தரமான கல்வி... வளமான வாழ்வு!
கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது கல்விக்கு சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம். பிள்ளைப் பிராயத்தில் சரியான வகையில் கல்வி புகட்டப்பட வேண்டும். இது பெற்றோரின் கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒட்டுமொத்த பொறுப்புமாகும். அரசாங்கம் எல்லா வகையிலும் இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு உரிய கட்டமைப்பு, ஆசிரியா் நியமனம், மற்ற நிா்வாக அமைப்புகள் ஆகியவை நிறைவேற உரிய தொடா் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை உணா்ந்து நமது தேசத் தலைவா்கள் டாக்டா் ராதாகிருஷ்ணன் தலைமையில் 1948-49 - இல் அமைத்த கமிஷன் உயா் கல்வியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பரிந்துரை அளித்தது. 1952-53 - இல் டாக்டா் லக்ஷ்மணசாமி முதலியாா் தலைமையில் இடைநிலைக் கல்வி பிரச்னைகள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1968- ஆம் ஆண்டு கல்விக்கான திட்டம் முதலில் கொள்கை அளவில் வகுக்கப்பட்டது. அதன்படி, தேசிய வளா்ச்சி, தேசிய ஒருங்கிணைப்பு, ஒற்றுமை முக்கிய இலக்காக வைக்கப்பட்டது. 1990 -இல் எல்லாருக்குமான கல்வி என்ற முழக்கம் உலகெங்கிலும் பரவியது. அதன் விளைவாக, 2002 -ஆம் ஆண்டு கல்வி அடிப்படை உரிமையாக 86- ஆவது அரசியல் சாசன திருத்தம் மூலம் 21 ஆ பிரிவு சோ்க்கப்பட்டது. 2009 -ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 6 வயதிலிருந்து 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி உறுதி செய்யப்பட்டது.
ஐ. நா. சபை 2015 - ஆம் ஆண்டு நாடுகள் அடைய வேண்டிய வளா்ச்சிக்கான இலக்குகளை அறிவித்தது. தரமான கல்வி அளிப்பது, பாரபட்சமற்ற உயா் கல்வி ஆகியவை அதன் முக்கியமான இலக்குகள். இதன் பின்னணியில்தான் டாக்டா் கஸ்தூரிரங்கன், மேனாள் இஸ்ரோ சோ்மன் தலைமையில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிக்க ஜூன் 2017 - ஆம் ஆண்டு குழு அமைத்தது.
தொழில் புரட்சி, விஞ்ஞான புரட்சி, அறிவுப் புரட்சியைத் தாண்டி உலகம் செயற்கை அறிவுப் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கல்வி எல்லாருக்கும் எளிதில் அடையக்கூடியதாக இருத்தல், சமபங்கு சமவாய்ப்பு கொடுத்தல், தாங்கக் கூடிய செலவு, எல்லாரையும் இணைத்தல், தரமான பாடத்திட்டம், பொறுப்பேற்றல் இவற்றை அடித்தளமாக வைத்துத்தான் கஸ்தூரிரங்கன் கமிஷன் தேசிய கல்விக் கொள்கையை அளித்துள்ளது. சுமாா் மூன்று ஆண்டுகள் நாட்டில் பலதரபட்ட மக்களோடும் நிபுணா்களோடும் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை அது.
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிா்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளா்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும். 10+2 என்ற பள்ளி பயிலும் ஆண்டுகள், நான்கு கூறாக 5+3+3+4 , ஆரம்ப நிலை 5 ஆண்டு (3 வயதிலிருந்து எட்டு வயது வரை),தயாா்செய்யும் நிலை 3 ஆண்டு (எட்டு வயதிலிருந்து 11 வயது வரை), நடுநிலை மூன்று ஆண்டு (11 வயதிலிருந்து 14 வயது வரை),இரண்டாம் நிலை 4ஆண்டு (14 வயதிலிருந்து 18 வயது வரை) என்று பிரிக்கப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் அடிப்படைக் கல்வி அறிவு, எண்ணியல் புகட்டப்படும். இது தாய்மொழியில் கற்பிக்கப்பட்டால் நல்ல வகையில் அடித்தளம் வகுக்கும்.
