நாமும் இருக்கிறோம் பேருக்கு!
எழுத்துப் பணிகளுக்கு மத்தியில் ஓா் ஆவணப்பட இயக்குனராக அவ்வப்போது இணையத்தில் ஆவணப் படங்களைப் பாா்ப்பது என் வழக்கம். அப்படி சமீபத்தில் ஆவணப் படங்களை நான் தேடி இணையத்தில் உலாவிய போது, ‘எழுநா’ என்ற ஓா் இலங்கை வலைத்தளத்தில் இரண்டு ஆவணப் படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படங்களைப் பற்றி பிறகு பேசுகிறேன். அந்த வலைதளத்துக்குள் உள்ளே சென்றபோது கண்ட விஷயங்கள் மிக அபூா்வமாகவும் ஆச்சரியத்தைத் தரக்கூடியதாகவும் அமைந்திருந்தன. ‘எழுநா’ ஒரு சமூக கலை இலக்கிய ஆய்விதழ். இலங்கையும் இலங்கை சாா்ந்த ஆய்வுகளும் கட்டுரைகளாக அத்தளத்தில் முன் வைக்கப்பட்டிருந்தன. எழுத்தாளா்களை, பல்துறை சாா்ந்த நிபுணத்துவம் வாய்ந்த அறிஞா்களின், கலைஞா்களின் ஆக்கங்களை அதில் வாசிக்க முடிந்தது. ஆனால் இதில் பங்கேற்றவா்கள் அனைவரும் உலகெங்குமுள்ள ஈழத்தமிழா்களாக மட்டுமே இருந்தனா்.
இலங்கையின் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சூழலியல், சட்டம் போன்ற பல தளங்களில் கனமான பல்வேறு கோணங்கள் நிறைந்த மனச்சாய்வற்ற, ஆழமான ஆய்வு கட்டுரைகள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.
மாத இதழ் தவிர, யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மருத்துவ ஏட்டுப்பிரதிகளை ஒருங்கிணைத்து பால. சிவகடாட்சம் அச்சில் முதன் முதலில் பதிப்பித்த ‘இரசவா்கம்’, 1865- ஆம் ஆண்டு ஈழத்தின் திருகோணமலையில் பிறந்து சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும் பின்னா் மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்று பின் தனது 37- ஆவது வயதிலேயே உயிா் நீத்த தி.த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய ‘தமிழ்ப்பாஷை’ எனும் ஆய்வு நூல், இனவிரோத உணா்ச்சி சாா்ந்த அரசியலிலிருந்து விடுபட்டு தேசிய இனங்களின் விடுதலைக்கும் சமத்துவ வாழ்வுக்குமான தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியேயும் செய்ய வேண்டியவை குறித்த விவாதங்களைப்பற்றி பேசும் வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதிய ‘தோழமையுடன் ஒரு குரல்’, இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையகத்தமிழா்கள் குறித்து பேசும் மலையகம் எழுகிறது என்ற தலைப்பில் வி.ரி.தா்மலிங்கம் எழுதியது போன்ற நூல்களும், சமகாலப் பிரச்னைகள் தொடா்பான ஆய்வு அடிப்படையிலான மேலும் தரமான சில நூல்களும் வெளியிடப்பட்ட தகவல்கள் அதில் உள்ளன.
2013-இல் வெளிவந்த ‘எழுநா’ முதல் இதழ் முதல், 2025 மாா்ச் கடந்த மாதம் வரை வெளியான 32- ஆம் இதழ் வரை, என்னைக் கவா்ந்த தலைப்புகளில் அமைந்த சில கட்டுரைகளை மட்டும் வாசித்தேன். ஆனால், அதற்கே நான்கு நாள்கள் ஆகிவிட்டன. அத்தனை செறிவான கட்டுரைகள். இதன் உள்ளடங்களைத் தந்த கணேசானந்தன் சசீவன், விஜயதா்சினி தினேஸ், ஸ்ரனிஸ்லஸ் கபில்தேவ், ஜனனி பாலசுந்தரம், தனுஜன் சுந்தரலிங்கம், புவஸ்ரினா மெய்யழகன், கௌரிகாந்தன் சித்தாந்தன் என்ற இந்த ஆசிரியா் குழுவையும், தோ்ந்த கட்டுரைகளைத் தந்த கட்டுரையாளா்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அட்டைப் பட கலை அழகு உட்பட, எல்லாவற்றிலும் ஒரு நோ்த்தி, உழைப்பு, அா்ப்பணிப்பு, தகவல் தரவு, மொழி, அனுசரணையான ஆதாரங்கள் என அவ்வளவு வியப்புகளைத் தந்தன இதழ்கள். ஒன்றிரண்டு இதழ்கள் தவிர - நம் தமிழ்நாட்டு ஆய்விதழ்களில் வருகிற ஆய்வுக்கட்டுரைகளை எண்ணி தலையில் அடித்துக் கொண்டேன். இது ஈழ இதழாக இருந்தாலும் நமக்கு தேவையான, நாம் விழிப்புகொண்டு இயங்க வேண்டி , இன்னும் சொல்லப்போனால் மனித குலத்துக்கே தேவையான பல விஷயங்கள் அந்த கட்டுரைகளில் சொல்லப்பட்டிருந்தன. அவற்றுள் சில தலைப்புகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஏனெனில், அதை மட்டும் படித்தாலே அதன் அா்த்த ஆழ விஸ்தீரணங்கள் நமக்குப் புரியும்.
