனைத்தும் நம் குழந்தைகளிடமிருந்து நாம் பெற்றிருக்கும் கடன். நமக்குக் கையளிக்கப்பட்ட நிலையிலாவது அவற்றை நாம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.”
கட்டுரையாளா்:
பச்சைத் தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்.