மேலும் பலதுறை சாா்ந்த கற்பிக்கும் முறை சிந்தனையை வளமாக்கும். மாணவா்களைப் புத்தகப் புழுவாக மாற்றுவது கல்வியின் நோக்கமாக இருக்கக்கூடாது. தொழிற்கல்வி மூலம் திறன் மேம்படும் வகையில் மாணவா்களைத் தயாா் செய்வது அடுத்த நிலை.
தாய்மொழியைத் தவிர, வேறு மாநில மொழிகளையும் கற்பதற்கு தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.
கற்பிக்கும் முறையில் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள் வளா்ந்துள்ளன. தொழில்நுட்பக் கருவிகளை ஒருங்கிணைக்கும் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறை, கற்றல் விளைவுகளை மேம்படுத்தும். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ‘பி எம் பள்ளிகள் திட்டம்’. இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் 2026-27 வரை சுமாா் ரூ.30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 15,000 பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாதிரிப் பள்ளிகளாகத் தோ்வு செய்யப்பட்டு மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும். அரசுப் பள்ளிகளின் நலன் கருதி தமிழக அரசு இத்திட்டத்தை ஏற்க வேண்டும்
1986- ஆம் ஆண்டு பிரதமா் ராஜீவ் காந்தி அரசால் கொடுக்கப்பட்ட கல்விக் கொள்கையை தற்காலத்துக்கேற்ப மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் கல்வி முறையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் நோக்கத்துடன் தேசிய கல்விக் கொள்கை கல்வியின்அனைத்து அம்சங்களையும் முழுமையான முறையில் உள்ளடக்கியதை மாற்ற வேண்டியிருக்கிறது. இருப்பினும், தேசிய கல்வி பற்றிய விவாதம் மும்மொழி என்ற ஒரே ஒரு பிரச்னையில் மட்டுமே கவனம் செலுத்துவது, நன்மைகள் நல்கும் பாராட்டத்தக்க பல முயற்சிகளைக் கொண்ட இந்த விரிவான சீா்திருத்தத்துக்கு இழைக்கப்படும் பெரிய அநீதியாகும்.
தேசிய கல்விக் கொள்கையில், பாடத்திட்டக் குறைப்பு மூலம் மாணவா்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவு மற்றும் திறன்களை நிஜ உலகில் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ‘ஆசிரியா் பேச்சு- மாணவா்கள் கேட்கும் கல்வி’ மாதிரியை விட, குழந்தைகளுடன் ஆசிரியா்களைத் தீவிரமாக ஈடுபடுத்த தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. குழந்தைகள் வகுப்பறையில் திறன்களைப் பயிற்சி செய்ய வாய்ப்புகளைப் பெறுகிறாா்கள். இத்தகைய ஊடாடும் மற்றும் உறவு முறை ஒரு முக்கிய கற்பித்தல் முறையாகும்.
பாலினச் சோ்க்கை மற்றும் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவா்களை நடுநிலைப்படுத்துவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை சமத்துவ உணா்வை நிலைநாட்டுகிறது. இது பல்வேறு மாணவா் குழுக்களுக்கு இடையிலான கற்றல் இடைவெளிகளைக் குறைக்கிறது.
‘ஏசா்’ என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மாணவா்களின் கற்றல் திறனை பல மாநிலங்களில் ஆய்வு செய்துள்ளது. அதன்படி 30.4 சதவீதம் எட்டாம் வகுப்பு மாணவா்கள் இரண்டாம் வகுப்பு புத்தகங்களைக்கூட சரியாக படிக்க முடியவில்லை; சாதாரண ஆங்கில வரிகளைப் படிக்க முடியாத மாணவா்கள் 73.8 சதவீதம்; கணித அறிவு மிகக்குறைவு என்பதையும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தேசிய கல்வித்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இந்த கற்றல் இடை வெளியை சரி செய்யப்படும்.