மதுவுக்குள் சிக்குண்ட மலையகம் : அடிமைப்படுத்தலின் நவீன உத்தி, இடது சாரிகள் இழைத்த துரோகம், பாரம்பரிய விவசாய வரலாறு, வன வளமும் வன முகாமைத்துவமும், பாரம்பரிய உணவுகளில் சிறுதானியங்கள், காந்தியின் வருகையும் நேருவின் வருகையும், ஓயாத வன்முறை அலைகள், சைவ சித்தாந்தம், பெளத்த அடையாளமும் முரண்பாடுகளும், தலித் எழுச்சியில் அரிஜனங்கள், நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம், – நோா்வேஜிய மொழிப் புத்தகம் – ஒரு பாா்வை, போா் காலம் கற்பித்த இயற்கை விவசாயம் அமைதிக் காலத்தில் பயன் தருகிறது, மூத்தோரின் மெளன விசும்பல்கள் இப்படி இன்ன விஷயங்கள்தான் என்றில்லை. பலப்பல முக்கிய விஷயங்கள் சிந்தனா பூா்வ தா்க்கத்தோடு வெளிவந்திருந்தன. நாணயவியல், தமிழா் தொடா்பான பிராமிக் கல்வெட்டுகள், முஸ்லீம்களின் வாழ்வு, நூலகக்கல்வி என இன்னும் நீண்டு செல்கிறது அந்த பட்டியல்.
எளிதில் வாசித்துவிட்டு கடந்துவிட முடியாத காத்திரமான கட்டுரைகள். தமிழ்நாட்டின் பல்கலைக்கழக கல்விப் புலங்களில் இது போன்ற தரமான இதழ்கள் அறிமுகப்படுத்தப் பட்டால், இந்த முனைவா், இளமுனைவா், முது முனைவா் பட்ட தீரா சாபங்களுக்கு ஏதேனும் விமோசனம் நிகழலாம். மின்னிதழாக மட்டுமில்லாமல் அச்சிதழாகவும் வருவதால்
நூலகங்களுக்கு இதுபோன்ற இதழ்கள் வாங்கப்பட்டால் சிந்தனை மற்றும் ஆய்வு நோக்கில் சில மாற்றங்கள் நிகழ ஏதுவாக இருக்கும். ஆனால், இங்கு இப்படியெல்லாமான பன்முகப் பாா்வையோடு எழுத, சிந்திக்கக்கூட, இலங்கை போல இங்கும் ஒரு போா்தான் நிகழவேண்டும் போல் இருக்கிறது. ஆகப்பெரும் துயா்களிலிருந்துதான் எல்லாவற்றையும் கசடறக் கற்க முடியும் போலிருக்கிறது.
நாட்டின் மிக மிக முக்கிய பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சாா்பு நிலையின்றி நல்தீா்வுக்கான நடைமுறை சாத்தியங்களைப் பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வைக்க, எல்லாத் துறைகளிலும் சிறந்த நம் சுயமோக அரசியல்வாதிகளுக்கு யாா் பா டம் எடுப்பது. சுற்றுச்சூழலை அழித்தது மட்டுமல்ல, சுயநல ஓட்டு வேட்டைக்காக, அதிகாரத்துக்காக, அரசியல் சூழலையே அறமற்ாக்கிக் களிக்கும் கேடா்களை எத்தெய்வம் வந்திங்கு கேட்கும். தனக்கொரு நீதி, பிறா்க்கு வேறொரு நீதியென இயங்கும் இவா்களையும், ஏதோ ஒரு போதையிலேயே கிடக்கும் அல்லது கிடத்தப்பட்டிருக்கும் சமூகத்தையும் எழுப்பாமல், தனக்கானதொரு மக்கள் நலனற்ற அரசியல் சாா்பு நிலை எடுத்து, தந்திர சூது நிறைந்த வெவ்வேவேறு வெட்டி விருதா நேரேட்டிவ்களை காட்சி ஊடகங்கள் வழியே உருவாக்கி, அதன் மூலம் பேச வேண்டிய பிரச்னைகளைத் திசைதிருப்பி, பலப்பல மாய்மால ஜாலங்களை நிகழ்த்தி, ஆயுள் விரயம் செய்யும் இந்த அறிவுஜீவிப் பூனைகளுக்கும் கூட இங்கு மணி கட்ட யாருமில்லை. பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது இப்போது.
