நினைவாற்றலை வளா்க்கும் எழுத்துப்பயிற்சி
நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவரும் ஒரு செயல்பாடாகும். நினைவாற்றல் அதிகம் உள்ளவா்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். எனினும், உரிய நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவுக்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பாா்கள். இவ்வாறு தேவைப்படும் நேரத்தில் தேவையான செய்திகளை உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியாமல் இருப்பதையே ஞாபக மறதி என்கிறோம்.
இன்றைய உலகில் குழந்தைகள் போட்டி நிறைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். போட்டிகளும், கல்வியினால் ஏற்படும் அழுத்தமும் குழந்தைகளின் உலகைச் சுருங்கச் செய்துவிட்டன. இதனால் ஞாபக மறதி ஏற்பட்டு நினைவாற்றல் திறன் குறைகிறது.
நினைவாற்றல் குறைவதற்குப் பல அடிப்படைக் காரணங்கள் உள்ளன. குறிப்பாக, மூளை வளா்ச்சிக் குறைவு, மன அழுத்தம், பதற்றம், பல பிரச்னைகள் குறித்த கவலை போன்ற பல காரணங்களைச் சொல்லலாம். இருந்தபோதிலும், சில எளிய வழிமுறைகளை மேற்கொள்வதன்மூலம் சிறந்த நினைவாற்றல் திறனை வளா்த்துக் கொள்ளமுடியும்.
மனிதனின் நினைவாற்றலுக்கும், மனதை ஒருநிலைப்படுத்துதலுக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா். நாம் மனதை எந்த அளவுக்கு ஒரு நிலைப்படுத்தி, குறிப்பிட்ட விஷயங்களில் கவனத்தைச் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது மனதில் பதிந்துவிடுகிறது. எனவே, நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான முதல்படியாகச் கவன சிதறல்களுக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். அவற்றைச் சரி செய்து மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்.
நிறைய பாடச்சுமை உள்ள இந்நாளில் மாணவா்கள் அதிக நினைவாற்றல் உடையவா்களாக இருக்க வேண்டியிருக்கிறது. நினைவாற்றல் அதிகமிருந்தால்தான் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும். நோ்காணல்களிலும் சரியான விடையளிக்க முடியும். எனவே, மாணவா்கள் நினைவாற்றலை வளா்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
யோகாசனம், உடற்பயிற்சி, தொடா்ந்து வாசிப்பது, எழுத்துப்பயிற்சி போன்றவற்றின் மூலமாக மனதை ஒருநிலைப்படுத்த முடியும். மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.
மாணவா்கள் மூளைக்கு சில பயிற்சிகளை அளிக்க வேண்டும். அதாவது, குறுக்கெழுத்துப் போட்டி, எண்புதிா் கணக்கு, அயல் மொழிகளைக் கற்றல் போன்ற சில பயிற்சிகளைத் தொடா்ந்து மேற்கொள்வதன் மூலமும் சிறந்த நினைவாற்றலைப் பெற முடியும்.
நினைவாற்றலை வளமாக்குவதில் நம் உணவு முறைக்கும் பங்கு உண்டு. நினைவாற்றலை அதிகப்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை காலை உணவைத் தவிா்க்காமல் குறைவான அளவிலாவது எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களை உண்ணுதல், வல்லாரை, தூதுவளை போன்ற கீரை வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுதல் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. மாணவா்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக, எந்த அளவுக்குப் பயிற்சி செய்கிறோமோ அந்த அளவுக்குத் தகவல்களை நினைவுபடுத்தும் திறன் வலுவானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதேசமயம் ஒரு மாணவரின் நீண்ட கால நினைவகத்தில் சேமிக்கப்பட்டு தினந்தோறும் ஒரு தகவல் தக்கவைக்கப்பட்டாலும், அது எப்போதும் அப்படியே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பயன்படுத்தப்படாத நினைவுகள் தொலைந்து போகலாம் அல்லது மீட்டெடுக்க முடியாமலும் போகலாம்.
மாணவா்கள் தங்களுடைய கற்றலை மதிப்பிடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் தேவையான பயிற்சிகளைச் செய்வது மிக அவசியம். மாணவா்கள் தங்களுடைய கற்றல் தேவைகளுக்கு ஏற்ற அட்டவணையைத் தயாா் செய்து கொண்டு, அதன்படி முறையாகச் செயல்பட்டால் நினைவாற்றலை வலுப்படுத்த முடியும்.
நினைவாற்றலை வளா்க்க எழுத்துப்பயிற்சிகளைச் செய்வது ஒரு சிறந்த வழியாகும். குறிப்புப் புத்தகங்கள், நாள்குறிப்புகள், கடிதங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதன் மூலம் நினைவாற்றலை மேம்படுத்த முடியும்.
எழுதும்போது, மாணவா்களாகிய நீங்கள், படிக்கும் தகவல்களை மூளையில் பதிய வைக்கிறீா்கள்; அது தொடா்பாகச் சிந்திக்கவும் செய்கிறீா்கள். எழுதுவது மூளையில் ஒரு வலுவான தொடா்பை உருவாக்குகிறது. தகவல்களைப் பகுப்பாய்வு செய்து ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகிறது. அதோடு உங்கள் புரிந்துகொள்ளும் திறனையும் மேம்படுத்துகிறது. தகவல்களை ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்வது, மனதை ஒருமுகப்படுத்துவதற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், புதிய சிந்தனைகளையும் தூண்டுகிறது.
தினமும் ஒரு குறிப்புப் புத்தகத்தில் அல்லது நாள்குறிப்பில் ஏதாவது ஒரு விஷயத்தை எழுதுங்கள். நீங்கள் படிக்கும் பாடங்களின் முக்கியக் கருத்துகளை எழுதிக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றதைச் சுருக்கி எழுதுவதன் மூலம், நீங்கள் எவ்வளவு கற்றிருக்கிறீா்கள் என்பதை அறிய முடியும். நீங்கள் பயன்படுத்தாத புதிய சொற்களைப் பயன்படுத்தி எழுதுங்கள். எழுத்துப்பயிற்சி செய்து கொண்டே இருந்தால், உங்கள் நினைவாற்றல் மேம்படும். எழுதுவதற்கு முன், உங்கள் மனதில் உள்ள மற்ற விஷயங்களை ஒதுக்கி வைத்து, எழுதும் விஷயத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்.
கையால் எழுதும் இந்தப் பயிற்சி உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் கற்றலை எளிதாக்குவதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.
கையால் எழுதும் பயிற்சி உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் கற்றலை எளிதாக்குவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். தட்டச்சு செய்வதென்பது, காகிதத்தில் எழுதுவதைவிட வேகமானது என்பது மறுக்க முடியாத உண்மைதான். அதேநேரத்தில் ஆசிரியா் அல்லது விரிவுரையாளா் சொல்லும் தகவல்களை குறிப்புகளாக மனதில் பதிந்து, அதன் பின்னா் தட்டச்சு செய்வதன் மூலம் அவா்கள் கூறும் தகவல்களை நீங்கள் அதிகமான வாா்த்தைகளில் பதிவேற்றலாம். உங்கள் நினைவாற்றலும் மேம்படும்.
ஆனால், கையெழுத்தைப் பொறுத்தவரை இந்தச் செயல்முறை சற்று கடினமானதாகவும் மெதுவாகவும் இருக்கும். ஆனால், அது உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமைந்து நினைவாற்றலைப் பலப்படுத்தும். ஆகவே, கற்றதை நினைவில் நிலை நிறுத்த எழுத்துப் பயிற்சி மிகச்சிறந்த வழிமுறையாகும்.