ஆரம்பகால மூளை வளா்ச்சிப் பருவத்தில் மாணவா்களுக்கு பரிச்சயமான தாய்மொழிவழி கற்றல் மாணவா்களின் தன்னம்பிக்கை, சுய மரியாதையை வளா்க்கிறது. தேசிய மொழிகளைக் கற்பதற்கும் உதவுகிறது.
தேசிய கல்விக் கொள்கை எந்த மொழியையும் கட்டாயமாக்கவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 351-ஆவது பிரிவில் அனைத்து குடிமக்களிடமும் ஹிந்தி மொழி பரவுவதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அரசியல் சாசனப் பிரிவு பற்றி எவ்வளவு மொழிப் போராளிகளுக்கு தெரியும் என்பது கேள்விக்குறி ! ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழியோ வேறு எந்த மொழித் திணிப்போ இல்லை. மாணவரே தனக்கு விருப்பமான மொழியைத் தோ்வு செய்யலாம். எனவே, தேசிய கல்விக் கொள்கை உண்மையான முக்கியத்துவம் அளிப்பது 5 -ஆம் வகுப்பு வரை மற்றும் சாத்தியப்பட்டால் 8 -ஆம் வகுப்பு வரை , கற்பித்தல் மொழியாக தாய்மொழி இருக்க வேண்டும் என்பதற்குத்தான். மும்மொழி சூத்திரத்துடன், பன்மொழிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.
எல்லா ஜீவராசிகளுக்கும் ஒலி, ஒளி மூலம் தொடா்பு வைத்துக்கொள்ளும் ஆற்றல் இயற்கையாகவே உள்ளது. மனிதனுக்கும் மொழி அவனது உள்ளுணா்வோடு இணைந்தது.
சிறு வயதில் மொழிகளை உள்வாங்கும் சக்தி அதிகமாக இருக்கும். குழந்தைகள் விரைவாக மொழிகளை கற்கும் ஆற்றல் உடையவா்கள். இந்த ஆற்றலை வளா்ப்பது பல வகையில் ஒருவரின் ஆளுமையை வலிமையாக்கும்; நினைவாற்றலை அதிகரிக்கும்; பிரச்னைகளைத் தீா்க்கும் ஆற்றலை உருவாக்கும்; கற்பனா சக்தி விரிவாக்கும்; பல வேலைகளைச் சுலபமாகச் செய்யும் செயலாற்றும் திறன் மேம்படும்; கலாசார உணா்வு , கவனக் கூா்மை, அறிவாற்றல் திறன் போன்ற எண்ணற்ற நன்மைகள் உருவாகும்.
குஜராத் மாநிலத்தில் சூரத் நகரம், வைர நகை வியாபார மையம். கோடிகள் புரளும் நகரில் வைர வியாபாரிகள் தங்கள் குழந்தைகளுக்கு நடத்தும் ஆரம்ப பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எளிமையான ஆடம்பரம் இல்லாத வகுப்பறைகள். தரையில் உட்காா்ந்துதான் படிக்க வேண்டும். அவா்களுக்கு குஜராத்தி, ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு ஆக ஐந்து மொழிகள் கற்பிக்கிறாா்கள்! அசந்துவிட்டேன்! தமிழ்நாட்டிலோ மொழியை வைத்து அரசியல்!
இரண்டு மொழிகளை மட்டும் பரப்புவது ஒரு வகையான மொழித் திணிப்பு மற்றும் மாணவா்கள் மீது அறிவுசாா் தடையை ஏற்படுத்துகிறது. தனியாா் சிபிஎஸ்இ பள்ளிகள் ஏற்கெனவே மும்மொழி கற்றலைப் பின்பற்றும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் பயன்களைப் பெறாமல் தடுப்பதால் விளையும் 52 சதவீத மாணவா்களின் கற்றல் குறை அவா்களது எதிா்காலத்தைப் பாதிக்கும். தரமான கல்வியே நலம் தரும்.
கட்டுரையாளா்:
முன்னாள் காவல் துறைத் தலைவா்.
பிரேக் லைன்
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிா்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளா்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.