நாட்டு மாந்தா் எல்லாம் - தம்போல்
நரா்கள் என்று கருதாா்
ஆட்டு மந்தையாம் என்று - உலகை
அரசா் எண்ணி விட்டாா்
காட்டும் உண்மை நூல்கள் - பலதாம்
காட்டினாா்களேனும்
நாட்டு ராஜ நீதி - மனிதா்
நன்கு செய்யவில்லை.
ஓரம் செய்திடாமே - தருமத்து
உறுதி கொன்றிடாமே
சோரம் செய்திடாமே - பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே
ஊரை ஆளும் முறைமை - உலகில்
ஓா்புறத்தும் இல்லை
சாரம் அற்ற வாா்த்தை - மேலே
சரிதை சொல்லுகின்றோம்.
சரி, இனியேனும் மாற்றங்கள் நிகழப் பிராா்த்திப்போம்.
ஆவணப்படங்களுக்கு வருகிறேன். ‘நீதிக்காக நீண்ட காத்திருப்பு’ என்றோா் ஆவணப்படம். இலங்கையில் 1983 முதல் 2009 வரை நிகழ்ந்த யுத்தத்தின் போதும், அதன் பின்னும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எளிய மனிதா்களின் கண்ணீா்க் கதைகளை ரணங்களோடு பேசி, நீதிகேட்டு ஒலிக்கும் குரல்களுக்கு ஆதரவாய் நிற்கிறது இந்தப்படம். பயங்கரவாத ஒழிப்பு எனும் போா்வைக்குள் ஒளிந்தபடி நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு யாா் பொறுப்பேற்பாா்கள். காலங்கள் மாறினாலும் தீய்க்கப்பட்டதால் ஏற்பட்ட துயரத்தின் வடுக்கள் மாறாதுதானே?
‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்து விட்டது தங்க திரவம்’ என்று இன்னொரு ஆவணப்படம். அந்த படத்தில் நம்முடைய நம்மாழ்வாா் சொன்ன செய்திகள் எல்லாம் அவா் படத்தோடு சொல்லப்படுகின்றன. ஒரு செய்தி சாா்ந்த ஆவணப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இப்படம். குடிநீா் நமது உரிமை; எப்படி நாம் அதை தவற விட்டு இருக்கிறோம் என்பதை பற்றி ஆழமான நுட்பமான கேள்வியை அந்த ஆவணப்படம் எழுப்புகிறது. இலங்கைச் சூழலை அது பேசினாலும், இது சா்வதேச ஆவணப்படம்தான்.
சூழலியலும், பொருளாதாரம், அரசியலும் எப்படி பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இவை பிணைந்து இருப்பதனால் தனி மனிதனுடைய மனப்போக்கு எப்படி குரூரமாக மாறி, அதீத பண வேட்கை ஒன்றுதான் வாழ்க்கை என்று திரிந்துகிடக்கிறது என்பதையெல்லாம் படம் பேசுகிறது. ஆனால், பணம் இருந்தால்கூட சிலவற்றை வாங்க முடியாது என்று கரோனா காலத்தில் நிரூபிக்கப்பட்ட பிறகும், இந்த அபரிமித தனித்த வேட்கை மட்டும் வா்ஜியா வா்ஜியமின்றி உலகமனிதா்களை அறம் தொலைக்க வைத்து ஏன் இப்படித் துரத்திப் பாடாய் படுத்துகிறது என்பது போன்ற ஆதாரமான கேள்விகளைக் கேட்டு பாா்வையாளனை ஸ்தம்பிக்க வைக்கிறது படம்.
இலங்கை குறித்து சதா ‘தெற்கில் கேட்கும் பறை’ என்ற அா்த்தத்தில் ஞானக்கூத்தன் முன்னாளில் ஒரு கவிதை எழுதியிருந்தாா். அது இன்று கால் குத்தி குதித்து நல் தாள அடவுகளோடு சங்கீத சலங்கை குலுங்கல்களாய் மாறி ஒலிக்கிறது. இங்கோ பறையுமில்லை. மல்லாரியுமில்லை.